சரண்மனோன்/விள்ளக்காளின் கழுகு ரதம்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 46

வான தீர்த்தம் பொழிந்து , சமாதிகளையெல்லாம் கழுவியிருந்தான் வருணதேவன்.
‘மண்டையோட்டில் தேங்கிக் கிடக்கும் மழை நீரைக் குடித்தால், நாய்க்கு மசை பிடித்துக் கொள்ளும்.’ என்று கூறுவார்கள். பல நாட்கள் ஊரில் மண்டையோடுகளுமில்லை. மழையுமில்லை. ஆனால் நாய்கள் மட்டும் வெறி பிடித்து அலைந்தன. அதிசயமாய் அன்று மழை பெய்திருந்தது.
விசித்திர வானிலைக்குப் பூக்கள் ஊரைச் சுற்றி வளைத்திருந்தன. சங்குப் பூக்கள், தொடங்கிப் பனைப்பூக்கள் வரை, வானளாவி மலர்ந்திருந்திருந்தன.
வில்லக்கா அந்த காட்டில் மண் எடுக்க வந்திருந்தாள். வேலிகளின் கண்கள் போல் குன்றி மணிகள் வெயிலில் மினுங்கின. சில நாள்கள் முன்பு வரை மஞ்சள் நிறத்தில் பூத்து ஒளிர்ந்த சிறு நெருஞ்சிப் பூக்கள், இன்று கொடும் முட்களாய் மாறி விதையுடன் விழித்துக் கிடந்தன. மேலும், பல அடுக்குகள் கொண்ட உரை முட்களும் காக்கா முட்களும் அந்நிலத்தின் மேல், வெஞ்சினத்தோடு குத்திட்டு நின்றன.
வில்லக்காள்,அந்த விஷ முட்களை அநாயாசமாய் எடுத்து வந்து சூளையில் போட்டுச் சாம்பலாக்குவாள்.
ஊரில் யாரேனும் தவறு செய்தால் தண்டனையும், பெருந்தவறுகளுக்கு ஊரை விட்டு ஒதுக்கிவைக்கும் வழக்கமும் இருந்தன. ஆனால், அந்த ஊரையே ஒதுக்கிவைத்திருந்தாள் வில்லக்கா.
ரேஷன்/ஆதார் அடையாள அட்டைகளைப் புறக்கணித்ததன் வாயிலாக இந்தியாவையே புறக்கணித்தவளும் ஆனாள்.. நடுத்தர வயது. ஊரில் அவளுக்குப் பல பட்டப்பெயர்கள் வைத்திருந்தார்கள், சூனியக்காரி, கோட்டிக்காரி என அவரவர் மன ரூபங்களாய் ஒலித்து வந்தன.
ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருக்கும் தன் குடிசையில், சிறிய செங்கல் சூளை வைத்திருந்தாள். அது உருளை வட்டத்தில் கழுத்தளவு உயரத்தில் இருந்தது. அதிலிருந்து புகை ஒரு பூத வடிவமாய்க் கிளம்பும். செம்மண்ணை நீரூற்றிப் பதப்படுத்தி, அதற்கான அளவு கட்டையில்வைத்து, செங்கற்களை உருவாக்குவாள். அதை காய வைத்து பிறகு சூளைக்குள் அடுக்கித் தீமூட்டுவாள்
இவள் குடிசையிலிருக்கும் சூளையே ஊருக்கு பெருந்தீபமாய் ஒளிரும். வெளியூரிலிருந்து ஏஜண்ட்கள் வந்து செங்கற்களை வாங்கிப் போவார்கள்.
தனி உழைப்பில், கணிசமான செங்கற்களையே உருவாக்குவாள். படிப்பறிவில்லாத, பட்டப்பெயர்களைக் கொண்ட அவள், நெருப்பில் கதை எழுதிக் கொண்டிருந்தாள்.
அதில் எல்லா உலகப் பற்றுகளும் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருந்தன.
