
தமிழில் : க.மோகனரங்கன்
–
கையெழுத்துப் பிரதிகள்
அடங்கிய சிறுபெட்டியை ரயிலில்
அவர் தொலைத்துவிட்டார்,
அவை பிறகு திரும்பக் கிடைக்கவில்லை என்று படித்தேன்.
அந்த வேதனையுடன் என்னுடையதை ஒப்பிட முடியாது. ஆனால், அடுத்து ஒர் இரவு
இந்தக் கணினியில் நானொரு
3 பக்கக் கவிதையை எழுதினேன் எனது கவனக்குறைவினாலோ
பயிற்சியின்மையாலோ
நிரலில் உள்ள கட்டளைகளுடன் விளையாடுவதன் மூலமோ எப்படியோ அக் கவிதை எப்போதைக்குமாக அழிந்துவிட்டது. என்னை நம்புங்கள்,
அப்படிப்பட்ட ஒரு காரியத்தை
அனுபவமில்லாத ஒருவர் கூட செய்வது கடினம்
ஆனால் எப்படியோ என்னால்
அதைச் செய்ய முடிந்தது.
அந்த 3-பக்கக் கவிதை
அழிவற்ற ஒன்று
என்று நான் கருதவில்லை
ஆனால் அதில்
சில பைத்தியக்காரத்தனமான
கட்டற்ற வரிகள் இருந்தன,
இப்போது நிரந்தரமாக போய்விட்டன. அது சற்று வருத்தத்திற்குரியது என்பதை விடவும்
நல்லதொரு மது பாட்டிலை
கைதவறித் தள்ளிவிட்டதைப் போல
கூடுதலாகத் தொந்தரவு செய்கிறது.
இதைக் குறித்து எழுதுவது
நல்ல கவிதையாக மாறுவது அரிது.
இருப்பினும்,
இதை நீங்கள் எக்காரணம் பற்றியாவது
தெரிந்து கொள்ள விரும்புவீர்கள் என்று எண்ணினேன். இல்லையென்றாலும்,
இதுவரை குறைந்தபட்சம் நீங்கள் படித்திருக்கிறீர்கள்;
தவிரவும் எதிர்காலத்தில்
இவ்வகையில் சிறந்த ஆக்கமொன்று எழுதப்படலாம்.
உங்களுடையதும்,
என்னுடையதுமான
நன்மைக்காக வேண்டி
நாம் அவ்வாறு நம்புவோம்.
