ஜெ.பாஸ்கரன்/குவிதம் குறும்புதினம் (ஜூலை 2025) மூன்று குறு நாவல்கள்!

புத்தக அறிமுகம்: 21:

  1. புத்ர – லா.ச.ரா

“பொதுவாகவே என் எழுத்து என் உயிரைக் குடித்து விட்டது. அதுவும்’ புத்ர’, ‘அபிதா’ இரண்டும் என்னை உறிஞ்சி விட்டன” – லா ச ரா. அவரது ‘விரும்பி வாசிக்கப்பட்ட’ கதைகளில் ஒன்று!
புற்றுக்கு பால் வார்த்து, வேண்டிப் பெற்ற பிள்ளை, பாம்பு கடித்து விஷம் ஏறிக் கொண்டிருக்கும் வேளையில் தன் கடந்த வாழ்க்கையை எண்ணிப் பார்க்கும் கதை. சிறுவனாய்ப் புற்றினைச் சீண்டுவது (கவணில் கல் வைத்து, புற்றை அடிப்பது), செய்யாத குற்றத்திற்குத் திருட்டுப் பட்டம் சுமப்பது, நிஜமாகவே திருடனாக ஆனது, பிறருக்கு இழைக்கும் துன்பத்தில் இன்பம் காண்பதென ஒரு வாழ்க்கை – இவனால் தூக்கில் தொங்கும் அம்மா, காதலியை ஏமாற்றி நகைகளுடன் ஓடுவது, காதல் தோல்வியினால், ஒரு பெண்ணின் வாழ்க்கையை தொலைக்க நினைப்பது என வாழ்ந்தவனுக்கு புற்று கொடுக்கும் முடிவு!
கதையின் இடை இடையிடையே புற்றும், சர்ப்பமும் வருவது லா.ச.ரா.வின் தனி முத்திரை. இது ஒரு குறியீட்டு கதையாகக் கொள்ளலாம். தன்னைச் சீண்டியவனை பாம்பு விடாது என்பார்கள். சிறு வயதிலேயே திருடனாகப் பட்டம் சூட்டப்பட்டவன், இறுதி வரை ஏமாற்றும், திருட்டும் கொண்டவனாக வாழ்வது, சீண்டப் பட்ட பாம்பு என்று கொள்ளலாம் எனத் தோன்றுகிறது.

  1. பறந்து போன புத்தகங்கள் – அழகிய சிங்கர்

அவரை அறிந்தவர்களால் இந்தக் குருநாவலில் வரும் சம்பவங்களையும், அவரையும் இணைத்துப் பார்க்க முடியும்! விஸ்வநாதனின் புத்தக ஆசை, பார்த்த இடங்களில் எல்லாம் புத்தகங்களை வாங்கி சேர்த்து வைக்கிறது. படிக்கிறானோ இல்லையோ, புத்தகங்களை வாங்கிக் குவித்து விடுகிறான். ஒரு முறை கூட படிக்காத சில புத்தகங்கள், தாள் மக்கி, ஒடிந்து விழும் நிலையில் உள்ளன! அவன் புத்தகம் வாங்கிச் சேர்ப்பது, வீட்டில் உள்ள யாருக்கும் பிடிக்காது. அவர்களில் யாரும் புத்தகம் வாசிப்பதில்லை. இதற்கிடையில், அழகிய சிங்கரே ஒரு பாத்திரமாக வந்து, விஸ்வநாதனுக்கு நண்பன் ஆகி விடுகிறார்! ஓரிடத்தில் அவரே சொல்கிறார் ”நான் எழுதறதை எல்லாம் யாரும் கண்டுக்க மாட்டாங்க. அதனாலதான் நான் பத்திரிகை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கிறேன்” சி.சு.செல்லப்பா, மௌனி, பிரமிள் என்று எழுத்தாளர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அங்கங்கே சேர்த்திருக்கிறார். சிறு பத்திரிகைகள் அகாலத்தில் நின்று போவதைச் சொல்கிறார். தன் வீட்டை லைப்ரரி ஆக மாற்றுவதை குறிப்பிடுகிறார். ஓர் எழுத்தாளர் மறைவுக்குப் பிறகு,அவரது வீட்டுப் பரணில், எலி கடித்து நாசமாக்கப்பட்ட புத்தகமூட்டையைப் பார்த்துக் கலங்குகிறார். புத்தகங்களை இரவல் கொடுப்பது, அவை திரும்பி வராமல் இருப்பது, அதனால் ஏற்படும் மன வருத்தம் இவற்றை சிறிது நகைச்சுவை கூட்டிச் சொல்கிறார்.
ஒரு வகையில், இந்தக் குறுநாவல், பயோபிக்ஷன் என்று வகைப்படுத்தப் படலாம் அல்லது நவீன இலக்கியப் பாணியாக ஏற்றுக் கொள்ளப்படலாம்!

  1. நியாயங்கள் ஜெயிக்கட்டும்! கி. இலட்சுமி

திருமணம் ஆவதற்கு முன்பே கர்ப்பமாகிவிடும் பெண், அவளை ஏமாற்றும் எம்எல்ஏ மகன், ஒரு பெண் பத்திரிகையாளர், பல திணிக்கப்பட்ட திருப்பங்களுடன் இதனை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் வழக்கமான கதை – இதை ஒரு சுவாரசியமான குறுநாவலாக எழுதி இருக்கிறார் ஆசிரியர்.
பெண் போராளி, அச்சமும் நாணமும் புறந்தள்ளிய வீர தமிழ் மறப்பெண் – என்கிறார்! போலீஸ், கொலை( விஷ ஊசி அம்பாக வந்து தைக்கிறது!), அன்பும் கரிசனமும் கொண்ட பத்திரிகை ஆசிரியர், மர்ம உருவம், ஊடகங்களில் ஒளிபரப்பு, எதிர்க்கட்சி எம்எல்ஏவின் உதவி, மந்திரி மகன் கைது! உடனிருந்து உதவும் கதிரைக் கைப்பிடிக்கும் பெண் பத்திரிக்கையாளர் – சுபம்!
டிவி சீரியல்கள், தமிழ் சினிமாவின் தாக்கம் நிறைந்த குறுநாவல்!

One Comment on “ஜெ.பாஸ்கரன்/குவிதம் குறும்புதினம் (ஜூலை 2025) மூன்று குறு நாவல்கள்!”

  1. மூன்று புதினங்களையும் நானும் விரும்பி படித்தேன்
    சுருக்கமான ஒரு பின்னுரை பதிவு செய்தேன். உங்களுடைய நுணுக்கமான விமர்சனம் மிகத் தெளிவாகவும் அழகாகவும் இருக்கிறது

Comments are closed.