
1
அங்கிருந்து கண்ணெட்டும் தூரம் வரை தென்னந்தோப்புகள், கடைசியில் சவுக்குத் தோப்புகளைக் கடந்து கடற்கரை. இடையில் மா,பலா,ஆயினி, கொல்லாவு, வாழை, புளி, குளிக்கரை கண்டங்கள். தூரத்தில் தெரியும் பாறை. அடுத்த மாநிலத்தில் துறைமுகம் கட்ட நடுவில் பாதி வெட்டி எடுக்கப்பட்டதால் நடுவே ஒரு குளம் உருவானது. உயர்ந்து நிற்கும் பனை மரங்கள். சாலை முக்கில் குருசடி. இருபக்கமும் செம்மண்ணைக் குழைத்துப் பூசிய வீடுகள். திண்ணையிலோ, கட்டிலிலோ படுத்துக்கொண்டு சுண்ணாம்பை நகங்களினால் சுரண்டும் சிறுவர்கள் உண்டு என்பதை சுவர்கள் காட்டும். உடைந்த ஓடுகள். கீறல் விழுந்த பகுதியில் பனை ஓலையால் மூடப்பட்டிருக்கும். கோழிகள் இல்லாத வீடில்லை. பனை ஏறிவிட்டு வந்து கையாலையில் அமர்ந்து தெழுவு குடிக்கும் காட்சி, ஆற்று மணலைச் சுரந்து ஊற்றுத்தண்ணீரைத் மண்பானையில் சுமந்து வரும் பெண்கள், மூன்று மைல் தூரம் நடந்தால் கழிமுகம். அருகே தென்னந்தோப்பில் கிரிக்கெட் களிக்கும் சப்பட்டைகள்.
திண்ணைக்கு வெளியே அக்கானியைக் காய்த்து பைனியாக்கி வைக்கோலில் கருப்பட்டியாக்க உலர வைத்திருந்தார்கள். மாம்பட்டைக் குடித்துவிட்டு குளிக்கரையில் சீட்டு கழிக்க வரும் கூட்டம். போலீஸ் ஜீப்பு கண்டு கள்ளிவெட்டி சாத்தி வைத்திருக்கும் கையாலையில் கமந்தடித்து ஓட்டம். நாட்டுமுந்திரி மரத்தில் சீதாப்பழம் போன்று கூடு அமைத்திருக்கும் மிசிறுகள். இரவு மழைக்கு முன் முற்றம் வழியாக பேயாட்டம் ஆடும் புளியமரம். அதிலிருந்து விழும் உண்ணிகள். கனவில் இந்த இடம் வரும்போது தூக்கம் லேசாகக் கலையும்.
கனவில் காட்சிகள் மட்டுமல்ல. சத்தங்களும்தான். நள்ளிரவின் பேரமைதியில் தூங்காமல் கண்விழித்துக்கொண்டிருக்கும் கடலலைகள். சல்லிகளை கொட்டுவது, பாறையைப் பிளப்பது, நள்ளிரவின் காட்சி அல்லாத மற்ற அனைத்திலும் ஓர் இயந்திரத்தின் இரைச்சல் ஓயாமல் கேட்கும். சில நேரங்களில் இரைந்துகொண்டு செல்லும் லாரி. இந்தக் கனவின் காட்சிகளை இணைக்கும் ஒரு கண்ணி (அ) கன்னி உள்ளது.
அந்தப் பகுதியில் ஒரு வீடு இருந்தது. மிட்டாய் வாங்க கடைக்குச் செல்லும்போது அந்த வீட்டைக் கடக்க வேண்டியது வரும். அப்போதெல்லாம் உள்ளுக்குள் அள்ளு விடும். ஓடுகளில் பொத்தல் விழுந்த பழைய திண்ணை வீடு. முன்னே நிழற்குடையாக ஒரு வயதான வேப்ப மரம். திண்ணையை அடுத்து ஒரு ஜன்னல் இருக்கும். அதில் ஒரு 30 வயதுப் பெண் சங்கிலியால் கட்டிப் போடப்பட்டிருந்தாள். எலும்பும் தோலுமான உடல், அழுக்கு உடை, சிக்குப்பிடித்த தலை. திண்ணையில் ஒரு கிழவி பைபிள் வாசித்துக்கொண்டு ஜெபம் செய்வாள். சில நேரங்களில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் தென்னம் ஈக்கிலைக் கீறிக் கொண்டிருப்பாள்.
