கு.மா.பா.திருநாவுக்கரசு/ஆனந்த சுதந்திரம்!

சுதந்திரத் திருநாள் என்றால்
சொல்லுக யாதென? இற்றை
“புதியதோர் உலகம்” காணும்
புதுமை இளைஞரைக் கேட்பீர்!

“எதையும் செய்யலாம் இங்கே!
எதையும் சொல்லலாம் இங்கே!
எவர்க்குமே அடங்கிடா போக்கில்
எவற்றையும் தூற்றலாம் இங்கே!”

“வதைபட சுதந்திரம் தன்னை
வாங்கிய காந்தியைக் கொன்றார்!
மதங்களின் இணக்கம் தன்னை
மதியாத போக்கில் சென்றார்”

வாளுடன் இரத்தமும் இன்றி
வாங்கிய சுதந்திர மண்ணில்,
நாளொரு மேனியும் இன்று
நடக்குது வன்முறைச் சாவு!

கள்ளச் சாராயம் விற்பார்! – மதுக்
கடைகளில் இளைஞர் கெட்டார்!
கல்வியை வணிகம் செய்வார் – பலர்
கடன்பட சுமைகளை வைத்தார்!

மாதர் தம்மை இழிவாய் – எண்ணும்
மடமை ஒருபுறம் என்றால்,
பாதகர் சிலரோ கற்பை
பலாத்காரமாய் கொன்றார்!

சுதந்திரம் இதற்கா சொல்வீர்?
சுயநலப் பதர்களை மாற்றி,
அதர்மத்தின் வேர்களை வெட்டும்
ஆனந்த சுதந்திரம் காண்பீர்!

One Comment on “கு.மா.பா.திருநாவுக்கரசு/ஆனந்த சுதந்திரம்!”

Comments are closed.