
புத்தக அறிமுகம் 22
நாடகப் பேராசியர் பம்மல் சம்பந்தம் (முதலியார் என்ற சாதிப்பெயரைத் தவிர்த்து, தன் பெயரை எழுதுவதே அவரது வழக்கம்) அவர்களின் சுயசரிதை, “என் சுயசரிதை”. ‘நாடக மேடை நினைவுகள்’ நூலில் தன் நாடகத் தொடர்பான எல்லா விபரங்களையும் எழுதிவிடதால், இந்தச் சிறிய நூலில் (88 பக்கங்கள்), பிறப்பு, பெற்றோர், கல்வி, தொழில், நண்பர்கள் என சொல்கிறார். அன்றைய தமிழ் நடை, மக்களின் பழக்க வழக்கங்கள், கல்வி, காலாச்சார நடைமுறைகளின் ஓர் ஆவணமாகக் கொள்ளத்தகுந்த நூல் இது என்றால் மிகையில்லை. முதலியார், பிள்ளை, நாயுடு, ஐயர், ஐயங்கார் என எல்லாப் பெயர்களுடனும் ஒட்டியிருக்கும் ஜாதிகள், அன்றைய சமூக நிலையைச் சொல்வதுடன், ஜாதியின் பெயரால் பிளவுகள் ஏற்படுத்தாத சமூகத்தையும் சொல்கின்றன. ஓரிடத்தில், தன் நண்பர்களைப் பற்றிக் கூறிவிட்டு, “பிரசிடென்சி காலேஜில் நான் சேர்ந்ததினால் அடைந்த முக்கியமான லாபம் என்னவென்றால், அதுவரையில் இல்லாதபடி, புதிதாய் பலஜாதி வகுப்பினர்களுடன் கலந்து அவர்களின் நட்பைப் பெற்று என் புத்தி விசாலமானதெனக் கூற வேண்டும்” என்கிறார் சம்பந்தம்.
1963இல் வெளிவந்த முதற்பதிப்பின் முகப்பு அட்டையில், “இந்நூலையும், இதற்குமுன் நான் அச்சிட்ட ‘நாடகத் தமிழ்’ என்பதையும் சென்னை சங்கீத நாடக சபையார் உதவி செய்த பொருளால் அச்சிட்டேன். அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வந்தனம் உரித்தாகுக – ப.சம்பந்தம்.” என்று குறிப்பிடுவது, அன்று நிலவிய பண்பாட்டுக்கு ஓர் எடுத்துக்காட்டு!
“பம்மல் விஜயரங்க முதலியார், இரண்டாவது விவாகத்தின் நான்காவது குமாரன், திருஞானசபந்தம் 1873ஆம் வருஷம், பிப்ரவரி மாதம் 1ந் தேதிக்குச் சரியான, ஆங்கிரச வருஷம், தை மாதம், 21ந் தேதி சனிக்கிழமை உத்திராட நட்சத்திரத்தில் ஜனனம் சென்னப்பட்டணத்தில்” என்று இவரது தகப்பனார் தன் கைப்பட குடும்பப் புத்தகத்தில் எழுதிவைத்திருக்கிறார்.
ஜோஸ்யத்திலும், ஜாதகத்திலும் இவருக்கு நம்பிக்கை கிடையாது. இரண்டாம் தாரமாகத் தன் தாயைத் திருமணம் செய்வதற்கு முன், பெண்ணின் ஜாதகப்படி ‘வயிற்றுப் பொருத்தமுமில்லை, கழுத்துப் பொருத்தமுமில்லை’ என்றார்களாம். ‘அது எப்படியாயினும் ஆகுக, இந்தப் பெண்ணைத் தான் நான் மணம் புரிவேன்’ என்று பிடிவாதமாகத் திருமணம் செய்து கொள்கிறார் இவர் தந்தையார். பின்னர் அவர்களுக்கு நான்கு பிள்ளைகளும், நான்கு பெண்களும் பிறந்தார்கள். மேலும் தன் தகப்பனாருக்கு 1890ஆம் வருடம் சஷ்டி பூர்த்தியானபோது, ஒரு மாங்கலியத்திற்கு இரண்டு மாங்கலியங்களாகப் பெற்ற பிறகே தன் தாயார் சுமங்கலியாக இறந்தார்கள் என்பதைப் பதிவு செய்கிறார்.
