
அந்த வீட்டைத் தாண்டிப் போகும் போது எல்லோரும் ஒரு மாதிரியாகச் சிரித்துக் கொண்டு தான் போனார்கள். வீட்டைக் கையால் சுட்டிக் காட்டிப்பேசினார்கள். ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு தலை குனிந்தபடி, ’எல்லாம் கலிகாலம்’ என்று சொல்லி நமுட்டுச் சிரிப்புடன், நெற்றியில் விரல்களின் நுனியால் தட்டிக்கொண்டு சென்றவர்களும் உண்டு.
அது சிறிய கிராமம் தான். மகிழாற்றின் மீது பாலம் கட்டி சில ஆண்டுகள் தான் ஆகியிருக்கும். நூற்பாலை இருக்கும் ஊருக்கும் முருகன் கோவில் இருக்கும் சற்றுப் பெரிய ஊருக்கும் இடையில் பேருந்துகள் அடிக்கடி போய் வந்தன. பாலத்தைக் கடந்து கிராமத்துக்குச் செல்லும் சாலையில் சிறிது தூரம் நடந்தால், நமக்குத் தெரியாமல், பின்னால் தொடரும் நாய்க்குட்டி போல், மகிழாறும் கிராமத்திற்குள் வந்துகொண்டிருப்பதைப் பார்க்கலாம். மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் கரை. குறிப்பாக, மஞ்சனத்தியும், பூவரசும் வேம்பும், உயரமான புதர்ச்செடிகளும். ஆற்றுப்படுகைகளில் தேக்கு வளர்க்கும் நடைமுறை இன்னமும் வரவில்லை.
அந்த ஆற்றை ஒட்டியும், ஆங்காங்கே கோவித்துக் கொண்டு விலகியும் போகும் சாலையின் இருபுறமும் வீடுகள். அந்த ஒரு சாலை தான் ஊரே. ஊர் முடிந்து தொடரும் சாலையில் மேலும் போனால் இன்னும் ஊர்கள் வரும். கொள்ளிடக் கரையும் வரும். முப்பது வீடுகளில் முத்து வீடும், சுப்புண்ணி வீடும் ஓட்டு வீடுகள். மற்றவை அனைத்தும் கூரை வீடுகள். அவை ஒரே ஓட்டமாக இருபது இருபத்தைந்து அடி நீளமும் பத்தடி அகலமும் இருக்கும் வீடுகள். இரண்டு வெள்ளாளர் குடும்பம் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் ஓரே சாதிக்காரர்கள். கொண்டான் , கொடுத்தான், பங்காளிகள், மாமன், மச்சான், அத்தை அக்கா உறவுகள்.
இன்னும் முழுமையாக விடியவில்லை. கையில் வேப்பங்குச்சியுடன், மகிழாற்றுக் கரையை நோக்கிப் போய்க் கொண்டிருந்த வைத்தியோடு சேர்ந்துகொண்ட கண்ணன், ‘என்னப்பா அது. புது கூத்தா இருக்கு. இப்படியா இரண்டு நாளா கதவச் சாத்திகிட்டு உள்ளேயே இருப்பாங்க?’ என்று கேட்டான்.
‘நானும் அதைப் பத்திதான் நினைச்சுக்கிட்டே வந்தேன். சீனி தம்பி குமாரைக் கூட நேத்திப் பாத்தேன். அவனும் யோசனையாத்தான் இருக்கு. சின்னம்மா, சித்தப்பாவும் மாமாகிட்ட பேசனும் என்று சொன்னதாகச் சொன்னான். சீனி வீட்டுக்குப் பக்கத்துவீட்டு அத்தையை வேண்டுமானால் கேட்டுப் பாக்கலாம்’ என்றான் வைத்தி.
