வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

  1. சி. மணி

புதுக்கவிதை வரலாற்றில் சி. மணிக்கு தனியான ஒரு இடம் உண்டு.
1962ல் ‘நரகம்’ என்ற நெடுங்கவிதையை உருவாக்கி, தனது படைப்பாற்றலையும், சொல்லாட்சியையும், பழந்தமிழ் இலக்கிய ஈடுபாட்டையும், புதுமை வேட்கையையும், கற்பனைவளத்தையும், வாழ்க்கைச் சுற்றுப் புறத்தைக் கூர்ந்து நோக்கி அழுத்தமான முடிவுகளுக்கு வருகின்ற மனப் பக்குவத்தையும் நிரூபித்துக் காட்டிய சி.மணி மேலும் மேலும் பல புதுமைகளையும் சோதனைகளையும் வெற்றிகரமான சாதனைகளாக ஆக்கியிருக்கிறார். அவற்றில் முக்கியமான ஒரு சிலவற்றை அவ்வப்போது நான் குறிப்பிட்டுமிருக்கிறேன்.
1965ல் இவர் ‘வரும் போகும்’ என்ற நெடுங்கவிதையையும் 1966ல் ‘பச்சையம்’ எனும் நீண்ட கவிதையையும் படைத்துள்ளார்.
இவை போக சிறுசிறு கவிதைகளாக அநேகம் எழுதியிருக்கிறார். கற்பனை வளம், கருத்து நயம், வளமான சொல்லாட்சி, புதுமைப் பார்வை முதலியன சின்னஞ்சிறு கவிதைகளிலும் காணக்கிடக்கின்றன. லேசான பரிகாசமும் சில கவிதைகளில் தொனிக்கிறது.
நிலவைப் பற்றி இவர் எழுதிய கவிதை ஒன்றை முன்பு குறிப்பிட்டேன். ‘நிலவுப்பெண்’ என்ற இவர் இன்னொரு கவிதையும் எழுதியுள்ளார்.

ஊடாத பெண்ணொருத்தி உண்டென்றால்,
ஊடிப் புலந்து வெண்முகம் திரும்பி
கருங்குழல் புரளும் புறம் காட்டாது
கலைமுகக் காட்சி தந்தே கூடல்
தீ வளர்க்கும் பெண்ணொருத்தி உண்டென்றால்
நீயல்லவோ அப்பெண்!
(எழுத்து-76)

இன்றைய பாரியையும் அவனுடைய ஈகைத் திறத்தையும் நயமாக அறிமுகம் செய்கிறது ஒரு கவிதை.

ஈகை

பட்டமரம் போலச் சாய்ந்த சாலை
இருபுறத்திலும் நடைபாதை
நெடுகிலும் மனிதர்
மறைந்து வாழ
பயன்படும் வளைகள்
ஒன்றில் சாக்குத்திரை;
அதில் நீளும் கிழிசல்
வழியே அசைந்த–
கல்பட்டுக் கீறலுற்ற
ரசம் போன கண்ணாடி
முகக்கொடிக்கு
ஒரு கணத் தயக்கத்தேர்
ஈந்து சென்றான்
இன்றைய பாரி.
(எ-76)

‘சாதனை’ என்றொரு கவிதை.

வேதனை வண்ணான் இன்னொரு
சாதனை செய்தான்
வெளுத்து வாங்கி விட்டான்
கறுத்த மயிரை
(எ-80)

மூன்று வரிகளிலும் கவிதையை உருவாக்க முடியும் என்று முயன்று வெற்றி கண்டிருக்கிறார்.

1
பார்த்தேன் வெள்ளைப் பூவேலை
வார்த்த சோளி முதுகை
தெரிந்தது முகமே.
2
கம்பி என்று காலிரண்டும்
எம்பி வீழ்த்தவும் இளித்தது
கம்பி யதன் நிழல்.
3
மிரண்ட குதிரைத் தடதடப்பா
முரட்டுத் தரையதில் காற்றின்
சருகுக் குளம்பொலி.
(எ-94)

‘கொலைகாரர்கள்’ என்ற கவிதை மனித வர்க்கத்தில் காணப்படும் பல ரகக் கொலைகாரர்களையும் அறிமுகம் செய்கிறது. எல்லாக் காலத்தையும் சேர்ந்தவர்கள் இவர்கள்.