தன் தாயார், அவருக்குக் கல்லறை கட்ட வேண்டிய இடத்தைத் தானே மயானத்திற்குச் சென்று தேர்ந்தெடுத்ததைச் சொல்கிறார். அவ்வாறே முனிசிபாலிடியில் பதிவு செய்து அந்த இடத்தை வாங்கி, தாய் மறைந்த பிறகு, அங்கேயே அடக்கம் செய்கிறார் அவரது தந்தை. தன் பெற்றோர், இறுதிக் காலத்தில் எத்தகைய வைராக்கிய மனதுடையவர்களாக இருந்தார்கள் என்பதற்காக இதைப் பதிவு செய்கிறார் பம்மல் சம்பந்தம்.
பட்டு சொக்காய், நிஜார், கோணல் டொப்பி அணிந்து, அட்சராப்பியாசம் செய்வித்ததையும், பின்னர் மூன்று தெருப்பள்ளிக்கூடங்களில் படித்ததையும், பிராட்வே ‘ஹிந்து புரெபரைடரி ஸ்கூல்’ சென்றதையும், கோவிந்த நாயுடு பிரைமரி பள்ளியில் படித்ததையும், ஆசிரியர் சுப்பிரமணிய ஐயர், நண்பர் வி.வி.ஶ்ரீனிவாச ஐயங்கார்,ஆசிரியர்களின் ‘நிக் நேம்’ (நிஜமான பெயர்களே தெரியாத அளவிற்குப் ‘பட்ட’ப் பெயர்கள்!), பிரார்த்தனையின் வலிமை, பின்னர் பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி என தன் ஆரம்பக் கல்வியைப் பற்றி கூறுகிறார்.
சட்டக் கல்லூரியில் படித்தது, வக்கீலாக வேலை பார்த்தது, 51 வது வயதில் ஸ்மால்காஸ் கோர்ட் ஜட்ஜாக ஆனது, கோர்ட் அனுபவங்கள் எல்லாம் சுவாரஸ்யம்! 55 வயதிற்கு மேல் அவரது சரித்திரம், வாழ்க்கையில் அவரது போதுமென்ற மன நிலையையும், பொது வாழ்க்கையில் அவரது பங்களிப்பையும் பற்றிப் பேசுகிறது.
தனது இறுதி காலத்தில், பார்வை இழந்தபோதும், தன் பேரன், பெயர்த்திகளின் உதவியுடன் அவர் புத்தகங்கள் வாசித்ததையும், கதை, கட்டுரை, நாடகங்கள் எழுதியதையும் சொல்வது வியக்க வைப்பது. தன் இல்வாழ்க்கையில், கடன் இல்லா வாழ்வே கண்ணிய வாழ்வாம், குறித்த காலப்படி நடத்தல் போன்றவை அவர் கடைபிடித்த நெறிமுறைகளாம்!
“மறுபிறவி என்று ஒன்றிருந்தால், அப்பிறப்பிலும் நான் ஒரு தமிழ் நாடக ஆசிரியனாகவும், விநோதத்திற்காக தமிழ் நாடகங்களை நடிக்கும் நடிகனாகவும் இருக்க வேண்டும்” என்கிறார் பம்மல் சம்பந்தம்!
சுயசரிதைகள், ஒரு காலத்தின் ஆவணப் பெட்டகங்கள் (அவை உண்மையாக இருக்கும் பட்சத்தில்) என்ற கூற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டு பம்மல் சம்பந்தம் அவர்களின் “என் சுயசரிதை”!
