
அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை - 40
“காபி டீ ஏதாவது வாங்கியாரவா சார்…?” என்ற முனுசாமியின் குரலால், படித்துக் கொண்டிருந்த புத்தகத்திலிருந்து தலையை நிமிர்ந்து பார்த்தான் கண்ணன். கண்களோடு மொத்த உடம்பும் உள்ளொடுங்கிய உருவம். கண்ணனின் அப்பா வயதுதான் இருக்கும். இந்த வயதிலும் இரவுநேரக் காவலாளியாக வேலை செய்ய வேண்டிய வாழ்க்கைச் சூழல்.
“வேணாங்க… நீங்க போய் படுத்துக்கங்க…” என்றான் கண்ணன்.
“நைட் டூட்டில எங்க சார் படுக்கறது?” என்று சொல்லியபடியே போன முனுசாமியையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குத் தெரியும். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் உறங்கி விடுவார் என்பது. ஏதாவது தொழிற்சாலை என்றால் அப்படி தூங்குவது முடியாது. இது அலுவலகம். ஏழு ஏழரைக்கு அடங்கும் அலுவலகம், மீண்டும் மறுநாள் காலை ஏழரை மணிக்குத்தான் உயிர்பெறும். அதுவரைக்கும் ஒரு ஏகாந்த அமைதி.
அந்த அமைதியைத்தான் தன் படிக்கும் நேரமாகத் தேர்ந்து கொண்டான் கண்ணன். ஒவ்வொரு பரீட்சையின் போதும் வீட்டில் சொல்லிவிட்டு, இரவு அலுவலகத்தில், இரண்டு மூன்று மணி வரை படித்துவிட்டு ரிசப்ஷன் சோபாவில் ஒரு சின்ன தூக்கம் போடுவான்.
காலை ஆறு மணிக்கு எழுந்து பல் தேய்த்துவிட்டு, காலைக்கடன்களை முடித்து, இரவு படித்ததை ஒருமுறை திருப்பிப் பார்த்துவிட்டு, வெறும் வயிற்றோடு நேராக பரீட்சை ஹாலுக்குப் போவான். மொத்தம் பன்னிரண்டு பேப்பர்களில் நான்கை முடித்தது இப்படித்தான். நாளை ஐந்தாவது பேப்பர். A.M.I.E பொறியியல் படிப்பில் மின்னியல் எடுத்திருந்தான். B.E-க்கு நிகரானது.
மின்னியலில் டிப்ளமா முடித்துவிட்டு, உடனே வேலையில் சேர்ந்துவிட்டான் கண்ணன். உடனே என்றால் கடைசிப்பரீட்சை முடிந்த மறுநாளே, கண்ணன் இப்போது வேலை செய்யும் கம்பெனியில் இருந்து காம்பஸ் இன்டர்வியூவில் ஆளெடுக்க வந்தனர். கண்ணன் தேர்வு செய்யப்பட்டு, அப்பாயின்மென்ட் ஆர்டர் தரப்பட்டது. ஆயிரம் ரூபாய் சம்பளம். மூன்று மாதங்கள் புரபேஷன். பின் வேலை நிரந்தரமாக்கப் படும்.
கண்ணனுக்கு எதுவும் நம்ப முடியாமல் இருந்தது.
அடுத்த வாரத்தில் இருந்து அவன் தேனாம்பேட்டையில் இருக்கும் இன்ஜினீயரிங் கன்சல்டன்சி அலுவலகத்தில் வேலைக்குப் போகப் போகிறான். சம்பளம் ஆரம்பித்திலேயே ஆயிரம் ருபாய்.
தேனாம்பேட்டையில் இருந்த அலுவலகத்திற்கு போய் வர ஆரம்பித்தது இப்போதுதான் போலிருக்கிறது. விளையாட்டாய் இரண்டு வருடங்கள் ஓடி விட்டன. இதோ இந்த இரவில் கண்விழித்துப் படித்துக் கொண்டிருக்கிறான், தன் உயர் படிப்புக்காக. அதுகூட அலுவலகத்தில் சொல்லப்பட்ட இன்னொரு அறிவுரையால்தான்.
வேலைக்குச் சேர்ந்து ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்டிருந்த ஒருநாள், மேனஜர் சம்பந்தம் அழைத்துப் பேசிய அந்த ஒருநாள், இன்னமும் கண்ணனுக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. அவன் பிறந்த நாளைக்கு முந்தைய நாள். கேபினைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவனை மேனேஜர் சம்பந்தத்தின் வழக்கமான புன்னகை வரவேற்றது. நடு வகிடு எடுத்து வாரிய தலை, பெரும்பாலும் எப்போதும் ஒரு புன்னகையோடு இருக்கும் முகம்.
