By Kadar Karay

பத்தாவது ஃபெயில்தான் நான்! என் அப்பா, அம்மா படிக்கவில்லை? கமல் மகள் அக்ஷராஹாசன் ஓபன் டாக்!
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மனைவி சரிகா. இவர்கள் இருவருக்கும் பல ஆண்டுகள் முன்பே விவாகரத்து நடந்துவிட்டது. அப்போது ஸ்ருதிஹாசனும் அக்ஷராஹாசனும் சின்ன குழந்தைகள். சிறுவயதில் தனது பெற்றோரின் விவாகரத்து தன்னை எந்தளவுக்குப் பாதித்தது என்பது பற்றி அக்ஷராஹாசன் இப்போது மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன். இவர்தான் கடைக்குட்டி. இவருக்கு முன் ஸ்ருதிஹாசன். மிகப்பெரிய நடிகரின் வாரிசு இவர். வெளியில் இருப்பவர்களின் பார்வையில் ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி. ஆனால், உண்மையில் தங்களின் வாழ்க்கை ராஜா வீட்டு கன்றுக்குட்டி போல இல்லை என்கிறார் இந்த அக்ஷரா ஹாசன்.
தனது சிறு வயது முதலே சொந்தக் காலில்தான் நின்று வாழ்க்கையைச் சமாளித்து வருவதாகச் சொல்கிறார். என்னதான் அப்பா, அம்மா பெரிய நடிகர்களாக இருக்கலாம், ஆனால் கடைசி வரை நம்முடன் கூடவே வரப் போவது நமது திறமை தான் என்கிறார் இவர். தனது வாழ்க்கை பற்றி, அப்பா கமல்ஹாசன் பற்றி, அம்மா சரிகா பற்றி, அக்கா ஸ்ருதிஹாசன் பற்றிப் பல விசயங்களை உடைத்துப் பேசி இருக்கிறார் அக்ஷரா. அதைக் கேட்டும் போது அவரது வாழ்க்கை பஞ்சு மெத்தையால் ஆனது இல்லை. அது பல நேரங்களில் முள் படுக்கையாகவும் இருந்துள்ளது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஒரு யூடியூப் சேனலுக்கு அக்ஷரா ஹாசன் அளித்துள்ள பேட்டி பலரது மனதைக் கலங்கடித்துள்ளது. அவர் அதில் அப்படி என்ன பேசியிருக்கிறார்? அக்ஷராஹாசன் அவரது பேட்டியில் பேசும் போது, “சினிமாவுக்கு வருவதற்கு முன்பே எனக்கு இந்தத் துறை எப்படி இருக்கும் எனத் தெரிந்திருந்தது. வீட்டில் உள்ளவர்கள் அதற்கான தைரியத்தைக் கொடுத்து இருந்தார்கள். நான் வந்தால் என்னை எனது பெற்றோருடன் வைத்து ஒப்பிடுவார்கள் எனத் தெரியும். ஆனால், எனக்கு ஒரு இடமும் அவர்கள்தான் கொடுத்திருக்கிறார்கள். அதேநேரம் என்னுடைய தனித்துவத்தை உருவாக்கிக் கொள்ள அனுமதியும் கொடுத்தார்கள். அதற்காக என் பெற்றோருக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.
சின்ன வயதிலிருந்தே எங்கள் வீட்டில் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. நீ நடிகையாக வேண்டும், டாக்டர் ஆகவேண்டும் என்று எதையும் கட்டாயப்படுத்தவில்லை. சின்ன வயதில் டீச்சர், ‘நீ வளர்ந்ததும் என்ன ஆக ஆசைப்படுகிறாய்?’என்று கேட்டார். அதற்கு, ‘ஒரு டான்ஸ்மாஸ்டர் அல்லது ஃபுட்பால் பிளேயர் ஆவேன்’ என்று சொன்னேன். மனதில் அதுதான் உண்மையாக இருந்தது. நான் நடிகையாகவில்லை என்றால் ஒரு ஃபுட்பால் பிளேயர் ஆகியிருப்பேன்.
