
……………………………….
சரித்திரம் புறக்கணித்த சத்தியபாமாக்கள்!*
(பகுதி 1)
*திருப்பூர் கிருஷ்ணன்*
*இன்று சுதந்திரப் போராட்ட வரலாற்றை மையால் எழுதப்பட்ட சில காகித வரிகளாய்ப் படிக்கிறோம். நடைமுறையில் அந்த வரலாறு நடக்க நடக்க நடக்கும்போதே பலரது கண்ணீரால் அல்லவா எழுதப்பட்டது?
சுதந்திர வேள்வியின் பின்னணியில் இருந்த பெருமூச்சின் உஷ்ணம் இன்றுவரை கூட சரிவர உணரப்படவில்லை. ஏராளமான பெண்களது முழு வாழ்க்கையுமே நிரந்தரமாய் இருளில் ஆழ்ந்து போனதைச் சரித்திரம் சரிவரப் பதிவு செய்யவில்லை.
தியாகி நாட்டுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தார். ஆனால் தியாகியின் மனைவி அந்தத் தியாகியையே அல்லவா தியாகம் செய்தாள்!
சிறைக் கம்பிக்குப் பின்னிருந்து அந்தச் சிறையில் படும் துன்பங்களை எண்ணித் தியாகி சொரிந்த கண்ணீரின் அளவுக்குச் சிறிதும் குறைந்ததல்ல, ஜன்னல் கம்பியின் பின்னிருந்து தியாகியின் வரவை எதிர்பார்த்து அவர் மனைவி சொரிந்த கண்ணீர்.
எத்தனை பெண்களின் மங்கலங்கள் தியாகிகள் சிறை சென்றதால் நிரந்தரமாக அழிந்தன! தன் கணவனையும் குடும்பத்தையும் தவிர வேறு எதுவும் அறியாத எளிய பெண்களின் வாழ்க்கைச் சந்தோஷம் முழுவதையும் சுதந்திரப் போராட்டம் துடைத்து எடுத்துச் சென்றது!
தியாகத்தின் வலியை, தியாகியையும் விட அதிகமாக அவரது மனைவி அல்லவா அனுபவித்தாள்!
இப்டிபப்பட்ட எண்ணற்ற பெண்களில் வடக்கே ஓர் எடுத்துக்காட்டு பால கங்காதர திலகரின் மனைவி சத்தியபாமா.
நடுத்தரக் குடும்பத்துப் பெண்கள் வெளியே சென்று பொருள் ஈட்டுதல் வழக்கத்தில் வராத சமூகச் சூழலில், தியாகிகள் சிறைக்குச் சென்றபோது, இத்தகைய பெண்கள் எந்த அளவு சிரமப்பட்டிருப்பார்கள் என்பதை இன்று கற்பனை செய்து பாரப்பதுகூடக் கடினம்.
*மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் 1856 ஜூலை 23ஆம் தேதி பிறந்தவர் திலகர். புனேயில் ஆரம்பக் கல்வி. கணிதம், சம்ஸ்க்ருதத்தில் சிறந்து விளங்கினார் அவர். புனே டெக்கான் கல்லூரியில் 1877இல் பட்டம் பெற்றார்.
திலகருக்கும் சத்தியபாமாவுக்கும் 1871இல் திருமணம் நடந்தது. சத்தியபாமா ஒரு வெகுளியான பெண். திலகருடைய சொந்த ஊரான சிகல்காமுக்கு அருகேதான் இருந்தது, சத்தியபாமாவின் ஊரான வாடகர். திலகர் பூனாவில் மெட்ரிக் படித்துக் கொண்டிருந்தபோதே அவரது திருமணம் நடந்துவிட்டது.
சிறு வயதிலேயே தாயை இழந்த பிள்ளையான திலகரும் அதுபோலவே சிறுவயதிலேயே தாயை இழந்த பெண்ணான சத்தியபாமாவும் திருமணம் செய்துகொண்டார்கள். (திருமணமானபோது திலகரின் வயது 15. சத்தியபாமாவின் வயது 11.)