“வாங்க…உட்காருங்க…” என்று எதிரில் இருந்த நாற்காலியைக் காட்டியது அந்தப் புன்னகை.
எதிரில் இருந்த இரண்டு நாற்காலிகளில் ஒன்றில் உட்கார்ந்தபடியே “சொல்லுங்க சார்” என்றான் கண்ணன்.
“கதையெல்லாம் எழுதறீங்க போலிருக்கு…”
“சார்…”
“இந்த மாசக் கணையாழில உங்க பேர்ல ஒரு கதை பார்த்தேன். அது நீங்கதானே?”
“நான் எழுதுனதுதான் சார்…நீங்க கணையாழிலாம் படிப்பீங்களா சார்…கதை எப்படி…”
கண்ணன் முடிக்குமுன்னே கையுயர்த்தி, “இருங்க இருங்க… இப்ப கதையைப் பத்தி பேசக் கூப்பிடல…உங்களோட பியூச்சர் கரியர் பத்தி பேசலாம்னுதான் கூப்பிட்டேன்.”
பெரிதாய் தப்பேதும் வேலையில் செய்யவில்லை, என்னவாய் இருக்கும்? அவரே சொல்லட்டும்… என்று அவர் முகத்தையே பார்த்திருந்தான்.
“இங்க பாருங்க கண்ணன்…இது இன்ஜினியரிங் கன்சல்டன்சி கம்பெனி… இதுல நல்லா மேல வரணும்னா, வெறும் டிப்ளமா போறாது. மினிமம் ஏதாவது டிகிரி வேணும்… நான் வேலைக்குச் சேரும்போது டிப்ளமோவோடதான் சேர்ந்தேன். இப்ப நான் உங்களுக்குச் சொல்ற மாதிரி, அப்போ எனக்கு யாரும் சொல்லல…நானேதான் தெரிஞ்சிக்கிட்டு A.M.I.E பண்ணேன். கொஞ்சம் லேட்டாப் பண்ணேன். நீங்களும் அதே தப்பைப் பண்ணக் கூடாதுன்னுதான் இப்ப இதைச் சொல்றேன்…நல்லா யோசிச்சுப் பாருங்க… உங்களுக்கு வயசு இருக்கு… இதே லைன்லதான் உங்க கேரியர்னு முடிவு பண்ணீங்கன்னா கண்டிப்பா ஒரு டிகிரி, A.M.I.E அல்லது B.E படிச்சே ஆவணும்…இல்லன்னா பின்னால ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க…படிச்சீங்கன்னா சீக்கிரம் மேல வரலாம்…அதுக்காக உங்களைக் கதையெல்லாம் எழுத வேணாம்னு சொல்லல… அதுவும் ஒரு பக்கம் இருக்கட்டும்… கூடவே இதையும் ஒரு பக்கம் பண்ணுங்கனுதான் சொல்றேன்…சரியா…?”
கண்ணன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“இப்ப எதுவும் நீங்க சொல்ல வேணாம்…நான் சொன்னதை நல்லா யோசிச்சுப் பாருங்க…ஏதாவது படிக்கறதுனு முடிவு பண்ணீங்கன்னா உடனே ஆரம்பிச்சிருங்க…ஓகே?”
“ஓகே சார்…” என்றபடியே எழுந்து “ஆல் த பெஸ்ட்” என்று நீண்ட அவர் கையைப் பற்றிக் குலுக்கிவிட்டு, வெளியே போகக் கேபின் கதவைத் திறந்தான்.
“கண்ணன்” என்று கூப்பிடுவது காதில் விழுந்ததில் திரும்பிப் பார்த்தான்.
“கதை நல்லா இருந்தது… சொந்த அனுபவமா…? இல்ல கற்பனையா…?” என்ற அந்த முகத்தில் அவரது வழக்கமான புன்னைகை.
“பார்த்தத வச்சி எழுதினதுதான் சார்…” என்று சொல்லிவிட்டு வெளியேறி, இருக்கையில் சென்று அமர்ந்தவன் காதுகளில் “கதை நல்லா இருந்தது” என்ற அவர் குரலே திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது. அது கண்ணனின் கன்னி முயற்சி. முதல் கதை. அனுப்பி விட்டு ஏறக்குறைய மறந்து போயிருந்த நிலையில் அந்த மாதக் கணையாழியில் வெளியாகி இருந்தது.