தை மாதம் ஊரிலிருக்கும் பிள்ளைகள், ஆற்றங்கரைக்குச் சென்று ஆவாரம்பூ, பூலைப்பூ ,பறித்துக்கொண்டு உற்சாகமாய்த் திரும்பி வந்தார்கள்..எதிரே வருபவர்கள் மீது பூவை அள்ளி வீசினார்கள். ஒருமுறை மொபட்டில்ஐஸ்விற்றுக்கொண்டிருந்தவர் மீது பூக்களை வீச, அவை பெட்டிக்குள் சிதற ஐஸ் துண்டுகள் மேல் ஒட்டிக் கொண்டது. அவர் கோபித்துச் சத்தமிட்டார் எனினும்”ஹோ”வெனக் கும்மாளமிட்டு ஓடிவந்தவர்கள், இவள் வீட்டைக் கடக்கும்போது எந்தச் சத்தமுமின்றி ஓடினார்கள். அவர்களைச் சலனமின்றிப் பார்த்துக்கொண்டு நின்றாள் வில்லக்கா.
அவளுக்குப் பயமுறுத்தும் கண்கள், தீயின் நிறம். ஆதார் புகைப்படம் போல கோர முகம். அவள் கணவன் ஒரு குதிரைப் ரேஸில் ஏற்பட்ட பகை காரணமாககுத்திக்கொலைசெய்யப்பட்டிருந்தான்.. அவளின் இரண்டு மகன்கள் ஊரை விட்டுப் போய் விட்டார்கள்.
ஒழுங்குமுறையற்ற முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கையின் அதிர்வுகள் அவள் கூட்டைத் தெறித்துச் சிதற வைத்திருந்தன.
எல்லாக் கலைதல்களையும் கிரகிக்கும் சக்தி சொற்களற்ற உலகிற்கு மட்டுமேஇருந்ததை பார்த்தாள. தொடர்பின்மைகளின் சுதந்திரம், அவளை கண்ணை மூடி, அமராமலயே தியானத்தில் இழைத்தது. யாருமற்ற உலகில் சஞ்சரித்தாள். ஊராருடனான சலம்பல்களை ஒரு பாம்பு, சட்டை உரிப்பது போல் உரித்துப் போட்டிருந்தாள்.
ஊரில். பெரும்பாலும தன்னியல்பை இழப்பதே மனிதர்களின் தன்னியல்பாய் இருந்தன. குடிகாரர்கள் பெருகிக் கிடந்தார்கள்.. தனக்குள்ளேயே இருக்கும் போதையை மீட்டெடுக்கத் தெரியாமல், போதையைவெளியில்பிச்சையெடுத்துக்கொண்டிருந்தார்கள். ஊருக்குள் மத பிரசாரகர்கள் பிரவேசித்தார்கள்.
‘மனிதர்களுக்கு நடப்பதெல்லாம் நல்லதாகவே நடக்க வேண்டுமென’ இடைவிடாமல் கடவுளுக்கு அறிவுறுத்தி னார்கள். பச்சை இலைகளை விரும்பும் அவர்கள் சருகுகளை வெறுத்தார்கள். நாணயத்தின் ஒரு பக்கம் மட்டும் போதுமென்று அடம்பிடித்தார்கள்.
‘சரி,
மீட்பர்களிடமிருந்து
நம்மை மீட்பது யார்’

என்ற கவிதையொன்றை நினைவூட்டினார்கள். ஊர் நிறைய மாறத் தொடங்கியது. காடுகளை மாற்றினர், வீடுகளை மாற்றினர், கடவுளையும் மாற்றினர்.
ஊர் உலகம் கட்டிடங்களாக மாற அவள் செங்கற்கள் விற்றாலும், அவள் மட்டும் பனையோலைக் குடிசையிலேயே வசித்தாள்.
அந்த பகுதி தேவாலயம் அவளற்ற வெறுமையில் உறைந்தது.. அங்கு பிரார்த்தனைப் பாடல்களும், அதற்குப் பின்னிழையும் பியானோ இசையும், அவள் காதுகளை எட்டவில்லை!
