
கனவில் வரும் கப்பல் இன்று கரை ஒதுங்கும் என்று தோன்றியது. காலைமுதல் எப்படியாவது கண்டுவிட வேண்டும் என ஜன்னல் வழியாகக் கடலைப் பார்த்தபடி இருந்தார். பொழுது பெரும் சிரமத்துடன் கடந்து, ஒருவழியாக இரவு வந்தது. வானில் ஒரு நட்சத்திரம் கூட தென்படவில்லை. நிலா?. குடையை விரித்துக்கொண்டு கடலை நோக்கி கிளம்பினார்.
கடற்கரையில் குவிந்திருந்த கூட்டத்தினர் காற்றின் திசையில் திரும்பிக் கொண்டிருந்தனர். காற்றின் திசை எதுவென நககைய மழைத்துளிகள் சொல்லிக் கொண்டிருக்கையில், குடை மேல்நோக்கி விரிந்து மடங்கி கைநழுவியது. சற்றுமுன்பு நின்றிருந்த பெருந்திரளில் ஒருவர் கூட இல்லை. சிறு நண்டுகள் மணலுக்கு அடியில் மறைந்தன.தூரத்தில் மீன்பிடிக்கச் சென்ற படகுகள் கரை திரும்பிக்கொண்டிருந்தன. வழக்கம் போல் இன்றும் ஏமாற்றம். கப்பல் எங்கே?
மழை சப்தம் நடுவில் யாரோ கதவை தட்டுவது போலிருந்தது. ஒருகணம் தலையை உயர்த்திவிட்டு மீண்டும் படுத்தார். ஆமாம், உண்மைதான். தட்டுகிறார்கள். திடுக்கிட்டு கதவைத் திறந்தார். மழையில் நனைந்த ஆமணக்குச் செடி ஒன்று நின்றுக்கொண்டு புன்னகைத்தது. கம்புகளில் வெள்ளைநிற மாவு போன்று படிந்திருக்கும் இடங்களில் நீர் நனைந்து சொட்டியது. நீண்ட காம்புகளுடைய நீளமான இலையில் நீர்த்துளிகள் மின்னியது.
“என்னை நினைவிருக்கிறதா? ஒருநாள் குடிசையின்முன் வெயிலில் நீங்கள் தவித்துக்கொண்டிருந்த போது, நிழல்தர வந்திருந்தேன். அந்த கொடூர வெக்கையில் மரணத்தை விரும்பியதாகக் கூட என்னிடம் சொன்னீர்கள். கண்டிப்பாக என்னை உங்களால் மறக்க முடியாது என்று தெரியும். என்னோடு இருந்த ஒருநாள்தான் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்த நாள் என்று நம்புகிறேன்.” கண் இமைத்து ஆமோதித்தார். “உள்ளே வரலாமா?’
வீட்டைச் சுற்றிப் பார்த்தது. “அடேங்கப்பா! தனியாக இத்தனை பெரிய பங்களாவில் வசிக்கிறீர்களா! நான் இன்றும் நீங்கள் அமைத்த அதே குடிசையின் அருகில்தான் வசிக்கிறேன்.” வயதானவர் திடுக்கிட்டார். உடனே ஆமணக்குச் செடி, “நீங்கள் யோசிப்பது புரிகிறது, நான்தான் ஒரே நாளில் தோன்றி அந்த படுபாவி பூச்சியினால் அரிக்கப்பட்டு மடிந்துவிட்டேன் என்றுதானே? தெரியும், அந்த சம்பவத்தினால் மிகவும் கலங்கிப் போனீர்கள். என்னை அந்த நிலைமைக்கு ஆளாக்கிய பூச்சியையும், வெயிலையும் சபித்தீர்கள்.
அடுத்த மழையின் போது மறுபிறவி எடுத்தேன். அதற்குள் நீங்கள் என்னைவிட்டு சென்றுவிட்டீர்கள். நீங்கள் தனிமையில் மிகப்பெரும்துன்பத்தில் இருப்பதாக கனவு வந்தது. ஊர் மக்களுக்கு பல நன்மைகள் செய்துக் குளிர்விக்கிறேன், உங்களை குளிர்விக்க மாட்டேனா?”