  1. புகழாசை பிடித்தாட்ட போர் மீது சென்று எண்ணற்றோரைக் கொன்று வெற்றி
    வீரன் எனப் பெயர் பெற்ற கொலைகாரன்.
  2. மதம், கடவுள் என்று பேசி நாலாயிரம் பேர்களைக் கழுவேற்றினவர்கள்.
  3. மூன்றாவதாக நாகரிக ரகம்.
    கள்ளிலே போதையில்லை.
    சதையெழில் தளும்பித் தளும்பி
    வழியும் கன்னியில் போதையில்லை;
    கண்முன் தெரியாமல் காற்றாகக்
    காரை ஓட்டுவதில் தான் என்ன போதை!
    மரம் வீடு வண்டி பாய்ந்தோட
    கையை ஹாரனில் அழுத்தி,
    கண்ணைப் பாதையில் வைத்து,
    பல்லை உதட்டில் தைத்து
    60, 70, 80, 95-ஐயோ!
    வண்டி நின்றது
    மனிதப் பிணம் நிறுத்த.
  4. கள்ள நோட்டுக்களை நல்ல நோட்டுக்கள் என்று தள்ளி விடுவோர்.
  5. உண்மையும் போலியும் ஒன்று தான்
    வாங்குவது என்னவென்று தெரியாமல்
    வாங்கும்போது எல்லாமே ஒன்றுதான்;
    கிடைத்தால் போதுமென்று தவிக்கிறார்கள்.

பழியேற்க உண்டு கடவுளும் டாக்டரும்,
நமக்கோ உண்டு லாபம்.
ஒன்றுக்கு நூறு. போ,
மருந்தைக் கடைக்கு அனுப்பு.

  1. கு.ப.ராவின் ‘ஆற்றாமை’ கதாநாயகி சாவித்ரி மாதிரி; தான் அனுபவிக்கக் கிட்டாத
    இன்பத்தை மற்றவர்கள் அனுபவிப்பதைப் பொறுக்காமல் குறுக்கிட்டு ஊறு செய்து திருப்தி
    காண்கிறவர்கள்.
  2. கொலைகாரனின் தத்துவம்!-
    இதுக்கென்ன பெரிய வாதம்?
    நான் கொலைகாரன் தான்.
    பல கொலைகளைச் செய்தவன்தான்
    அப்போது, கழுத்தை அறுத்த போது
    வெள்ளரிப் பழத்தை அறுப்பது போல் அறுத்தபோது
    நான் கடவுளாக இருந்தேன்
    நான் நினைத்தால் உயிர்
    கொடுக்கலாம், போக்கலாம்,
    நீங்கள் யாரும் கொலைகாரன் ஆனதில்லை;
    அதனால் நீங்கள் யாரும் கடவுள் ஆனதில்லை!
    (எ-95)

‘நரகம்’ என்ற கவிதை பற்றி முன்பே எழுதியிருக்கிறேன். மேலைநாட்டு நாகரிக வாழ்வை முற்றிலும் ஏற்றுக் கொள்ளாமலும் கீழ்நாட்டு வாழ்க்கை முறைகளை அடியோடு விட்டுவிட இயலாமலும் திண்டாடுகிற இந்த நாட்டின் இன்றையப் பெருநகரத்தில் வசிக்கிற ஒருவனின் உணர்ச்சிக் குழப்பங்களை அது வர்ணிக்கிறது. காம உணர்வைத் தூண்டி விடுகிற சூழ்நிலைகளும், சினிமா இலக்கியம் கடற்புறம் போன்றவைகளும்-அனுபவிக்க ஆசை இருந்தும் வசதிகள் இல்லாமல் ஏங்கித் தவிக்கிற ஒரு இளைஞனின் உள்ளத்தை, உணர்வுகளை, நினைப்பை எவ்வளவு தூரம் பாதிக்கின்றன என்பதை அக்கவிதை திறமையோடு சித்திரிக்கிறது.
‘வரும் போகும்’ எனும் நெடுங்கவிதையில் காணப்படுகிற சூழ்நிலையும் வாழ்க்கையும் அதேதான். ஆனால் கவிதைத் தலைவன் வேறு ரகம். அலுவலகத்தில் பணிபுரிந்து விட்டு வீடு சேரும் துடிப்புடன் வந்து, பஸ்ஸுக்காகக் காத்து நிற்கும் ஒருவன்-இளமை குன்றியவன் -காண்கிற காட்சிகளும், அவை அவனுள் எழுப்புகிற எண்ணங்களும் இதில் அழகாக விவரிக்கப்படுகின்றன.