நாளொருபொழுதாக கானல் வெயிலிலும் சூளை வெப்பத்திலும் வெந்துகொண்டிருந்தவளுக்கு வேறு குளிர்ச்சியான உறவு ஏற்படத் தொடங்கியது.
விறகுதள் பொறுக்கிக்கொண்டு வரும் வழியில் சில புளியங்கன்றுகளைப் பிடுங்கிக்கொண்டு வந்தாள். அதை ஊரில் சில இடங்களில் நட்டுவைத்து நீர் பொசிந்தாள். அதற்கு மண் அணைப்புக் கொடுத்து, வேலி முட்களைச் சுற்றிக்கட்டி அரணமைத்தாள்.. மரித்துப் போன அந்தமுள்ளெலும்புகள், உள்ளார்ந்த தாவரம் உயிர்த்திருக்க உதவின.
பந்த பாசங்களைச் சுரக்க வும், மறக்கவும் அந்தமரக்கன்றுகளேபோதுமானவையாகிவிட்டன… எதிர்த்துப் பேசாத, முதுகில் குத்தாத அந்தப் பிள்ளைகள் மேல் இயல்பாகவே கனிவு பிறந்தது.
அவளின் அன்றாடப் பணிகள் அன்றன்றே முடிந்துபோனாலும் அந்த மரக் கன்றுகள் மட்டும் மேலெழும்பத் தொடங்கின.. பிஞ்சுக் கிளைகளில் வெளிர் மஞ்சள் கொழுந்துகள் விட்டு, பிறகு பச்சை நிறத்திற்கு அடர்ந்து, அதிலிருந்து இன்னொன்றும் அதற்குள் வேறொன்றும் பிறகு மற்றொன்றும், பிறிதொன்றுமாக கொழுந்துகள் விரிந்துகொண்டே சென்றன.
அவள் ஊற்றுகிற நீர் மட்டுமின்றி, பெயர் தெரியா புயலாலும், மழையாலும், பனியாலும் நெடிதுயர்ந்து வளர்ந்துவிட்டன. போவது தெரியாமல் போகிற ஆரஞ்சு நிற வெயில் அன்று அந்த மரங்களில் தங்கிவிட்டதைப் போல ஒருநாள் புளியம்பூக்கள் பூத்து ஒளிர்ந்தன.
அவள் கூடு சிதறிவிட்டிருந்தபோதும், அந்த மரத்தில் ஏராளமான கூடுகள் பூக்கக் காரணமாகியிருந்தாள். விழுந்தபுளியம்பூக்களையும், , பிஞ்சுகளையும் சேர்த்து, கல்லில் கொட்டித்தின்றார்கள்.
பிறகான நாட்களில் உதிர்ந்த புளியம்பழங்களை ஊர்மக்கள் பொறுக்கியெடுத்துச் சென்றனர்.
மார்கமி மாதத்தில் பனி ஒரு புகைபோல அடர்ந்தது. உடல்வெடவெடக்கும் இரவுகளில் அர்த்த ஜாமத்தில் விழித்தெழுந்து குளிர் காய்வாள்.
ஓலைகளும், சுள்ளிகளும் வாசல் புறத்தில் கொழுந்துவிட்டெரிய அதனருகில் ஒற்றை மனுஷியாக நின்று உடம்பிற்குக் கதகதப்பூட்டிக் கொள்வாள். தீயின் ஜுவாலையில் இருட்டுக்குள் மறைந்திருக்கும் பூசணிப் பூக்கள் மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்தலையும். தீயின் நடுவே நெளியும் நீல ஒளி , உலகின் தீரா காமமாய் எரிந்து பொசுங்கும்.
சில நேரங்களில் நடு இரவிலேயே சூளைக்குத் தீ மூட்டிவிடுவாள். ஊரே உறங்கிக்கொண்டிருக்க, எல்லோரின் ஆயுளும் தேய்ந்துகொண்டிருப்பதைப் போல் அடுப்பிற்ககுள் விறகுகள் எரிந்து கொண்டிருக்கும்.