முற்றத்தில் சாக்கு வைத்து அண்டி தனியாக, கொல்லாம்பழம் தனியாக உலர வைக்கப்பட்டிருக்கும். ஒருநாள் சங்கிலியை இழுத்து இழவு விழுந்த வீடு போல் அலறல் கேட்டது. அக்கம்பக்கத்தினர் கூடிவிட்டனர். கச்சி கழித்துக் கொண்டிருந்த நாங்கள் கூட்டத்தில் புகுந்தோம். வெள்ளைச் சேலை உடுத்திய பெண் ஒருவர், “அப்பாலே போ சாத்தானே” என வெறிகொண்டு ஜெபம் செய்தார்.
“எனக்க அப்போ… ஒரு குடத்த ஒத்த ஆளா கொண்டாருவா பிள்ளைகுட்டி வச்சிய மீனுகறி நல்லா இருக்கும், நல்லா இருந்தா எப்படி இந்த நீக்கம்பு வந்துச்சோ” கண்ணீர் விட்டு அழுதாள்.
சுவரில் மாலைப் போட்டு வைக்கப்பட்டிருந்த போட்டோவைப் பார்த்து, “லேய், நீ மீனு பிடிக்கப் போனப்போ ஒனக்கு ஒரு நோக்கேடும் இல்ல, பைசா கிட்டுதுன்னு எப்போ மணல் கம்பெனிக்கு போனியோ அண்ணு தாம்புல பிடிச்சுது வினை சும்மாள கொண்டு பைசா தாரனுவ தாயளிய. ஆளு காண பலவை கணக்கா இருந்தான், எனக்க பயல கேன்சர் தின்னுடுச்சு.. எனக்க அப்போ..” அருகில் இருந்தவர்கள் தேற்றினார்கள்.
அலறிக்கொண்டிருக்கும் பேத்தியைக் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள் கண்ணீரைத் துடைத்துவிட்டு முகத்தை இறுக்கமாக வைத்து, கொல்லைப்புறமாக ஓடினாள். அருவாமனைக்கு அருகில் மீனின் செதில்கள், குடல், ரத்தக்கட்டி, தலைகள் குவிந்துக் கிடந்தது. அதை தின்றுக்கொண்டிருந்த காட்டுவாக்கனை மிதித்து தள்ளினாள். முகத்தைச் சீறிக்கொண்டு நகர்ந்தது.
கரித்துணியில் அனைத்து மீன்கழிவுகளையும் வாரி எடுத்தாள். துணியை முறுக்கிக்கொண்டு வந்து பேத்தியின் முகத்தில், தோளில், முதுகில் வீசி வீசி மீன் கழிவுகளைக் கொண்டு அடித்தாள். “போ சாத்தானே, போ பேயே” சற்று நேரத்தில் இருவரும் களைப்பில் மயங்கினர். கூட்டம் கலைந்தது. பின்பு ஊழம்பாறையில் கொண்டுப்போய் வைத்திருப்பதாக ஊர்க்காரர்கள் பேசிக்கொண்டார்கள்.
அதற்குப் பிறகு கிழவி அந்த வீட்டிற்கு வரவில்லை. வீடு, சொத்தை மூத்த மகளுக்கு எழுதி வைத்துவிட்டு, கடற்கரையோரம் இருந்த குருசடியில் காலம் கழித்தாள். பாவமன்னிப்பு கேட்டுவிட்டு காணிக்கை இட வருவோரில் சிலர் இட்லி வாங்கித் தந்தனர். மகனின் கேன்சர் மரணம், மன நோயாளியான பேத்தி, விட்டுச்சென்ற மருமகள் கிழவிக்கும் மனச்சிதைவைக் கொடுத்தது.
கண்களில் கருவளையம். காண்போரைக் கண்கொண்டு விசித்திரமாகப் பார்த்து சிரித்தாள். தூய்மையான வெண் சேலை அணிந்து, முட்டாங்கு போட்டு ஜெபம் மட்டும் நிற்கவில்லை. பைபிள் வாசிப்பும். வீடு இடிக்கப்பட்டது. வேப்ப மரம் சாய்க்கப்பட்டது. சில வருடங்கள் கழித்துக் கிழவியும் காலமானார். சொத்தை எழுதி வைத்த நன்றிக்கடனாக மூத்த மகள் இறுதி மரியாதையை செய்தாள்.
2
அவள் மருதாணி இலைகளை பறித்துக் கொண்டிருந்தாள். பறித்ததோடு சென்றிருக்கலாம். கீழே கிடந்த குச்சியை வைத்துப் பார்த்துப் பார்த்துக் கட்டிய எங்கள் வீட்டை இழுத்து கீழே போட்டாள். எனது உறவினர்கள் கலைந்து பதறிக்கொண்டே ஓடி வந்தார்கள்.
