மனதும் பட்டாம் பூச்சியும்/தங்கேஸ்

மனசு போகும் வழியை
ஓவியம் தீட்டினேன்
ஒரு பட்டாம் பூச்சி பறந்து சென்றது
ஒரு மலரில் போய் அமர்ந்தது

மலர் அதை புறம் தள்ளியது
பட்டாம் பூச்சி முள்ளில் போய் தன்னை கழுவேற்றிக் கொண்டு
குருதியில் துடித்தது

இப்போது பூ மெல்ல குலுங்கியது
பிறகு துடி துடித்தது காற்றில்
நகர முடியவில்லை

கவலையிலேயே அது சருகானது
பார்ப்பதற்கு சருகு
கண்ணீர் துளி போலவே இருந்தது

உதிரும் நேரத்தில் அது முள்ளை
முத்தமிட்ட பின்பே உதிர்ந்தது

தரையில் விழும் முன் அந்தரத்தில்
சிறிது நேரம் பட்டாம்பூச்சி போலவே
சிறகடித்து விழுந்தது

இப்போது சருகை ஓவியம் தீட்டினேன்
கிடைத்தது என் மனது
மீண்டும் அதில் ஒரு பட்டாம் பூச்சி