அந்தச்சூட்டோடுசூடாக,ஒருகொள்ளிவாய்ப் பிசாசுபோல அதனருகில் உட்கார்ந்திருப்பாள். அவள் உடல் நெருப்பைவிழுங்கிக்கொண்டிருப்பதைபோல, தீ ஜுவாலை எழுந்து எழுந்து அடங்கிக்கொண்டிருக்கும். சூளைத் தொழிலை முன்பு அவளின் பாட்டி கற்றுத் தந்தது.
பகல் பொழுதுகளில் எங்கோ வனாந்திரத்தில் வெறுந்தரையில் படுத்துஅயர்ந்துதூங்கிக்கொண்டிருப்பாள். அவள் உலகில் இரவு பகலாகும் பகல் இரவாகும். அவள் பொழுதுகளை அவளே உருவாக்கிக்கொள்வாள். அவளே ராணி, அவளே தீர்ப்பு. அவளே தண்டனை! சில நேரங்களில் அவள் பாடுவாள். அது தாலாட்டாகவும், சில நேரங்களில் ஒப்பாரியாகவுமிருக்கும்.
அசந்து தூங்கும் அவள் கனவிற்குள் அவள் கணவன் வருகிறான். அவன் ஒரு கழுகு ரூபத்தில் வந்து அவளைக் கொத்திதூக்கிச்செல்வான். அது ஒரு றெக்கைமுறைத்தரதம்போலமாறிவிடும்.
ஆழ்மன உய்விருப்பிலிருந்து அவளை மீறிய அலைகள் மேலெழும்பும்.. அது முற்கால காம நினைவாகவும்இருக்கும். ” ரேஸில் ஜெயிச்சு உனக்காக என்னென்ன வாங்கிட்டு வந்திருக்கேன் தெரியுமா- நீ இங்கு என்ன செய்கிறாய்.”
அவனுக்குமீசைமட்டுமின்றி, காதுவரிகளிலும் மயிரடர்ந்து வளர்ந்திருக்கும்.
வீட்டை அடைந்தவன், அவர்கள் வழக்கமாய்ச் சங்கமிக்கும் கட்டிலில் உட்காரவைக்கிறான்.சந்தைப்பொருள்கள் ஒவ்வொன்றாக எடுக்கிறான்.
அவளுக்கு மிகவும் பிடித்த நாட்டுப் பலாப் பழத்தை எடுத்து வகுந்து, அதன் பால் பிசுபிசுப்பு ஒட்டாமல் ஈந்து அவளுக்குத் தந்தான். அவள் அதைச் சாப்பிடத் தொடங்கிய பிறகு, அவளின் உடலெங்கும் பலா வாசனை பரவத் தொடங்கின. பொடனியில் வியர்வையை உறிஞ்சும் பசி. நிதானமாக பெருமூச்சுகளால் அவள் உடலெங்கும் சுட்டெரிக்கிறான் . உடலை இளகச் செய்துஅவளுக்குள் அவன் புகும்போது முனகுவாள்.. உடலை முறுக்கிக் கொண்டு துடிப்பாள்.அவன் உச்சம் தொடும்போது, காட்டுப் பறவை போல கீச்சிட்டு அடங்குவாள்..
அவளின் ரேஸ்பயணம் அவள் உடலின் திறப்பிற்குள் வந்து முடிவுறும். பிறகு அயர்ச்சியில் இளைப்பாறும் அவளுக்கு அவனின் உயிர் நீர், ஒருபெயர் தெரியா காட்டுப் பூவின் வாசனையை நினைவூட்டும்.
எனினும், குறை கண்டுதிட்டுவதில் சுகம் காணுகிற மனைவியாகவே அவள் இருந்தாள்.
” இந்த ரேஸ் பொழைப்பு நமக்கு வேண்டாம் ..” என அவன் மீதான கோப தாபங்களை அந்த நேரத்தில் கொட்டிப் பழிதீர்ப்பாள். . அவன் அலுத்து எழ முற்படும்போது, அவன் கையை இறுகப் பிடித்துக்கொள்வாள்!
