பிரதீபன்/ வருவோர் போவோரில் ஒருவர்

அந்த அலுவலகத்தில்
வருவோரும் போவோருமாக
எப்போதும் கூட்டம் தான்;
இருக்காதா பின்னே,
இன்றியமையாத
அலுவலகம் ஆயிற்றே;’
சுற்றி நிற்கும்
தேநீர்க் கடைகள், உணவகங்கள்
எல்லாமே
எப்போதும் சுறுசுறுப்புத்தான்;

வருவோர் போவோரால்
வளம்கொழிக்கும்
அந்த அலுவலகத்தில்
உள்ளே பணிபுரிவோருக்குக்
கழிப்பறை உண்டு;
ஆனால்
வருவோர் போவேருக்கு?
அதிலும்
முதியவர், சிறுவர்களுக்கு ?
சிந்தித்துப் பார்த்தவர்
வருவோர் போவோரில்
ஒருவர்தான்;

தலைமை அலுவலகத்தோடு
போராடிப் போராடி
அனுமதி பெற்றார்
அந்த ஒருவர்;

தன் தொகையை
முன் தொகையாக்கி
எண்ணிச் சிலரிடம்
நன்கொடை திரட்டினார்,
அவர்;

இதோ
அலுவலகத்தின் ஒரு மூலையில்
எழும்பிக்கொண்டிக்கிறது
வருவோர் போவோருக்கான
அந்தக் கழிப்பறை.