காலைக் கடன்களை முடித்துவிட்டு, ஆற்றுத் தண்ணீரில் வாய்க் கொப்பளித்து, குளியல் எல்லாம் உச்சி வேளையில் தான், மீண்டும் தெருவுக்குள் நுழைந்ததும், அந்த ‘சாத்தியிருந்த’ வீட்டிற்கு அடுத்தாற் போலிருந்த குடிசையை எட்டிப்பார்த்தார்கள்.
உள்ளே, விறகடுப்பில் பானையில் எதையோ எரித்துக்கொண்டிருந்த பெண்மணியைப் பார்த்து, ‘என்ன அத்தை, சீனியண்ணன் வீடு இரண்டு நாளா பூட்டிக் கிடக்கு. அதுவும் உள் பக்கம் தாப்பா போட்டிருக்கு. வரவேற்பு முடிஞ்சு வீட்டுக்குள்ள போனவுங்க இன்னுமா உள்ளேயே இருக்காங்க?’ என்று கேட்டான் கண்ணன்.
விறகை உள்ளே தள்ளி, அடுப்பைச் சீண்டி எரியவிட்டுவிட்டு இவர்கள் பக்கம் திரும்பிய லட்சுமி அத்தை, ’ஆமாண்டா, எனக்கும் ஏதோ நினைப்பாத்தான் இருக்கு. முத ராத்திரி அன்னிக்கு விடிய விடிய ஏதோ பேச்சுக்குரல் கேட்டுக்கிட்டே இருந்தது. விளக்கும் எரிஞ்சுகிட்டு இருந்தாப்லதான் எனக்குத் தோணிச்சு. அதக்கப்புறம் நாந் தூங்கிட்டேன். காலையில சாணி தெளிக்க வெளியில் போனவ, அந்த வீட்டு வாசல்லயும் துளி தெளிச்சிட்டு வந்துட்டேன். பாவம் மெதுவா எந்திரிக்கட்டுமேன்னு நினைச்சேன்’
‘ஆனா, அத்தை நேத்துப் பகல் நேத்து ராத்திரி, இப்ப காலைல வரை ஒன்னும் சத்தமே கேக்கலியா?’
’ஆமாண்டா கண்ணா. அவன் சித்தப்பா, சின்னம்மாட்ட பேசுவோம். மாமாட்டயும் கூப்பிட்டுச் சொல்லணும்னு நெனெச்சேன்..’
அதற்குள் திண்ணையில் இரண்டு பெரிசுகள் வந்து உட்கார்ந்தன. வைத்தி ஒருவரைப் பார்த்து ’மாமா. உங்களுக்கு ஏதாவது தெரியுமா. பூட்டியே கிடக்கு வீடு’
’நான் கல்யாணத்தன்னைக்கு சாயங்காலம் மாமியார் ஊருக்குப் போய்ட்டு நேத்து ராத்திரிதான் வந்தேன். காலைல சாமிக்கண்ணுவைப் பாத்தேன். இதோ அவனும் வந்திருக்கான். குமார் எங்கே. அவனையும் அவன் சித்தப்பாவையு அழைச்சுட்டு சுப்புண்ணி வீட்டுத் திண்ணைக்கு வாங்க. பங்காளிகள் எல்லோரையும் கூட்டிக்கொண்டு வா. கண்ணா நீயும் அவனோடு போடா. என்னான்னு ஒரு முடிவு பண்ணிடுவோம்.’
‘மாமா. காபித் தண்ணி சாப்பிடுங்க’ என்று சொல்லி, அத்தை உள்ளேருந்து இரண்டு சில்வர் தம்ளர்களில் காபித் தண்ணியைக் கொண்டு வந்து வைத்தாள்.
பரிசம் போட மூன்று கூண்டு வண்டியிலும், இரண்டு கட்டை வண்டியிலும் போயிருந்தார்கள். கூண்டு வண்டி ஒன்று முத்துவுக்குச் சொந்தம். சுப்புண்ணி வண்டி ஒன்று. மூன்றாவது வண்டி பக்கத்து ஊர் பண்ணையாருடையது. சீனி எல்லோருக்கும் செல்லப்பிள்ளை போல். அவன் தம்பியும் எல்லோருக்கும் பிரியமானவன். அப்பா அம்மா இல்லாமல் தனியே உழைத்து வாழுகிற இளைஞர்கள் என்பதால் எல்லோருக்கும் அவர்கள் மீது பிரியம். குமார் சீனிக்குத் தம்பி இல்லை. ஒரு செல்லப் பிள்ளை.
