
……………………………….
*சரித்திரம் புறக்கணித்த சத்தியபாமாக்கள்!*
(நிறைவுப் பகுதி)
*திலகர் சிறையில் இருந்தபோது, நீரிழிவு நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும் `கீதா ரகசியம்` என்ற நூ¨லை எழுதி முடித்தார்.
திலகரைப் பற்றி நன்கு அறிந்திருந்தார் விவேகானந்தரால் மதிக்கப்பட்டவரும் ஜெர்மனியில் வாழ்ந்தவருமான உலகப் புகழ்பெற்ற அறிஞர் மாக்ஸ்முல்லர்.
இந்திய ஆன்மிகத்திலும் வேத வேதாந்தங்களிலும் பெரும் நாட்டம் கொண்டிருந்த அவர், ஜெர்மனியிலிருந்து விக்டோரியா மகாராணிக்குக் கடிதம் எழுதினார்.
திலகர் பகவத் கீதை என்ற புனித நூலுக்கு உரையெழுதியவர் என்றும் அவரைச் சிறைப்படுத்தியதன் மூலம் பிரிட்டிஷ் அரசு மாறாத களங்கத்தை ஏற்படுத்திக் கொண்டதென்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது.
விக்டோரியா மகாராணியின் மனம் துணுக்குற்றது. இவ்வளவு பெரிய பிரமுகரால் மதிக்கப்படுபவரா திலகர் என ராணியின் மனம் வியந்தது…..
*எப்படியோ, நன்னடத்தை காரணமாகவோ வெளிப்புற அழுத்தங்களின் காரணமாகவோ, திலகர் குறிப்பிட்ட காலத்திற்குச் சற்று முன்னதாகவே விடுதலையானார்….
திலகர் `கேசரி` என்ற மராட்டிய இதழையும் `மராட்டா` என்ற ஆங்கில இதழையும் தொடங்கினார். அந்தக் காலத்தில் `கேசரி` தான் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனையான பத்திரிகை.
தம் பத்திரிகைகளில் அவர் எழுதிய ஆவேசமிக்க தலையங்கங்கள் ஆங்கிலேய ஆட்சியை நடுநடுங்க வைத்தன. எனவே திலகரின் அத்தனை நடவடிக்கைகளும் ஆங்கிலேயே அரசாங்கத்தால் கூர்மையாகக் கண்காணிக்கப்பட்டன.
தான் கண்காணிக்கப் படுவதைத் திலகரும் அறிந்துவைத்திருந்தார். அச்சம் என்ற உணர்வே ஒருதுளியும் இல்லாத அவர் அதன்பொருட்டுத் தன் போக்கை எள்ளளவும் மாற்றிக் கொள்ளவில்லை.
சுதந்திர எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதியதோடு, எதிர்கால இந்தியா ஒவ்வொரு துறையிலும் எப்படியெல்லாம் திகழ வேண்டும் எனவும் தம் பத்திரிகைகளில் திட்டமிட்டு எழுதி வந்தார் திலகர்.
`சுதந்திரம் நமது பிறப்புரிமை` என உரத்து முழங்கிய அவர், கட்டாயம் சுதந்திரம் கிடைக்கும் என மனப்பூர்வமாக நம்பினார்.
`ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஆடுவோமே` என சுதந்திரம் வரும் முன்னரே வந்ததாகக் கண்டு பாடிய மகாகவியின் தீர்க்கதரிசன மனநிலையில்தான் அவரும் இருந்தார்.
புதிய இந்தியாவில், இந்தியக் கலாசாரத்துடன் இணைந்த கல்வியை வழங்க வேண்டும் என `தக்காண கல்விச் சபை`யைத் தோற்றுவித்தார்.
கல்வி, பாரதத்தின் கலாசாரத்தோடு இணைந்ததாக இருக்க வேண்டும் என்றும், பண்பாட்டுக் கல்வி, யார் படிக்கும் எந்தப் படிப்பிலும் ஒரு முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இளைஞர்களுக்கு அவர்களின் பாடத் திட்டம் மூலமே பண்பாட்டை போதித்தால்தான் கனவு காணும் பாரதத்தை உருவாக்க முடியும் என அவர் கருத்துக் கொண்டிருந்தார்.
இந்தியச் செல்வம் பிரிட்டிஷாரால் கொள்ளையடிக்கப் படுவது குறித்த தாதாபாய் நவ்ரோஜியின் புத்தகமும் அதை அடிப்படையாகக் கொண்டு ரானடே, விஷ்ணு சாஸ்திரி போன்றோர் ஆற்றிய எழுச்சி மிக்க உரைகளும் அவரைச் சிந்திக்கச் செய்தன. அவர் மனத்தில் நாளுக்கு நாள் சுதந்திரக் கனல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
பொய் வழக்குகளை ஜோடித்து பல சுதந்திரத் தியாகிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் சிறையில் தள்ளும் அராஜகம் தொடர்ந்து நாடெங்கும் நடந்தவாறிருந்தது.