கிளையைப் பற்றியபடி பேசத் தொடங்கினார். “உண்மைதான். நான் சபித்த பூச்சிதான் என்னை பழிவாங்கிவிட்டது. ஒருநாள் நான் பிரார்த்தனையில் இருந்தபோது அந்தப் பூச்சி அறைக்குள் செல்போனில் ஓர் இளஞ் சூரியனுடன் மெய்நிகர் சல்லாபத்தில் முனகுவது கேட்டது. கதவைத் திறந்தபோது நான் கண்ட காட்சி. ஐயோ, எப்படி சொல்வேன்? முழங்காலில் நின்று அந்நியப் பாஷைகளில் கைகளைத் தூக்கி சத்தமாக மீண்டும் சபித்தேன். கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை. விழுந்துவிழுந்து சிரித்துக்கொண்டே லீலைகளை தொடர்ந்தார்கள். உறைந்து தின்றேன். தூக்கம் இல்லை, கனவுகள் மட்டும் தோன்றின.
நான் ஒரு கப்பலைக் காண வேண்டும். அந்தக் கப்பலில் ஏதோ ஓன்று சம்பவிக்க போகிறது. என் முகத்தைப் பார், முகமூடி போன்று என் கண்களில் கருவளையம் சூழ்ந்துள்ளது. அன்று இரவு முழுவதும் அரங்காமல், விடியற்காலை வரைக் காத்திருந்து காவல் அதிகாரி முன்னிலையில் அந்த இளஞ் சூரியனுடன் பஞ்சாயத்து நடந்தது.
நான் இப்படியொரு சூழலில் தலைகுனிந்து நின்றது முனகலை விட மேலான வலியைத் தந்தது. உயர்ந்த மதுவை அதிகாரிக்கு அளித்து சூரியனை காப்பாற்றி அழைத்துச் சென்றார்கள்.
எல்லாரும் கைவிட்டார்கள், இனி யாரிடம் செல்வேன்? உயிரோடு இருப்பதைவிட சாவது மேல். உன் விதையை எனக்கு தருவாயா ?” ஆமணக்கு செடியின் வேரில் விழுந்து கண்ணீர் சிந்தினார்.
கடவுளோடு எங்கள் இனத்தையும் வழிபடுகிறார்கள். என் வேரில் விழுவதை நான் விரும்பவில்லை” என்று ஆமணக்குச் செடி சற்று தற்பெருமையுடன், “அமருங்கள். நீங்கள் சபித்த ஜீவனுடன் வாழ்க்கை என்றாகி விட்டது. பூச்சிக்கு முக்கியத்துவம் தராமல் பிரார்த்தனையே கதி என்று கிடந்தால் முனகல் சத்தம் கேட்கத்தானே செய்யும். சரி, காலம் கடந்துவிட்டது. இப்படி தனிமைச் சிறையில் அகப்பட்டு சுயதண்டனை அளிப்பது சரியா? இனி யார் உங்களை மீட்பது? காதில் என்ன? இரத்தக்காயம் போன்று உள்ளதே. வயதான காலத்தில் உதவிக்கு ஆள் வைத்துக்கொள்ளலாமே. நகங்கள் வேறு நீண்டு வளர்ந்துள்ளது” ஆமணக்கு செடியின் இலைகள் காற்றில் ஆடியது.
தூரத்தில் ஒலிக்கும் ஆலயத்தின் மணியோசை இரவின் நேரத்தை சொன்னது. குவளையில் நீரை நிரப்பி, பெட்டியில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை விழுங்கிவிட்டு பேசினார். “மனிதர்கள் நடமாட்டம் பயமாக உள்ளது. வெளியே வர பிடிக்கவில்லை. இது என்ன நோய் என்று தெரியவில்லை. கண்டிப்பாக பெயர் வைத்திருப்பார்கள். பல நோய்களுக்கு தவறாமல் மருத்துவர் மருந்து தருகிறார். இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் நீயே கூட எனக்கு சுமையாகலாம்.”
