
கண்ணா என்றாலே நினைவுக்கு வருவது ஓர் குழந்தை. கிருஷ்ண ஜெயந்தி அன்று நிச்சயம் மழை பெய்யும் என்று என் பாட்டி சொன்னது இத்தனை வருடங்களில் பொய்த்ததில்லை. பாவாடை சட்டை அணிந்து கொண்டு அரிசி மாவில் குஞ்சு பாதங்கள் வரைந்து கண்ணனுக்கு நான் காத்திருந்தது இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது. கண்ணன் என்றால் பக்தி வந்ததில்லை, ஒரு தோழமை தான் எப்போதும் வருகிறது. வெண்ணெய் திருடி, மாடு மேய்த்து, நதிக்கரையில் விளையாடி என்றுமே அவன் பற்றிக்கொள்ளக் கூடிய தூரத்தில் தான் இருக்கிறான். அர்ஜுனனுக்கு தோழனாய், அபிமன்யூவிற்கு மாமனாய் நம் குடும்பத்திலும் ஒருவனாக இருக்கிறான். இப்படிப்பட்ட கண்ணன் நிஜமாகவே துவாபர யுகத்தில் வாழ்ந்துள்ளானா என்ற எண்ணம் அடிக்கடி எனக்கு எழுந்துள்ளது. இருந்தால் எப்படி இருக்கும்…
மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ள பல இடங்கள், ஆறுகள், மற்றும் தேதிகள், வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மத்தியப்ரதேசத்திலுள்ள பெஸ் நகரில் இரண்டாயிரம் ஆண்டு பழமையான கருட ஸ்தூபி உள்ளது. இதை நிறுவியவர் ஹிலியோடரஸ் என்ற கிரேக்க தூதர். இவர் தன்னை ஒரு பாகவதர் என்று அதிலிருக்கும் கல்வெட்டில் கூறியுள்ளார். பாகவதர் என்றால் கிருஷ்ண பக்தர் என்று பொருள்.
கிருஷ்ணரின் காலம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று நாம் அறிந்திருக்கிறோம், அப்போது ஹரப்பன் நாகரிகம் பரவலாக இருந்தது.ஹரப்பா அகழாய்வு பகுதிகளான குஜராத்தில் உள்ள தோலவீரா, சுர்கோடதா, லோதால், பஞ்சாபில் உள்ள ரூபார், ஹரியானாவில் உள்ள குனால் மற்றும் பனவாலி பகுதிகளின் காலம் 3000 BCE என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹரப்பன் கால முத்திரைகள் சிலவற்றில் ஒரு சிறு பாலகன் இரண்டு மரங்களை வேரோடு எடுப்பது போலவும், அதிலிருந்து இரண்டு மனித உருவங்கள் வருவது போலவும் அமைந்திருக்கிறது. இந்த காட்சி நாம் பாகவதத்தில் படித்த இரண்டு கந்தர்வர்களின் சாப விமோசனத்தோடு ஒத்து போகிறது. அதே போல, பல ஹரப்பன் முத்திரைகளில் அரச இலை இருக்கிறது. கீதையில் தன்னை அரச மரமாக அடையாளம் காட்டிக் கொள்கிறார் கிருஷ்ணர். ஹரப்பன் கால முத்திரைகளில் கிருஷ்ணரை சித்திரப் படுத்தும் வகையில் முத்திரை இருப்பின், கண்ணன் வாழ்ந்த காலம் இன்னும் பின்னோக்கி செல்கிறது.
குஜராத்தில் உள்ள காம்பே பகுதியில் நடந்த ஆழ்கடல் அகழாய்வில் 5000 BCE பழைமையான நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில ஆராய்ச்சியாளர்கள் இந்த நகரம் துவாரகையாக இருக்கக்கூடும் என்று கருதுகிறார்கள்.
