
15.08.25, 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில் 10 ஆம் கவிதை
மெத்து மெத்தெனத் தாய்மடி போல
மென்மையான மணல் பரவிய
கடற்கரை நினைத்தாலே பரவசம்
நெஞ்சமெலாம் நெகிழ்வு .
அந்த மணல்மடி மீதமர்ந்து
மணிக்கணக்கில் பேசியிருப்போம்.
மணல் மீது தலை வைக்காதேயென
உன்மடி மீது வைத்துக் கொள்வாய்.
உப்பு வாசம் மணக்கிற மணல்
என் தலை மீது ஒட்டிக்கொண்டால்
என் அம்மாவின் மோப்ப மூக்கு
கண்டுபிடித்து விடும் என்பாய்.
உன் பெற்றோரும்
என் பெற்றோரும்
விலக்கி வைக்க, நட்புகள் உடனிருக்க,
பதிவாளர் அலுவலகத்தில் மணம் முடித்து,
மாலை மாற்றிய கையோடு
நாம் இந்தக் கடற்கரைதானே வந்தோம்!
மணமாகி இத்தனை வருடங்களில்
எத்தனை முறை உன்னுடன் சண்டையிட்டு
கோபமாய் அம்மா வீடு போறேனெனச் சொல்லி
அப்போதெல்லாம் நான் வந்தது எங்கேயென
நீ உணர்ந்திருப்பாயென நம்புகிறேன்,
வேறென்ன, இந்தக் கடற்கரைதான்!!!.