நான் கிளையின் ஓரத்தில் அமர்ந்து நடப்பதைக் கவனித்துக்கொண்டிருந்தேன். இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களை பார்த்தவர்கள்தான் நாங்கள். மருதாணி இலையைப் பறித்ததோடு போயிருக்கலாம். மேலும், சிவக்க எங்கள் கொடுக்கில் இருக்கும் பார்மிக் அமிலம் அவளுக்கு தேவை. இருக்கட்டும், கேபிள் கம்பி வழியாக மொட்டை மாடியில் நுழைந்து கொடியில் காயும் உன் உடையில் புகுந்துவிடுகிறேன். என் குடும்பத்தை அழித்த உன்னைக் கடித்தால்தான் எனக்கு நிம்மதி.
கலைந்து தப்பித்த உறவினர்களை ஆறுதல்படுத்தினேன்; நிதானமானார்கள். அவர்களுக்கு பசித்தது, மழை வடிந்த பாசிகளிலும் சீதா மரத்தின் காய்ந்த இடுக்குளில் மழையினால் ஈரம் படிந்திருந்தது. அங்கிருந்த நுண்பூச்சிகளை உண்டு பசியாறினார்கள் என் உடலில் வரும் பிசினால் இலையை வளைத்து முட்டையிடத் துவங்கினேன். இழந்த வம்சத்தை மீட்டெடுப்பது எனக்கு உண்டான சவால். நான் முட்டையிட்டு முடித்ததும், உண்டு தெம்பாக வந்த வேலைக்கார்கள் அடைகாக்க குவிந்தனர். ஓர் இரவில் வீடு கட்டி முடிக்கப்பட்டிருந்தது.
இந்த மனிதர்களால் பெரிய இழப்பு எங்களுக்கு. கனவில் கூட இந்த மனிதர்களுக்கு நாங்கள் நன்மை செய்தோம். ஏதோ பெரிய சாலைப் போடுவதற்காக பெரிய குளங்களை மண்வெட்டி நிரப்பி மூட இருந்தனர். அந்தக் குளங்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் உரிமை உண்டு. எங்களைவிட அவர்களுக்கு நன்மை அதிகம். இருந்தாலும் குளத்தை மூடிவிடக் கூடாது என இரவில் எங்கள் மொத்த வம்சத்தையும் அழைத்து பாலம் எழுப்ப நினைத்தோம். பிற்காலத்தில் குளத்தை மூடாமல் பாலம் கட்டியது ஆச்சரியம்தான். எங்களை எப்போது புரிந்துகொள்வீர்கள்?
முன்புபோல் தெம்பாக முட்டையில் இருந்து வரும் குஞ்சைத் தூக்கிச் சுமந்துசெல்ல முடிவதில்லை. என்னைவிட எடையுள்ள சுள்ளிகளை சீதா மரத்தில் இருந்து மருதாணி மரத்திற்கும், பலாவிற்கும், ஆயினிக்கும் சென்று வருவேன். அப்போதெல்லாம்
மூச்சுவிட சிரமம் இருந்ததில்லை. இப்போது ஆயினி மாத்தில் ஏறி இறங்குவதற்குள் கொடுக்கு சுருங்கி விடுகிறது.
மன உளைச்சல் அதிகமாக இருந்ததால் கனிந்து குடுங்கியிருந்த சீதாபழத்தின் மீது ஏறி வட்டம் போட்டேன். அணிலார் வந்து சாப்பிட்டது போக, மீதி நாளை கீழே விழுந்துவிடும். நினைவுத் தெரிந்த நாளில் இருந்து சீதாவைப் பறிக்க ஒரு மனிதன் கூட வந்ததில்லை. என் முன்னோர் இங்கிருந்த வேப்ப மரத்தில் ஒவ்வொரு கிளைகளிலும் கூடுகட்டி மிகப்பெரும் சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆண்டதாக மரபுவழிச் செய்தி.
ஒரே இடத்தில் இருப்பது மன உளைச்சலை பெரிதாக்குகிறது. எனது வேலைக்காரர்கள்மேல் சில சந்தேகங்கள் இருந்தபடியால்இரு மரங்களை விட்டு நகர முடியவில்லை. முட்டைகளை நல்லபடியாக கவனித்துக் கொள்வார்கள். புழு பருவத்திற்கு வந்தபின் அதனைத் தூக்கிச் சுமந்துசென்று எங்கள் சமூகத்தில் நல்ல மிசிறாக வாழ சிறந்த பயிற்சியை அளிப்பார்கள் என்று நம்பிக்கை வந்துவிட்டது. எனது பயண அறிவிப்பை அனைவரிடமும் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினேன். மனிதர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று பலமுறை எச்சரித்தார்கள்.
