
*பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு 95 வயது நிறைந்து 96 வயது தொடங்குகிறது.
அதற்கான பிறந்த நாள் விழா ஜூலை ஆறாம் தேதி சென்னையில் நடைபெற்றது, இ.பா. அன்பர்கள், அவரது நாடகத்துறை மாணவர்கள் என்று பலர் கூடினார்கள்.
அவர் புதல்வி திருமதி பத்மாவும் அவரது மாப்பிள்ளை திரு ராமநாதனும் இ.பா. கையில் சிறு கத்தியைக் கொடுத்து கேக் வெட்டச் சொன்னார்கள்.
ஒரூ குழந்தையின் உற்சாகத்தோடு இ.பா. கேக் வெட்டித் தன் பிறந்த நாளைக் கொண்டாடினார். ஒரு துண்டு கேக்கை வாயில் போட்டுக் கொண்டார். வந்திருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ந்தோம்.
கான்வென்ட் பையனைப் போல் அழகாக உடையணிந்து வந்திருந்தார். என்னைப் பார்தததும் என் கையை இறுகப் பற்றிக் கொண்டார். என் மனைவி கொடுத்த கொஞ்சமே கொஞ்சம் திருப்பதி லட்டுவை வாயில் போட்டுக் கொண்டார். என் மனைவியிடம் நலம் விசாரித்தார்.
அவர் அண்மை எனக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைக் கொடுத்தது. நான் அவர் அருகே உட்கார்ந்து கொண்டேன்.
இந்து பத்திரிகை கோலப்பன் அவரிடம் பல கேள்விகளை எழுப்ப எந்தத் தயக்கமும் இன்றி உற்சாகமாகப் பதிலளித்தார்.
பன்னிரண்டு மணியிலிருந்து இரண்டு மணிவரை எல்லோருடனும் பேசிக் கொண்டிருந்தார். பின்னரே புறப்பட்டார்.
ஒரு சிறு நினைவுப் பழுதும் இல்லை. காது சரியாகக் கேட்கவில்லை என்பதால் ஹியரிங் எய்ட் உபகரணம் பொருத்திக் கொண்டிருந்தார்.
தொலைபேசியில் அவரால் பேச இயலவில்லை. ஆனால் ஏதேனும் குறுஞ்செய்தி அனுப்பினால் உடனே பதில் அனுப்பிவிடுகிறார்.
டேக் மையம் நடத்துபவரும் இ.பா.வின் மிக நெருங்கிய நண்பருமான சாரி, நாடக நடிகரும் திரை நடிகருமான் குமரவேல், அசோகமித்திரனின் புதல்வர் ராமகிருஷ்ணன், அவர் மனைவி, நாடக இயக்குநர் கருஞ்சுழி ஆறுமுகம், கிழக்கு பத்ரி, யோகாசனக் கலைஞர் அண்ணாமலை, இ.பா.வின் மாப்பிள்ளை ராமநாதனின் வயலின் குருவான நர்மதா, அகிலன் கண்ணன் என இ.பா.வின் அன்பர்கள் பலரை விழாவில் சந்திக்க முடிந்தது.
இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகளை ஆய்வு செய்துதான் நான் முனைவர் பட்டம் பெற்றேன். என் முனைவர் பட்ட நெறியாளர் பேராசிரியர் அ. ராமசாமி.
ஆய்வின் பொருட்டு இ.பா. நாடகங்களையும் நாவல்களையும் சிறுகதைகளையும் பலமுறை மீண்டும் மீண்டும் படித்தேன்.
ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதிது புதிதான அனுபவங்களை அந்தப் படைப்புகள் கொடுத்ததுதான் ஆச்சரியம்.
இ.பா.வின் நாடகங்கள் மேடையேறும்போது பலமுறை பார்த்திருக்கிறேன். கே.ஏ. குணசேகரன், ராஜு, அ. ராமசாமி, கருஞ்சுழி ஆறுமுகம் உள்ளிட்ட பலர் அவரது நாடகங்களை இயக்கியிருக்கிறார்கள்.
வசனம் இ.பா.வின் அதே வசனம்தான். ஆனால் இயக்குநரின் கண்ணோட்டத்தில் அதே வசனங்களால் ஆன அதே நாடகம் வேறு வேறு பரிமாணங்களைப் பெறுவதுதான் வியப்பு.