நீண்ட நாட்களாகத் தேடி, இப்போது சொந்தத்திலேயே கிடைத்த பெண்ணை பரிசம் போட்டு அழைத்துவரப் போயிருக்கிறார்கள். புவனகிரி பட்டு. இரண்டு வாழைத் தார். மஞ்சள் தடவிய தேங்காய்கள். சாத்துக்குடி. அருகில் இருக்கும் பெரிய ஊரில் பெயர் பெற்ற கடையில் மைசூர் பாக்கு, லட்டு, மிச்சர், சர்க்கரை, கல்கண்டு. ஊர்ப் பெண்கள் இவ்வளவு நாட்களும் பெட்டியில் பத்திரமாக மடித்து வைத்திருந்த புடவை சர சரக்க வண்டியில் ஏறிச் சென்றார்கள்.
பெண் அழைத்துக்கொண்டு ஊர் எல்லையில் நுழையும் போது, இரவு எட்டு மணிக்கு மேலாகிவிட்டது. எல்லையில் இருக்கும் கோவிலில் பெண்ணை இறக்கி, சூடம் ஏற்றி, சிதறு தேங்காய் விட்டப் பின்னர் சுப்புண்ணி வீட்டில் தங்க வைத்தார்கள். ஒருவிதத்தில் அவர் சீனிக்கு பெரியப்பா முறை என்பதால், அவர் வீட்டில் பெண்ணழைப்பதை எல்லோரும் எளிதாக எடுத்துக் கொண்டனர்.
அதற்கு மேல் தான் அத்தனை பேருக்கும் விருந்து. முத்து வீட்டு வாசலில் தெருவடைக்கப் பந்தல். கொல்லைக்குப் போகும் மூங்கில் படலை, அன்றைக்குக் கழட்டி வைத்துவிட்டார்கள். கொல்லையில் பெரிய பந்தல் போட்டு தரையைச் சமப்படுத்தி மெழுகியிருந்தார்கள். எங்கிருந்தோ தார்ப்பாய் வாங்கி வந்து தரையை மூடியிருந்தார்கள். இருநூறு பேர் உட்காரலாம். ஒரு முனையில் கிழக்கே பார்த்தாற்போல் பெஞ்சு போட்டு, மணமேடையாய் அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள். பாதி இடத்தில் பந்திப்பாய் விரித்து தாட்டெலைப் போட்டு விருந்து. கேசரியும் இட்லியும், உப்புமாவும் காபியும்.
விடியற்காலை முகூர்த்தம். பத்து மைல் தொலைவிலிருந்து வந்திருந்த மேள வாத்தியக் கோஷ்டி சாப்பிட்டுவிட்டு சுப்புண்ணி வீட்டுத் திண்ணையில் ஒரு ஓரமாகச் சுருண்டு கொண்டனர்.
பெண் தோழியாகக் கூண்டு வண்டியில் வந்திருந்த பெண்ணைப் பார்த்து, சுப்புண்ணி சம்சாரம் கேட்டாள், ‘ஏன் பொண்ணு உர்ருன்னு இருக்கு. மூஞ்சிலே வெட்கம், சிரிப்பு ஒன்னையும் காணோமே’
‘ஆமாம், மாமி. நானும் புறப்பட்ட நேரத்திலேருந்து கேட்டுக்கிட்டே வந்தேன். என்ன விஷயம். ஏன் சோகமாக இருக்கீங்கன்னு. அவங்க ஒன்னுமில்லை. என்ன தொந்தரவு பண்ணாம வந்தா போதும்னாங்க’
அப்போதுதான் வந்த பெண்ணின் அப்பாவும் அம்மாவும், ’பெண் எந்த அறையிலே இருக்கா’ என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தனர். அவர்கள் கையில் டிரங்க் பெட்டி ஒன்று.
