சாருநிவேதிதா/ஒருநாள் அசோகமித்திரனைப்..

ஒருநாள் அசோகமித்திரனைப் போய்ப் பார்த்தேன். ”என்ன எழுதிட்டு இருக்கீங்க?” என்று கேட்டு கொண்டே அசோகமித்திரன் எழுந்து வந்த போது அவர் கொஞ்சம் தடுமாறியதால் அவர் கையைப் பிடிக்கப் போன போது, ”இருங்க இருங்க… உங்களுக்கே ஒரு எழுபது வயசிருக்கும்… நீங்க எப்படி?” என்று கேட்டார். ’அடடா… என்ன இது… இப்படிப் போட்டுத் தாக்கி விட்டாரே’ என்று நினைத்துக் கொண்டேன். ஏனென்றால், அவர் என்னைப் பார்த்து அத்தனைக் காலம் ஆகியிருந்தது. ஒரு இருபது இருபத்தைந்து வருடங்கள் இருக்கும். பிறகு தொடர்ந்து, “உங்களுக்கும் வயசாகுதுல்ல?” என்றார். இல்லை சார், அறுபத்து இரண்டு தான் ஆகுது” என்றேன். ”அப்புறம்… என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” என்றார் மறுபடியும். நான் ”இந்த மாதிரி பழுப்பு நிறப் பக்கங்கள்னு சொல்லி பழைய எழுத்தாளர்களையெல்லாம் பத்தி எழுதிட்டு இருக்கேன். உங்களைப் பத்தியும் எழுதினேன்…” என்றேன். ”என்ன எழுதுனிங்க?” என்றார். ”இந்த மாதிரி மாத பிதா குரு தெய்வம்னு எழுதுனேன். வேற என்ன?” என்று சொன்னதும் அதிர்ச்சி ஆகி விட்டார். அவருக்குப் பாராட்டு என்றால் பிடிக்காது. ஒரு பேட்டியில் ஒரு எழுத்தாளர் ”உங்களுடைய பெண்கள் எல்லாம் சக்தியின் வடிவமாக இருக்கிறார்கள்” என்று சொன்னதும் அசோகமித்திரன், ”ஏதாவது உளறாதீங்க. பேட்டி போறும்” என்று சொல்லிப் பேட்டியை முடித்து விட்டார். இதை ஒரு உதாரணத்துக்குச் சொன்னேன். அவருக்குப் பாராட்டு என்றால் பிடிக்காது. அப்படிப்பட்டவரிடம் மாதா பிதா குரு தெய்வம் என்று சொன்னதும் முகத்தைச் சுளித்துக் கொண்டு, ”அப்படியெல்லாம் சொல்லப்படாதே” என்றார். ”ஏன் சார்?” என்றேன். ”ஏன்னா நீங்க பொய் சொல்றீங்கன்னு சொல்வாங்க” என்றார்.

”அது மட்டும் இல்லை. உலக அளவிலேயே உங்களை மாதிரி ஒரு எழுத்தாளர் கிடையாதுன்னு சொல்லி ஒரு ரெண்டு மூணு வாரம் தொடர்ந்து எழுதுனேன்” என்றேன். மறுபடியும் என்னை முறைத்தார். உடனே நான், “சார், நான் மட்டும் இல்லை. ஜெயமோகனும் இதையேதான் நான் எழுதியதற்கு மறு வாரம் ஹிண்டுல எழுதினார்” என்றேன். உடனே அவர், ”நீங்க ரெண்டு பேரும் தாயாதிங்களாச்சே?” என்றார். எனவே அவருக்குப் பாராட்டு என்றால் பிடிக்காது. உதாரணமாக நீங்கள் போய் அசோகமித்திரனிடம் ”நீங்கள் எழுதியதெல்லாம் ஒண்ணுமே இல்லை, வீண்” என்று சொன்னால் ”அப்படியா? நானும் அதேதான் நினைக்கிறேன்” என்று சொல்வார்.

நான் எழுதி அப்போது வெளிவந்திருந்த ஒன்பது புத்தகங்களை எடுத்துக் கொண்டு போயிருந்தேன். அதில் எல்லாவற்றிலும் அவர் கையெழுத்துப் போட்டு கொடுத்துக் கொண்டிருக்கும் போது கரைந்த நிழல்கள் என்று வந்ததா, ”இது மோசமான புஸ்தகமாச்சே?” என்றார். அவர் அப்படிச் சொல்வதையெல்லாம் நாம் கணக்கிலேயே எடுக்கக் கூடாது. அதெல்லாம் ஒரு அதீதமான ஒரு தன்னடக்கம். Self effacing.