ஐசக் பேசில் எமரால்ட்/மிகக் குறைந்த ஒளியில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்

ராப்பாடியின் நெற்பாட்டு எங்கோ தொலைவில் ஒலித்துக்கொண்டிருந்தது. கூடவே அருவியின் சலசலப்பும். சற்றியெங்கும் நெற்கதிர்கள். அதற்கப்பால் மலை, சலசலக்கும் அருவியின் குரல். நடுவில் ஒற்றை வீடு. ஓவியர் வயல் மார்த்தாண்டன் ஜன்னலைத் திறந்து பார்த்தபோது நடனம் ஆடிக்கொண்டிருந்தது. கருமேகங்கள். ஒரு நட்சத்திரம் இல்லை. தொலைவில் மலைக்கு அப்பால் மின்னல் கீற்று. முலையில் எரிந்துக்கொண்டிருந்த சிம்னி விளக்குகளின் திரியை சற்று உயர்த்தினார். சுவரில் தூங்கிக்கொண்டிருந்த ஓவியங்கள் விழித்துக்கொண்டன. அலமாரியைத் திறந்து பழைய கேமராவை மீண்டும் ஒருமுறை துடைத்துப் பத்திரப்படுத்திக் கொண்டார். விளக்குகள், பழைய நாணயங்கள் போட்டு வைத்திருந்த கலயம் என கண்களில் சுழன்று சிம்மினியில் வந்து சேர்ந்தது. கண்கள் கூசவில்லை. ஆனாலும் கண்ணீர் துளிகள்.
குடங்களையும், கட்டிலையும் ஓர் ஓரமாக நகர்த்திவிட்டு ஈர்த்தினால் பெருக்கி பாய் போன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்த கெட்டியான நீண்ட தாளை தரையில் விரித்தார். சட்டைப் பொத்தான்களை அவிழ்த்துவிட்டு பீடியைப் பற்ற வைத்தார். சாயங்களும் தூரிகைகளும் சுற்றியிருந்தது. புகை வரையும் ஓவியத்தை பார்த்துக் கொண்டிருந்தவர் சரிந்து படுத்துக்கொண்டேதூரிகையை எடுத்து வரையத் தொடங்கினார். அது ஒரு பேரழகியின் ஓவியம். கடைசியாக ஆடை வரையலாம் என்று நினைத்தவர், அவசியம் இல்லையென உணர்ந்தார். இருப்பையே மறந்த இச்சை. காகிதம் அவரைக் கடித்துத் தின்னத் தொடங்கியது. உயிரைக் காணவில்லை என்று தேடத் தொடங்கினார். தான் வரைந்த ஓவியத்திடம் தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்தார்.
பதற்றம் குறைய நேரம் எடுத்தது. ஆடைதான் காரணமா? சரிந்து படுத்து சாராயத்தை வெண்கலக் குவளையில் ஊற்றி அவளருகே வைத்துவிட்டு, உள்ளிழுத்த புகை ஓவியத்தின் வாயிலிருந்து வெளிவந்தது. முத்தமிட்டார். காதணியைத் தட்டி விளையாடி காதோரம் விழுந்த முடியை விலக்கினார். கண்கள் பேசுவது புரிந்தது. துடைத்து வைத்திருந்த கேமராவை மீண்டும் எடுத்துக்கொண்டார். சிம்னி விளக்குகளில் எண்ணெயை ஊற்றி திரியை உயர்த்தி மிக அதிக ஒளியில் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இப்போது அதை ஒரு பட்டுத்துணியால் மூடி பத்திரப்படுத்திக்கொண்டார். எறும்பு ஒன்று கை வழியாக ஏறி தோளில் ஊர்ந்து செல்வது போல் வரையத் தொடங்கும்போது அனிச்சையாக கண்கள் மூடின. திறந்தபோது தலையில் உறைந்திருந்த இரத்தம் கண்களின் வழியாக பசை போல் இறங்கிக்கொண்டிருந்தது.
