வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

  1. க.நா. சு. கருத்து

1963 இறுதியில் தோன்றியது க.நா. சுப்ரமண்யத்தின் ‘இலக்கிய வட்டம்’; மாதம் இருமுறை. அதன் இதழ்களில் புதுக் கவிதை போதிய இடம் பெற்று வந்தது.
‘இலக்கியத் துறையில் செய்ய வேண்டிய காரியங்கள் எத்தனையோ இருக்கின்றன– இன்றைய தமிழ் இலக்கிய வளம் பெருக’ என்ற நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட ‘இலக்கிய வட்டம்’ பத்திரிகையில், ‘நமக்கு நாமே பல விஷயங்களையும் தெளிவு செய்து கொள்ள வேண்டும்’ என்ற எண்ணத்துடன் அதன் ஆசிரியரும் மற்றும் சில எழுத்தாளர்களும் எழுதிக் கொண்டிருந்தார்கள். அதனால், ‘இலக்கியவட்டம்’ நல்ல இலக்கியப் பத்திரிகையாக விளங்கியது. எழுத்தாளர்களுக்கும் இலக்கியப் பிரியர்களுக்கும் பயன்படக் கூடிய அருமையான விஷயங்கள் ஒவ்வொரு இதழிலும் பிரசுரமாயின. ‘இ.வ.’ சுவாரஸ்யமான ஒரு இலக்கிய ஏடு ஆகவும் வளர்ந்து வந்தது.
அது ஒரு வருஷமும் சில மாதங்களும்தான் உயிரோடிருந்தது என்று நினைக்கிறேன்.
‘இலக்கிய வட்டம்’ புதுக்கவிதையையும் ஒரு சோதனைத்துறை’ ஆகத்தான் கருதியது. பிச்சமூர்த்தியின் படைப்புகளை ‘புதுக்கவிதை’ யாக அது அங்கீகரிக்கவில்லை.
அதன் 25வது இதழில் வெளிவந்த அபிப்பிராயம் இது-

