கேட்காத ஓசை/நா.விச்வநாதன்

.


”’
ஓயாமல் கூச்சல்
கேட்கும்.
இனம் காணும்
எந்த முயற்சியுமின்றி
எல்லாம் கழிகின்றன.
மலையோசை-
அதன் அருவியோசை
பனியிறங்கும்
அரவம்-
ஏதாவதொன்றாக
இருக்கலாம்.
தேர்ந்த இளைஞன்
ஏதோ சோகத்தில்
குரல் மாற்றிப்
பாடிக்கொண்டிருகலாம்.
அடுக்களையில் வெந்தே
செத்துப்போன
மூதாதைப் பெண்களின்
முனகல்களாகக்கூட
இருக்கலாம்.
ஓசையின்றிப் புணர்தல்
கொடுமையெனக்
கூச்சம் தொலைத்துச்
சொல்லி
அவப்பேர் வாங்கிய
ஒருத்தியின்
அரற்றலாக இருக்கலாம்.
எவையானால் என்ன?
மரத்திலிருந்து
மெல்ல மிதந்து
கீழிறங்கும்
ஒரு பூவின்
கேட்காத ஓசை மட்டும்
இனிதுதான்
”’