சட்டத் துறையை விடக் கணிதத்தில் தான திலகருக்குக் கூடுதல் ஆர்வம். ஆனால் தன் ஆர்வத்தைக் கணக்கில் கொள்ளாமல் அப்போதைய சூழ்நிலையைக் கணக்கில் கொண்டார் திலவர்.
கணிதத்தில் ஆர்வமுள்ள திலகர், சுதந்திரப் போராட்ட வீரர்களைச் சிறையிலிருந்து விடுவிப்பதற்காகவே சட்டப் படிப்புப் படித்தார். அதன்பின் பல தேச பக்தர்களைத் தம் வாதத்தால் விடுவிக்கவும் செய்தார்….
*திலகர், தம் மனைவி இறந்த துயரை மறக்கும் வகையிலும் பாரத தேசத்தின் பல பிரதேசங்களில் உள்ள மக்களைச் சந்தித்து சுதந்திர எழுச்சியூட்டும் எண்ணத்திலும் பல இடங்களில் சுற்றுப் பயணம் செய்தார்.
இங்கிலாந்துக்கும் சென்றார். அங்கும் இந்திய சுதந்திரத்தின் தேவை பற்றி மேடைகளில் பேசி இந்தியாவுக்கு ஆதரவாக அங்குள்ள ஆங்கிலேயரின் கருத்துப் போக்கு உருவாகப் பாடுபட்டார்…..
*சுவாமி விவேகானந்தர் இந்தியாவைச் சுற்றிவந்த அவரது தொடக்க காலத் துறவு வாழ்வின்போது மும்பையில் இருந்து பூனாவுக்கு ரயிலில் வந்தார். தற்செயலாக அப்போது உடன் பயணம் செய்தவர் திலகர். (இது திலகரின் மனைவி காலமாவதற்கு முன்னால் நடந்த சம்பவம்.)
சுவாமிஜியால் பெரிதும் ஈர்க்கப்பட்ட திலகர், அவரைத் தம் இல்லத்தில் தங்குமாறு அன்போடு வேண்டினார். அந்த வேண்டுகோளை ஏற்று விவேகானந்தர் பத்து நாட்கள் திலகர் இல்லத்தில் தங்கினார்.
சுவாமிஜி பூனாவில் தங்கிய பத்து நாட்களிலும் அவரது ஒளிவீசும் கண்களின் பிரகாசத்திலும் உள்ளத்திற்கு எழுச்சியூட்டும் உரைகளிலும் எண்ணற்றோர் ஈர்க்கப்பட்டனர். அதனால் ஏராளமான பேர் சுவாமிஜியை சாரிசாரியாக தரிசிக்க வரவே சுவாமிஜியின் தனிமைக்கு ஊறு நேர்ந்தது.
தொடர்ந்து தாம் தியானத்தில் ஈடுபட விரும்புவதாகச் சொல்லி, திலகரிடம் மட்டும் சொல்லிக்கொண்டு ஒருநாள் எல்லோரும் உறங்குகிறபோது விவேகானந்தர் பூனாவை விட்டுப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
தன் இல்லத்தில் விவேகானந்தர் தங்கியிருந்த அறையைப் புனிதம் மிகுந்த அறையாகக் கருதினார் திலகர். அந்த அறையிலிருந்துதான் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் வகையில் விநாயகர் திருவிழாவை ஆரம்பித்தார். (அந்த அறை இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.).
சத்ரபதி சிவாஜி உற்சவங்களையும் அந்த அறையிலிருந்துதான் தொடங்கி வைத்தார். எதிர்கால பாரதம் விவேகானந்தர் காட்டிய வழியில் உருவாக வேண்டும் என்பதே திலகரின் கனவாக இருந்தது.
பம்பாய், பூனா ஆகிய இடங்களில் பிளேக் நோய் பரவியபோது ஒருசிறிதும் தயங்காமல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். `பாரதம் என்பது பாரத மக்களே!` என அவர் அடிக்கடிச் சொல்வதுண்டு. `பாரத மக்களுக்குச் சேவை செய்வது பாரத தேவிக்குச் சேவை செய்வதாகும்` என அவர் கருதினார்.
`நோய் விறுவிறுவென்று பரவிய அந்தச் சோதனையான காலத்தில், மக்களை நோயிலிருந்து காப்பாற்றி அவர்களுக்குத் தொண்டு புரிவதே அனைவரும் அனுசரிக்க வேண்டிய தர்மம்` என்றும், `இந்நேரத்தில் சண்டை சச்சரவுகளை மறந்து மக்கள் அனைவரும் ஒன்றுபட்டிருக்க வேண்டியது மிக முக்கியம்` என்றும் அவர் பத்திரிகைகளில் எழுதினார்.
அந்த இக்கட்டான காலத்தில் மக்களைக் காப்பாற்றாமல் விக்டோரியா மகாராணியின் வைரவிழாக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்கள் சில பிரிட்டிஷ் அதிகாரிகள். அந்தப் போக்கைத் திலகர் தம் பத்திரிகையின் தலையங்கத்தில் கண்டித்தார்.