புதுக்கவிதை
‘ஏனய்யா இந்தமாதிரிக் கவிதையல்லாத கவிதைகளையெல்லாம் போட்டு எங்கள் பிராணனை வாங்குகிறீர்?’ என்று ஒரு நண்பர் புதுக்கவிதை முயற்சிகளைக் குறித்து எழுதிக் கேட்டுள்ளார்.
மணிக்கொடி காலத்தில் சொ.வி. புதுமைப்பித்தன் என்ற பெயரில் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய காலத்தில் இதெல்லாம் கதைகளா ஐயா, கழுத்தறுப்பு என்று சொன்னவர்கள் உண்டு.
அவர்களே இப்போது புதுமைப்பித்தன் என்றால் ஆஹா என்கிறார்கள்.
இந்தப் பாராட்டுக்கும் கண்டனத்துக்கும் அர்த்தமேயில்லை. சிறுகதை என்கிற உருவம் போல, புதுக்கவிதை என்கிற உருவம் தோன்றிவிட்டது-நிலைக்க அதிக நாள் பிடிக்காது.
தமிழில் செய்யுள் எழுதுவது மிகவும் சுலபமான காரியமாகி, எழுதப்பட்ட செய்யுள் எல்லாம் கவிதை என்று சொல்கிற அளவுக்கு வந்தாகிவிட்டது.
இது எல்லா மொழி இலக்கியங்களுக்குமே பொதுவாக உள்ள விஷயம் தான். மரபு என்பதை மீறியே மரபுக்குப் புது அம்சங்களைச் சேர்க்க வேண்டியது அவசியமாகிறது.
இந்த அர்த்தத்தின் புரட்சியும் எல்லா மரபுகளிலுமே உள்ள ஒரு அம்சம்தான்.
கவிதை வழிகள் தடம் தேய்ந்து தென்றல் காயவும், மதி தகிக்கவும். மலர் துர்க்கந்தம் வீசவும் (காதலால் அல்ல) தொடங்கிவிட்டது என்பதைத் தற்காலக் கவிதையைப் படிப்பவர்களில் சிலராவது ஏற்றக்கொள்வார்கள்.
இந்தக் கவிதை மொழி, வார்த்தைகள், பொருள்கள், மதி, மலர், தென்றல், ஒளி இத்யாதி எல்லாம் உபயோகத்தால் தேய்ந்து தேய்ந்து உருக்குலைந்து விட்டன.
பழைய சந்தங்கள் போக, புதுச்சந்தங்கள், புது வார்த்தைச் சேர்க்கைகள், புது உவமைகள் இன்று உள்ள நிலைமைக் கேற்பத் தோன்றியாக வேண்டும்.
லக்ஷியத் தச்சன் தேடிக் கைப்பிரம்பு இழைப்பதும், உருப்படாத வழியில் பானை வனையும் குயவனின் பாண்டம் உருக்குலைவதும், உருக்குலைந்த சிறகொடிந்த-வலிகுன்றிய சிந்தனைகள். இவை இன்று கவிதையே யாக மாட்டா.
புதுக்கவிதை புது வாழ்வின் எதிரொலியாம். வாழ்க்கையின் இன்றையச் சிக்கலை சிக்கலாகக் காட்டும் சிந்தனை வெளியாம். சிக்கலைச் சுலபமாக்கி சுகம் தேடும் மனப்பிராந்தி அன்று.
புதுக்கவிதை சங்க காலத்துப் பேச்சுச் சந்தத்தை அஸ்திவாரமாக்கிக் கொண்டு எழுதக் கூடாது என்பதில்லை.
‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்கிற சந்தம் எல்லா காலத்துக்கும் பொதுவானதுதான்.
புதுக்கவிதை ஏமாற்றத்தை, ஏக்கத்தைத்தான் எதிரொலிக்க வேண்டுமென்கிற கட்டாயமில்லை.
மேலை நாடுகளில் அப்படியென்றால், ஆனைக்கு அர்ரம் என்பதில்லை.
புதுக்கவிதை, சிறுகதை, நாடகம், நாவல் போல, விமர்சனம் போல, இலக்கியத்தில்-தமிழ் இலக்கியத்தில் ஒரு புதுத் துறை.
அது இன்னும் கவிதையாகி விடவில்லை.
புதுக்கவிதை எழுதுகிற பத்திருபதுபேர் தொடர்ந்து எழுதி வந்தால் புதுக்கவிதை கவிதையாகிற பக்குவம் பெறலாம்.
அது வரை அது ஒரு சோதனைத் துறை.
(‘இலக்கிய வட்டம்’ 23-10-64)
சோதனை ரீதியில் கவிதை படைத்து வந்த அமெரிக்க, ஐரோப்பியக் கவிஞர்கள் பலரது கவிதைகளின் மொழி பெயர்ப்பு ‘இலக்கிய வட்டம்’ இதழ்களில் பிரசுரமாயின.
க.நா.சு. ‘மயன்’ என்ற பெயரில் கவிதைச் சோதனைகள் நடத்தி வந்தார். அவரது சோதனை முயற்சிக்கு ஒரு உதாரணமாக ‘முச்சங்கம்’ என்பதைத் தருகிறேன்.

தார்த்தாரிப்
பரந்த
புல்
வெளியிலே
பல்
லாயிரம்
பெண்
பரிகள்
பின்
தொடர
நிமிர்ந்து
நடை
போட்ட
தொல்
காப்பியம்
பேசும்.

அரபு
மக்களிடை
தனியான
தோர்
அன்பு
கண்ட
திருக்
குறளும்
எடுத்
தோதும்
மங்கோலிய
மன்னரிடை
உரிமை
கொண்டாடிய
தேவாரம்
ஒரு
நா
லாயிரம்
பாடும்.

க்ருஸேடு
வீரர்களைச்
சுமந்து
பல
தீரக்
கேளிக்கைப்
போட்டிகளிலே
மோதி
விழுந்த
பெரிய
புராணமும்
சொல்லும்.

ஆதவன்
மறையாத
சாம்
ராச்சியங்கள்
-பிரிட்டிஷ்
மற்றும்
இஸ்பானிய
ஃபிரெஞ்சு
இத்யாதி
வென்று
தந்த
படை
வீர
ராமாயணமும்
கனைக்கும்

மங்கோலிய
தார்த்தர்
அரபு
எனும்
முச்
சங்கப்
பெருமை
சூழ
ஓட்டை
வண்டி
இன்று
இழுக்கும்
பெருமை
காண்மினோ
-காண்மினோ!

விலா
எலும்பு
தெரிய
பசி
மயக்கக்
கனைப்புக்
கனைத்துச்
சென்னைத்
தார்
ரோட்டிலே
புல்
மேயும்
பிரபாவம்
காண்மினோ
-காண்மினோ!