திலகரின் திருமணம் நடைபெற்ற கொஞ்ச நாளிலேயே அவரது தந்தை கங்காதர் காலமானார்.
சித்தப்பா வீட்டில் கொஞ்ச நாள் குடித்தனம். பிறகு தனிக் குடித்தனம். பொருளாதார சிரமம் வாழ்நாள் முழுவதும் திலகரைத் துரத்திக் கொண்டிருந்தது. திலகர் சிறைசென்ற போதெல்லாம் சத்தியபாமா அடைந்த வேதனைகள் வார்த்தையில் விவரிக்க இயலாதவை.
1897இல் திலகர் சிறை சென்றபோது இரண்டு நாட்கள் முழுவதும் சத்தியபாமா எதையுமே சாப்பிடவில்லை. அழுதுகொண்டே இருந்தாள்.
உறவினர்களிடமெல்லாம் ஒரு கோரிக்கை வைத்தாள். `என் கணவர் எந்தக் குற்றம் செய்திருந்தாலும் அவர் மனைவி என்ற வகையில் எனக்கும் அதில் பங்குண்டு. என்னையும் சிறையில் போடும்படி சர்க்காருக்கு மனு கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்!` இதுதான் அவள் கோரிக்கை.
பிறகு திலகரை நாடு கடத்தினார்கள். அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்கள். (இதையறிந்து, பிரிட்டிஷ் அரசுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக, பம்பாயில் ஆறு நாட்கள் கடைகள் மூடப்பட்டிருந்தன.)
சத்தியபாமா அடியோடு தைரியம் இழந்தது அப்போதுதான். தன் கணவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை என்ற செய்தியைக் கேட்டதும் அவள் மயக்கம் போட்டு விழுந்தாள். அவளுடைய மகள் பார்வதியால் தாயாரைத் தேற்ற இயலவில்லை.
`மகளே! ஆறு வருடம் வரை என்னால் காத்திருக்க இயலும் என்று தோன்றவில்லை. எனக்கு இத்தனை கஷ்டங்கள் வரக் காரணம் என்ன என்று தெரியவில்லை. அதற்குள் நான் போய்விடுவேன். அப்பா வந்தால் அம்மாவுக்கு இத்தனை துயரத்தைத் தாங்கும் சக்தி இருக்கவில்லை என்று சொல்.`
மறுபடி மறுபடி இதையே சொல்லி அரற்றினாள். தன் மூன்று புதல்விகளையும் எப்படிக் காப்பாற்றப் போகிறோம் என அவள் மனம் பதற்றத்தில் ஆழ்ந்தது. எதுவும் சாப்பிடாமலே அன்றிரவு தூங்கினாள்.
காலையில் மகள் பார்வதி உலுக்கிப் பார்த்தபோது அவள் எழுந்திருக்கவில்லை. நிரந்தரத் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டாள். 1912 ஜூன் ஏழாம் தேதி சத்தியபாமா காலமானாள். திலகர் திரும்பிவர ஆறு ஆண்டுகள் ஆகும் என்ற நினைப்பே திலகரின் மனைவியைத் தின்றுவிட்டது…..
*மனைவி காலமான செய்தி திலகருக்குத் தெரிவிக்கப்பட்டது. ரங்கூனில் மாண்டாலே சிறையிலிருந்து தம்முடைய நண்பர் கோண்டாபந்த் என்பவருக்கு திலகர் ஒரு கடிதம் எழுதினார். உள்ளத்தை உருக்கும் அந்தக் கடிதம் மராட்டிய இலக்கியத்தில் அழியாப் புகழுடன் விளங்குகிறது.
`எவ்வளவோ கஷ்டங்கள் ஏற்பட்டன எனக்கு. எல்லாவற்றுக்கும் பொறுமையோடு ஈடு கொடுத்தேன். ஆனால் மனைவி இறந்த துயரம் என் இதயத்தைப் பிளந்துவிட்டது.
