“புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”/ வல்லிக்கண்ணன்

  1. நாடும் போரும்

‘எழுத்து’ காலத்தில் புதுக்கவிதை எழுதியவர்கள் தனிமனித அக உளைச்சல்கள், கனவுகள், ஏமாற்றங்கள், விரக்தி, மரணம், காமம் போன்ற விஷயங்களை மட்டுமே கவிதைப் பொருள்களாக எடுத்தாண்டார்கள் என்று குறை கூறப்படுவது உண்டு. அது தவறான மதிப்பீடேயாகும்.

சோதனை ரீதியாகப் புதுக்கவிதைப் படைப்பில் ஈடுபட்டவர்கள் சகல விஷயங்களையும் விசாலப் பார்வையினால் தொட முயன்றிருக்கிறார்கள் என்பதை ‘எழுத்து’ காலக்கவிதைகளை ஆராய்கிறவர் உணர முடியும்.

1965-ல் சீனா இந்தியா மீது ஆக்கிரமிப்பு செய்தபோது, நாடு பற்றிய வரலாற்று ரீதியான நோக்கும், போர் பற்றிய சிந்தனையும் கொண்ட கவிதைகளை ‘எழுத்து பிரசுரித்துள்ளது.

இவற்றில் எஸ். வைதீஸ்வரன் எழுதிய ‘நாடு என் உயிர்’ எனும் கவிதையை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். அதன் சிறப்பையும், அதில் காணப்படும் நயங்களையும் கருதி, அதை முழுமையாகவே இங்கு எடுத்தெழுதுகிறேன்.

நாடு என் உயிர்
நாடு என் நிழல்
நாடு என் உடல்

பனி கமழ் கூந்தல்
திரு நதிச் சீலை
கடல் அணி பாதம்
என் தாயின் தனியழகு.

பரந்த நிலம்
விரிமனதின் வோ விட்ட ஞானம்
பேச்சிலோர் அமைதி பிறழாத தன்மை
என் தாயின் தனி இயல்பு.

யுகம் யுகமாய் முகம் மலர
கபடமி
ன்றி வரவேற்று
பொன் கொடுத்துக் கலை பகிர்ந்து
தாளிடாத மாளிகைக்குள்
புகலிடம் தந்த கரம்
என் தாயின் தனிப் பண்பு

அவள் வளர்ந்த ஜீவக் கதை
அவள் பெருக்கிய வேதப் புதல்வர்
அவள் தழுவிய மதங்கள்
அவள் ஆக்கிய கலைகள்
இத்தனையும் பொய்யாத புகழ்க்கதை
ஆனால்-

கலை, கணிதம், கலாச்சாரப் பணி,
வேதம், சோதிடம், போதசன் மார்க்கம்,
கோபுரம், மந்திரம் கோர்த்து நின்ற மதங்கள்,
யானை, அரசு, இடையிடைப் பூசல்கள்,
மனம் வளர்த்த உழைப்பு,
உழைப்பு மீறிப் பொன், பொருள்,
காலத்தை நீட்டிக் கருத்தை உள்ளிழுத்து

ஞானமே யாவும்
அஹம் பிரும்மாஸ்மி
தர்மம் சரணம் கச்சாமி
என்று மேளந்தட்டிப் பாடி
புறநோக்கு விலகிப் போச்சு.

முன்னூற்றுக்கு முன்
விஞ்ஞானம், லௌகீக வியாபாரம்
பொல்லாத தொழில் நுட்பம், கள்ளமுகம்
யந்திரப் பூட்டம், தந்திரப் பேச்சு
என்றேதும் தெரியாத பாமரமாய்
களித்திருந்தோம் பிறவியினால்.

திரை கடலோடி திரவியம் தேடி
வந்தோரின் நிறப் பகட்டுக்கு
நாட்டைக் கைகழுவி, நெறியைப் பங்கிட்டு
நாமும் நிறம் மாறி
துரை வாழ்வில் வழுக்கி
விழுந்தோம் அடிமைப் புதையில்,
புதையிருளில் மோகமுற்று
மகுடி முன் பாம்பாகி
தாய் சொல் தாழ்வென்ற நினைப்பில்
வேடிக்கை யந்திரங்கள், மில்துணிகள்
குல்லாய்கள், காலுறைகள், நீளக்கைப் பழக்கங்கள்
நிரம்பி வழிந்து நிலத்தைக் குழப்பின.

இருந்தும்
நெறிகெட்ட புயல் மறைந்து
நிலையான விளக்கேற்ற
நரி, புரி விரட்டி நாமிங்கு கொடிகட்ட
புரிந்த தியாகம், தவம்.
வாழ் வெரிய குலம் கலங்க
சத்தியத் தீக்குளித்து
கீதை-ராட்டை கவசம் கட்டி
புறம் வெந்து பட்டும்
அகம் நொந்து போகாது
அகிம்சையாலே தாவை மீட்ட கதை
வீரக் கதையா-காந்தியின் கீதைக் கலையா?

ஆனாலும்,
வெற்றியிலோர் மறு.
அன்னையின்
பனிகமழ் கூந்தலில்
ஒரு குடங்கை பிய்தல்.
இழி மயிரது கருகிக் குமைந்து
தாயின் தனிப்பண்பு சோதனைக் குள்ளாச்சு.