டி.கே. துரைஸ்வாமியும் சுந்தரராமசாமியும் தீவிரமான சோதனைப் படைப்புகளை ஆக்கி வந்தனர். வல்லிக் கண்ணன், எம்.வி. வெங்கட்ராம் கவிதைகள் எப்பவாவது இடம் பெற்றன. புதுசாகக் கவிதை எழுதத்தொடங்கியவர்களில் சண்முகம் சுப்பய்யாவையும் நீல பத்மனாபனையும் குறிப்பிட வேண்டும்.
சோதனை ரீதியான புதுக்கவிதை என்ற தன்மையில் சுந்தரராமசாமியின் படைப்புகள் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன. கருத்தாழமும், புதுமையும், தனி அழகும், பரிகாச தொனியும் கொண்ட நல்ல கவிதைகள் அவை.
‘கொள்கை’ என்றொரு கவிதை–

மேற்கே
ரொமாண்டிஸிஸம்
நாச்சுரலிஸம்
ரியலிஸம்
அப்பால்
இம்ப்ரஸனிஸம்
என் மனைவிக்கு
தக்காளி
ரஸம்

அப்பால்
ஸிம்பாலிஸம்
ஸர்ரியலிஸம்
மீண்டும்
வெறும்
ரியலிஸம்
அப்பால்
அதற்கும்
அப்பால்?
சொல்லும்
எட்மண்ட் வில்சன்
நீர் சொல்லும்
கனிவாய்.

சொல்லும்
மிஸ்டர் பிரிச்செட்
நீர் சொல்லும்
தயை கூர்ந்து

ஸாத்ரேக்கு
எக்ஸிஸ்
டென்ஷியாலிஸம்
காமுவுக்கு
இன்னொன்று
பின்னால்
வேறொன்று;
காமுவின் விதவைக்கு
மற்றொன்று;
பிறிதொன்று
அவள் அருமைப்
பாட்டிக்கு

கரடிக்குக் கம்யூனிஸம்
டாலர் ஹீமனிஸம்
பீக்கிங்குக்கு
என்ன?
சொல்லும்
எ.ஐ. பூரே
மிக விரைவாய்.

நாம் எல்லாம்
டமில் எழுத்தாளர்,
நமக்கோ
ப்ளேஜியாரிஸம்,

இன்றைய பக்தர்களின் போக்கையும் பக்தியின் தன்மையையும் கிண்டல் செய்து சுந்தர ராமசாமி ‘மந்தரம்’ என்ற சுவாரஸ்யமான கவிதையை எழுதினார்-

ட்யூப் லைட் சுந்தராச்சி உபயம்
குத்துவிளக்கு கோமுட்டிச் செட்டி உபயம்
உண்டியல் பெட்டி தெ.கு.வே. உபயம்
பஞ்சதிரி விளக்கு ஆண்டி நாடார் உபயம்
குண்டுச் சட்டி பால்பாயச உருளி த்ரிவிக்ரமன் நாயர் உபயம்
சூடன் தட்டு ரீஜென்று மகாராணி உபயம்
தகரடப்பா ஆறு நித்யானந்தா உபயம்
அலுமினியப் போனி வமு. சல. பெ. ம.
அரிகரபுத்திரன் செட்டியார் உபயம்
ஸ்க்ரு ஆணி நட்டு பட்டு அம்மாள் உபயம்
தீபத்தட்டு பெரியன் தாத்தாச்சாரி உபயம்
சின்ன நட்டு ஒரு டஜன்
வைரங்குளம் மிட்டாதார் உபயம்
வைரங்குளம்
மிட்டாதார்
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அம்மா உபயம்
அவர் அம்மா
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அம்மா
அவர் அம்மா
அவர் அப்பா
நீ
நான்
அவள்
இவன்
அவன்
பூனை
புண்
பூ
புழு
பூச்சி
குண்டூசி
குத்தூசி
கடப்பாரை
லொட்டு லொடக்கு
எல்லாம்
ஸ்வாமி
உபயம்
ஸ்வாமி
சிற்பி
உபயம்
சிற்பி
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
என்று மேலும் அடுக்கப்பட்டு, முடிவாக
எல்லாரும்
ஸ்வாமி
உபயம்
ஸ்வாமி
நம்ப
உபயம்
நாம்
ஸ்வாமி உபயம்
நம்ம பேரு சாமி மேலே
சாமி பேரு நம்ம மேலே

என்று நிறைவுறுகிறது இக்கவிதை.

One Comment on “வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்””

Comments are closed.