“உயிரைக் கூட பொருட்படுத்தாமல் பாலை நிலத்தில் குடிசைப் போட்டு மக்களை ஆன்மீக நெறிப்படுத்த கிளம்பிய நீங்களா இப்படி? இதற்கெல்லாம் யார் காரணம் ? உங்கள் பக்கமும் தவறு உண்டு. உங்கள் மனநிலை எனக்கு புரியாமல் இல்லை. கவலைப்படாதீர்கள், எல்லாம் சரியாகும். நீங்கள் செய்த புண்ணியங்கள் மீட்சி தரும். உங்கள் கால்கள் சரியில்லை. சிறுத்துப் போயுள்ளது. உங்கள் எடையை சுமப்பதற்கான வலுவில்லை. கட்டில் அருகில் ஊன்றி நடக்கும் குச்சி இருக்கிறது. அதைத்தானே சொல்ல வருகிறீர்கள் ? கண்டிப்பாக இது வாதம்தான். முற்றி விட்டது. இனி சிரமம்தான். பரவாயில்லை தாக்குப் பிடிக்கலாம். என்னிடமிருந்து இலைகள்
பறித்துக்கொள்ளுங்கள். உபயோகப்படும்.” பெரிய இலைகளாக இரண்டை பறித்துக்கொண்டார். ஈரம் வடிந்திருந்த ஆமணக்குச் செடி மீண்டும் மழையில் நனைந்துக்கொண்டு தன் குடிசையின் அருகாமைக்கு திரும்பியது.
நள்ளிரவில் மழை வேகமெடுத்தது. வேகம் உண்மைதான். வீட்டிற்குள் தண்ணீர் புகும் அளவிற்கு பெரிய வேகம் இல்லை. சுதவிடுக்கின் வழியாக நீர் சலனமில்லாமல் புகுந்தது. ஒன்றும் புரியவில்லை. முட்டியளவு நீர். இருபது வினாடிகள் இடைவெளி விட்டு கதவை ஏதோ பாறை முட்டுவது போல் இருந்தது. சுதவை திறந்தபோது பேரதிர்ச்சி. இல்லை, ஒருவேளை அப்படிக் காட்டிக்கொண்டார். பெரிய மீன் ஒன்று வீட்டிற்குள் புகுந்தது. நீரைத் தொட்டு நக்கிப் பார்த்தார். உப்புக் கரித்தது. “இதென்ன கொடுமை! என்னை மறந்து விட்டீர்களா? ம்ம்.. எனக்கும்தான் உங்களைப் போன்று வயதாகி விட்டது.”
“இல்லை.. உன்னை எப்படி மறக்க முடியும்? சமீபத்தில் கூட நினைத்துப் பார்த்தேன். என் வாழ்வில் சொர்க்கமாய் உணர்ந்த மூன்று தினங்கள் உன் வயிற்றில் இருந்த நாட்கள்தான். அன்று வயிற்றில் அகப்படுவதற்கு சில காரணங்கள் இருந்தது. சரியாக நினைவில்லை, எனது பயணம் தடைப்பட்டதாக கூட உணர்ந்திருப்பேன். கடவுள் மீது கூட கோபப்பட்டேன். அது போகட்டும், இந்த சந்திப்பை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை” என்றார். அறையில் நீர்ப்பெருக்கு இடுப்பளவை எட்டியிருந்தது. கைத்தூண், தொப்பி, மூக்குக் கண்ணாடி, புத்தகங்கள்,துணிமணி, #ட்டில் இதரப்பொருட்கள் நீரில் மிதந்து வெளியேறின. பெட்டியில் இருந்த மாத்திரைகள் மட்டும் கரைந்தன.