எல்லாம் கழுத்தில் வரையப்பட்டிருக்கும் இந்த பாசி மாலையால் வந்தது. மந்திரவாதம் செய்யப்பட்ட ஏதோ ஒரு முத்து இந்த மாலையில் உள்ளது, அதனைக் கண்டுபிடிக்க வேண்டும். கழுத்தில் அணிந்திருந்த பாசிமாலையை ஒரே இழு. முத்துக்கள் சிதறின. “உனக்கு வலிக்கவில்லை தானே? பார்.. நெற்றியில் இரத்தம்” ஒவ்வொரு முத்துகளாய் சேமிக்கத் துவங்கினார். ஒரு முத்தை எடுத்துக் குறிபார்த்து அவள்மீது எறிந்தார். முதலில் மெதுவாய். நிதானமாக இருப்பதாக உள்ளுக்குள் பெருமிதம், சலனமில்லை. வேகம் எடுத்தது. முதலில் விழுந்து உருளும் முத்தை இரண்டாவது விழும் முத்து வேகமாகத் தாக்கி நகர்தல் தொலைவை அதிகப்படுத்தியது. ஒரு குன்னி முத்தை எடுத்தார். இருபக்கமும் சிறு துளைகள் போடப்பட்டிருந்தது. அதன் வழியாகத் தெரிந்த வெளிச்சம்வழி அவளின் கருவிழிகள் தெரிந்தது.
நீராகாரத்தில் பசி அடங்கவில்லை. அரிசிப் பானையை திறந்தபோது விரலால் வரைந்தது போல் நான்கைந்து சுழல், அரிசியை நீரில் ஊறவைத்தபோது மெதுவாக நடக்கும் நான்கு கரப்பான்கள் வெளியேறின. ஓ.. இவர்கள் வேலை தானா? பல அரிசியின் ஓரங்கள் கடிக்கப்பட்டிருந்ததால் கரப்பானின் வயிறும் உப்பியிருந்தது. ஆங்காங்கே இருந்த உமி, முழு நெல்லில் சேதாரம் இல்லை. வெளியேறிய மூன்று கரப்பான்கள் சுவர் ஓரம் இருந்த பொந்துக்குள் புகுந்தது. ஒற்றைக் கரப்பானின் ஊர்தல் எண் எட்டின் வடிவத்திற்குள் திரும்பத் திரும்ப நிகழ்ந்தது. அடங்கவில்லை. சிதறிக் கிடந்த குன்னி முத்துவின் துவாரத்திற்குள் புக முயற்சி செய்தது. அரிசிப் பானையில் இருந்து வராமல் பொந்திற்குள் இருந்து வந்திருந்தால் நடந்திருக்கும். முயற்சியைக் கைவிடவில்லை. நேரம் இருக்கிறது. நடந்தே தீரும்.
அழகியின் அருகே படுத்துக்கொண்டு கூரையின் மேலிருந்து விழுந்த ஒற்றைத் துளியை உணர்ந்தபோது ஒரு பெண்ணின் குரல். இல்லை, தேம்பி அழும் சத்தம். கதவிடுக்கு வழியாக வெளியே பார்த்தபோது, ஓர் இளம் பெண்ணின் உருவமும் ஆணின் உருவமும் தெரிந்தது. முகமெல்லாம் வியர்க்கத் தொடங்கிவிட்டது. நீர் அருந்திவிட்டு அலமாரியில் இருந்த கேமராவை சட்டையைக் கொண்டு துடைத்து மீண்டும் உள்ளே வைத்தார். தீக்குச்சியை உரசினார். பீடி பற்றிக்கொண்டது. பேரழகி ஆடையணிந்து கொண்டாள். முகம், கால் தவிர ஒரு பாகம் தெரியவில்லை. முடித்தபோது அழுகைச் சத்தம் மறைந்துப் போனது.
மீண்டும் கதவிடுக்கு வழியாகப் பார்த்தபோது அதே இரு உருவங்கள். சிம்னியை ஏந்தியபடி கதவைத் திறந்துகொண்டு சுத்தியபடி “யாரு நீங்க? என்ன வேணும்?” என்றார்.
