இந்திரநீலன் சுரேஷ் /நிழல் நிஜமாகிறது, a tribute to K.B Sir.

நம் முதல் காதல்போல, சில திரைப்படங்கள் என்றென்றும் நம் நெஞ்சத்தடத்தின் ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருக்கும். இந்தப் படமும் அப்படிப்பட்ட ஒன்று.
நிழலான கற்பனைகள் நிஜமாகாதா? என்கிற ஏக்கத்துடன் திலகா (அறிமுக நாயகி ஷோபா), கண்ணாடியும், கோபத்தையும் மூக்கின்மேல் வைத்து ஆண் வர்க்கத்தையே வெறுக்கும் இந்து (சுமித்ரா),
அலட்சியம் + உதவி மனப்பான்மை + திமிர் கொண்ட இளைஞனாக சஞ்சீவி (கமல்), இந்துவின் அண்ணனாக, குழந்தை முகத்துடன், தவறு செய்யும் சலம் (சரத்பாபு), காது கேட்கும் திறன் குறைந்திருந்தாலும், மனம் முழுக்க கருணை நிறைந்திருக்கும் காசி (அனுமந்து), எனக் குறுநாவலுக்கு ஏற்றச் சிக்கனமான பாத்திரங்கள். இதைத் தவிர சைலன்ட் ஹீரோ, ஒருவரும் உண்டு.
ஏழையானாலும், கனவில் ‘ராணி’ யாகத் தன்னைக் கற்பனை செய்து கொள்ளும் ஷோபா, ‘கிழிந்தாலும் சாயம் போகாது, அப்படிப்பட்ட பொண்ணு’ என்ற கேரண்டியுடன், சுமித்ரா வீட்டுக்குச் சமையல்காரப் பெண்ணாக வருகிறார். கிளி ஜோசியத்தை நம்பி, வீட்டு ராஜகுமாரனான சரத்’திடம் தன்னை இழக்க, ஷோபாவிற்காகக் கற்பனையில் மிதக்கும் வேலைக்காரன் அனுமந்துவிற்கோ அதிர்ச்சி!
வயிற்றில், குழந்தையுடன் வெளியேற்றப்படும் ஷோபா, தவறை ஒப்புக்கொள்ள மறுக்கும் சரத் என, கதை கிடு, கிடுவென வேகம் எடுக்கிறது.
இப்படி சீரியஸ்ஸான விஷயங்கள் போய்க்கொண்டிருக்க, ஆண்களை வெறுக்கும் வீட்டு எஜமானி சுமித்ராவிற்கும், சரத்தின் நண்பனாக வரும் கமலுக்கும் இடையே நடக்கும் உரசல்கள் (காதல்) கவிதை!
‘என்ன இந்துமதி அம்மா!’ என எப்போதும் வெறுப்பேற்றும் கமல், அந்த வீட்டின் பேயிங் (சாப்பாடு) கெஸ்ட்.
“என்ன சமையல்ல காரம் குறைஞ்சிருக்கு? ன்னு கமல் கேட்க,
“இது குண்டூர் மிளகா, அத்தனை சுலபத்தில காரம் குறையாது” என சுமித்ரா பொருமுவதும்,
“அல்லிக்கேற்ற அர்ஜுனன்!” எனச் சிறியக் கண்ணடிப்புடன், ஷோபா மகிழ்வதும் மிஸ் பண்ணக்கூடாதவை.
சுமித்ரா, கமலை ‘எங்க அந்தப் பொடியன்?’ என்று குறிப்பிடுவதும் செம ஜாலி!
சிகரெட் லைட்டரை, கமல் மறந்து விட்டுப்போக, அதை சுமித்ரா ரகஸியமாக எடுத்துத் தலையணைக்குள் பத்திரப்படுத்துவதும், அது எங்கே என்று கமல் கேட்க, தெரியாது எனச் சாதிப்பதும், எனக்குப் பிடிச்சதை நீங்க உடமை ஆக்கிக்கிட்டா, உங்களுக்குப் பிடிச்சதை நான் ஏன் உடமை ஆக்கிக்க கூடாது?, எனத் தீடீரென கமல், சுமித்ராவைக் கட்டியணைக்க, அதிர்ச்சி சுமித்ராவிற்கு மட்டுமல்ல, 1978’இல் படம் பார்த்தவர்களுக்கும்தான்!
ஷோபாவின் கரத்தைச் சரத்பாபு தொட, அதே நேரம், ஷோபாவின் (பாத்திரம் தேய்த்த) கரிக்கரை, தன் பனியனில் இருப்பதை, அனுமந்து தொட்டுப் பார்ப்பது,
சுமித்ரா நடத்தும் நடன வகுப்பின் ஜதி’க்கேற்ப ஷோபா ஆடிக்கொண்டே அடுக்களையில் வேலை செய்வது. கமலின் ஸ்கூட்டர் வீட்டுக்குள் வருவதற்கு, கோலத்தைச் சிறிது அழித்து சுமித்ரா வழி விடுவது,
கமலின் கிழிந்த போட்டோவைக் காலண்டரின் பின்புறம் ரகசியமாக ஒட்டிவைப்பது, எனச் சர்க்கரைப் பொங்கலில் முந்திரிப் பருப்பாக, K.Bசாரின் ஸ்பெஷல் டச் படம் முழுக்க தூவியிருப்பதைப் பார்க்கலாம்.
இந்தப் படத்தில் முழு கனத்தையும், வயிற்றில் குழந்தையாகச் சுமக்கிறார் ஷோபா. கமல், சுமித்ரா இருந்தாலும், அறிமுக ஷோபாவின் அற்புத ஸ்டில்ஸ் தொகுப்பை வைத்துப் படத்தின் டைட்டில் ஆரம்பித்துள்ளார் K.B. ஷோபாவிற்கு ‘நூற்றுக்கு நூறு’ கொடுத்ததற்குச் சான்று இது. (ஸ்டில், EVK நாயர்)
கேமிரா மேதை லோக்நாத்தின் கேமரா, வாசல் வழியாக நுழையாமல், ஜன்னல் வழியாக நுழையும்போது, நாமும் அந்த வீட்டில் நடப்பதை எட்டிப் பார்க்கிறோம்..
தேனாய் இனிக்கும் குரலில் வாணி அம்மா மற்றும் SPB சார் பாட, MSV யின் இசையில், 200 வருஷம் தாங்கும்படி, இரண்டே இரண்டு முத்தான பாடல்கள் (கம்பன் ஏமாந்தான், இலக்கணம் மாறுதோ).
படத்தின் சைலன்ட் ஹீரோ, நம்ம கண்ணதாசன் ஐயாதான். ஃபிரேம் by ஃபிரேம் நகர்த்துவதில் வல்லவரான KB க்கே சவால் விடும் வண்ணம், பல காட்சிகளைப் பாடலின், சில வரிகளில் நகர்த்திச் சென்றுவிடுகிறார்.
சுமித்ராவின் பாத்திரம், வெளியில் முள், உள்ளே பலா என்பதையும் அவர் மனது படிப்படியாக மாறுவதையும்,
“வெண்மேகம் அன்று, கார்மேகம் இன்று,
யார் சொல்லித் தந்தார், மழைக் காலம் என்று,
“மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ,
விளக்கி வைப்பாயோ”
கம்பன், இளங்கோ, பாரதி வரிசையில் பெண்மையை புரிந்து கொள்ளத் தவறியதை குறிப்பிட்டு, ‘அட’ நானும் ஏமாந்தேன் என்று சொல்வது, அழகோ அழகு. (அந்த ‘அட..’வை மட்டும் எடுத்துக்கொண்டு thesis செய்ய எனக்கு ஆசை!)
“தெய்வங்களெல்லாம் உனை வாழ்த்திப் பாடும்.
பாடாமல் போனால் எது தெய்வமாகும்..”
என்கிற வரிகளில், படத்தின் நிஜ ஹீரோ அனுமந்துதான் என்று வெளிப்படுத்துகிறார்.
ஒரு படம் முடியும் தறுவாயில், திடீர் வெளிச்சச் சிதறல்களும், மக்கள் சலசலப்புடன் இருக்கையை விட்டு எழுவதும், ‘வணக்கம்’ போடுவதற்குள் நகருவதும் சகஜம்.
படம் முழுவதும் முடிந்தும், உட்கார்ந்த இடத்திலிருந்து சில நொடிகள் எழுவதற்கு யாருக்கும் தோன்றாததுதான், இந்தப் படத்தின் சக்ஸஸ்!