அவள் கொஞ்சமாவது மகிழ்ச்சி அடைவதைப் பார்க்க விரும்பினேன். ஒரு சின்ன சந்தோஷம் கூட அடையாமல் அவள் போய்ச்சேர்ந்தாள். அவள் இறக்கும்போது என்னால் அவள் அருகில் கூட இருக்க இயலவில்லை.
நான் சிறையில் இருப்பதை அவள் விரும்பவில்லை. கடைசியில் நான் சிறையில் இருக்கும்போதுதான் அவள் மரணம் அடைந்திருக்கிறாள். இப்படி நடந்து விடுமோ என்று அஞ்சிக் கொண்டே இருந்தேன். அப்படியே நடந்துவிட்டது. என் வாழ்வின் ஒரு பகுதி முடிந்துவிட்டது.
நான் அடிக்கடிச் சிறைசென்றேன். இப்போதும் சிறையில்தான் இருக்கிறேன். நாங்கள் சேர்ந்து அதிக நாள் வாழாவிட்டாலும் என் மனைவிதான் என் வாழ்வின் ஒரு பகுதி. என் வாழ்வின் இன்னொரு பகுதி நான். விரைவில் இந்த இன்னொரு பகுதியும் முடிந்து விடும்.
அவள் விரும்பியபடி அவள் அஸ்தியை கங்கையில் கரையுங்கள். அவள் இல்லாததால் குழந்தைகள் அளவற்ற துயரத்தை அடைவார்கள். நான் அவர்களை விடச் சிறுவனாக இருந்தபோதே என் பெற்றோரை இழந்தேன் என்பதை அவர்களிடம் சொல்லுங்கள்.`
இன்னும் பல வரிகளில் அந்தக் கடிதம் உருக்கமாக வளர்ந்து செல்கிறது.
ச.து.சு. யோகியார் தன் பெண்குழந்தை ராஜம் இறந்தபோது எழுதிய `கண்மணி ராஜம்` என்ற கவிதை, தமிழின் தற்கால இலக்கியத்தில் அழியாப் புகழ்பெற்றது. அதுபோலவே மனைவி இறந்தபோது திலகர் தன் நண்பருக்கு எழுதிய இந்தக் கடிதமும் மராட்டிய இலக்கியத்தில் பெரும்புகழ் பெற்றுவிட்டது….
*திலகர் சிறையில் இருந்தபோது, நீரிழிவு நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும் `கீதா ரகசியம்` என்ற நூ¨லை எழுதி முடித்தார். திலகரைப் பற்றி நன்கு அறிந்திருந்தார் விவேகானந்தரால் மதிக்கப்பட்டவரும் ஜெர்மனியில் வாழ்ந்தவருமான உலகப் புகழ்பெற்ற பிரமுகர் ஒருவர். அவர் ஜெர்மனியிலிருந்து விக்டோரியா மகாராணிக்குக் கடிதம் எழுதினார்.
திலகர் பகவத் கீதை என்ற புனித நூலுக்கு உரையெழுதியவர் என்றும் அவரைச் சிறைப்படுத்தியதன் மூலம் பிரிட்டிஷ் அரசு மாறாத களங்கத்தை ஏற்படுத்திக் கொண்டதென்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது.
கடிதத்தை எழுதிய பிரமுகர் யார் என அந்தக் கடிதத்தின் கீழே இடப்பட்டிருந்த கையெழுத்தைப் பார்த்து அறிந்த விக்டோரியா மகாராணியின் மனம் துணுக்குற்றது.
இவ்வளவு பெரிய பிரமுகரால் மதிக்கப்படுபவரா திலகர் என ராணியின் மனம் வியந்தது. அப்படி திலகரைப் பற்றி விக்டோரியா மகாராணிக்குக் கடிதமெழுதிய அந்தப் பிரமுகர்….
(இதன் நிறைவுப் பகுதி அடுத்த பதிவில்…)
.

One Comment on “*திருப்பூர் கிருஷ்ணன்*/திலகர் நினைவு தினம்: ஆகஸ்ட் 1:”
Comments are closed.