நந்தன் கதையில் கோபாலகிருஷ்ண பாரதியார் பெரியபுராணத்தில் இல்லாத வேதியர் பாத்திரத்தைப் புகுத்தினார். அதுபோலவே நந்தன் கதையில் இ.பா. புகுத்திய புதிய பாத்திரம் அபிராமி என்ற நடனமணி.
இ.பா.வின் நந்தன் கதை மேடையேறும்போது அதில் நடிக்க நடனம் தெரிந்த ஒரு நாடக நடிகை தேவைப்படுவார்.
ஒருமுறை நந்தன் கதை நாடகத்தில் அபிராமி பாத்திரமேற்று நடித்தவர் நடனமும் அறிந்தவரும் எழுத்தாளர் லட்சுமி ராஜரத்தினத்தின் புதல்வியும் குமுதம் ப்ரியா கல்யாணராமனின் மனைவியுமான சகோதரி ராஜசியாமளா.
உரையாடல்தான் இ.பா. படைப்பிலக்கியத்தின் தனித்தன்மை. சிறுகதைகளிலும் நாவல்களிலும் கூர்மையான உரையாடல்களைப் படைத்தவர் இ.பா.
அதனால்தான் பின்னாளில் அவர் உரையாடல்களாலேயே ஆன நாடகத் துறையில் ஈடுபட்டபோது பெருவெற்றி பெற முடிந்தது.
சி.சு.செல்லப்பா முறைப்பெண் என்ற நாடகம் எழுதினார். பி.எஸ். ராமையா தேரோட்டி மகன் எழுதினார். கு. அழகிரிசாமி கவிச்சக்கரவர்த்தி எனக் கம்பர் கதையை நாடகமாக்கினார். தி.ஜானகிராமனின் நாலுவேலி நிலம், வடிவேலு வாத்தியார் ஆகிய இரு நாடகங்களும் புகழ்பெற்றவை.
ஆர். சூடாமணி இருவர் கண்டனர் என்ற நாடகம் எழுதினார். ஜெயகாந்தனும் நாடகம் எழுதியுள்ளார். இப்படி இன்னும் பல முக்கியமான எழுத்தாளர்கள் நாடகங்கள் எழுதியுள்ளார்கள்.
என்றாலும் இந்த முதல்நிலை எழுத்தாளர்கள் எல்லாம் நாடகத் துறையில் அதிகம் ஈடுபட்டவர்கள் அல்லர். புதினம், சிறுகதை இவற்றோடு நிறைவடைந்தவர்கள்.
ஆனால் இ.பா. நாடகத் துறையில் ஈடுபட்டுப் பதினைந்துக்கும் மேற்பட்ட முக்கியமான நாடகங்களைப் படைத்து அகில இந்திய அளவில் பேசப்படுபவரானார். அவரது நாடகங்கள் பல இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வட இந்திய மேடைகளில் நடிக்கப் பட்டவை.
இ.பா.வின் சிறுகதைகளில் இறுதித் திருப்பங்கள் கூடப் பெரும்பாலும் உரையாடல்களாலேயே அமைபவை. சம்பவங்களால் அல்ல.
இ.பா. நகர எழுத்தாளர். பெரிதும் தில்லிதான் அவரது நிலைக்களன். அவரது தொடக்க காலப் புதினமான காலவெள்ளத்தில் கும்பகோணத்தைப் பார்க்கலாம். ஒரு சில சிறுகதைகளிலும் கும்பகோணம் வந்து செல்லும்.
மற்றபடி பெரும்பாலான புதினங்களிலும் சிறுகதைகளிலும் தென்படுவது நகரம் தான்.
நகர வாழ்வில் மத்தியதர வர்க்கத்து மனிதர்கள் அனுபவிக்கும் உளவியல் சார்ந்த சிக்கல்களைத் துல்லியமாகப் பேசுபவை அவரது படைப்புகள்.
இன்றைய நவீன வாழ்வின் சிடுக்குகள் அனைத்தையும் அவர் படைப்புகள் கண்ணாடிபோல் பிரதிபலிக்கின்றன.
