வாக்கு/ஸ்ரீதர் – சாமா

தேவியின் கல்யாணம் பாக்கு வெற்றிலை மாற்றும் படலத்தை எட்டிய சுருக்கில் நின்றுவிட்டது.  ஏதேதோ சால்ஜாப்பு சொன்ன பிள்ளை வீட்டார், ‘‘நீங்களும் எங்கள் நிலையில் இதையே தான் செய்திருப்பீர்கள்’’ என்றார்கள்.  ‘‘நீங்கள் கல்யாண நிமித்தம் செய்துள்ள இதர செலவுகளைச் சொன்னால் பணம் தந்து விடுகிறோம்.  நாளை வாருங்கள்’’ என்றார்கள்.  எனக்கு அந்த இருட்டைத் திரும்பிப் பார்க்கவே பயம்.  விடுவிடென்று நடந்து வந்து விட்டேன்.  க்ஷணச் சித்தம் க்ஷணப் பித்தமென்று எளிதில் எந்த ரூபமும் கொள்ளும் இவர்களைப் போன்ற  மிதப்பார்கள் மகா ஜனக்கடலில் சத்துத் துளிகள் தாமா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்.  வினாடிச் சொடுக்கில் இடர் களைந்து சிறுத்து, புள்ளியாயும் பின்னர் அதுவுமில்லாமல் செய்வதில் நான் நிபுணன் அல்லவாதலால் அடுக்கப்பட்ட அநீதியில் அழுந்தித் தீர்ப்பு எதிராக வாசிக்கப்பட்டபோது நசுங்கித் தான் போனேன்.

என் நிலையே இதுவாயின் என் தாயாரின் நிலையை நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவள் மனதை நார் நாராய் வரி வரியாய் இன்னும் நான் அறிந்திலன் என்று சொல்லிக் கொள்வதில் கொஞ்சம் வெட்கம் உண்டுதான்.  அவள் ஒரு விஷயத்தை முற்றுப்பெறாத பின்னணியிலேயே பேசுவாள்.  வெளி அடையாளங்கள் தெரியாதே தவிர அதன் பாதிப்பு தீவிரத்திற்கேற்றபடி அவளிடம் வியாபித்துத் தங்கும்.  மனித இலக்கணத்திற்கு ஆரவாரங்கள் கணிசமான பங்களிப்பதைப் புறக்கணித்துவிட்டு சப்திக்காத சலனங்களுடன் ஓடை ஓர புஷ்பம் போலக் காய்ந்து, நனைந்து கிடந்தாள் அவள்.  சமயங்களில் பதில் எதிர்பார்த்து ஏமாற்றத்தில் வெடிக்கும் என்னிடம் ‘நீங்களெல்லாம் பேசியும் செய்தும் என்ன கிழித்தீர்கள்?’ என்ற கேள்வி தொக்கி நிற்கும் பார்வையை வீசுவாள், உண்மைதானே!

போதாக்குறைக்கு அவள் சமீக காலமாக உடல் நலம் குறையுற்றிருந்தாள்.  அவள் தலை மாட்டில் ஒவ்வொரு நாள் இரவிலும் அவள் மருந்து சாப்பிடவோ அல்லது தாக சாந்தி செய்து கொள்ளவோ வைத்து அன்று என்னென்ன தேவியின் திருமணம் ஒட்டி செய்தேன் என்று விளக்கிச் சொல்ல வேண்டிய நிலைமை.  ஒரு நாள் நம்பிக்கையோடும் பிறிதொரு நாள் ஏமாற்றத்தோடும் பேசுவேன்.  சிலுவை சுமந்து செல்லும் தூக்குத்தூக்கியாகவே இருந்து பழக்கப்பட்ட எனக்கு இது போன்ற நல்ல கெட்ட காரியங்களில் எப்படி நடந்து கொள்வது என்பது தெரியாததால் பசுங்கன்று கணக்காக அம்மாவின் ஆதரவை கிடைக்காததென்று தெரிந்தும் தேடிப் போவதுண்டு.  அம்மாவோ இனந் தெரியாத ஒலிகளையும், சேஷ்டைகளையும், ஒருபத விளக்கங்களையும் பதிலாகப் பெரும்பாலும் தருவாள்.  எப்போதாவது ‘இதைச் செய்யலாம்’ என்ற முனகுவதும் உண்டு.   அந்த எப்போதோ கிளம்பும் முனகலுக்காக என்னை வருத்திக் கொண்டு பொறுமையாய் நள்ளிரவு மட்டும் சொக்கிவிழும் கண்களைத் தூக்கி நிறுத்திப் போராடியிருப்பேன்.  ஆதாரங்களும் தேவையாதலால் அவற்றையும் குறைத்துக்கொள்வது உலகில் சுயமாகக் காலூன்றும் பயிற்சியில் தேற உதவும் தான்.  என்றாலும் இடைவெளியில்லாத வாழ்க்கைப் போராட்டத்தில் பீதியையும் இன்னும் அதுபோன்ற வலுக்கட்டாயங் களையும் என்னிடமிருந்து உருவி, ‘அக்கடா’ என்று எங்கேயாவது கிடக்க வேண்டும் கொஞ்ச நேரமாவது என்று எண்ணுகிறவனிடம் ‘இதையும் நீயே சமாளி – நான் தொடரமாட்டேன்’ என்கிற மாதிரியான இந்த பாவனை என்னிடம் வறட்சியைத் தான் உண்டாக்கியது – நான் அதை வெளியில் சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும்.