“நான் பசிக்காக உங்களை விழுங்கவில்லை. அதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என அறிவேன். அன்று எனக்கு இடப்பட்ட கட்டளை. அதன் நன்மை தீமை குறித்து நான் அறியேன். நான் ஒரு சேவகன். என் வயிற்றில் இருந்தபோதுதான் நிம்மதியாக இருந்தாய் என்று சொன்னீர்கள். அப்படியெனில் தற்போது?. எல்லாம் தெரியும் எனக்கு. ஆமாம், நான் உங்களை தினமும் பார்க்கிறேன். என்னைதான் நீங்கள் பார்ப்பதில்லை. தினமும் கடலுக்கு வந்து செல்வதை ஆழத்தில் இருந்தாலும் என்னால் உணர முடியும். சொல்லுங்கள் நான் உங்களுக்கு உதவ வேண்டுமா? ஏன் தினமும் இரவில் கடலுக்கு வருகிறீர்கள். இன்று காற்றின் அளவு அதிகம். மழை இன்னும் நிற்கவில்லை. ஆனாலும் வந்தீர்கள். அதனால்தான் உங்களை தேடிவரக் காரணம்.” இப்போது நீரளவு வயிற்றுக்கு மேல்.
“ஆழ்ந்து தூங்கி பல வருடங்கள் ஆகிறது. என் தூக்கத்தை கெடுப்பது எது என சொன்னால் சிரிப்பீர்கள். வயதானவன் நரம்புக் கோளாறினால் உளறுவதாக கூறலாம். ஆனால், அது உண்மை இல்லை. என் தூக்கமின்மைக்கு காரணம் ஒரு கப்பல். இன்றைய கப்பல் அல்ல அது. மரத்தால் செய்யப்பட்ட ஒரு பழைய கப்பல்.
கருப்பாக இருக்கும். பேய் மாதிரி தூரத்தில் வருகிறது. எனக்கு அதை நேரில் காண வேண்டும். எனக்கும் அந்த கப்பலுக்கும் ஏதோ தொடர்புள்ளது. என்ன என்றுதான் தெரியவில்லை. நான் உறங்கவோ, சாகவோ வேண்டுமானால் அந்த கப்பலைக் கண்டால் மட்டுமே முடியும். எனக்கு அந்தக் கப்பல் குறித்து வேறு அடையாளங்கள் எதுவும் சொல்ல முடியவில்லை. சில அடையாளங்களை, மனிதர்களைக் காண்கிறேன். உறக்கத்திலிருந்து கண்விழித்தபோது அனைத்தும் நினைவில் இருந்து அழிந்துவிடுகிறது. ஒரு பவுர்ணமி நாள் கண்ட கனவின் போது அந்தக் கப்பலின் அடிப்பகுதியில் ‘1073′ என்ற எண் இருந்தது”.
ஆச்சரியத்துடன் “நான் அந்த கப்பலை பலமுறை கண்டுள்ளேன். ‘1073′ எண் நினைவில் உள்ளது. கருப்புநிறக் கப்பல். என் கணிப்பு சரியானால் இன்னும் மூன்று தினங்களில் அந்த கப்பல் நான் வாழும் பகுதியைக் கடக்கும்”. துவண்டிருந்தவரின் முகத்தில் உற்சாகம் தென்பட்டது. ஆனால், வாய், மூக்கைக் கடந்து நீர் * கண்களை நெருங்கிக்கொண்டிருந்தது. இதுதான் சரியான நேரம், நீந்திச்சென்று அவரை விழுங்கத் தொடங்கியது. உண்மையில் பெரிய மீன் தான். இன்னும் இரண்டு பெரிய மனிதர்களைக் கூட துணைக்கு விழுங்கலாம். பல வருடங்களாக தேங்கிக் கிடந்த குப்பைகளுடன் இரு ஆமணக்கு இலைகளும் நீரில் வெளியேறின.
கப்பலைத் தேடிச் செல்லும் பயணம் தொடங்கியது. கடந்த முறை இருந்தது போல் அல்ல. வயிற்றினுள் பெரும் நிசப்தம்.
பெரிய விடுதலை. அசைவு மட்டும் இருந்தது. எப்போதாவது எதிரில் வரும் மீன்களால் நீரின் சலசலப்பு. இருட்டில் உணரும் அசைவு நிகழ்காலத்தை மட்டும் உணர செய்தது. சில நேரங்களில் நீரோட்டத்தையும். கடந்தமுறை அலைகளின் அழுத்தம் தெரிந்தது. இம்முறை இல்லை. கண்களை மூடுகையில் வெளிச்சம். திறந்தால் இருட்டு. மீண்டும் மூடினால் ஆழியின் கடற்பாசி. பச்சை அடர்ந்து வெளிச்சமாகி வெள்ளியாகி இருட்டானது.