காதடைக்கும் இரைச்சலுடன்
டவுன் பஸ்கள் வரும் போகும்

என்று ஆரம்பிக்கிறது கவிதை. இவ் இரு வரிகளும் ஊடே ஊடே வந்து கொண்டு ஒரு அழுத்தம் தரத் தவறவில்லை. நகரத்தின் பஸ் ஸ்டாப் வர்ணனை வருகிறது-

பணி புரிந்து மிகக் களைத்து
மனைக்கே வழிதேடி
வேர்வைத் துளி பல்லிளிக்க
சோர்வோடு உடல் வளைத்து
சுற்றி நிற்கும் ஒரு கும்பல்;
பூத்துவிட்ட விழி குறுக்கி
அத்திப்பூ டவுன் பஸ்ஸை
அலுத்து நோக்கும் பிறிதொன்று;
பழைய நட்பு பேச்சிலாளும்;
புதிய நட்பு வலைவீசும்
நட்பில்லா மனிதர்களோ
செவி தீட்டி நெருங்கி நிற்பர்;
செவிக்குணவு மட்டுமின்றி
விழிக்குணவும் இருக்குமெங்கும்

பலர் வாழ்வு பூராவும் ‘உழைத்துப் பெறுகின்ற வருவாயை ஒரு மூச்சில் விழுங்கிய கார்’ ‘நடுத்தரக் கார்’ டாக்ஸி ஆட்டோ அத்தனையும் வரும் போகும், ‘மனம்நீங்கி உருப்பெற்று உலவுகின்ற ஆசைகளாய்.’

இளைஞர், வஞ்சியர் அலங்காரத் தோற்றங்கள் பல ரகம். இவர்களிடையே நடக்கும் உணர்ச்சி நாடகங்கள்தான் எப்பேர்ப்பட்டவை?

கோடிவரை யோட்டிக் கள்ள விழி சுழற்றி
நோக்கி நேர்நோக்கி யெதிர் நோக்கி
நோக்கிப் பயனில்லை யெனத் தெளிந்து
தீட்டிய இதழ் விரித் தோச்சி
என்ன என்ன வாய்ச் சொற்கள்
வண்ண வண்ணச் சிரிப்பொலிகள்;
இளமை ‘போயிங்’ உணர்ச்சி வானில்
பறக்கும் வேளையில் கிளம்புமொலிகள்,
அவ்வேளையிலே வஞ்சியிடம்
எத்தனை மலர்ச்சி துள்ளல் துவளல்
எத்தனை உணர்ச்சியின் வானவில் திரட்சி
எத்தனை அருகில் வா எட்டி நில்;
வஞ்சி நோக்கி வெடிப்போரிடம்
எத்தனை கவர்ச்சி துள்ளல் ஆட்டம்
எத்தனை தலைமுறை வேட்டையின் வளர்ச்சி
எத்தனை சிக்கியதா தப்பிவிட்டதா

‘மலட்டு ஒத்திகையின் மலட்டு முன்னோட்டம்’ ஆன இது இளமையின் இனிமைக்கூத்தாய் சுவைக்கிறது. வந்து போகும் டவுன் பஸ்கள் ‘பொய்த்துப் பொய்த்து’ மேஜை மேல் பைலெனக் குவிக்கிறது கும்பலை!’ இடம் பிடிக்கும் வலிமையும் கயமையும் இளமையும் இல்லாமல் நிற்கின்ற கவிதை நாயகன் ‘வெளியிலே உருப்பெற்ற ஆசைஉலா’ கண்டு பொழுது போக்க வேண்டியதாகிறது.
இவன் மனம் குறுகுறுக்கிறது–