‘அவ புடவை, மாத்து உடையெல்லாம் இதுல இருக்கு. கொடுக்கணும்’
’அதோ அந்த ரூம் உள்ளார’.
அந்தப் பக்கம் வேகமாகச் சென்ற அப்பாவும் அம்மாவும், ட்ரங்கு பெட்டியை அவள் பக்கம் வைத்துவிட்டு அறைக் கதவை ஒருக்களித்துச் சாத்தினர். அவளிடம் மிரட்டலும் வேண்டலும் நிறைந்த குரலில் அழாத குறையாக ஏதோ பேசினர். பெண் திருப்பி ஏதோ வேகமாகப் பேசத் தொடங்க, மெதுவா பேசு, மெதுவா பேசு என்றனர்.
சற்று நேரத்தில் வெளியே வந்தனர். அப்பா, அம்மாவைப் பார்த்து ‘நீ இங்கேயே படுத்துக் கொள். நான் திண்ணையில் கட்டய சாய்க்கிறேன். உன் தம்பியையும் அங்கேதான் படுக்கச் சொல்லியிருக்கேன்’ என்று சொல்லியபடி, முகத்தைத் துடைத்துக் கொண்டு வெளியில் போய், திண்ணையில் காலைத் தொங்கப் போட்டு உட்கார்ந்தார். ‘கடவுளே, காப்பாத்து’.
காலையில் பெண்ணை கோவிலுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். மாப்பிள்ளையும் அங்கே இருந்தார். கோவில் பூசாரி, பூசை முடிச்சு இருவர் நெற்றியிலும் விபூதியையும் குங்குமத்தையும் அப்பி அனுப்பி வைத்தார். அங்கேருந்து நடக்கும் தூரத்தில் தான் மணமேடை. முழுவதும் நிரம்பியிருந்தது. இரண்டு மூன்று பெரிசுகள், பெஞ்சுகளில் அமர, கொச்சு வேலி அய்யர் மூகூர்த்த மந்திரங்கள் சொல்லி தாலியைக் கையில் எடுத்துக் கொடுத்தபோது மாப்பிள்ளை பையன் முகத்தில் ஒரே சிரிப்பு.
அம்மா பெண்ணோடு கூடவே இருந்தார். குளிக்கச் செல்லும்போதும் மற்ற நேரத்திலும். அலங்கரித்து பெண்ணை அழைத்து வரும்போதும், மணமேடை கண்ணில் தெரியும் வரையிலும் பெண்ணின் காதில் ஏதோ சொல்லிக்கொண்டே வந்தார். பெண் அழாத குறையாக முகத்தை வைத்தபடி தான் மேடையில் அமர்ந்தாள்.
காலை விருந்து, மதிய விருந்து முடிந்த பின்னர், மாலையில் காபி குடிக்கிற நேரத்தில் சீனி வீட்டுக்கு இருவரையும் அழைத்துக் கொண்டு வந்தனர். சீனியும் அத்தையும் பெண்ணுக்கு அத்தை மாமி முறை இருக்கும் மற்றவர்களும் பெண்ணை ஆரத்தியுடன் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று சாமி படத்திற்கும் முன் ஏற்றி வைத்திருந்த குத்து விளக்கடியில் மடித்துப் போட்டிருந்த புத்தூர் கல்யாணப் பாயில் அமர வைத்துப் பாலும் பழமும் கொடுத்தனர். அம்மாவும் அப்பாவும் இல்லாத, சீனிக்கும் அவன் தம்பிக்கும் அத்தையும் மாமாவும் ஆர்வத்துடனும் அன்புடனும் செய்த காரியங்கள் ஊரில் உறவுகளுக்குள் இருந்த பிணைப்பைக் காட்டியது.