அந்தப் பெண் ஒரு கடிதத்தை நீட்டினாள். “நாங்க வெளியூர், எங்களுக்கு குரல் உள்ளது. பேச விருப்பம் இல்லை. இப்படி ஓர் அசை உருவாகும் என நாங்கள் நினைக்கவில்லை. நாங்களும் மனிதர்கள்தான். மனிதர்களோடுதான் வாழ்கிறோம். நல்ல வசதியாக இருக்கிறோம். நினைத்ததை வாங்க முடிகிறது. ஒரே ஒரு ஆசையை மட்டும் நிறைவேற்ற முடியவில்லை. எங்கள் வாழ்வில் பெரிய ஏக்கம் இது. இன்று பகலில் உங்கள் ஊருக்கு வந்தோம். அப்போது உங்களிடம் ஒரு கேமரா இருப்பதாக ஒரு சிறுவன் மூலம் அறிந்துக் கொண்டோம். அதைக்கொண்டு எங்களை ஒரு புகைப்படம் எடுத்து தர வேண்டும். அந்த புகைப்படத்தைக் கூட நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். சேர்ந்து நிற்கும்போது அந்த
வெளிச்சம் எங்கள் மீது படவேண்டும். இதுவே எங்கள் நீண்ட நாள் ஆசை”
கடிதத்தை சரியாகத்தான் வாசித்தேனா என்பதுபோல், மீண்டும் யோசித்துவிட்டு தலையைக் குனிந்த ஓவியர்,
“இங்கையே நில்லுங்க.. இதோ வந்திடுறேன்” என்று வீட்டை நோக்கி ஓடினார்.
துளையில் நுழையும் முயற்சி நடந்துகொண்டிருந்தது. கொதித்துக் கொண்டிருந்த உலையில் போடத் தோன்றியது. நான் ஓர் ஓவியன் அப்படிச் செய்யக்கூடாது என அவசர அவசரமாக அலமாரியில் இருந்து கேமராவை எடுத்து மீண்டும் ஒருமுறை துடைத்து சுத்தம் செய்தார்.பேரழகியின் காலில் ஒரு முத்தம் தந்துவிட்டு அவர்களிடம் வந்தார். இருவரும் கையைக் கோர்த்துக்கொண்டு நின்றனர்.
“நான் ஒரு ஓவியன், அதோ தெரிகிறதே அதுதான் என் வீடு. இதவிட கொஞ்சம் செலவாகும்.. வரைந்தே தந்துவிடுகிறேன். வெளிச்சம் குறைவா இருக்கு”
நீடித்த மௌனம், இன்னும் இறுக்கமாகக் கைகளை பிடித்துக்கொண்டனர். விருப்பமில்லை என்பதை உணர்ந்த ஓவியர் கேமராவை வைத்து படம் எடுக்க ஆரம்பித்தார். இருட்டில் அவர்கள் முகம் தெரியவில்லை. நிழலில் அவள் வயது தெரிந்தது. ஃப்ளாஷ் வெளிச்சம் ஒரு நொடி அவர்கள் முகத்தைக் காட்டியது. ஓவியர் முகம் உணர்வற்று இருந்தது. முகவரியையும் பணத்தையும் தந்துவிட்டு ஓடிச்சென்று புதருக்குள் மறைந்தனர்.
திரும்பி வரும்போது உடல் நடுங்கத் தொடங்கியது. ஒரு ஃபோட்டோ எடுப்பதற்காக இத்தனை மைல்கள் தாண்டி வருவதற்கான அவசியம் என்ன? அதுவும் நள்ளிரவில் மனிதர்கள் வசிக்காத இந்த வெளியில் ஒரு கலைஞனைத் தேடி. அந்த ஜோடியின் உருவம் மூளைக்குள் இறங்கிக் கொண்டிருந்தது.
வெளியே சென்றதிலிருந்து வீடு திரும்பும்வரை நடந்தவற்றை மனதில் ஓட்டி பார்த்தார். பேரழகியின் முகத்தில் சிறு புன்னகை கண்களை மூடித்திறந்த போது பேரதிர்ச்சி. குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார். அதிர்ச்சியில் கைகளில் முகத்தைப் புதைத்து அழுதார். நான் வாழ்கிறேனா? கண்ணுக்குள் அகப்பாடாத காலம் தனக்கு தெரிவதாக உணர்ந்தார். நிறங்கள் அனைத்தும் இழந்து கருப்பு வெள்ளையானது. நிறச்சாயத்தை தன் முகத்தில் ஊற்றினார். எல்லாம் கருப்பு. ஈக்கிலை உடைத்து விரல் நுனியில் குந்தியபோதும் கருப்புத்துளி. காற்று பலமாக வீசும் சப்தம். வெளியே நெற்கதிர் எதற்கும் அசைவில்லை.