கழுகு ரதம் சட்டென அவளை உதிர்த்தது..
நினைவிலிருந்து திடுக்கிட்டு எழுந்த அவள். இளகியிருந்த பாவாடை நாடாவை இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.
இன்று அவன் உயிரோடு இல்லை. அவன் போனதும் எல்லாமே போய் விட்டதைப் போல இருந்தது. ஊரில் ஒரு பெண்ணுக்குப் பேய் பிடித்துக் கொண்டதாய் பேசப்பட்டது.. ‘அது சூளைக்காரியின் கணவன். ஆவிதான்..’ என மந்திரவாதி போயோட்டும்போது சொன்னதாய் ஊரில் பேச்சுக் கிளம்ப நொந்து போன மனது.. மேலும் விதவை என்றாலே சகுனம் பார்ப்பது, சுபகாரியங்களில் ஒதுக்கி வைப்பது என்ற ஊராரின் மனோபாவத்திற்காக ஊரையே ஒதுக்கி வைத்தாள். அவள் மனப் புண்ணில் குருதி உலராமல் இருந்தது.
காலம்நகர்ந்தது. மூப்பை நெருங்கினாள். வனாந்திரத்தில் ஒருநாள், அவள் நீண்டநேரம் ஒப்பாரிப் பாடல்களை இசைத்துக்கொண்டிருந்தாள். பிறகு அன்று பிற்பகல் சூளைக்காரி இறந்து கிடப்பதை ஆடு மேய்ப்பவர்கள் பார்த்துவிட்டு ஊருக்குள் ஓடிவந்து தெரிவித்தார்கள். அவளுக்கான ஒப்பாரியை அவளே பாடி முடித்துவிட்டுப் போயிருந்தாள்.
ஊர் ஜனங்கள் ஒன்றிரண்டாய்க் கிளம்பிப் பத்து நூறாய்த் திரண்டார்கள். சூளைக்காரி தூக்கத்திலேயே இறந்து போயிருந்தது தெரிந்தது.
நகரத்தில் வசிக்கும் அவள் மகன்களுக்குத் தகவல் தெரிவிக்க,சில மணி நேரங்களில் வந்து சேர்ந்தார்கள். வீட்டிற்குக் கொண்டுவரப்பட்ட சூளைக்காரியின் உடலுக்குச் சடங்குகள் ஏற்பாடாயின.
ஊர் மக்களும், உறவினர்களும் துக்கம் விசாரிக்க வந்து போய்க் கொண்டிருந்தனர். அவளின் மகன்கள் கண்கலங்கி நின்றிருப்பதைப் பார்த்து சிலர் கேட்டார்கள்.
“கிழவி செத்த பிறகு இவ்வளவு பாசம் காட்டறீங்களே… உசுரோட இருக்கிறப்ப கூடவந்து இருந்திருக்கலாமில்லையா?”
அதற்கு மூத்தவன் சொன்னான். “இந்த ஊரைச் சேர்ந்த ஆல்வின், குதிரை ரேஸ்ல வந்த ஒரு தகராறில் எங்க அப்பாவைக் குத்திக் கொன்னுட்டான். இன்னும் இதேஊர்லதான் வளைய வந்திட்டிருக்கான்… அவனை யாரும் எதுவும்செய்ய முடியலை… நாங்க இந்த ஊர்ல இருந்தா ஒண்ணு அவனைப் பழி வாங்கணும்.. இல்லைனா சகிச்சுக்கிட்டு வாழணும்… இந்த இரண்டுமே எங்களுக்குப் பிடிக்கலை…
மேலும் பணபலம், ஆள்பலம் உள்ளவன்.. அவனால் எங்க குலத்திற்கும் தீங்கு நேரலாம்…அதான் ஊரை விட்டுப் போய் அங்க இருந்துக்கிட்டு அவன் மேல கேஸ் போட்டோம்… பத்து வருஷத்துக்கு மேல இழுத்துக்கிட்டே போன கேஸ் இப்ப ஆதாரம் இல்லைனு சொல்லிஒண்ணும் இல்லாம போயிருச்சு. அவன் மீசைக்கு நெய் தடவிக்கிட்டு இதே ஊர்ல கம்பீரமா இருக்கான்.. இந்த ஊர்ல இருக்கப் பிடிக்கலை.. அம்மா, அப்பாவின் ஞாபகமா இங்கியே இருந்துட்டாங்க..”
