க.மோகனரஙகன்/கோடை


அற்ற குளத்தின் கரையில்
அயர்ந்து நின்றிருந்தது
அந்த நெடு மரம்.
அம் மட்டும் பிடிவாதமாக
அமர்ந்திருந்த பறவையும் கூட
இனியும் இருப்பதற்கில்லை என
இறுதியாக எழுந்து பறந்ததும்
கவியும் தனிமை பொறாது,
பதை பதைத்திடும்
பசிய இலைகளை
பரிவுடன் ஆற்றுகின்றன
சிறிய கிளைகள்.
உலர்ந்த பட்டைகள் சில
உரிந்து தொங்க
உலவும் காற்றில்
பழுத்த இலைகள் பலவும்
பயனின்றி உதிர்கின்றன.
பற்றற்று யாவற்றையும்
பார்த்து நிற்கும்
பரு வடிவான உருவமது,
பிரிவின் அடையாளமாக
பிறிதொரு வரியை
வரைந்துகொள்கிறது
அடிவயிற்றில்.