வெட்டுக்கத்தியை எடுத்துக்கொண்டு வயலை அறுத்து வீசுகிறார். அவர்கள் புகைப்படம் எடுத்த இடத்தில் புதைந்த காலடித்தடம் தெரிகிறது. அந்த இடத்தில் மண்ணள்ளிப் போட்டு மூடுகிறார். சுத்தி வயலின் நடுவில் தடம் பதிக்கிறது. எறும்பு ஒன்று கூரான து பகுதியின் வழி மேலே ஏறும்போது அடர்ந்த ரோமம் இருக்கும் இக எறும்பை பிடிக்கிறது. கைகளில் இருந்து வடியும் இரத்தம் மண்ணை நனைத்தது.
ஓடிப்போய் கதவை சாத்திக்கொண்டு மூச்சை இழுத்து விடுகிறார். குலுங்கிச் சிரிக்கும் சத்தம். திரும்பிப் பார்த்தபோது அவளின் புன்னகை. சகிக்க முடியவில்லை. கத்தியைத் தேடி வயலின் ஈடுவில் ஓடுகிறார். சகதியில் உருண்டு புரண்டு ஒருவழியாகக் சீண்டுபிடிக்கிறார். இது என்ன ஏற்கனவே இரத்தக்கறை. குளத்திற்கு சென்று கழுவிவந்து ஓவியத்தின் கழுத்திலேயே சொருகிறார். தன்னைத் தின்று தீர்த்த காகிதம் உயிர்விட்ட நிம்மதி. சுவாசம் சீராகத்துவங்கியது, நிறங்கள் மீண்டன. கேமராவையே பார்த்துக் கொண்டிருந்தார். இப்படி ஏன் நடந்தது இதை நடத்தியது காலம். அதற்குத்தான் உண்மை தெரியும். “இதுலதான் காலம் இருக்கு.. காலமே உன்னை அழிக்கிறேன்” என கத்திக்கொண்டு கேமராவைத் த்ரையில் வீசி உடைத்தார். பளபளப்புடன் பாகங்கள் சிதறிக் இடந்தன.
துண்டான பல்லியின் வால் ஒன்று நெளிந்துகொண்டே இருந்தது. மூச்சை இழுத்து இழுத்து விட்டுக்கொண்டே அது அடங்குமா எனப் பார்த்தார். வால் அடங்க சில நிமிடங்கள் பிடித்தன. பார்வை அகலவில்லை. இது எந்த பல்லியின் வால் என உட லைத் தேடத் தொடங்கினார். பாத்திரங்களைக் கலைத்துப் போட்டார். அவளைக் குப்புறப் போட்டு பார்த்தார். பழைய நாணயங்கள் வைத்திருந்த கலயத்திலும், நாணயங்களுக்குள் இருக்கிறதா என ஒவ்வொன்றாய் திருப்பிப் பார்த்தார் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கூரை, அழுக்குக் கூடைகள், கஞ்சிப் பாத்திரம், குடம் எதையும் விடவில்லை.
தீப்பந்தத்தைக் கொளுத்திக்கொண்டு வீட்டைச் சுற்றிச்சுற்றி வந்தார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. தூரத்தில் தெரிந்த மலையை நோக்கி ஓடினார். பிறந்தது முதல் இந்தப் பகுதிக்கு வந்தால் கேட்கும் அருவியின் சப்தம் இன்றில்லை. வேகமான நடையில் ஓடையின் அருகே கல்லின் மீது அமர்ந்திருந்த தவளையின் கண்கள் பிதுங்கித் தெறித்தன. பாதைகளில் காலடித் தடங்கள் முன்னரே இருந்தது. மலையை நெருங்கியபோது அது ஓர் ராட்சஸக் கேமராவைப் போன்று தெரிந்தது. இதனை அழித்தால் நடந்தது நடக்காமல் ஆகிவிடும். சுற்றிலுமிருந்த கற்கள் அனைத்தும் மோதி தளர்ந்து விழுந்தன. சில உடைந்தன.