வேலையில் சேர்ந்து, முதல் சம்பளம் வாங்கிய நாளில் இருந்து தவறாமல் மாதாமாதம் கணையாழி வாங்கத் தவறுவதே இல்லை. அதற்காகவே ஒவ்வொரு மாதமும் ஏதாவது ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்வருவான். அங்குதான் கணையாழி கிடைத்து வந்தது.
டிப்ளமா படிக்கும்போதே, பஸ்ஸில் போகும்போதும் வரும்போதும் கதைப் புத்தகங்களைப் படித்தபடியே இருப்பான். கதைப் புத்தகங்கள் பக்கம் கண்ணனைத் திசை திருப்பியது அண்ணனின் உபயம்தான் என்று சொல்ல வேண்டும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் எது மறந்தாலும், காலை உணவை முடித்துவிட்டு, நூலகத்திற்குப் போவதைத் தவறவிட மாட்டார் அண்ணா. இத்தனைக்கும் அந்த நூலகம் ஒன்றும் அவ்வளவு பக்கத்தில் இல்லை. ஏறக்குறைய ஒரு கிலோமீட்டர் தூரம் போக வேண்டும். வீட்டில் சைக்கிள் உண்டு, ஆனால் நடந்தேதான் போய் வருவார்.
அப்படி அண்ணா கொண்டு வரும் புத்தகங்கள் மேல் ரொம்ப காலத்துக்குப் பாராமுகமாகவே இருந்த கண்ணனை, ஒரு நாள் “கரித்துண்டு” என்ற பெயர் கொண்ட ஒரு புத்தகம் ஈர்த்தது. “மு. வரதராசன்” என்று பெயர் போட்டிருந்தது. என்னதான் இருக்கும் “கரித்துண்டு” பற்றி, அதுவும் அத்தனை தடி சைஸில் என்று புத்தகத்தை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தான். எளிமையான நடை ஈர்த்தது. தொடர்ந்து படிக்க ஆரம்பித்தான். பாதிதான் படித்திருப்பான். அதற்குள் அடுத்த ஞாயிறு வந்து விட்டது. வெளியே எங்கோ போய்விட்டு வந்தவன், புதிதாக “சங்கர்லால் துப்பறிகிறார்” என்றொரு புத்தகம் மேஜைமேல் கிடப்பதைப் பார்த்தான். அதை எடுத்துப் படிக்க ஆரம்பித்ததில், வெகு சுவாரசியமாக அவனைத் தன்னுள் இழுத்துக் கொண்டு போனது.
தூர்தர்ஷனில் வரும் காமெடி சீரியல்களின் இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக புத்தகங்கள் ஆக்கிரமித்துக் கொண்டன. பாலிடெக்னிக் புத்தகங்களை விட்டுவிட்டு கண்ணன் கதைப் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தும் எதுவும் கேட்காமல் (சொல்லாமல்) அண்ணன் போனது கண்ணனுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. டென்ட் கொட்டாயில் சினிமா பார்த்துவிட்டு வந்தால் மட்டும் “நச்” என்று தலையில் விழும் அண்ணனின் ‘குட்டு’ மட்டும் அப்படியே எந்த வித மாற்றமும் இல்லாமல் இருந்தது. அண்ணனுக்கு சினிமா என்றாலே ஆகாது.
“அதிலென்னடா இருக்கு, வெறும் துணில ஏதோ பொம்மை ஆடுது… அதைப்போய்ப் பார்த்துக்கிட்டு” என்பார்.
கொண்டுவரும் புத்தகங்களை எல்லாம் கண்ணனே பெரும்பாலும் படித்துக் கொண்டிருந்ததில் அவர் எந்த ஒரு புத்தகத்தையும் முழுதாய்ப் படிக்க முடியாமல் போகவே, ஒரு ஞாயிறு அன்று கண்ணனை நூலகத்திற்கு (“சைக்கிள்ல போலாண்ணே…நான் ஓட்டுறேன்” என்றவனை மறுத்து நடத்தியே) அழைத்துக் கொண்டு போய் அவனுக்கென்று ஒரு உறுப்பினர் கார்டு வாங்கித் தந்தார். அன்றுமுதல் ஒவ்வொரு ஞாயிறும் அண்ணனுக்கு முன்னாலேயே கிளம்பி சைக்கிளில் நூலகம் சென்று புத்தகம் எடுத்து வர ஆரம்பித்தான். கண்ணன் திரும்பி வரும்போது அண்ணன் எதிரில் நடந்து வந்து கொண்டிருப்பார்.