கொல்லையில் விருந்து தயாராகிக் கொண்டிருந்தது. பத்து பதினைந்து பேர்தான் அமர்ந்து சாப்பிட முடியும். சாப்பிட்டு முடித்து, வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு, வாங்கிக் கொண்டு, கையில் வாழைப்பழத்தையும் எடுத்துக்கொண்டு ஊர் மக்கள் தம் வீடுகளுக்கு உத்தரவு பெற்றுக் கொண்டிருந்தனர். இரவு ஒன்பது மணிக்கு மேல், வாசலில் தெருவடைக்கப்போட்டிருந்த பந்தலில் இருந்த பெண் வழிச் சொந்தங்கள் நேற்று படுத்த இடங்களுக்கே படுக்கச் சென்றனர். மற்றவர்களும், ஒவ்வொருவராகப் புறப்பட, அண்ணியும் வேறு சில பெண்களும், ஒவ்வொருவரையும் காதில் ஏதோ சொல்லி வெளியேற்றிக் கொண்டிருந்தனர். சில இளசுகள் கோவில் பக்கம் ஒதுங்கின. குமார் சித்தப்பா வீட்டிற்குப் படுக்கப்போனான்.
இருவரையும் உள்ளே அனுப்பி, பெண்ணிடம் செய்தி சொல்லி, கதவைச் சாத்தி விடை பெறுவதற்கு பதினோரு மணியாகிவிட்டது. காலையில் பொழுது விடியும் முன் பக்கத்து வீட்டு அத்தை தெருப் பெருக்கினாள். சீனி வீடு உள் தாழ் போட்டிருந்தது. வாய்க்குள் சிரித்துக் கொண்டு, முகம் மலர கோலம் போட்டுக் கொண்டிருந்தவளிடம், பெண்ணின் அப்பாவும் அம்மாவும் சொல்லிக் கொண்டு புறப்பட்டனர். கோவில் வாசலில் வண்டிகள் நின்றிருந்தன.
’அத்தை பாத்துக்குங்க. நீங்க பாத்து வளர்ந்த பெண் தானே.’
நாள் முழுக்க தாள் திறக்கவே இல்லை. இரவும்.
சுப்புண்ணி வீட்டுத் திண்ணையில் கூடிக் கொண்டிருந்தனர். பத்துப் பதினைந்து பேர் இருக்கும். ’என்னடா இது இப்படியுமா இருப்பாங்க. கேள்விப்பட்டதே இல்லையே’ வெட்கமும் சிரிப்புமாகப் பேசிக்கொண்டிருந்தாலும், ஒரு எச்சரிக்கையும் பயமும் பேச்சில் இழையோடி இருந்தது.
திண்ணையின் விளிம்பில் உட்கார்ந்திருந்தவர்தான், ஊர் எல்லையில் வேகமாகத் திரும்பிய இரண்டு சைக்கிள்களைப் பார்த்தார். உடனே தெருவில் இறங்கினார். இரண்டு இளைஞர்கள், திண்ணையில் மோதாத குறையாகச் சைக்கிள்களை நிறுத்தினர்.
‘நாங்க … ஊரிலேர்ந்து வரோம். … அந்த அக்கா அவரைக் கல்யாணம் செஞ்சுகிடுச்சுன்னு ஊரே பேசிக்கிது. அவரையும் ஊர்ல காணோம். ரண்டு பேரும் வெளியூர் போயிட்டதாகச் சொல்லிக்கிறாங்க. பெண் வீட்டில இங்கே … அக்கா இருக்காங்களான்னு விசாரிச்சிட்டு, பாத்துட்டு வரச் சொல்லி அனுப்பியிருக்காங்க’’
அடுத்த கணம் திண்ணையில் தீப்பற்றியது. மாமா இறங்குவதற்குள் எல்லோரும் திண்ணையிலிருந்து இறங்கி சீனி வீட்டை நோக்கி ஓடினர். சீனியின் தம்பி முதலில் ஓடினான். ’எலேய் வைத்தி, கண்ணா, சுத்தியல் கடப்பாரை எடுத்துட்டு வாங்கடா’
வீட்டின் முன் கதவை நெருங்கியபோதுதான் ஏதோ வாடை அடிப்பதை உணர்ந்தனர். சுத்தியல் கடப்பாரையே தேவையில்லை. இரண்டு பேர் சேர்ந்தாற்போல் மோதியதும், கதவு விரியத் திறந்துகொண்டது. உள்ளே நுழைந்த சீனியின் தம்பி ’அண்ணா’ என்று கூச்சலிட்டு அழுதான். மற்றவர்கள் ’அய்யோ என்ன இது’ என்று குரல் கொடுத்தனர்.
