
அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 41
மாலைஅணிவித்திருந்த அப்பா அம்மா புகைப்படத்தின் முன் நின்று கலங்கினான் முரளி. அவனது பெற்றோர்- சமீபத்தில் ஆட்டோ விபத்தில் சிக்கி, மருத்துவமனை அவசரசிகிச்சை பிரிவில் அட்மிட் செய்யப்பட்டு, உயிருக்கு போராடும் நேரத்தில் ரத்ததானம் செய்ய ஆள் கிடைக்காததால்-அல்பாயிசில் உயிர் துறந்தவர்கள். ‘நான் எந்த தப்பும் செய்யலையே எனக்கு ஏன் இப்படியொரு அவமானம்?உங்க செல்லமகனான என்னை நல்லபிள்ளையாக வளர்த்தீங்க… பி.இ படிக்கவச்சீங்க… கவர்மெண்ட்காலேஜில சின்சியாரான ஐ.டி எஞ்சினியரிங் லக்சரர் பணி.என்னைப் போய் தப்பானவன்னு கேவலமாக எடைபோட்டு ஒரு போலீஸ்காரர் என் கன்னத்துல அறைஞ்சிட்டாரே… குற்றமே செய்யாத எனக்கு கொடுமையான தண்டனையா ? என்னஉலகமடாஇது?.. அநியாயம்… மனசு தாங்கலையே..’ குமுறி, கண்ணீர் விட்டான்.
நடந்தது இதுதான்.
கொரோனா பரவல் தீவிரமாக சமயத்தில் ஒரு நாள் –
மாலைஏழுமணியளவில்-கடலூர் அரசு மருத்துவமனையிலிருந்து முகக்கவசம் அணிந்தவாறு வெளிப்பட்டு, பைக்கில் வந்துகொண்டிருந்த சமயத்தில் திடீரென மழை கொட்ட ஆரம்பித்தது உடனே சாலையோரமாக பைக்கை நிறுத்திவிட்டு, கையில் ஹெல்மெட்டோடு அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்திற்கு வந்து ஓரமாக ஒதுங்கி நின்றான் முரளி. அந்த பேருந்து நிறுத்தத்தில் ஒரு அழகான இளம்பெண்,அவளது தாய் மற்றும் ஒரு நடுத்தரவயது நபர் முகத்தில் மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளி கொடுத்து நின்று கொண்டிருந்தார்கள்.
திடுக்கென அந்த இளம்பெண் கூச்சலிட அந்தத் தாய் “அகிலா என்னாச்சும்மா?” என கேட்டாள்.
“யாரோ என் இடுப்பிலே கைய வச்சுட்டாங்க!”முரளியை முறைத்தபடி கூறினாள் அகிலா.
அந்த சமயம் – கொரோனா வைரஸ் தடுப்பு ரோந்து பணியில் இருந்த போலீஸ் காரர் ரெயின்கோட், மாஸ்க் சகிதம் பைக்கில் அங்கு வந்து இறங்கி, “ ஏன் கத்தினீங்க? என்ன நடந்தது!” என விசாரித்தார் .
“இடுப்புல யாரோ கை வச்சிட்டாங்கன்னு என் மகள் சொல்றா சார்”என்றாள் தாய்.
“ யாரோன்னு ஏன் சொல்றீங்க..இந்த பையனாத்தான் இருக்கும் ” அவராக முடிவு செய்து- “ஏண்டா…சின்ன பொண்ணு கிட்ட சில்மிஷமா பண்றே?” விரல் உயர்த்தி அதட்டி வினவினார் போலீஸ்காரர்.
“நான் இல்லை சார்… நான் பாட்டுக்க சும்மாதான் நிக்கிறேன் கீழே விழுந்த என் பர்ஸை குனிஞ்சு எடுத்தேன். ஆனால் இந்தப் பெண்ணை இடிக்கலை..அவங்க என்னை தப்பா நினைச்சிட்டாங்க” உண்மையைத் தெளிவாகக் கூறினான் முரளி “படவா ராஸ்கல் பொய்யா சொல்றே?செய்யறதையும் செஞ்சிட்டு நடிக்கிறியா?” பளாரென கன்னத்தில் அறைந்தார் காவலர்.