தேவி அம்மாவிற்கு நேர்மாறாக குண இயல்பு உள்ளவள்.  நிமிட நேரம் தனித்திருப்பது பாவம் என்ற எண்ணம் அவளுக்கு. அவளுக்கேற்றபடி தோழிகளும் பாலர்களுமென்ற பெரிய குழாம்.  ஒவ்வொரு தோழியின் கையிலும் அவள் அக்கா அல்லது நெருங்கிய சொந்தம் அல்லது போர்ஷன்காரர்களின் குழந்தை – இவர்கள் முந்திப் பெற்றதோ அவர்கள் கட்டாயமாகத் திணித்ததோ இவர்களுடைய உடைமைகளை.  அவர்கள் ஆட்டச் சுவாரஸ்யத்தில் இருக்கும்போது பார்த்துக்கொள்ளல், வாசற்கதவைக் காவல் காத்தல், தம்பிப் பாப்பாவை அழவிடாமல் அண்ணன் பார்த்துக் கொள்ளல் என்று அவர்களுக்குச் சில்லறைக் கட்டளைகள். கூடத்தில் மத்தியான வேளையில் ஒரே கத்தலும் சிரிப்பும் கும்மாளமுமாய் இருக்கும்.  ‘‘அம்மாவிற்கு உடம்பு சரியில்லை.  தொந்தரவு செய்யாதே’’ என்று நான் சொல்வதெல்லாம் செவிடன் காது சங்குதான்.  ஒரு நாள் கடுமையாகக் கோபித்துக் கொண்டபின் அவள் அம்மாவிடமே முறையிட்டு அவள் சாங்ஷனையும் பெற்றுவந்துவிட்டாள்.  பின்னர் நானும் ‘சரி… இன்னும் கொஞ்சக் காலம்தானே… சந்தோஷமாய் இருந்து விட்டுப் போகட்டும்’ என்று விட்டுவிட்டேன்.  சந்தோஷமாய் இருக்கிறவர்களைப் பார்த்தால் – அதன் ஆரம்பம் அசூயை என்றாலும் – ஒரு திருப்தி எனக்கு.  பச்சையாய் இருக்கிற தாவரங்கள் தாம் சதா இறைவனைத் தொழுதுகொண்டிருக்கின்றனவாம்.  நமக்குத்தான் சீழையும் புண்ணையும் நோண்டவே நேரம் சரியாக இருக்கின்றதே, தொழுகையாவது மண்ணாங் கட்டியாவது!

கல்யாணம் என்று அடிபட ஆரம்பித்ததும் தேவியின் உற்சாகம் தடைப்பட்ட மாதிரி தெரிந்தது.  சில நாட்களில் அவள் சகஜ நிலைமைக்குத் திரும்பினாள்.  எந்த விஷயத்திற்கும் உடனடி அபிப்பிராயத்தை மூஞ்சியில் எறிகிறவள் அது பற்றி மூச்சு விடவில்லை.  பெண் பார்க்க வந்திருந்த பிள்ளை வீட்டாரை மிரட்சியுடன் கதவிடுக்கில் பார்த்தாள்.  கல்யாணப் பேச்சுக் காற்றோடு அவளிடம் நான் ரசித்த ஒரே குணமான குழந்தைத்தனம் நீறுபூத்த நெருப்பின் வயிறு தகதகவென்று வீரியத்தோடு எரிந்தபோது பின்னால் அதை நான் விரும்பவில்லை.  ஆனால் எல்லாம் விரைவாக நடந்து விட்டது.  ‘‘பெண் பிடித்திருக்கிறது’’ என்று அவர்கள் சொன்னது.  பிள்ளையின் விதவை அக்காவைப் பார்க்க இவள் அவர்கள் வீடு அழைத்துச் செல்லப்பட்டது.  அங்கே ‘‘ஏன் எஸ்.எஸ்.எல்.சி.யோடு நிறுத்திவிட்டாய்?’’ என்று திருட்டுத்தனமாகச் சுற்றுப்புறம் அசந்திருந்தபோது கேட்டு இவள் பதிலளிக்க முடியாமல் திணறியது.  பையன் டிரஸ்ஸிற்கு 1000 ரூபாய் பெற்றுக்கொண்டது. பாக்கு மாற்ற சுபதேதி குறிக்கப்பட்டது.  பின்னர் திடீரென்று  பையன் வீட்டார் இவ்வாறு சொன்னது.