மோட்டுவளை மூங்கிலில் தொங்கிய மெலிதான மாட்டுத் தலைக் கயிற்றில் சீனியின் உடல் அசையாமல் தொங்கிக் கொண்டிருந்தது. முதல் நாள் இரவே அவன் இதைச் செய்து கொண்டிருக்கவேண்டும் என்றார் மாமா. வாடையை அடக்க மேல் துண்டை மூக்கில் அழுத்திக் கொண்டார்.
‘டேய் எவனும் முச்சு விடாதீங்க. கச்சேரிக்குத் தகவல் போய்விடக்கூடாது. சுடுகாட்டுல ஏற்பாடு செய்யச் சொல்லி அமாவாசை கிட்டப் போய்ச் சொல்லிடுங்க’
மறுநாள். சுடுகாட்டிலிருந்து மேற்கே அரை மைல் தூரமிருக்கும் படித்துறையில், அந்த இரண்டு பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர். மகிழாற்றிலிருந்து பிரிந்தோடும் பெரிய வாய்க்காலில் கட்டப்பட்டிருக்கும் படித்துறை. மரங்கள் நீர்ப்பரப்பில் கவிந்து கிடந்தன என்றுதான் சொல்லவேண்டும். காலைச் சூரியனின் ஒளிக்கற்றைகள் நீரின் மேல் விழாத வண்ணம் நிழல். ஆனால், அந்த நிழல் பரப்பையும் துளைத்துக் கொண்டு நீரில் வீழ்ந்த சூரியனின் ஒளிக்கிரணங்கள் வரைந்திருக்கும் செம்பொன் வட்டங்கள் குலைந்து போகும்படி, படிக்கட்டிலிருந்து நீரில் குதித்தப் பெண் நீரையலைந்து முன் சென்று திரும்பி, நீரையள்ளி, குளிருக்குப் பயந்து படிக்கட்டில் தயங்கிக் கொண்டிருந்தவளை நோக்கி வீசினாள்.
நீர் மேலே விழுந்ததும், ஏய் என்று கத்திக் கொண்டு வேகமாக வாய்க்காலில் இறங்கியவள், இரு கைகளையும் முன்னால் நீட்டி, நீரைத் தள்ளியபடி வாய்க்காலின் மத்திக்குச் சென்றாள்.
அவள் அடிக்கத்தான் வருகிறாளோ என்ற பயத்தில், நீரை வீசியவள், ஓரமாக விலகி வேகமாகப் படிக்கட்டுப் பக்கம் நகர்ந்தாள். நெஞ்சுவரை உயர்த்திக் கட்டிய ஆடையிலிருந்து நீர் தாரையைச் சொட்ட மேற்படிக்கட்டில் அமர்ந்தாள். நல்ல வேளை பாசி வழுக்கிவிடவில்லை. விரட்டியவளும் அவள் பின்னோடே வந்து படிக்கட்டில் அமர்ந்தாள்.
நீரில் இவர்கள் அளாவி விளையாடிய சத்தம் தவிர்த்து, தூரத்தில் ஒரு குயில் கூவிய சப்தம் மட்டுமே. கல் குருவிகள் செம்மண் சாலையில் ஏதோ பேசிக்கொண்டபடி, மண்ணில் ஏதோ அலகால் கொத்தி, பொறுக்கிக் கொண்டே பின்பக்கத்தை ஆட்டியபடி நடந்தன.
