
- இருவகை இலக்கியம்
தமிழ் மக்கள் உள்ளத்தில் அகம், புறம் என்ற பொருட் கூறுபாடு வேரூன்றி விட்டது. பண்டைத் தமிழ்-இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் இவ் இருவகை இலக்கியங்களைப் பற்றி எழுதியெழுதி, அவ்வகைகளைத் தவிர வேறுபாகுபாடுகளைக் குறித்து எண்ணுவதற்குக்கூட நாக்கு மனவலிமை யில்லாதபடி செய்துவிட்டார்கள். ஆகவே, இருவகை இலக்கியம் என்றால், அகப்பொருள் பற்றிய இலக்கியம், புறப்பொருள் பற்றிய இலக்கியம் என்றுதான் பொதுப்படக் கருதுவோம். முன்னது காதல் துறைகளையும், பின்னது போர், ஈகை முதலியவற்றிற்குரிய துறைகளையும் பொருளாகக் கொண்டவை.
இப் பாகுபாட்டினைக் காட்டிலும் மிக ஆழ்ந்து செல்லும் வேறொரு பாகுபாட்டினையே ‘இருவகை இலக்கியம்’ என்ற தலைப்புத் தொடர் இங்கே கருதுகிறது. இலக்கியம் என்பது ஒரு கலை (art). இது கலைஞன் உள்ளத்தில் தோன்றும் முறை தனிப்பட்டது; இலக்கியமாகப் பரிணமிக்கும் முறையும் தனிப்பட்டது; இதன் நோக்கமும் தனிப்பட்டதே. இதனோடு முற்றும் வேறுபட்டது சாஸ்திரம். இது தோன்றும் முறையும், வெளியாகும் முறையும், இதன் நோக்கமும் கலைக்குரியவற்றினின்றும் பெரிதும் வேறுபட்டவையாகும்.
‘கலை’ என்று கூறப்படுவதற்கு அழகு-உணர்ச்சியும் இன்புறுத்தும் நோக்கமும் இன்றியமையாதவை. ‘சாஸ்திரம்’ என்று கூறப்படுவதற்கு இவ்விரண்டும் இன்றியமையாதனவல்ல. அறிவிற்குரிய விஷயங்களைத் தருதலே முக்கிய நோக்கமாகும். ஒரு மாளிகைக்கு இரண்டு வகையான படங்களை வரைதல் கூடும். ஒன்று ஓவியப் புலவன் தீட்டும் மாளிகைச் சித்திரம்; இன்னொன்று மாளிகையமைக்கும் கொற்றன் (Architect) வரைந்து கொள்ளும் அமைப்புப் படம் (Plan). சித்திரத்திற்கும் அமைப்புப் படத்திற்கும் உள்ள வேறுபாடு கலைக்கும் சாஸ்திரத்திற்கும் உண்டு.
கம்ப ராமாயணத்தை எடுத்துக்கொள்வோம். இது ஒரு கலைக்காவியம். இதிலே, “அழகு-உணர்ச்சி ததும்புகிறதா? காவிய இன்பம் சிறந்தோங்குகிறதா?” என்ற கேள்விகளே எழும். இதனோடு தொல்காப்பியத்தை ஒப்பிடுவோம். இப் பெருநூல் பற்றி, “தமிழ் மொழியின் உண்மையியல்பை இது சரியாகத் தவறினறித் தெரிவிக்கிறதா?” என்ற கேள்வி தான் உண்டாகும். இது ஒரு சாஸ்திரம். உள்ளத்தை உணர்ச்சி வழியில் இயக்குவது கலை என்றும், மக்களுக்கு அறிவுப் பொருள்களைக் கற்பிப்பது சாஸ்திரம் என்றும் ஆசிரியர் டிக்வின்ஸி கூறியுள்ளார். இவர் கூறியுள்ளதன் திரண்ட கருத்து வருமாறு:
இலக்கியம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது (கலை) உள்ளத்தை இயக்கும் ஆற்றல் படைத்துள்ளது. பிற எல்லாம் (சாஸ்திரம்) அறிவுப் பொருள்களைப் பரப்புவது. எழுதப்படுவன எல்லாம் இலக்கியம் என்று பொதுவாகத் தொகுத்து வழங்குகிறோம். இவற்றிலே இரண்டு இயல்புகளைக் காணலாம். அவ்விரண்டு இயல்புகளும் கலந்து தோன்றுதல் காணப்படினும், தனித் தனியாகப் பிரித்து உணர்தற்கும் இவை இடந்தருகின்றன. ஏனென்றால், இவற்றில் ஒன்று மற்றொன்றோடு சிறிதும் இணங்காதபடி அதனைத் தூரத்தே அகற்றி நிறுத்த முயல்கிறது. இவற்றுள் ஒன்றை அறிவிலக்கியம் (Literature of Knowledge) என்றும், மற்றொன்றை ஆற்றல்-இலக்கியம் (Literature of Power) என்றும் வழங்கலாம். அறிவிலக்கியம் அறிவுப் பொருள்களைத் தர முயல்கிறது: ஆற்றல்-இலக்கியம் உள்ளத்தை ஊக்குவிக்க முயல்கிறது. முன்னது புலனறிவை விருத்தி செய்வது; பின்னது, உணர்ச்சியின் மூலமாக, போதத்தைத் துணையாகக் கொண்டு, ஆன்மாவையே இயக்குகிறது.
அறிவிலக்கியத்தை மதிப்பிடுவதற்கு,”அதிற் கூறப்பட்டன சரியா? உண்மையா? தருக்க நெறியோடு பொருந்துமா?” என்று நோக்குதல் வேண்டும். ஆற்றல்-இலக்கியத்தை மதிப்பிடுவதற்கு,”கலை ய்ணர்ச்சியைத் திருப்தி செய்கிறதா? அழகுணர்ச்சி இருக்கிறதா? இன்பம் விளவிக்கிறதா?” என் நோக்குதல் வேண்டும்.
ஆனால் இருவகை இலக்கிய இயல்புகளும் ஒரு சேரக்கலந்து வரும் சிறந்த இலக்கியங்களுமுள்ளன. திருவள்ளுவரது திருக்குறள் இவ்வகைக் கலப்பு இலக்கியங்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாம்.