யார் சொன்னார் இந்தியா
பிற்பட்ட நாடென்று?
முத்தர வகுப்பென்று?
பிற்போக்கு நைலான் உடுத்துமா?
கடை நடுத்தரம் கார் வலம் வருமா?
இங்கே இப்போது
தெரிவதெல்லாம் மேல்தரம்,
வறுமை யேது, இங்கே
இருப்பதெல்லாம் பெருமைதான்
இன்பந் தான்; சிலோன் சீனா
பாக்கிஸ்தான் எதுவுமில்லை;
இருப்பவை
மவுன்ட்ரோடு வாய்ப்பேச்சு விழிவாள் வீச்சு
பற்சர மின்னல் நகை ஜலதரங்கம் தேர்வு
இழப்பு இளிப்பு இளமையின் இயல்பு.

இரைச்சலோடு டவுன் பஸ்கள் வரும்போகும் இடத்தில், காலம் ஓட கால்வலிக்கக் காத்துநிற்கும் வசதியற்றவனின் மனம் பெரிய இடங்களின் யுவர்களும் யுவதிகளும் பயில்கிற நடுத்தெரு நாகரிகத்தை மேலும் மேலும் கண்டுசிலிர்க்கிறது. எப்பவோ குடித்த ஒரு கப் காபி வயிற்றில் கரைந்து போன உணர்வு. கண்முன்னாலோ–

பசிக்காமல் உண்ண முடியாமல்
திணித்து முடித்து விட்டு
நீட்டிய தட்டில் எறிந்தபடி-
பிளேயர்ஸ் ஓன் பாக்கட்-ஓ
கீப் தி சேன்ஜ் வெயிட்டர்-
ஓயிலாக சிகரெட் பற்றவைத்து
சுருள் சுருளாய் புகை கிளப்பி,
தவளைக்கும் பாம்பின் வாய் விரிப்பாய்
அவள் வியப்பின் விழிவிப்பை
கடைக் கண்ணில் களித்து-
டிரைவர். நீ போ.
பட் பீ ரெடி அட் டென்,
காதடைக்கும் இரைச்சலுடன் டவுன் பஸ்கள் வருகின்றன. போகின்றன, இவனுக்கு இடம் இல்லை.

சற்றே
மிகச் சற்றே தயங்கிப் பின் தங்கி
இட்ட அடிக்கும் எடுத்த அடிக்கும்
இசைந்தே ஆடும் சடையழகை
நெளிந்தே குலையும் பின்னழகை
வெறித்து நோக்கி விருந்துண்டு,

கிறங்கிடும் மனம் அவள் தோளில் கைபோட்டு நடந்து, தொட்ட சுகம் மயக்க
இடித்தும் இணைந்தும் சென்று, கடற்கரையில் தனிமை இடம் தேடி இன்பம் சுவைத்து
வியக்கிறது.

நின்ற இடத்திலேயே நிற்கும் அவனுள் ஆசை மலர்கள் விரிகின்றன.

பஸ் வரும். போகும். ஒரு கப் காபி கரைந்து போயிற்றே என்ற தவிப்பு தலைதூக்குகிறது.

அவனது ‘சிவப்புச் சேலை அழகி’ சிறிது நின்று போக மாட்டாளா என்ற ஏக்கம். பயன்தான் இல்லை.

செல்வம் இளமை யின்மை
நடைபாதையில் காக்க வைக்கும்
கூட்டம் குறையும் வரை.
பொறுமை தீரும் வரை
மயக்கம் தள்ளும் நேரம்
சிவப்பழகி சற்று நிற்க
புத்துணர்ச்சி துளிர்க்க..

இவனுக்கு இடம் கிடைத்து விடுகிறது. ‘காசம் பிடித்து உலுக்குவதுபோல், துடிக்கின்ற பழுதுடல்’ பஸ் சூடேறிய காற்றோடு, டீசலின் பெரு நாற்றத்தோடு நகர்கிறது. அந்தச் சூழலிலும்,

பக்கத்து மங்கையின் உரசல்
பல்லற்ற வாய்க்குக் கரும்பு:
ஆசைக்கு அழிவேது?
செல்வம் மங்கை பெருமை இளமை
இவைகளுக்கு அழிவேது?
ஆயினும் இவன் நிலைமையோ?
முதுமை.
வறுமை,
சிறுமை.
நாய் வால் முதுகு.
சீவாத தலையாகக் கலைந்து
சிதறிக் கிடக்கும் தாள்கள்,-
இப்பிறவியில் விடிவில்லை.