எழுந்து நின்று, கட்டியிருந்த உள்பாவாடையை மேலும் இறுக்கிய முதலாமவள், சாலையில் யாராவது வருகிறார்களா என்று பார்த்தாள். பின்னர், படிக்கட்டில் இருந்தவளைப் பார்த்து,
‘இவளே உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?’
‘என்னது…’
ஏதோ சொல்ல வந்தவள், ‘எனக்கு ஏன் பொல்லாப்பு’ என்று நிறுத்தினாள்.
‘என்னது, ஏதோ சொல்ல ஆரம்பித்து நிறுத்திட்ட. நமக்குள் என்ன?’
‘இல்லடி, இப்பத்தான் ஒரு பெரிய கலவரம் நடந்து ஓஞ்சிருக்கு. புதுசா நான் ஒன்ன பத்த வைக்கணுமா?’
‘என்னக்கா, அப்படி. மோசமான சேதி. நான் யாருட்டயும் சொல்ல மாட்டேன். சொல்றதுன்னா சொல்லு’
‘நேத்தி, கதவ உடச்சிச் தெறந்து எறக்கினாங்க இல்லையா?
‘ஆமாம், சீனியண்ணன். பாவம். இப்படி செஞ்சுட்டாளே அந்தப் பாவி’
‘இல்ல. அப்படில்லாம் சொல்லாத. அதுல வேறொரு விஷயம் இருக்கு’
’அது என்ன? காலையில கல்யாணம். சாயங்காலம் முத ராத்திரில வீட்டைவிட்டு ஓடிப்போய் இன்னொருத்தன் ட்ட ஒருத்தி வாழ்வாளா? காலம் கெட்டுப் போச்சு.’
’இல்ல. அவ பேர்ல முழுசா தப்புச் சொல்ல முடியாது’
’என்ன நீ அவளுக்கு வக்காலத்து வாங்குற. அது தப்பில்லையா?’
‘தப்புதான். என் காதுல விழுந்ததச் சொல்றேன். கொஞ்சம் பொறுமையாக் கேளேன்’
’உன் காதுல விழுந்ததா? என்ன சொல்ற? இழுக்காம சீக்கிரம் சொல்லு’
‘அன்னிக்கு ராத்திரி, நடு ராத்திரில எனக்கு வயத்தக் கலக்கிருச்சி. வரவேற்புல சாப்பிட்டது ஏதோ ஒத்துக்கல. பின் பக்கம் போகலாம்னு கொல்லக் கதவத் திறந்துட்டுக் கொல்லப் பக்கம் போனேன். அடுத்த வீடுதானே சீனியண்ணன் வீடு. ஏதோ பேச்சுக்குரல். திடீர்னு குரல் உயருது. அழுகுற சத்தம் கேட்குது. யாரும் பாக்குறாங்களாங்னு சுத்தி முத்தும் பாத்துட்டு அண்ணன் வீட்டுச் சுவத்துப்பக்கம் போனேன். வயத்துக் கலக்கல காட்டியும் இது எனக்கு அதிகம் ஆவல எழுப்பிடுச்சி’
’என்ன நடந்தது. ஏதாவது பாத்தியா’
’பாக்கல, கேட்டேன். சிம்னி விளக்குதானே எரிஞ்சுது. ஆனா அதை அவுங்க அணைக்கல. பேசிட்டே இருந்திருக்காங்க அவ்வளவு நேரமும். அண்ணன் ஏதோ சமாதானமா பேசுறாங்க.
