இன்று என் பிறந்தநாள்/அழகியசிங்கர்



இன்று என் பிறந்த நாள். வாழ்த்துத் தெரிவித்த நண்பர்களுக்கெல்லாம் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முகநூலில் தொடர்பு இருப்பதால் நண்பர்கள் பலரும் பிறந்ததின வாழ்த்துத் தெரிவித்துள்ளார்கள். எல்லோருக்கும் நன்றி.

பொதுவாக என் பிறந்த தினம் என்று வருகிறது என்று பல ஆண்டுகள் தெரியாமலிருந்தேன். என் புதல்வனுக்கும், புதல்விக்கும் பிறந்ததினம் கொண்டாடும்போது எனக்கும் தெரியத் தொடங்கியது.

பல ஆண்டுகளுக்கு முன்பு, என்னுடைய பிறந்த தினம் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு பிறந்த தினம் போது என்னை யார் வாழ்த்துவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தேன்.


என் குடும்பத்தில் உள்ள யாரும் என்னை வாழ்த்தவில்லை. உடனே ஒரு கவிதை எழுதினேன். அதை இப்போது இங்கே தருகிறேன்.

எனக்கு இன்று…

எனக்கு
இன்று பிறந்தநாள்
சிலரேனும் வாழ்த்த
கை நீட்டுவார்களென்று
எதிர்பார்த்தேன்
குறைந்தபட்சம் இன்று மட்டும்
புன்னகையாவது புரிவார்களென்று
நம்பினேன்
எழுந்த மனைவி
சமையலறையில்
பால் சுடவைக்கச் சென்றுவிட்டாள்
பெண்ணிற்கோ
காலை வகுப்பிற்குச் செல்லும் அவசரம்
ஞாபகம் எப்படியோ வந்து
பின் வாழ்த்துத் தெரிவித்து
கையை நீட்டினாள்
மறுத்தேன் என் கையை
நீட்ட.. கோபம் உன்மேல் என்றேன்
பையனுக்கோ தூக்கக் கலக்கம்
முன்தினம்
அடுத்தாள் நம்பிறந்தநாளென்ற நினைப்பு
பொட்டுபோல் நினைவில் ஒளிர்ந்திருந்தது
பிறந்தநாளன்று
ஏனோ அது வற்றிவிட்டது
பிறந்தநாள் தெரியாமல்
எத்தனையோ ஆண்டுகளை
கழித்துவிட்டேன்
நான் சினிமா நட்சத்திரம் இல்லை
முட்டாள்தனமாய் ரசிகர் மன்றத்தினர்
கொண்டாட. ஏன் நாசமாய்ப் போகும்
அரசியல்வாதியாகக்கூட நான் இல்லை..
நான்
ஒரு ஆர்டினரி
தெருவில் நடந்து
போகும்போது
கடந்த நாட்களைப்போல்
இன்றைய நாளும் என்று நினைத்தேன்
நடக்கும்போது
வரும் பஸ் லாரிகளில் ஏன் சைக்கிள்
வண்டியில் கூட அடிபடாமல் இன்று
எப்படியாவது தப்பிக்க வேண்டும்
யாருடனாவது பேசினால்
சச்சரவு ஆகுமென்று
இன்று மட்டும்
மௌனமாக இருக்க
முயல வேண்டும்

இன்று முகநூல்/புலனம் மூலம் எல்லோரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்கள்.
திரும்பவும் எல்லோருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

2 Comments on “இன்று என் பிறந்தநாள்/அழகியசிங்கர்”

  1. எனக்குத் தெரியாததால் தேதியை நான் விட்டு விட்டேன்.
    உங்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.
    மன மகிழ்வுடன் உடல் நலத்துடன் வாழ்ந்து தங்கள் இலக்கியச் சேவையைத் தொடர
    இறைசக்தியை வேண்டி வாழ்த்துகிறேன்.

  2. அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
    பெருமை முயற்சி தரும்.

    உங்களிடம் எனக்குப் பிடித்த விஷயம் consistency .. சிறு பத்திரிகை உலகில் தொடர்ந்து இயங்குவது அவ்வளவு எளிதன்று. மனம் திறந்து பாராட்டுவோர், ஊக்கப்படுத்துவோர் அரிது.. ஆயினும் தளராமல் அமைதியாய் இயங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

Comments are closed.