விஞ்ஞான நீர்தேக்கி, தொழிற் கப்பல் ஓட்டி
அகவாழ்வும் புறநோக்கும், சகவாழ்வும்
குடியரசால் ஆக்கி வரும் காலை
தேரை நிமிர்த்திவிட்டு தெருவுக்குள் இழுக்கும் வேளை
வடமுனை ‘டிராகன்’ தீ மூச்சு தற்ற
நெஞ்சு நீட்டி மண்காக்க காவு கொடுத்தோம் அன்று.
இன்றோ திரண்ட நிலவை விழுங்க வரும் பாம்பாய்
வடமேற்கு பாக் கபடமாய் ஊர்ந்து வர
காவு கொடுத்தலினும் காவு கொடுக்க
வைத்தோம்.
பாம்பு பின் ஊர சுவடு பற்றி
புற்று நோக்கி சென்றோம்.

நாடு என் உயிர்
நாடு என் நிழல்
நாடு என் உடல்
இன்று நாம் எழுப்பும் புதுக்குரல்கள்.
நேரில் காணும் நிஜ உணர்வுகள்.
காலத்தில் ஊற்றெடுத்த வீரமும்
வீரத்தால் சிந்தி விட்ட ரத்தமும்
வீணல்ல; ஆதர்மம் மாய்க்க மண்ணில்
கண்ணன் நிகழ்த்திய காவியமும்
கால மலைப்புதரில் ஓடித்திரிந்து
உடலை இரும்பாக்கி
பெற்ற வீரப் போர் முறைகளும்
வெற்றிக்குத் துணையாச்சு,
இனி…
(எழுத்து 84-1965)

அறுபதுகளின் பாரதப் போரை புராதன பாரதப் போருடன் உவமித்து சு.சங்கரசுப்ரமண்யன் ‘பாரதப்போர்’ என்ற கவிதையை எழுதியுள்ளார். ரசிக்கப்பட வேண்டிய ஒரு படைப்பேயாகும் அது.

பொய்ப்புழுதி கிளப்பி பாவக்குருதி சிந்தி
தன்வினை தின்னும் பகைக் கூத்து
தாய்மடி அறுக்கும் தறுதலை ஆட்டம்
சரித்திர சாபத்தின் அந்திமப் புலம்பல்
உடமை மறுத்தது பழங்கதைப் பிறப்பு
உரிமை பறிப்பது புதுக்காவிய வித்து
நாமே பாண்டவர் பண்டு ஆண்டுவர்
அவரோ கவரவர் கவரும் பண்பினர்
சூதை வளர்க்கும் சகுனிச் சீனன்
கீதை உரைக்கும் சாரதித் துங்கு
தூது பொய்த்திடும் தீயோர் மன்றம்
களமோ பெரிது காணும் உலகே குருக்ஷேத்திரம்.
(எழுத்து- 84)

சி.சு. செல்லப்பா வேறொரு கோணத்தில் அந்த சரித்திர நிகழ்ச்சியைக் கண்டு ‘பகைத் தொழில்’ எனும் கவிதையை எழுதியிருக்கிறார்.

‘கிழிபடு போர், கொலை, தண்டம்
பின்னியே கிடக்கும் அரசியலதனில்’
கொலை வழி உதறி அறவழியாலே
கதிகாண வழிவகை காட்டிக் கிழக்கே
பகைத்தொழில் மறக்க வைத்த முதல்வன்
ஒத்துழையாமையான் காலமும் போச்சு;
அழிசெய் நியூகிளியர் ஆயுதம்
ஓங்கியே சீறிடும் ‘ரட்சகர்’ கையில்
அருள் வழி சிதற மறவழி பற்றி
கதிகலங்கச் சதிவகைகள் செய்து
கொடுந்தொழில் பரவச் செய்யும் மேற்கே
ஒத்துப்போகார் காலமும் ஆச்சு!
என்று நாம் கணித்திருக்கும் வேளை
அண்டை நட்பும் சகவாழ்வும் கானல் நீராச்சு;
வரம் கொடுத்த தலைமேலே கைவைக்க எல்லையில்
முழுவடிவைத் தின்ன வந்த பிறை வடிவோன்
‘பாய் பாய்’ குளிரப் பேசி பழமை பாசம் பேசி
பசப்பி விளிம்பில் இமயப் பாய் சுருட்ட வந்தோன்
சுயாட்சிக்குத் தந்த ஆதரவு மறந்து நடுக்கடலில் நின்று
ஊளையிடும் நம்பெயர் பாதி கொண்ட உதிரித் தீவோன்
மூக்கூட்டாய்ச் சேர்ந்து பகைத் தொழில் வளர்க்க
புறப்பட்ட கதையே இன்றைய நிஜமாச்சு.
உழக்கிலே கிழக்கு மேற்கா?
கிழக்கிலும் மேற்கு, மேற்கிலும் கிழக்கு
பகைத் தொழிலுக்கா காலம்?
(எழுத்து-85)

வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” – விருட்சம் நாளிதழ்