“ இதை எப்படியாவது என்கிட்ட முன்னடியே சொல்லிருக்கலாமே நீ. இப்ப எல்லாம் முடிஞ்சு ஊர் முழுக்க நம்மள ஒன்னா நிக்க வைச்சு, பொன்னும் மாப்பிளையுமா பாத்த பிறகு… எனக்கு எவ்வளவு பெரிய அவமானம். தெருவுல நடக்க முடியுமா? ஆம்பளையான்னு, காறித் துப்புவாங்க… சொந்தக் காரங்க அத்தனை பேருக்கும் அசிங்கம். இந்த ஊர் முழுக்க எங்க சொந்தக் காரங்க தெரியும்ல. எனக்கு ஒரு தம்பியும் இருக்கான். அவனுக்கு எவன் பொண் கொடுப்பான்?
”ஏன் எங்க பங்காளிகளும்தான் இங்க இருக்காங்க.
”அதான் சொல்றேன். இப்ப என்ன செய்ய முடியும்?
”இந்த ஊர்ப்பேச்செல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் ஊர்க்காரங்க அப்புறம் மெதுவா மறந்துடுவாங்க. ஆனால், வாழ் நாள் முழுக்க நான் எப்படி உங்களோடு வாழ்வது. என் நெனைப்புல வேற ஒருத்தருல்ல இருக்கிறாரு.
”இதை முன்னமே சொல்லித் தொலைக்கிறதுதானே” குரல் உயர்ந்தது.
”இந்தக் கல்யாணம் வேணாம்னு சொன்னேன். அடிச்சு உதச்சாங்க. காமிரா உள்ளுள வைச்சு பூட்டினாங்க. பரிசம் போட உங்க வீட்டுலேர்ந்து வந்து அழைச்சுட்டு வர வரைக்கும் காவல்தான். இதோ பாருங்க என் உடல் முழுக்க…
”சோத்தப் பொங்கிஎறக்கி வைக்கும்போது கொட்டுனாப்ல… இப்ப என்ன பண்ணனும்னு சொல்ற.
”என்ன விட்டுடுங்க. உங்களப்போல அவரும் எனக்குத் தூரத்து முறைப்பையன் தான்.
”இப்ப எப்படி? என் தாலி உங் கழுத்துல இருக்கே.
”அவரு ஆத்தங்கரை மொனையிலேயே நிப்பாரு. எந்த நேரம் ஆனாலும், எத்தனை நாள் ஆனாலும் போகமாட்டாரு. நா எப்பட்யும் வருவேன்னு அவருக்குத் தெரியும். இன்னைக்கு இல்லைன்னா, நான் நாளைக்கு உங்களுக்குத்தெரியுமா போய்விடுவேன். சத்தம்போடாம நான் போய்க்கிறேன். ரண்டு பேரும் ஊரை விட்டுப் போய்விடுவோம். சத்தம் அடங்குன பிறகு வர்றோம். உங்க தாலியே எங் கழுத்துல இருக்கட்டும். சாபம் கொடுக்காம இருங்க போதும்”
’யாரோ தரையில் விழுவதுபோல் சத்தம் கேட்டுது. அண்ணன் காலில் விழுந்திருப்பான்னு நெனைக்கிறேன். பத்து நிமிஷம் சத்தமே கேக்கலெ. அதன் பிறகு கொல்லைக் கதவு தாழ்ப்பாள் திறக்கிற சத்தம். அண்ணன் கையில் டார்ச் லைட் டோடு வெளியில் வந்தார். சுத்தும் முத்தும் பார்த்தார். பின்னர் உள்ளே பார்த்து வா என்றார். கையில் முந்தா நாள் அவ எடுத்து வந்த ட்ரங்க் பெட்டியோடு அவள் வெளியில் வந்தாள். சாயங்காலம் ஊர் வரவேற்பின் போது கட்டியிருந்த அதே சேலை அலங்காரம். காஞ்சு போன பூ. அண்ணன் டார்ச் அடித்தபடி தடம் பார்த்து முன்னே போறார். அவள் பின்னாடியே போனா’
’அடிப்பாவி. சத்தம் போடலியா நீ’
’நீயாயிருந்தா போட்டிருப்பியா?’