என்றவன், “தாயோளிய நினைச்சாலே கொதிக்குது.” என்று பொறுமினான்.
சற்று நேரம் கடந்ததும் சூளைக்காரி உடலின் மேல் கோடித்துணி போட்டு மஞ்சள் கொட்டி இரைத்துப் பிறகு தூக்கிக் கொண்டுபோய் மூங்கில் பாடையில் கிடத்தி, இடுகாட்டிற்குத் தூக்கிப் போனார்கள்.
சிதையில் வைத்து சடங்கு செய்தார்கள். தாய்க்குத் தலை மகன் தோளில் மண்பாண்டம் வைத்து அரிவாள் முனையால் கொத்தினார்கள். சாவுக்கு மட்டுமே மண்பாண்டம் பயன்படுத்தும் சீரழிவுக்கு அந்த மண்பாண்டம் மூன்று முறை அழுதது.
சற்று நேரத்தில் கொள்ளி வைக்கப்பட்ட பின், தீப்பிடித்து பற்றி எரியத் தொடங்கியது. வாழும் காலங்களிலேயே வெந்து போன அவள் உடம்பு … எலும்புகூட மிஞ்சாமல் எரிந்து சாம்பலாகி. ஒரு விபூதிபோல வெண்மை பூத்துக் கிடந்தது. இங்ஙனம்அவள் உலகையே புறக்கணித்துவிட்டுப் போயிருந்தாள்.
அவள் மகன்கள், தாங்கள் குடிகொண்ட ஊருக்குப் போய்ச் சேர்ந்தனர். சில நாள்கள் சூரிய சக்கரம் சுழலத் தொடங்கின. பிறிதொரு நாள் இரவு, அவள் கணவனைக் கொன்ற ஆல்வின் தன்அறையில்உறங்கிக்கொண்டி
ருந்தான். அந்த அறையின் கிழக்குச் சுவரில் யாருமறி யாமல்ஒரு விரிசல் இழையோடியது. பிறகு நடுநிசி நேரம் சுழற்றியடித்த பேய்க்காற்றில் சடாரென அந்தச்சுவர் சரிந்தது. அதனால் மற்ற இணைச் சுவர்களும் இடிந்து விழுந்தன.. அதில் ஆல்வின், நிகழ்வது தெரியாமலே ரத்தச் சிதறலாய் ஆனான். துடிதுடித்து அடங்கிவீட்டோடு சமாதியானான்.
ஊர்மக்கள் திரண்டனர். ஒருபுயலோ, பூகம்பமோ இல்லாமல் ஊரில்அந்த ஒரு வீட்டுச் சுவர் மட்டும் எப்படி இடிந்தது எனத் திகைத்தனர்.
விடிந்தவுடன் இடிபாடுகளை அகற்றிப் பார்த்தனர். அதனுள் ராட்சஷக் கைகளாக ஊடுருவிப் பாய்ந்திருந்தன ஒரு புளிய மரத்தின் வேர்கள்!

ஆசிரியர் குறிப்பு

புனை பெயர்: சரண்மனோன் இயற்பெயர்:C.ஈஸ்வரமூர்த்தி, வயது : 47
ஊர் : சேர்வகாரன் வலசு இதுவரை எழுதியது: இருபதுக்கும் மேற்பட்ட கவிதைகள், மற்றும் சிறுகதைகள். எழுத தூண்டியது: க.சீ.சிவகுமார்.

சுசி கிருஷ்ணமூர்த்தி/ மறுபடியும் மறுபடியும் பிறக்கிறேன் – விருட்சம் நாளிதழ்

One Comment on “சரண்மனோன்/விள்ளக்காளின் கழுகு ரதம்”

Comments are closed.