ரவி அல்லது/புகை மண்டலம்

அழகிய சிங்கருக்காகக

ஏதோவொன்று

இத்தனை நாட்கள்
முன்
ஏதோவொன்று
நிகழ்ந்தது
அது பிறப்பென
சொல்லப்பட்டது.

இத்தனை நாட்கள்
முன்
ஏதோவொன்று
நிகழ்ந்தது.
பள்ளிக்கான தேடலில்
படிக்கும் கௌரவம்
அரங்கேறியது.

இத்தனை நாட்கள்
முன்
ஏதோவொன்று
நிகழ்ந்தது
அது
பருவமெய்தியதாக
கூறப்பட்டது.

இத்தனை நாட்கள்
முன்
ஏதோவொன்று
நிகழ்ந்தது .
அது
வருவாய்கள் ஈட்டும்
வாழ்க்கையாக மாறியது.

இத்தனை நாட்கள்
முன்
ஏதோவொன்று
நிகழ்ந்தது.
இதுதான்
துணையென
கூத்தொன்று
நடந்தது.

இத்தனை நாட்கள்
முன்
ஏதோவொன்று
நிகழ்ந்தது.
அது
அடுத்த தலைமுறைக்கு
அடித்தளமிட்டது.

இத்தனை நாட்கள்
முன்
ஏதோவொன்று
நிகழ்ந்தது.
என்னைப்போலவே
ஒன்று
எனக்கு முன்
உலவியதால்
உள்ளம் மகிழ்ந்தது

இத்தனை நாட்கள்
முன்
ஏதோவொன்று
நிகழ்ந்தது.
என்னைப்
பிற்போக்கென புரிந்து பிள்ளை
முற்போக்கு செயலில்
முற்பட்டது

இத்தனை நாட்கள்
முன்
ஏதோவொன்று
நிகழ்ந்தது.
அது
அதற்குப் பிடித்தமான துணையோடு
வாழ்க்கையைத்
யாருமற்று
எங்கோ தொடர்ந்தது.

இத்தனை நாட்கள்
முன்
ஏதோவொன்று
நிகழ்ந்தது
யாருக்கும்
சொல்லாமலே
தன் துணையை
துண்டித்து விட்டு
எங்கள்
அறுபதாம் கல்யாணத்தில்
அழுது கொண்டே
எங்களிடம்
ஆசிர்வாதம்
வாங்கியது.

இத்தனை நாட்கள்
முன்
ஏததோ நிகழ்ந்தது
அது
என்னைப் பக்குவத்தில்
ஆழ்த்தி
பிறரை
நேசிக்க வைத்தது.