தயங்கித் தயங்கி செய்தியை ஆறப் போட்டவன் மறுநாள் அம்மாவிடம் போட்டுடைத்தபோது மனஞ் சிதறிப்போனாள்.  ஒரு அசாத்திய பலத்தில் மூச்சிரைக்கும் மட்டும் பிள்ளை  வீட்டாரைத் திட்டினாள்.  இருமல் விம்மல் வெப்ப பெருமூச்சுக்களுக்கிடையே அவர்களை வைதாள்.  முந்தைய அம்மாவின் பிரம்ம நகலைப் போல இவளைப் பார்த்தால் தெரியவில்லை.  யோசித்தே பழகியிராத தேவி இதையெல்லாம் பார்த்துப் புரிந்தும் புரியாமல் பலவிதமாய்க் கற்பனை பண்ணி முடிச்சு மேல் முடிச்சாக வலியப் போட்டுக்கொண்டாள்.  மூன்று ஜீவன்களில் யாருக்கும் சரியான உறக்கமில்லாமல் அந்த வீட்டில் இப்படி சில இரவுகள் கழிந்தன.  

அந்த வரனின் ஜாதகம் கொணர்ந்த குடும்ப நண்பரைப் பின்பொரு நாள் சந்தித்தபோது அவனுக்கு வேறு நல்ல இடத்தில் நிச்சயமாகி கல்யாணம் நடந்துவிட்டதென்றும் எங்களைவிட அது வசதியான இடம் என்பதால் சம்பந்தத்தை முறித்துக் கொள்ளத் துணிந்தார்கள் என்றும் சொன்னார்.  அப்படியே வேறு ஒரு விஷயத்தையும் சொன்னார்.  தம்பதிகளுக்குள் சுமுகமான உறவில்லையென்றும் எந்நேரமும் வாயும் சண்டையுமாயிருக்கிறார்கள் என்றும் விரைவில் அது எப்படியும் திரும்பலாம் என்றும் சொன்னார்.

ஒற்றுமை எப்படி இருக்க முடியும் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.  உலையிலிடும்போது நீர் அரிசியுடன் கலவாதிருப்பது போலவும் பின்னர் கொதி நிலையில் கஞ்சியெனத் தவித்தல் போலவும் அதற்கும் பின்னர் சோற்றுடன் ஐக்கியமாதல் போலவும் என்னை வருத்திய புது விவகாரமாய் இருந்த நினைவுகளை நான் சிறிது சிறிதாக ஜீரணிக்கப் பழகியிருந்தும் மறுபடியும் ஜாதகக் கட்டை தைரியமாகத் தூக்கத் துணிந்த நாட்கள் அவை.  வெறும் அரிசியை விடச் சோற்றுப் பருக்கைக்கு அனுபவம் அதிகந்தானே.  ஆரம்பத்தில் மாற்றம் பிடிக்கவில்லையென்றாலும்? வேண்டும் அவர்களுக்குப் பெண் வீட்டார் என்றால் ஆணி அடித்துச் சுவரில் மாட்டவா இருக்கிறார்கள்? ஒரு நியாயம் நேர்மை வேண்டாம்? பிள்ளை தான் என்ன சூரிய குமாரன் பரம்பரையில் வந்தவனா? சொன்ன சொல்லைக் காக்கத் தெரியலில்லை என்றால் நாக்கை அறுத்துக் கொள்ள வேண்டாம்? புலை நாய் மாதிரி இவர்கள்  எப்படியும் அலைவார்கள், நாம் இவர்களுக்கு வால் பிடிக்க வேண்டும் என்றால் எப்படி? நமக்கு ஆண் பிறந்தால் ஒரு சட்டம், பெண் பிறந்தால் ஒரு சட்டம்.  மகளைத் திருமணம் செய்து வைக்கக் கஷ்டப்படும் அம்மாக்காரி மகன் கல்யாணத்தில் சின்னப் புத்தியில் பேதலித்துப் போகிறாளே, அனுபவத் தத்துவத்தின் அஸ்திவாரம் அங்கே ஆட்டங் காணவில்லை?  இரு நொள்ளைக் கண்காரன் அடுத்தவனுக்கு ஒரு கண்ணாவது போகவேண்டும் என்று பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தால்? விரோத, வக்கிர தனி மனிதர்களின் தொகுப்பா இந்தச் சமூகம்? இல்லையென்று ஆண்டவன் காட்டி விட்டான்.  வேண்டும், அவர்களுக்கு வேண்டும்.