யாதவர்கள், வடமேற்கு சிந்து சமவெளி நாகரிகப் பகுதியில் மிகவும் சக்தி வாய்ந்த ஓர் இனமாக கருதப்பட்டனர். பலுசிஸ்தான் முதல் கங்கை சமவெளிகள் வரை யாதவர்களின் ஆட்சி பரவியிருந்தது. யாதவர்களில் சக்திவாய்ந்த மன்னர்களாக கருதப்பட்ட கண்ணன், பலராமன், பிரத்யும்னன், சாம்பன், மற்றும் அணிருத்தன் ஆசிய கண்டம் முழுவதிலும் பிரபலமாக இருந்தனர். இவர்கள் பஞ்ச வீரர்கள் என்று அழைக்கப் பட்டனர். ஆப்கானிஸ்தானில் உள்ள சிலாஸ் குகையில் 172 BCE கால கற் சித்திரத்தில், வாசுதேவனும் , பலராமனும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளனர். இந்த பஞ்ச வீரர்கள் வைணவ சம்பிரதாயத்தில் மிகவும் பிராபல்யம். சென்னையிலுள்ள பார்த்தசாரதி திருக்கோயிலில் கூட இந்த பஞ்ச வீரர்கள் கருவறையில் வீற்றுள்ளனர்.
உத்திர பிரதேசத்தில், மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனத்தில் இருக்கிறது கோவர்த்தன மலை. இந்த மலையிலுள்ள மரம், செடி, கொடிகளைப் பற்றி ஶ்ரீமத் பாகவதத்தில் விளக்கமாக எழுதப்பட்டுள்ளன. அந்த செடிகளும், கொடிகளும் இன்றும் அந்த மலையில் வளர்ந்து வருகின்றன என்று கண்டுபிடித்துள்ளனர் ஆய்வாளர்கள்.
“பாகவதத்தை அறிந்து கொள்ள இந்த இடத்தை காணிக்கையாக கொடுக்கிறேன்” என்று பறைசாற்றும் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய பிராம்மி கல்வெட்டு பிருந்தாவன் நகரில் உள்ள மதன் மோகன் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்ணன் பிறந்து வளர்ந்த இடங்களில் கிடைத்த மிகப்பழைமையான கல்வெட்டு இதுவே.
டெல்லியிலிருந்து 68 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது சனோலி என்கிற கிராமம். இங்கு நடந்த அகழ்வாராய்ச்சியில் போரில் பயன்படுத்தப்பட்ட தேர்கள் மற்றும் தலைக் கவசங்கள், குதிரை சாட்டைகள் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவிலேயே மிகவும் தொன்மையான ரதம் இங்குதான் கண்டுபிடக்கப்பட்டுள்ளது. இது குதிரைகள் பூட்டிய ரதம். தற்சமய ஆராய்ச்சியின்படி இது மகாபாரத காலத்தைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று கருதுகிறார் இதன் ஆராய்ச்சியாளர் சஞ்சய் மஞ்சால்.
பாண்டவர்கள் கேட்ட ஐந்து கிராமங்களில் ஒன்று தான் சனோலி கிராமம் உள்ள பாக்பத் மாவட்டம். இதன் காலம் 3000 BCE என்று அறிவியல் ரீதியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்ணன் ஆட்சி புரிந்த துவாரகாபுரி கடலுக்குள் மூழ்கியது என்ற குறிப்பு மகாபாரதத்தில் உள்ளது. துவாரகையில் இன்று இருக்கும் துவாரகேஷ் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில், துவாரகை ஒரு முறை அல்ல எட்டு முறை கடலில் மூழ்கியுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிகள் தொடரட்டும்!
இறைவனோ, அரசனோ, தோழனோ, நான் பிரியம் வைத்திருக்கும் கண்ணன் பிறந்து, விளையாடி, வாழ்ந்து, ஆண்டு இறந்த பல இடங்களும், நிகழ்வுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அறிந்தபோது நான் அடைந்த மகிழ்ச்சி அளப்பரியது. தொல்லியல் ஆய்வாளர் டி.கே.வி. ராஜன் எழுதிய “In Search of Krishna” என்ற புத்தகம், கண்ணனைப் பற்றி பல்வேறு அறிய வரலாற்றுத் தகவல்களை தருகிறது. படித்து மகிழுங்கள்!