பற்றாக்குறைச் சம்பளம், பொழுதுபோக்கு இன்றிக் கூடிப் பெற்ற ஒன்பது செல்வங்கள், நீங்காத ஆஸ்த்மா, நிரந்தரத் தொல்லைகள்; என்ன செய்வது? ‘கனவு-செல்வம் மங்கை இளமை’.
வசதியோடும் வளங்களோடும் வாழ ஆசைப்பட்டும் வாழ முடியாது தவிக்கும் ஒரு அப்பாவி மனிதனின் அனுபவ உணர்வுகளை விரிவாய், அழகாய் விவரிக்கும் ‘வரும்போகும்’ கவிதையிலும் சி. மணி நயமான புதுமையான உவமைகளைக் கையாண்டிருக்கும் திறமை ரசித்துப் பாராட்டத் தகுந்ததாகும்.
இவரது மற்றொரு நெடுங்கவிதையான ‘பச்சையம்’ நோக்கும் தொனியும் வேறு ரகமானது.
‘பாலுணர்ச்சி’ கூட்டி பச்சையாக எழுதுகிறார் கவிஞர் என்ற குற்றச்சாட்டுக்கு சி.மணி கூறும் எதிர்ப்புதான் ‘பச்சையம்’ என்ற நெடுங்கவிதை அவருடைய சீற்றம் உணர்ச்சி வேகத்தோடு கவிதை உருவம் பெற்றிருக்கிறது.
எழுத்திலே பாலுணர்ச்சி கூடாது, அது பச்சை என்று சொல்கிறவர்கள் யார்?

வாலை இளநீரை வாய்விழியால்
வாரிப் பருகும் இவர்கள்
இளமை கொடுக்கும் துணிவில்
இடித்துக் களிக்கும் இவர்கள்
வயது வழங்கிய வாய்ப்பில்
அமர்ந்து சிலிர்க்கும் இவர்கள்
இருவரைக் கட்டிலேற்ற ஊதி
முழக்கி ஊர் கூட்டும் இவர்கள்
இருளில் ரகசியமாய் வெட்கி
மருவி மயங்கும் இவர்கள்
பிறகு தவழ விட்டு ஊரெல்லாம்
பெருமை உரைக்கும் இவர்கள்
எல்லாம் இவர்கள்தான் – வேறு யார்
சொல்வார்கள்? கூடாதாம்; பச்சையம்!

எழுத்திலே பச்சை என்றால், எழுத்தாளன் மனசிலே பச்சை என்றாகுமா? நாடகத்தில் பாத்திரங்கள் பேச்செல்லாம் ஆசிரியர் பேச்சா? ‘நரகம் எனது நரகமா. நரகத் தலைவன் நரகமா என்றெல்லாம் கேட்டுவிட்டு, கவி சொல்கிறார்.

பலவகை ஆறுகள்
எனக்குள் இருக்கும் கடலில்
கலக்கும்; எழுபவை கடல் முகில்,
அருவிக்கு வெறுப்பில்லை
வருவோரைக் குளிப்பாட்டும்.
காற்றுக்குத் தடுப்பில்லை
காற்றெங்கும் புகுந்து விடும்,
நீயிழுத்த காற்றணுக்கள்,
நானிழுத்த காற்றணுக்கள்;
கதிரொளிக்கும் மறைப்பில்லை;
கதிரொளியில் பச்சையில்லை;
படைக்கின்றேன் பச்சையத்தால்.

‘நடப்பில் நிகழ்வது படைப்பில்’ இடம்பெறும்: ‘நடப்பில் நிகழ்வது’ என்ன?

பற்பசையில் முத்துச்சரம்
எண்ணெயில் தாழ்கூந்தல்
செருப்பில் மலரடி
உடையில் சிலையுரு
பௌடரில் பட்டழகு
சோப்பினில் நட்சத்திரம்
விற்றிடுவாள் விளம்பரத்தால்
முலைக்கோண வலைக்குமரி.

