
நமக்கு நெருக்கமான
யாரேனும் ஒருவர்
எதன் பொருட்டுடனும்
இறுக்கம் தரிக்கும் வேளை
மனசு கிடந்து அடிக்கிறது.
பார்வைக்கு அப்பால்
நாம் நிறுத்தி வைக்கப்படும்போது
பரிதவிக்கிறோம்.
இறுக்கம் களைய
நாம் எழுப்பும் கேள்விகள்
நம் காலடியில்
உதிர்கின்றன.

எப்படி ஒருவரால்
இப்படி இருக்கமுடிகிறதென
நினைத்து
முடிக்கும் முன்னே
இப்படி இருந்தால்
எப்படி இருப்பதெனத்
தோன்றுகிறது.
இந்த இறுக்கம்
இன்றா
இரண்டொரு நாளா என
யூகிக்க முடியாதபடி
தவிக்கும் பொழுது
நாம் இயல்பிழக்கிறோம்.
அவர்கள்
இறுக்கம் தளர்ந்து
இயல்பைச் சூடிக்கொள்ளும்
தருணம்
இறுக்கம் இடம்பெயர்ந்து
சிலநேரம்
நம்மீதமர்ந்து
அவர்களின் இயல்பை
பெருமூச்சின் வெப்பத்தில்
சுட்டுப்பொசுக்குகிறது.
