
விருட்சம் 79 கவியரங்கில் நான் வாசித்த ஐந்தாம் கவிதை
ஒரு நிமிடம் உன்னை நினைக்காமல்
வாழ வேண்டும்
எனக்குள் அழுந்த சொல்லி
இயலுமா எனத் தயங்கி
இயல வேண்டும்… என்ற உறுதியுடன்
இறுதி முடிவு எடுத்தேன்.
இதோ என் முன்னால்
நொடிமுள்ளுடன் கூடிய கடிகாரம்
சரியாக நொடிமுள் பன்னிரெண்டில் இருக்க
அவனை நினைக்காதே..
. மனதிற்கு உரத்துக் கட்டளையிட்டபடியே
கடிகாரத்தைக் கவனித்தேன்
நொடிமுள் ஒன்றைத் தொட
இன்னும் ஐம்பத்தைந்து நொடிகள்
அவனை நினைக்கக் கூடாது
இதோ இன்னும் நாற்பத்தைந்து நொடிகள் தான்
அய்யோ… இன்னும் முப்பது முழு நொடிகள் மீதமிருக்கின்றதே…
இதோ… இருபது நொடிகள் தான்
விரைவில் கடந்து விடும்
அவனை நினையாதே…
ஏன் இந்த நொடிமுள்
இவ்வளவு மெதுவாகச் சுழல்கிறது
நெடிய பத்து நொடிகளைக் கடக்க
எவ்வளவு நேரம் ஆகுமோ…?
இதோ… மூன்று… இரண்டு… ஒன்று
அப்பாடா… என்னவனை நினைக்காமல்
என்னாலும் ஒரு நிமிடத்தைக் கடக்க முடிந்திருக்கிறது
எபெருமையாய்ச் சிரித்தேன்
சுழல்வதை ஒரு நொடி
நிறுத்தியக் கடிகாரம்
மீண்டும் சுழன்றது
இந்த உலகமும்…