பிரிட்டிஷ் அதிகாரிகளில் இருவர் கொல்லப்பட்டனர். அதற்கு திலகர் தம் பத்திரிகையில் எழுதிய தலையங்கமே காரணம் எனச் சொல்லி அவர் மறுபடி சிறையில் அடைக்கப் பட்டார். கொஞ்ச காலத்திற்குப் பின் விடுதலையானார்.
வங்கப் பிரிவினை எதிர்ப்பு, சுதேசிப் பொருட்களுக்கு ஆதரவு, அன்னியப் பொருட்கள் பகிஷ்கரிப்பு எனப் பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார். காங்கிரசில் மிதவாதிகள், தீவிரவாதிகள் என இரு பிரிவுகள் உருவாகின. தீவிரவாதிகள் திலகரின் தலைமையில் இயங்கினார்கள்…..
*தென்னாட்டில் சுற்றுப் பயணம் செய்த திலகர், வ.உ. சிதம்பரம் பிள்ளையின் நெருங்கிய நண்பரானார். திலகரின் சீடரானார் வ.உ.சி. (பின்னாளில் வ.உ.சி. `தென்னாட்டுத் திலகர்` என்றே அழைக்கப்பட்டார்.)
திலகர் தலைமையில்தான் ஸ்ரீஅரவிந்தர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பதும் பகவான் ஸ்ரீ அரவிந்த மகரிஷியே திலகரின் தலைமையை ஏற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கன. மக்கள், திலகரை `திலக் மகராஜ்` என்று அன்போடு அழைத்தார்கள்.
மனைவியின் அந்திமக் கிரியைக்குக் கூட தான் வர இயலாமல் போனதும் மனைவியின் வாழ்வில் அவள் ஒரு சுகத்தையும் காணவில்லை என்பதும் திலகரின் கடைசி நாள் வரை அவரை ஆழ்மனத்தில் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தன.
வெளியே பல பணிகளை அவர் செய்தாலும் அந்தச் சோகம் அவர் மனத்தின் உள்ளே ஆறாத ரணமாகப் படிந்திருந்தது.
ஓயாத பிரயாணங்களாலும் சுதந்திரப் போரில் தீவிரமாக ஈடுபட்டதாலும் தொடர்ந்து ஓய்வே இல்லாமல் கடினமாக உழைத்ததாலும் திலகரின் உடல் சோர்வடைந்தது. காஷ்மீர் சென்று சற்று ஓய்வெடுக்குமாறு நண்பர்கள் அவரிடம் தொடர்ந்து கூறிவந்தார்கள்.
விரைவில் பூரண ஓய்வு கிட்டப் போகிறது என்ற உண்மை அவருக்குத் தெரிந்திருந்ததால் அவர் தற்காலிக ஓய்வில் நாட்டம் காட்டவில்லை. நோய்வாய்ப்பட்ட திலகர் 1920 ஆகஸ்ட் முதல் நாள் தம் 64ஆவது வயதில் காலமானார்.
அவரது உடலை மயானத்திற்குச் சுமந்து சென்றவர்களில் ஒருவர் மகாத்மா காந்தி. மற்றும் சிலர் லாலா லஜ்பத்ராய், மெளலானா செளகத் அலி போன்றோர். திலகரின் இறுதி ஊர்வலத்தில் சுமார் இரண்டு லட்சம்பேர் கலந்து கொண்டதாக வரலாறு பதிவு செய்துள்ளது.
*திலகரையும் திலகர் போன்ற தியாகிகளையும் நாம் போற்றுகிறோம். அவர்கள் போற்றப்பட வேண்டியவர்களே. சந்தேகமில்லை. அவர்களுக்குப் புகழ் கிட்டியது. ஆனால் புகழையும் சேர்த்துத் தியாகம் செய்தது தியாகியின் மனைவி அல்லவா?
ஒவ்வொரு தியாகியின் மனைவியும் தனி வாழ்வில் செய்த தியாகத்தை இன்று எண்ணிப் பார்ப்பவர்கள் யாரேனும் உண்டா? திலகர் பெயரும் அவர் வரலாறும் நம் எல்லோருக்கும் தெரியும். தெரிய வேண்டும்.
ஆனால் திலகரின் மனைவி சத்தியபாமாவின் வரலாறல்ல, அந்தப் பெயர் மட்டுமே கூட நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
`மாதரையும் மக்களையும் வன்கண்மையால் பிரிந்து காதல் இளைஞர் கருத்தழிதல்` பற்றி பாரதி உருகி உருகிப் பாடினார்.
`கண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா, இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்` என்று சுதந்திரப் பயிர் பற்றிச் சொல்லும்போது பாரதி சொல்லும் கண்ணீர், தியாகியின் கண்ணீர் மட்டுமா, தியாகியின் மனைவியின் கண்ணீரும் கூட அல்லவா?
*திருப்பூர் கிருஷ்ணன்*/திலகர் நினைவு தினம்: ஆகஸ்ட் 1: – விருட்சம் நாளிதழ்