சற்றும் எதிர்பாராத முரளி,அதிர்ச்சியாகி-மேலே ஏதும் பேசாமல் கலங்கினான்.
“ எஃப்ஐஆர் புக் பண்ணி உள்ளே தள்ளிடுவேன் ! ஜாக்கிரதை ! என்ன ஊருடா? என்ன வேலை பார்க்கிறே? மிரட்டினார் போலீஸ்காரர்
உதடு துடிதுடிக்க “என் பேரு முரளி..பண்ருட்டி இன்ஜினியரிங் காலேஜ்ல லக்சரர் ஐ.டிடிபார்ட்மென்ட். காலேஜ் குவார்ட்டஸில் தங்கியிருக்கேன்”விவரம் சொன்னான்.
“சார்.பாவம்..விட்டுடுங்க..விசாரிச்சீங்க..அடிச்சுட்டீங்க. அது போதும்”கெஞ்சினாள் இளம்பெண்ணின் தாய்.
“சரிம்மா நீங்களே சொல்றதால மன்னிச்சுடறேன் இஞ்சினியர்ங்கிறான்.. வேலை யில் இருக்கிறவனை எஃப்ஐஆர்..கேஸ் னு அலைய விட்டால், வேலைக்கே உலை யாயிடும். டேய் முரளி! இனிமே இந்த மாதிரி வம்பெல்லாம் பண்ணாதே! உன்னை எச்சரிக்கிறேன்”மரியாதை குறைத்து மிரட்டிவிட்டு, பைக்கை உசுப்பி, அங்கிருந்து அகன்றார் போலீஸ்காரர்.
‘இனி இங்க நிக்கறது சரியில்லை’ வெட்கி,தலைகுனிந்தபடி, பைக்கிலேறி, மழையில் நனைந்தப்படியே வீடு நோக்கி புறப்பட்டான் முரளி.
வழிநெடுகிலும் மனஉளைச்சல் அவனை உலுக்கி எடுத்தது. அவனால் சாப்பிட முடியவில்லை.. பேருந்து நிறுத்தத்தில் நிகழ்ந்த சம்பவம் மீண்டும் மீண்டும் உருவெடுத்து, சிலந்தி வலை போல பின்னியெடுத்து வருத்திற்று. படுக்கையில் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த நடுச்சாமத்தில் மொபைல் ரீங்கியது.
“ஹலோ முரளி ஸ்பீக்கிங்.. டாக்டர் சாரா?” பரிச்சயமான எண் என்பதால் அன்புடன் வினவினான்.
“ஆமாம் முரளி.. டாக்டர் வேலன் பேசறேன்.. ஒரு அவசரகேஸ்! முக்கால் மணி நேரத்துக்குள்ள நீ இங்கே வரணும். ப்ளீஸ் ஹெல்ப் !” படபடப்பு குரலில் கூறினார்.
“ உங்களைச் சந்திச்சு, பேசிட்டு,என் பெயரை பதிவு பண்ணிட்டு கிளம்பி, பண்ருட்டிக்கு இப்பதான் வந்து சேர்ந்தேன் நீங்க அவசரம்னு கூப்பிடுறீங்களே.. சரி டாக்டர் இப்பவே புறப்பட்டு,அங்கே வரேன்”
“ஆமாம்பா..நீ புறப்பட்டுப் போன கொஞ்ச நேரத்தில் இந்த எமர்ஜென்சி கேஸ் வந் துச்சு.. ஸாரி முரளி..வெரி அர்ஜெண்ட்”
“எதுக்கு டாக்டர் ஸாரி கீரியெல்லாம் சொல்றீங்க.. பரவாயில்லை.நோ பிராப்ளம்.”