கீழே கிடந்த கல் ஒன்றை நிதானமாக வீசினார். மலையின் மீது மோதி விழுந்தது. அந்தக் கல்லை எடுத்துக்கொண்டு ஏதோ ஒன்றை அடைந்ததுபோல் ஆனந்தத்துடன் குடிசையை நோக்கி ஓடினார் புகைப்படம் எடுத்த இடத்தைக் கண்டபோது வியர்க்கத் தொடங்கி விட்டது. அடைந்த தெளிவு நழுவி நீரோடைக்குள் விழுந்தது. அதை துரத்திச் செல்வதற்குள் குளத்தில் கலந்தது. அப்போது கருப்புநிற நீர் வெண்ணிறக் கீற்றுகளுடன் சுழன்றுகொண்டிருந்தது. நால்வர் அங்கிருந்து கரைக்கு வந்தனர். ஒரு நாளுக்கான நீரை அருந்தியவர்கள் போல் வயிறு முட்டியிருந்தது. முதுகுத்தண்டு லேசான வளைவு. தலை சிறியதாகவும், உடல் பெருத்தும் அடர் உரோமங்களுடன் காணப்பட்டனர். கேமராவை தூய்மைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மண்டையில் ஓடிக்கொண்டிருந்தது. அதை உடைத்து விட்டோம் இல்லையா? அதன் பாகங்கள் தூசி ஏறத் தொடங்கியிருக்கும். அந்த மனிதர்கள் முகமெங்கும் சளுவையாகச் காணப்பட்டது. உடல் அசைவுகள் வேகமாக இல்லை.
குளம் அப்படியே இருக்கிறது, ஆமாம், வயல் எங்கே! திரும்பினால் தலை முட்டிவிடும் அளவிற்கு மரங்கள். சருகுகள் பொடிந்து, தரையெல்லாம் சவைத்துத் துப்பிப் போட்ட பழச்சக்கைகளும், வித்துக்களும், கொட்டைகளும். அருவியின் சத்தம் அதிகமாக இருந்தது. மூவர் சாய்ந்திருந்த மரத்தில் நடந்துசென்றுக் கூடடைந்தனர். ஒருவர் மட்டும் மரத்தின் கிளைகளில் தொங்கியபடி தாவிச்சென்று ஒரு பெரிய மரத்தின் மூட்டருகே வந்தார். தன் நகத்தைக் கொண்டு பட்டையைப் பிய்த்துக் கூரான கல்லினால் கோட்டை வரைந்தான். அந்த மரத்தின் மூட்டில் வால் இல்லாமல் வெறும் உடல் இருக்கும் பல்லி ஒன்று இருந்தது.
குடிசை உள்ளிருந்து ரத்த வெள்ளத்தில் துடிக்கும் பெண்ணின் குரல் கேட்பது போல் இருந்தது. கூடு இருந்த கிளை முனகல் சத்தத்துடன் ஆடியது. மீண்டும் ராப்பாடியின் நெற்பாட்டு. இங்கே நரியின் ஊளை. கோட்டை வயதான மரத்தில் அழுத்தி வரைபவன். அழும் பெண்ணின் கழுத்தில் இருக்கும் இரத்தக்கறையை அகற்றி கண்களில் கண்ணீர் வரையும் தூரிகை. கிளை வேகமாக ஆடியது. படம் எடுத்தபின் ஒரு ஜோடி வேகமாக ஓடியது. மின்னல் வெளிச்சம். ஃப்ளாஷ்! மரத்தில் விழும் நீர் கிளைகள் வழியாக வடிந்து கோட்டின் மீது சிலகாலம் தங்கி கீழ்சென்றது.
