
20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த பிறர் கவிதைகள்
இலைகளிலுள்ள மழைத்துளியெல்லாம்
இனிக்கிறது என்று
வண்ணத்துப் பூச்சி சொன்னது
முள் மரத்திடம்.
இனிக்கிறதா?
உன்னை விடக்கூடாதென
தனக்குள் நினைத்தது
உச்சி முள்ளில் ஓணான் ஒன்று
தரையிலிருந்து எறும்புகள்
ஒட்டுக்கேட்டன
குண்டத்து நெருப்பால்தான் மழை என்றது
மலைமீதிருந்து ஒரு குரல்
காற்று வந்து மேலே கொண்டு சென்றது
படையலாய் இலைகளில் இனிப்பை
கிடைத்த முட்களால் கட்டி
மழையை புற்றுக்கிழுக்கப் பார்த்தன
வரிசையாய் எறும்புகள்
தப்பிவிட்ட வண்ணத்துப் பூச்சியை
தன் கனவில் ஓணான்
பதமாய் சுட்டுத் தின்றது
தியானத்தைத் தொடர
வண்ணத்துப் பூச்சி
திரும்பவும் வந்திறங்கியதும்
மெய்சிலிர்த்தது முள்மரம்
