கு.மா.பா.திருநாவுக்கரசு/இது தேர்தல் காலம்..!

“விருட்சம்” நடத்திய 79ஆவது கவியரங்கில் (நாள்: 15/8/2025) நான் வாசித்தக் கவிதை எண்:3

யார்யாரோ வருவார்கள் இல்லம் தேடி!
யாசகமே கேட்பதுபோல் வாக்கை நாடி,
ஊருக்கு ஊர்கூடி, கொடிகள் ஏந்தி,
ஓட்டுக்கே அலைவார்கள் படிகள் ஏறி!
தேர்தல்கள் நெருங்குவதால் பாட்டுப் பாடி,
திசையெட்டும் தொண்டர்கள் கூத்தும் ஆடி,
ஈர்க்கின்ற வாக்குறுதிப் பதாகை தாங்கி,
எளியோரை வசப்படுத்தும் பணத்தைக் காட்டி!

சோற்றுக்கே வழியின்றி வறுமைத் தீயில்
தூங்குதற்கோர் இடமின்றி பசியில் வாடும்,
கோரிக்கை யற்றபெரும் பான்மை மக்கள்,
குறையாவும் நிரந்தரமாய்த் தீர்த்திடாமல்,
தேர்தலுக்கு மட்டுமிவர் வாக்கை வாங்கத்
திட்டமிட்டு இலவசங்கள் தருவார் நாட்டில்!
வார்த்தைகளில் மயங்கிடாமல் வாக்காளர்கள்,
வாய்ப்பிதனால் உரிமைகளைக் கோரல் வேண்டும்!

மக்களாட்சி வலிமைதனை, வாக்கின் மேன்மை,
மக்களெல்லாம் கட்டாயம் உணர்தல் வேண்டும்!
தக்கதொரு வேட்பாளர் தகுதி பார்த்தே,
தவறாமல் வாக்குரிமை பதிக்க வேண்டும்!
வக்கிரமாய் விலைபேசும் பணத்திற்காக
வாக்குகளை விற்காதீர்! கடமை யாற்றி,
அக்கறையாய் பொதுநலனை காக்க வல்ல
அரசியலில் நல்லோரைத் தேர்ந்தெடுப்பீர்!

கு.மா.பா.திருநாவுக்கரசு/ஆனந்த சுதந்திரம்! – விருட்சம் நாளிதழ்