தமிழ் எழுத்தாளர்களில் அதிகம் அரசியலை எழுதியவர் என்று அவரைச் சொல்லலாம். தந்திர பூமி, சுதந்திர பூமி, வேதபுரத்து வியாபாரிகள் உள்ளிட்ட பல புதினங்கள் அரசியல் களத்தைக் கொண்டவை. தைரியமான எழுத்து இ.பா.வுடையது.
அரசியல் சார்ந்த தம் புதினங்களில் மிகத் தீவிரமான சமகால அரசியல் விமர்சனங்களையும் பதிவு செய்துள்ளார். அவரது தொடக்க கால நாவலான தந்திரபூமி, அவரின் நெருங்கிய நண்பரான நா. பார்த்தசாரதியின் தீபம் மாத இதழில்தான் தொடராக வெளியாயிற்று.
அந்த நாவலுக்கான தலைப்பே நா.பா. வைத்ததுதான். (தி. ஜானகிராமன் கல்கியில் எழுதிய அன்பே ஆரமுதே என்ற நாவலுக்கும் தலைப்பு வைத்தவர் நா.பா. தான்.) இ.பா.வின் தந்திர பூமி நாவலில் அன்றைய பாரதப் பிரதமர் இந்திராகாந்தி ஒரு பாத்திரமாக வருகிறார்.
நாவல் சிறுகதை நாடகம், கட்டுரை என நான்கு துறைகளில் முத்திரை பதித்தவர் இ.பா.. சாகித்ய அகாதமி பரிசு, சரஸ்வதி சம்மான் பரிசு என இரு அகில இந்திய விருதுகளையும் பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர். பாரதிய பாஷா பரிஷத் விருது பெற்றவர்.
இந்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து இவரை கெளரவித்துள்ளது.
முறையாகத் தமிழ் படித்தவர். பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கசடறக் கற்றவர். தமிழிலக்கியத்தில் வைணவம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். அதே நேரம் ஆங்கில இலக்கியத்திலும் ஆழங்கால் பட்டவர்.
ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய தி. ஜானகிராமனிடம் பள்ளிப் பருவத்தில் கல்வி பயின்றிருக்கிறார். (தி.ஜா.வின் மாணவர் இந்திரா பார்த்தசாரதி என்ற செய்தியைப் போல், இந்திரா பார்த்தசாரதியின் மாணவர் ஆதவன் என்ற செய்தியும் குறிப்பிடத் தக்கது.)
போலந்து நாட்டில் வார்சா பல்கலைக் கழகத்திலும் பின்னர் புதுச்சேரி பல்கலைக் கழக நாடகத் துறையிலும் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
தொண்ணூற்றியாறு வயதான இவர், தம் படைப்புகளைக் கணிப்பொறியில் அச்சுக்கோத்து மின்னஞ்சலில் பத்திரிகைகளுக்கு அனுப்புகிறார்.
பதினேழுக்கும் மேற்பட்ட நாவல்கள், ஆறுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகள், பதினைந்துக்கும் மேற்பட்ட நாடகங்கள், எண்ணற்ற கட்டுரைகள் என இவர் படைத்த எழுத்துகள் ஏராளம்.
இந்து முஸ்லிம் நல்லிணக்கத்தை முதன்மைப்படுத்தி இவர் எழுதிய அற்றது பற்றெனில் என்ற சிறுகதை இலக்கியச் சிந்தனை அமைப்பின் ஆண்டுப் பரிசைப் பெற்றது. அந்தச் சிறுகதை விக்கிரமன் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் அமுதசுரபி மாத இதழில் வெளிவந்த கதை.
அது அவர் பரிசுபெற்ற ஆண்டு. இலக்கியச் சிந்தனை மேடையில் பரிசளிப்பு விழா நிறைவடைந்தபின் நாடகமாக நடிக்கப் பட்டது.
அமுதசுரபியில் இப்போதும் இ.பா. மாதந்தோறும் எழுதி வருகிறார். இந்திரா பார்த்தசாரதி பக்கங்கள் என்ற தலைப்பில் இவரது எழுத்துகளை அமுதசுரபி மிகுந்த பெருமையுடன் வெளியிட்டுவருகிறது.
இந்தத் தருணத்தில் அமுதசுரபி மாத இதழ் அவருக்குத் தன் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது.
…………………………………….

மிகச் சிறப்பு
சிறப்பான பதிவு.
அன்பு நிறைந்த திரு. இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.