சின்ன வயதிலேயே நான் அப்பாவிடம், ‘நான் காலேஜ் போகமாட்டேன். 18 வயசுக்குப் பிறகு வேலைக்குப் போய்விடுவேன்’ என்று சொன்னேன். உடனே அப்பா, ‘ஏன் அப்படி சொல்றே?’ என்றார். தெரியவில்லை. அப்படித்தான் தோன்றுகிறது என்றேன். நான் ஹைஸ்கூல் ட்ராப் அவுட். பத்தாவது பெயில் ஆகிவிட்டேன். திரும்ப எழுதினேன். அதிலும் பெயில் ஆகிவிட்டேன். சிலருக்குப் படிப்பது பிடிக்காது. அது ஒன்றும் தப்பில்லை.
அதன்பின்னர் சிங்கப்பூரில் உள்ள டான்ஸ் காலேஜில் படிக்கலாம் என்று முடிவு எடுத்து அப்பாவிடம் சொன்னேன். அதுவும் காலேஜ் படிப்பு மாதிரிதான். அதற்கும் எண்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதவேண்டும். அதற்கு முன்னால் டான்ஸ் கிளாஸ் போய்க்கொண்டிருந்தபோது கால் சுவரில் அடித்து உடைந்துவிட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் ஆறு மாசம் பெஸ்ட் ரெஸ்ட் எடுக்கவேண்டிய நிலை. என் மொத்த கனவு சிதைந்துபோனது.
அப்பாவும் அதிகம் படிக்கவில்லை. அம்மா 4 வயதிலிருந்தே குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்துவிட்டார். பள்ளியில் படிக்கவே போகவில்லை அவர். அம்மாவுக்கு ஸ்கூல் என்பது சினிமா இண்டஸ்ட்ரிதான். ஆகவே அம்மாவும் என்னைப் புரிந்துகொண்டார். நான் அதன்பின்னர் சம்பாதிக்க ஆரம்பித்தேன். 18 வயதிலிருந்து சொந்தக் காலில் தான் நிற்கிறேன். பெற்றோரிடம் பணம் கேட்பதில்லை.
நாளைக்கு நாம் தான் நம் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதைச் சின்ன வயதிலேயே புரிந்து கொண்டேன்” என்று பேசி உள்ளார். அதன்பின்னர் ஒரு நடன இயக்குநராக, உதவி இயக்குநராக, படத்தயாரிப்பு மேற்பார்வையாளராகப் பல வேலைகளைச் செய்துள்ளார். இவருக்கு நடிகையாக வேண்டும் என்ற கனவு இருந்தாலும், அது கிடைக்கும் வரை தொடர்ந்து சினிமாவில் பலதுறைகளை கற்று அதன் மூலம் சம்பளம் பெற்றுள்ளார் அக்ஷராஹாசன்.
தொடர்ந்து பேசிய அவர் தனது அப்பா, அம்மா பிரிவுக்குப் பிறகு நடந்த விசயங்களைப் பற்றிப் பேசியுள்ளார். “எனது அப்பா, அம்மா தனியாகப் பிரியும்போது ஒரு குழந்தையாக என் மனதை அது பாதித்தது. ஏனென்றால் நாங்கள் நடிகரின் பிள்ளைகளாக இருக்கலாம். ஆனால், நாங்களும் மனிதர்கள்தானே? மனதைப் பாதிக்கத்தானே செய்யும்?
ஒருமுறை வெளியே ஹோட்டல் போய் இருந்தபோது குடும்பத்தைப் பற்றி யாரோ கிண்டலடித்தார். நான் அப்படியே அவர் மேல் பாயப் போய்விட்டேன். அக்காதான் என்னை அடக்கி, ‘நம் குடும்பத்தின் மானத்தை நாம் தான் காப்பாற்ற வேண்டும். அப்படி நடத்துக் கொள்ளக் கூடாது’ என்று அறிவுரை கொடுத்தார்.
அக்காவும் நானும் மும்பையில்தான் இருக்கிறோம். சென்னைபோல மும்பை கிடையாது. சென்னை ஒரு வட்ட வடிவத்தில் அமைந்துள்ளது. மும்பை நீளமான நகரம். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் போவது கடிதம். அக்கா 40 கிமீட்டர் தள்ளி இருக்கிறார். எப்போதாவது வருவார். வீட்டில் அவர் சூப்பராக சாம்பார் சாதம் சமைப்பார். நன்றாகச் செய்வார். அதை நான் விரும்பி சாப்பிடுவேன். வீட்டில் உள்ளபோது பியானோ வாசித்துப் பாடுவார். அதைக் கேட்பேன்” எனப் பல விசயங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.
நன்றி: ஒன்இந்தியா தமிழ்

🙏🙏