ரெயின்கோட், ஹெல்மெட்,மாஸ்க் சகிதம் பைக்கிலேறி,கடலூருக்கு பயணித்தான்
“அடடே ! சூப்பர் முரளி! அரைமணி நேரத்தில் வந்துட்டீயே.. செம ஸ்பீடுப்பா. வா உள்ளே” என்றபடி அழைத்துச் சென்றார்.
முகத்தில் சுவாசக்கருவி இணைப்போடு, பச்சைப் போர்வையால் மூடப்பட்டு படுத் திருந்த நோயாளியைக் காட்டி ,”இந்த லேடி பேஷண்ட்டை பிழைக்க வைக்க உன் ரத்தம் தேவைப்படுது. இந்த பிளட் டோணர் பேப்பரில் ஸைன் போட்டுட்டு பெட்டில் படு” என்றார் டாக்டர்.
“ஓகே டாக்டர், கேரி ஆன் !” புன்னகையோடு சம்மதித்தான்.
ஒருமணிநேரத்தில்-முரளியின் ரத்தம் பெண்மணியின் உடலுக்கு இடம் மாறியது.
“மகிழ்ச்சி டாக்டர் நான் புறப்படுகிறேன். எப்ப ரத்தம் தேவைப்பட்டாலும் என் கிட்ட சொல்லுங்க..உடனே ஓடி வந்து பிளட் கொடுக்க தயார்” என்றான்.
“தேங்க்யூ..நீ இப்ப பிளட் கொடுத்திருக்கே.. உடனே பைக் ஓட்டக் கூடாது! கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.இந்தா பழச்சாறு குடி..ரிலாக்ஸ்..ரிலாக்ஸ்..” என்றார் வேலன்.
அந்தப் பெண்மணிக்கு நினைவு திரும்பியதை ஒரு நர்ஸ் வந்து தெரிவித்தாள். “வா முரளி…அவங்ககிட்ட. உன்னை அறிமுகப்படுத்தறேன்”அழைத்தார் வேலன். “அதெல்லாம் வேணாம் டாக்டர்..பரவாயில்லை..கிளம்பறேன்” என மறுத்தான். டாக்டர் விடவில்லை! அவனை வற்புறுத்தி அந்த அறைக்குள் அழைத்துப் போனார்.
“காமாட்சிம்மா..இவர் தான் உனக்கு ரத்தம் கொடுத்தவர்.. பெயர் முரளி” என்றார் வேலன்
அவனைப் பார்த்ததும், அதிர்ந்தாள் காமாட்சி.
அப்போது- காபி அடங்கிய பிளாஸ்க்கோடு உள்ளே வந்த இளம்பெண்ணும் திகைத்தாள்.
பஸ்ஸ்டாப்பில்-அபாண்டமாக பொய் கூறி, போலிசிடம் அடி வாங்க வைத்த தாயும் மகளும் தான் அவர்கள் !
“தம்பி நீங்களா? ரொம்ப நன்றிப்பா.. இப்படிப்பட்ட தங்கமான மனசு கொண்ட உன்னைப் போய் தப்பானவன்னு சொல்லி,அநியாயமா பழி சுமத்திட்டோம்.. நீ தப்பு செய்யலைன்னு அப்புறம்தான் தெரிஞ்சுது ” சில நொடிகள் இடைவெளி தந்தாள்.
“ அப்படியா? அப்புறம் யார்னு எப்படி தெரிஞ்சிகிட்டீங்க..?” முழித்தான் முரளி.
“பக்கத்துல இன்னொரு ஆளு நின்னாரில்ல..? குடையை மடக்கும் போது, தவறுதலாக அவர் விரல் அகிலா மேலே பட்டுவிட்டதாம்…அவர் ஸாரி சொல்றதுக்குள்ள, போலீஸ் அதிரடியாக அங்கே வந்து, அவசர முடிவெடுத்து, உன்னை அடிச்சி விசாரிக்கவே மனுஷன் பயந்துகிட்டு வாயைத் திறக்காமல் நழுவிட்டாரு. இந்த ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருக்குற உறவுக்கார பேஷன்ட்டுக்கு சாப்பாடு கொடுக்க வந்தாராம்..இங்கே எங்களைப் பார்த்தப்ப நடந்த உண்மயைச் சொல்லி வருந்தினாரு.. மன்னிச்சிடுப்பா” வணங்கினாள் காமாட்சி.