மூன்று நாட்களுக்கு பின் கப்பல் வருவது தெரிந்தது. கப்பல் வரும் திசையில் மீனின் பயணம். கப்பலைச் சுற்றி நிறைய சரக்குப் பொட்டலங்கள் மிதந்து கொண்டிருந்தது. வலையை வீசி ஒவ்வொன்றாக கப்பலில் ஏற்றிக்கொண்டிருந்தனர். கப்பலுக்கு அருகாமையில் மீன் அவரைக் கக்கியது. மிதக்கும் சரக்குப் பெட்டிகளுக்காக விரிக்கப்பட்ட வலையில் சிக்கிக் கொண்டார். பெரிய மீன் என்று நினைத்த மாலுமிகள் வலையில் இழுத்து கப்பலில் போட்டனர். வலைக்குள் இருக்கும்போது அது மீன் இல்லை மனிதன் என்பதை உணர்ந்தனர். அவர்களுக்குள் சலசலப்பு நிலவியது.
வலைக்குள் சுருண்டு கிடந்தார். முகம் தெரியவில்லை. வலையை அசுற்றிப் பார்த்தனர். அவரைக் கண்டபோது ஒரு நிமிடம் திடுக்கிட்டனர். எல்லோரும் பயங்கரமாகக் கத்தத் தொடங்கினர். அங்கிருந்த மாலுமி ஒருவன் எக்காளத்தை ஊதினான். மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். இத்தனைக் காலம் இந்த தருணத்திற்குதானே காத்திருந்தோம் என மண்டியிட்டு கடவுளுக்கு நன்றி கூறினர். பார்ப்பதற்கு காடுகளில் வசிக்கும் வேட்டை மனிதர்கள் போன்றே காணப்பட்டனர். எந்த நாட்டு பூர்வக்குடிகள் என்றுத் தெரியவில்லை. நாடோடிகளாக சுற்றுகின்றனர். நீண்ட முடி, தாடியுடன் காணப்பட்டனர். பார்ப்பதற்கு பெரிய பாய்மரக் கப்பல், அனைத்தும் உளுத்த மரங்கள் போல் தெரிந்தன.
ஒருவன் கத்தினான், “ஐயா.. உங்களால்தான் நாங்கள் உயிரோடு இருக்கிறோம்”
வயதானவருக்கு கனவின் மீதி இருந்த கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக விடைகள் கிடைக்கத் தொடங்கியது.
மற்றொருவன் அருகே சென்று, “முன்பு ஒருநாள் எங்கள் கப்பலில் ஒரு தேசத்திற்காக ஆன்மீகப் பயணம் மேற்கொண்டீர்கள் அல்லவா? அதற்கான பயணக்கூலியை நாங்கள் பெற்றுக்கொண்டோம். முதல் நாள் இனிதாக கடந்தது. இரண்டாம் நாள் பெரும் புயல் தாக்கியது. கொஞ்சம் தாமதித்திருந்தால் கூட கப்பல் உடைந்து நாங்கள் எல்லாரும் கடலுக்குள் சென்றிருப்போம். அது மிகவும் ஆபத்தான உயிர்க்கொல்லி மீன்கள் நிறைந்த இடம். கடல் சீற்றத்திற்கு காரணம் நீங்கள்தான் என்று நம்பியது விதி. ஆம், உங்களுக்குத் தீமை செய்தோம். அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று கடவுளிடம் மன்றாடினோம். எங்களைக் காப்பாற்ற உங்கள் உயிரை பணையம் வைத்தீர்கள். உங்களிடம் போய் கூலி பெறலாமா? குற்றவுணர்வில் இருந்தோம்.