இலையைப் பறித்து ஆண்குறியைத் துடைத்தெறித்து விட்டு வேறு கிளைக்கு தாவினான். அந்தப் பக்கமாக வந்த புனுகின் மீது விந்து படிந்த இலை விழுந்தது. மின்னல் ஒளியில் குளத்தை நோக்கிச் செல்லும் பெண், அவளைத் தொடர்ந்து செல்லும் ஆணின் முகங்கள் தெரிந்தது. பதற்றம் வரவில்லை. வியர்க்கவில்லை. மின்னலை நிறுத்தத் தோன்றவில்லை. காட்டை அழிக்கத் தோன்றவில்லை, கோடு வரையப்பட்ட மரத்தை வெட்டிச் சாய்க்க மனமில்லை. மூச்சு சீராக இயங்கியது. நிற இழப்பு எதுவும் ஏற்படவில்லை. பழங்களின் வாசனையை உணர முடிந்தது. ஓய்ந்திருந்த மழையின் அழகை, இரவை ரசிக்க முடிந்தது. காற்று சில்லென வீசி சென்றது. பேரிடி ஒன்று இடித்தபோது நடுக்கத்துடன் அவர்கள் பாறையின் நடுவே புகுந்துகொண்டனர்.
அப்போது பச்சை மாக்கான் ஒன்று தரையில் இருந்து கல் ஒன்றில் தாவி அமர்ந்தது. அவர்கள் குளத்திற்கு போய் திரும்பும் வரை கல்லைவிட்டு நகரவில்லை. இத்தனை நேரம் தன் மடியில்
அமர்ந்த மாக்கான் மீது
பாசம் கொண்டது. கூடடையும் மனிதன் கிளையில் தொங்கும்போது ஏற்பட்ட அசைவில் தாவி அடர்ந்த பாசிகளின் நடுவே புகுந்தது. கல்லின் கண்கள் முழுவதும் கண்ணீர் அது மின்னல் வெளிச்சத்தில் மிகவும் நன்றாகவே தெரிந்தது.
பற்றி எரியும் காடு, புகைக்கிடையே மரச்சீனி கிழங்கை தோண்டி சுட்டுத் தின்னும் மனிதன், குளம் வறண்டுபோய் மழைக்காகக் காத்திருக்கும் நெற்பயிர்கள், பெரிய இயந்திரங்கள் சுழன்று கொண்டிருக்கிறது, மனிதர்கள் கற்களையும் சிமெண்டையும் கரைத்துக் கொண்டிருக்கின்றனர், துடிக்கும் பல்லியின் வால், அடுக்குமாடி கட்டிடம் எழுப்பப்படுகிறது, நச்செலிகளின் கீச் சத்தம், அரிசிப் பானைக்குள் மீண்டும் புகும் கரிச்சான்கள். மாக்கான் வந்தமருமா எனக் காத்திருக்கும் கல், கண்களுக்குள் திரை இருக்கிறதா? நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் காட்சிகள், காலத்தை உடைத்துவிட்டேன் என நெஞ்சில் பொருமினார்.
,காரணம் ஒன்றுதான், குறைந்த ஒளியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தெரிந்த ஒரே சாயல். கண்ணீர் சிந்தியபடியே உடைத்து நொறுக்கப்பட்ட கேமராவின் பாகங்களைச் சேகரித்துக் கொண்டிருந்தார். சித்தம் கலங்கியிருந்தது. வாய் உளறியது. அவன் வரைந்த மரம் வலிமையானது, வயதானது. அதனை வெட்டி எடுத்து வந்து கதவு செய்ய வேண்டும். வேண்டாம். அதன் கிளைகள் வழியாக ஏறி உச்சிக்கு சென்று காட்டிற்குள் எங்கேயாவது கேமரா உடையாமல் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். குளத்தில் கரைந்த தெளிவு கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. தலையை சரித்துப் படுத்தபடியே அவள் பார்த்துக்கொண்டிருந்தாள் துளையில் கரப்பான் நுழைந்து கடந்தபோது எங்கோ தொலைவில் புனுகின் சத்தம்.

ஐசக் பேசில் எமரால்ட் |/கப்பல் ‘1073’ – விருட்சம் நாளிதழ்

One Comment on “ஐசக் பேசில் எமரால்ட்/மிகக் குறைந்த ஒளியில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்”

Comments are closed.