“ சாரிங்க…மங்கலான லைட்வெளிச்சத்திலே, ஆள் யார்னு சரியா தெரியலை” போலீஸ்காரரும் சரியாக விசாரிக்காமல் அவசரப்பட்டுட்டார் “ கும்பிட்டாள் அகிலா.
“நானும் ஊகிச்சேன்.திடுதிப்புன்னு எல்லாம் நடந்துருச்சு. அந்த மனுஷனின் தவறால் எனக்கு தர்மஅடி! நல்ல வேளை. நீங்க என்ன தப்பா நினைக்கல.. அது போதுங்க..”
“நீங்க எப்படி இங்கே வந்து அம்மாவுக்கு ரத்ததானம் கொடுத்து உதவினீங்க?” என்று கேட்டாள்.
“அதுக்கு பதிலை நான் சொல்றேன்” என்றபடி, டாக்டர் விவரிக்க ஆரம்பித்தார்.
“விபத்தில் அடிபட்டு, உயிருக்கு போராடின முரளியோட அம்மா அப்பாவுக்கு அவசரமாக ரத்தம் தேவைப்பட்டது.ஆனால் அந்தசமயம் ரத்தம் கொடுத்து உதவ யாரும் கிடைக்கலை.அவசரசிகிச்சை அளிக்க முடியாமப்போய் அவங்க ரெண்டு பேரும் இறந்தட்டாங்க .அப்ப நம்ம முரளி எடுத்த சபதம்தான்-ரத்ததான சேவை! ஆபத்தில் உயிர்காக்கும்பணி” இளைஞனின் இலட்சியத்தை விவரித்தார் டாக்டர்.
“ரொம்ப நெகிழ்ச்சியாயிருக்கு..நீ நல்லா இருக்கணும்பா”ஆசீர்வதித்தாள் காமாட்சி.
“கிரேட் ஹுமன் லைஃப் ரெஸ்க்யூ சர்வீஸ்!” கைதட்டி, பாராட்டினாள் அகிலா.
“சீக்கிரம் உடம்பு குணமாகி-வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன்.. டிஸ்சார்ஜ் பண்றப்ப வந்து பார்க்கிறேன் நன்றி. வணக்கம் ” விடை பெற்றான் முரளி.
ஆபத்தான நேரத்தில் ஓடி வந்து, ரத்தம் தந்து, தனது தாயை உயிர் பிழைக்க வைத்த முரளி மீது இனம்தெரியாத ஈர்ப்பு வந்தது அகிலாவுக்கு.
அப்புறம்-அது காதலாக மாறி- ,எல்லோரின் மனப்பூர்வமான சம்மதத்தோடு- கல்யாணத்தில் முடிந்தது இன்னொரு ஆனந்தகதை!
ஆசிரியர் குறிப்பு
எழுத்தாளர் மாலா உத்தண்டராமன்
மாலா உத்தண்டராமனின் இயற்பெயர்: ப.உத்தண்டராமன் ( P. Uthandaraman )
வயது : :67
பணி:நெய்வேலி(NLCIL) நிறுவனத்தில் துணைப் பொதுமேலாளர் ( பணி நிறைவு )
*துணைவியார் சந்திரமாலாவின் பெயரைத் துணையாகக் கொண்டு மாலா உத்தண்டராமன் எனும் புனைபெயரில் சிறுகதை,நாவல், கவிதை, கட்டுரை என பன்முகங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார்..
*300 சிறுகதைகள்,25 நாவல்கள்,பல கவிதைகள்,கட்டுரைகள் பிரபல வார, மாத இதழ் களில் வெளிவந்துள்ளன.. இதுவரை ஐந்து நூல்கள் வெளியிட்டுள்ளார்.

அருமை