
வாசல் கேட்டை இடது கையால் பற்றி, வலது கையால் சற்றே திறந்து அதன் மீதே சற்றே சாய்ந்து நின்ற அந்த முதியவர், தெருக்கோடி வரை கண்ணை ஓட்டினார் எவரையோ எதிர் பார்ப்பது போல், சற்று நேரம் நின்றிருந்தார்.' ரயில் தாமதமோ; இல்லை; நாளைக்கு வருவாளாய் இருக்கும்' என்று முனகியபடி திரும்பி நடந்தவர் வெராண்டாவின் படியில் உட்கார்ந்தார். உள்ளேயிருந்து சுப்பு வந்தான். ' என்னங்கையா! என்னை கூப்பிடாம தனியா எந்திரிச்சு வந்துட்டீங்க! நான் பயத்துட்டேன்.' என்று அங்கலாய்த்தான்
அவனை வெறுமனே வெறித்தவர், ' என் மூஞ்சி நசுங்கி இருக்கா?' என்று கேட்டவரைப் பார்த்து, 'அதெல்லாம் ஒண்ணுமில்லை. நல்லாதான் இருக்கு, ஐயா.' என்று சொல்லிக் கொண்டே அவரை வீட்டிற்குள் அழைத்துப் போனான்; சுப்பு
நிலைக் கண்ணாடி முன் நின்றவர்,' ஏண்டா! நான் ஒரே ஒருத்தனா; இல்லை; என்று சொல்லிக்கொண்டே மேசையில் இருந்த பூச்சாடியை எடுத்து சடாரென கண்ணாடி மேல் அடிக்க அது பாளம் பாளமாய் சிதறியது. சிறிதும் பெரியதுமாக அவர் முகத்தின் சிதிலமான பிம்பங்கள்
' இதோ! பார்! எனக்கு சிலசமயம் காது இருக்கு; கண் இல்லை. கண் இருக்கும் போது காது இல்லை. வாய் இருக்கு; பேச்சே இல்லை. பேசத் தெரியும் எனக்கு; என்பதே யாருக்கும் தெரிவதில்லை
மூக்கு மட்டும் பெரிசா இருக்கே… மூச்சு இருக்கும் தானே! ஏன் எனக்கு மூச்சு விட முடியாமல் இருக்கே! அவள் எடுத்துக் கொண்டு போய்ட்டாள்; போல இருக்கே. நாளைக்காவது வந்து விட்டால்; எனக்கு மூச்சு வரும் ;’ என்று சொன்னவர். நாற்காலியில் உட்கார்ந்து, மேசையில் கவிழ்ந்து, கைகளில் முகம் புதைத்து; விசும்புவரைப் பார்த்து கண் கலங்கினான்; சுப்பு.
ரயில் விபத்தில் இறந்து போன, அவருடைய மகளும், மனைவியும், இனி திரும்பி வரமாட்டார்கள்; என்பதை , எப்படி அவருக்கு புரிய வைப்பது?