இரண்டாவது நாளே எங்களை விட்டு விடைபெற்றுவிட்டீர்கள்? உங்களை கடலில் தூக்கிப்போட்ட அடுத்த நிமிடம் சீற்றம் தணிந்தது. உங்களை மரணம் நெருங்குவது கடினம் என உள்ளுணர்வு சொல்லியது. எங்கள் நம்பிக்கை பொய் ஆகவில்லை. மகிழ்ச்சி போதகரே! நீங்கள் இரவில் கண்விழித்து பிரார்த்தனை செய்த இடத்தை புனித இடமாகவே வைத்துள்ளோம். அங்கு நாங்கள் அசுத்தம் செய்வதில்லை. யாரையும் நெருங்க விடுவதில்லை.” அனைவர் கைகளும் கும்பிட்டபடியே இருந்தது. “உங்களிடம் வாங்கிய கூலியைக் கூட செலவு செய்யவில்லை.” என்று பணம் இருந்த பையை அவரிடம் நீட்டினான்.
இன்னொருவன் கூட கூறினான். “நீங்கள் நித்திரை செய்த இடத்தையும் தூய்மையாக வைத்துள்ளோம். களைப்பாக இருப்பீர்கள். அங்கு சென்று ஒய்வு எடுக்கலாம்.. மீன் உணவு சிறிது நேரத்தில் தயாராகி விடும்” என்றான் புன்னகையுடன்.
கப்பலில் நித்திரை செய்த இடத்திற்கு கூட்டிச் சென்றார்கள். அவருக்கு பாதுகாவலாக யார் இருப்பது என்று அவர்களுக்குள் போட்டி வந்தது. என்னுடைய வலையில் சிக்கியதால் நான்தான் பாதுகாவலன் என்று ஒருவன் அடம்பிடித்தான். உனக்கு அவர் என்று தெரிந்தா காப்பாற்றினாய்? அவர்களுக்கிடையே வாக்குவாதம் நடந்தது. வழக்கம்போல் சீட்டுப் போட்டுப் பார்த்தார்கள்.
வலையை வீசிய மனிதனே பாதுகாவலர் ஆனான். அவன் முகத்தில் பெருமிதம். மற்றவர்கள் அங்கிருந்து முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தார்கள்.
சற்றுமுன்பு வரை அதிகமாக இருந்த கடல் கொந்தளிப்பு அடங்கியிருந்தது. ஒருசிலர் மீன் உணவை எடுப்பதற்காக சென்றிருந்தனர். கிழித்து மலர்த்திப் போடப்பட்டிருந்த மீனை நெருப்பு வைத்து சுட்டுக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் கடலில் குடுத்து சரக்கை மீட்கத் தொடங்கினர். நித்திரை அறைக்குள் சென்றார். காவலாளி மட்டும் வெயிலைப் பொருட்படுத்தாமல் நின்றுக்கொண்டிருந்தான். நித்திரை அறையின் நடுவே ஒரு பலகை வைக்கப்பட்டிருந்தது. அதன் நடுவில் உருகிக் கொண்டிருக்கும் மெழுகுவர்த்தி எரிந்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த நாற்காலியில்முன் அமர்ந்தார். மெழுகுவர்த்தியில் இருந்து அவர் பக்கமாக ஒரு பரிசுத்த வேதாகமம் திறந்திருந்தது. எதிர்பக்கம் தலை வெட்டப்பட்ட நிலையில் ஆமணக்குச் செடியை அரித்த பூச்சி. தலையில் கண்கள் திறந்திருந்தது. ஒரு சொட்டு கண்ணீர் பரிசுத்த வேதாகமப் பக்க எண்ணின் மீது விழுந்தது. ஒரு கணம் பார்த்தபின், மூடி வைத்தார். தலையைக் அவிழ்த்து அமர்ந்திருந்தார். மேகம் எங்கே போனது என சூரியன் தவித்துக்கொண்டிருந்தது.
நீலம், மார்ச் 2023
ஐசக் பேசில் எமரால்ட் /ஓர் இரவின் மினிமலிஸ விளைவு – விருட்சம் நாளிதழ்

One Comment on “ஐசக் பேசில் எமரால்ட் |/கப்பல் ‘1073’”
Comments are closed.