இப்படிப் பல நிகழ்ச்சிகள் சுவையாகச் சித்திரிக்கப்படுகின்றன. இலக்கியத்திலிருந்து பற்பல வரிகள் நினைவு கூரப்படுகின்றன. இவ்வாறு ‘இச்சைக்கு வழிபாடு’ எங்கும் எப்போதும் நடை பெறுவது சுட்டிக்காட்டப்படுகிறது. உடலில் உப்பு மாதிரி ‘கவர்ச்சிக் கலப்பு’ நிறைந்து காணப்படுகிறதே!

ஆற்றல் இழந்த கடவுளர்
சாலையில் காட்சிப் பொருளாகிப்
பெற்றனர் அழகியல் போற்றல்
பக்தி மலருக்குப் பதிலாய்.

அறிவியல் இக்கையில் பறித்துப்
பறித்ததை நீக்கி மகிழக்
குவித்தது அக்கையில் பல பொருள்;
முன்னேற்றம், நைலக்ஸ், சினிமா
இறைவனை விட்டபின், மற்றது
பிறப்பு மர்மம் ஆண் பெண்
பிணைப்பு மர்மம் ஒன்றுதான்,

நாயக நாயகி
பக்தி போனதும்
தலைவன் தலைவி
சித்தி வந்தது.
கோவில் போனதும்
கொட்டகை வந்தது;
கடவுள் போனதும்
நட்சத்திரம் வந்தது.
டும் டும் டும்.

‘காண்பது நோக்கைச் சார்ந்தது; உண்மை. ஆனால் நம்முள் ஐந்துக்கு மேலோடி வழிசெய்யும் ஆறுண்டு. எதுவும் தவறாது மூளையில் பதியும் என்பது உளவியல்’.
‘இயற்கைப் புணர்ச்சி வழங்கிய காலம்’ ஒன்று இருந்தது. குலத்திணைக் கூறிடா நிலத்திணைக் காலம் அது, உளமொன்றும் காதலர் உடலொன்றி வாழ்ந்தனர்.
பிறகு, நிலத்திணை மங்கி, குலத்திணை ஓங்க ‘செயற்கைப் புணர்ச்சி’ நினைப்பிலும் பாடலிலும் தலைகாட்டியது.

படிப்பும் பணியும்
கதவைத் திறக்கவும்
ஆடினர் பாவையர்
பாம்புக்குப் பால் வார்த்து

துலங்கல் மறந்து
தூண்டுதல் ஓம்பி,
வினையில் எதிர்வினை,
அறுவடை செய்கிறார்.

இந்தக் குழப்பம் எல்லாம் ஒருசில தலைமுறை நீடிக்கும். பிணியற்ற இனிப்பார்வை, குலமற்ற மனப்பார்வை அதற்குள் கிட்டிவிடும். என்னதான் சொன்னாலும், உயிரியல் தேவையிது.

கவிஞனும் நடிகன் தான், கவிஞன்
எழுத்தில் நடிப்பான்; எழுதிய
வரிக்கு நடிகன் குதிப்பான்
கனிந்த நடிகனே என்றாலும்
நடிப்ப தெல்லாம் நடிப்பா,
கலப்பிலா நடிப்பா? சற்றும்
இமைப்பிலா நடிப்பா? சற்றும்
இமைபப்பில்லா விழிப்புடன் நடிகன்
நடிக்கட்டுமே, ஒருமுறை கூடவா
உணர்வுடன் புணர்ந்து தன்னை
மறக்க மாட்டான்? மறந்து
கலக்கமாட்டான். நடிப்பு
மறந்து சொந்தம் கலப்பது
அறிவது அருமை கலப்பது
அரிதல்ல. புறவயப் பார்வை
அழிப்பதல்ல அகத்தை; தட்டி
பிழைப்பதில்லை கவிஞன் தன்நிழல்.

(சி. மணியின் கவிதைகள் ‘வரும் போகும்’,’ஒளிச்சேர்க்கை’ என்று இரண்டு தொகுப்புகளாக வெளி வந்துள்ளன.)