2 Comments on “இந்திரநீலன் சுரேஷ் /நிழல் நிஜமாகிறது, a tribute to K.B Sir.”

  1. ஆஹா நம்எல்லோருக்கும் பிடித்த இயக்குனர் கேபி அவர்கள் .அவருடைய அருமையான படங்களில் ஒன்று நிழல் நிஜமாகிறது. அதைத் துல்லியமாக ஆய்ந்து படைத்திருக்கும் இந்திரநீலன் சுரேஷ் அவர்கள். .திரும்ப ஒருமுறை இந்த படத்தை ப்பார்க்கத் தூண்டும் படி இருக்கும் அவரது எழுத்து. கேபி சாருக்கு இதைவிட ஒரு நல்ல அர்ப்பணிப்பு எது? ஆஹா ஓஹோ பேஷ்

  2. சரியான பிறந்த நாள் பரிசுதான் இந்த விமர்சனம். அணுஅணுவாக ரசித்திருக்கிறீர்கள் என்று‌ புரிகிறது. அந்த ரசனை ஊற்றுக்குள் எங்களையும் இழுத்துச்சென்று விட்டீர்கள். அவரது சிந்து பைரவியையும் உன்னால் முடியும் தம்பியையும் எவ்வளவு முறை பார்த்தாலும் எனக்கு அலுக்காது.

Comments are closed.