கொஞ்ச நாட்களிலேயே 100 பக்கப் புத்தகத்தை ஒரே நாளில் படித்து முடித்தான். அடுத்த புத்தகம் எடுக்க ஞாயிறுவரை நான்கைந்து நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. புத்தக அடுக்கில் ஒருநாள் “சுஜாதா” என்ற பெயரில் ஒரு புத்தகம் கண்களில் பட, வீட்டுக்கு எடுத்து வந்தான். எதிர்பார்த்ததைப் போல அது நாவலோ சிறுகதையோ அல்ல. கட்டுரைத் தொகுப்பு. ஆனால் சுவாரசியமாக இருந்தது. கண்ணன் அதுவரை கேள்விப் பட்டிருக்காத நிறைய எழுத்தாளர்கள், புத்தகங்கள் பற்றி, அதில் குறிப்பிடப் பட்டிருந்தது. அந்தப் புத்தகங்களையெல்லாம் அடுத்து வரும் வாரங்களில் நூலகத்தில் தேடி எடுத்துப் படிக்க ஆரம்பித்தான். பெரும்பாலான புத்தகங்கள் கிடைத்தன. ஒன்றைத் தவிர. “கணையாழி” என்ற பெயர் கொண்ட மாதப் பத்திரிக்கை பற்றி நிறைய இடங்களில் அந்தக் கட்டுரைகளில் குறிப்பிடப் பட்டிருந்ததில் அதைப் படிக்கும் ஆவல் அதிகரித்தது.
நூலகத்தில் இல்லை. பாலிடெக்னிக் போய்வரும் வழியில் தென்பட்ட கடைகளில் எல்லாம் கேட்டான். நிறையப் பேருக்கு அப்படி ஒரு பத்திரிக்கை வருவதே தெரியவில்லை.
அடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமை, நூலகத்துக்குள் நுழைந்தவுடன் நூலகரிடம் கணையாழின்னு ஒரு புக் வருதாமே, இங்க இருக்கா..?” என்று கேட்டான்.
“இங்க வரது இல்லப்பா…சிட்டி பக்கம் போனா சில இடங்கள்ல மட்டும் கிடைக்கும்… அது சரி, இவ்ளோ நாள்ல உங்க அண்ணாரு கூட இப்படி கேட்டதில்லை… நீ எங்க இதைப்பத்தி கேள்விப்பட்ட…?” என்றார் நூலகர் ஆச்சரியம் கலந்த குரலில். சுஜாதா கட்டுரைத் தொகுப்பில் இருந்ததைச் சொன்னான் கண்ணன்.
“இங்க பக்கத்தில் எங்கேயும் கிடைக்காது, எங்கிட்ட வீட்ல ஒரு பழைய இஸ்யூ இருக்கு..,அடுத்த வாரம் வரும்போது தரேன்…என்று சொல்லிவிட்டு புக் என்ட்ரி போட வந்த ஒருவரிடம “குடுங்க” என்று வேலையைப் பார்க்கலானார்.
சொன்னபடியே அடுத்த வாரம் அவன் கைகளில் திணிக்கப்பட்ட கணையாழியை நூலகத்திலேயே படித்து முடித்து திருப்பிக் கொடுத்தான். அதே கணையாழியில் அவன் எழுதிய கதை வரும், என்றெல்லாம் கொஞ்சம் கூட அவன் நினைத்ததில்லை.
- • •
ரிசப்ஷன் ஏரியாவில் இருந்து கேட்ட முனுசாமியின் குறட்டைச் சத்தத்தில், பழைய நினைவுகளில் இருந்து திரும்பி மறுநாள் தேர்வுக்குப் படிக்க ஆரம்பித்தான் கண்ணன்.
ஆசிரியர் குறிப்பு
செல்வராஜ் ஜெகதீசன் 1969 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தற்சமயம் பணிநிமித்தம் (மின்பொறியாளர்) அபுதாபியில் (ஐக்கிய அரபு குடியரசு) வசித்து வருகிறார்.
“அந்தரங்கம்” (2008),
“இன்னபிறவும்” (2009),
“ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்” (2010),
“நான்காவது சிங்கம்” (2012)
“சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை” (2014)
“பிரிவின் சாசனம்” தேர்ந்தெடுத்த கவிதைகள் (2019)
ஆகிய கவிதைத் தொகுப்புகள்
“யுகதர்மம்” சிறுகதைத் தொகுப்பு (2021)
“இரண்டில் ஒன்று” (2020) குறுநாவல் தொகுப்பு
கவிதையின் கால்தடங்கள், 50 கவிஞர்களின் 400 கவிதைகள் தொகுப்பு” (2013)
வெளியாகியுள்ளன.
.

One Comment on “செல்வராஜ் ஜெகதீசன்/ உள்வாங்கும் உலகம்”
Comments are closed.