தொடர்ந்து வரன் தேடும் படலத்தில் இறங்கியதில் இன்னொன்று பெண் பார்க்கும் விசேஷம் வரை வந்தது.  எங்கே எத்துடன் நிற்கிறதோ என்று எனக்கு ஒரே பயம்.  பிள்ளையும் பெண்ணும் பரஸ்பரம் பார்த்துக் கொண்டனர்.  ‘‘பின்னர் கடிதம் போடுகிறோம்’’ என்றெல்லாம் சொல்லாமல் அங்கேயே பேச்சு வார்த்தை நடத்தி ‘‘இரண்டாம் வாரக் கடைசி முகூர்த்தத்துக்குக் கல்யாணம் வைத்துக் கொள்ளலாம்’’ என்றார்கள்.  ‘‘அப்பாடா… இந்த நல்ல வரன் கிடைக்கத்தான் முதல் வரன் தடைப்பட்டது போலிருக்கிறது’’ என்று அம்மாவிடம் சொன்னேன்.

மளமளவென்று காரியங்கள் நடந்தன. கடைசி நிமிடத்தில் பண நெருக்கடி கழுத்தைப் பிடித்தது. பெண்ணுக்கான நகையில் ஒன்றிரண்டு பவுன் குறைந்தது. அழைப்பிதழில் சொன்னபடி ரிùஸப்ஷன் அமையவில்லை. இடநெருக்கடியில் பிள்ளை வீட்டாருக்குத் தெரிந்த சிலரை அடையாளங் கண்டுகொள்ள முடியாமற் போயிற்று. ஆனால் இது பற்றி யாரும் பிரஸ்தாபிக்கவில்லை. தேவி புக்ககம் புகுந்தாள்.  இரண்டாம் மாதம் கருத்தரித்தாள். பிள்ளை வீட்டார் ‘‘தம்பதிகள் தனிக் குடித்தனம் நடத்தட்டும்’’ என்று சொல்லி வேறு வீடு போய்ச் சேர்ந்தார்கள்.  பிள்ளைக்கும் அவன் வீட்டாருக்கும் தகராறு என்பதாக அறிந்தேன்.  ஆனால் மாப்பிள்ளை பரம சாதுவாக இருந்தான். தேவியின் பின்னாலேயே சுற்றி வந்தான். ‘‘அவர் ஆண்பிள்ளையில் சேர்த்தியே இல்லை அண்ணா’’ என்று தேவி குறைபட்டுக் கொண்டதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

கலியாணக் கடன் கணக்கிட்டுப் பார்த்தபோது மலைப்பாக இருந்தது. இன்னும் வர வேண்டிய சீர் வரிசை பற்றியும் அடுத்தடுத்து வர இருக்கும் பண்டிகை வைபவங்களுக்கு என்ன செய்ய உத்தேசம் என்றும் கேட்டு மாப்பிள்ளை அறியாது அவன் வீட்டார் நாசுக்காக எழுதியிருந்த கடிதத்திற்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை. என்னவென்று எழுத?

பிள்ளை ஒருநாள் ரகசியமாக என்னிடம் ‘‘ஏதேதோ விசேஷங்கள் எல்லாம் வருகிறதாமே… அப்பாவே வந்து சொன்னார்’’ என்றான்.  ‘‘என்ன மாப்பிள்ளை நீங்கள்! இருபதாம் நூற்றாண்டில் உங்களுக்கு இன்னுமா இதிலெல்லாம் நம்பிக்கை?’’ என்றேன். ‘‘அதேதான் நானும் சொல்ல வந்தேன்’’ என்று ஆமோதித்தான் அவன்.