இரவில் பயணம் புரிய வேண்டும் என்பது நீண்டநாள் கனவு. போகும் வழியில் எங்களது பங்காளி கறுப்பின எறும்புகள் ஆரத்தழுவி கைக்குலுக்கினர். எனக்கு இனிப்பு விருப்பம் குறைவு என்பதால் நுண்பூச்சிகள் உறங்கிக் கொண்டிருக்கும் இடங்களைக் கூறினர். பசிக்கும்போது போகலாம் என மூளையில் குறித்து வைத்துக்கொண்டு விடைபெற்றேன்.
இடிந்துக்கிடந்த வீட்டிற்கு பின்னால் சென்றேன். புதர்கள் நடுவே பயணிப்பது சிரமமாக இருந்தது. எங்கும் வழியில்லை. பெருச்சாளிகள் உணவைப் பங்கிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தது. என்னை யாரும் கவனிக்கவில்லை. அங்கிருந்து தூரத்தில் காற்றில் அணையப்போகும் மெழுகுவர்த்தி ஒன்றைக் கண்டேன். மழைக்காலம் என்பதால் மண் ஈரமேறி இருந்தது. குளிரினால் என் கொடுக்கு சுருங்கியிருந்தது. தென்னையின் மூட்டில் சாம்பல் கொட்டப்பட்டிருந்தது.
ஈரத்தில் இறுகிக் காணப்பட்டதன் அருகில் காளான்கள் முளைத்திருந்தது. நுண்பூச்சிகள் என்னைக் கண்டு மறைந்தன. வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு கிளம்பியபோது மெழுகுவர்த்தி அணைந்து புகைந்துக் கொண்டிருந்தது. கல்லறையின் மேல் இருந்த சிலுவையில் மாலைகள் போடப்பட்டிருந்தது. ஒன்று வாடி கரிந்திருந்தது, மூன்று ஓரளவிற்கு புதியதாகவும். வரிசையாக நான்கு கல்லறைகள் இருந்தது. அதற்கு முந்தின தலைமுறைக் கல்லறைகள் இருந்ததற்கான தடம் உள்ளது. அனைத்தும் மண் கல்லறைகள்.
கல்லறையை ஒட்டியிருந்த சருகுகளின் அடியில் சென்றபோது எங்கள் ஆட்கள் மண்ணுக்கடியில் உணவுப்பொருட்களை சேமித்து வைப்பதற்காக உருவாக்கிய வழி இருந்தது. உள்ளே நுழைந்தேன். குத்திருட்டு. மண்ணுக்கடியில் ஓர் அடிக்கு மேல்நுழைந்துவிட்டேன். ஒரு சத்தம் என்னை நோக்கி வருகிறது. நடையை நிறுத்திக்கொண்டு தலையைத் திருப்பி நோக்கினேன். வலப்பக்கத்தில் இருந்து இடப்பக்கமாக சங்கிலியை இழுத்துக்கொண்டு செல்லும் சத்தம் கேட்டது. அதற்கு பின்னணியில் லேசாக ஒரு பெண்ணின் கேவல் இருந்தது. இரண்டு அடியை எட்டியபோது பாதை முடிந்திருந்தது. எனது ஒன்றுவிட்ட உறவினர்கள் முட்டுச்சந்தில் இறந்துக் கிடந்தார்கள். சேமிக்கப்பட்ட உணவும் சிதறிக் கிடந்தது.
இதற்குமேல் செல்வது ஆபத்து என யோசித்துக்கொண்டிருக்கும் போது நாற்றம் வீசியது. ஆம், அழுகிய மீனின் கவிச்சி நாற்றம், இவர்கள் சிறுசுகள். எளிதாக ஆபத்தை சந்தித்துவிட்டார்கள். நான் வலிமையானவள். இந்தப் பயணத்தை எதற்காகவும் நிறுத்தக்கூடாது என மண்ணைக் குடைந்து பாதையை அமைக்கத் துவங்கினேன். தோண்டும்போது மணலில் இருந்த ரூடைல், ஜிர்கான், இல்மனைட், ஆறடி வந்தபோது பெட்டி ஒன்று உளுத்திருந்தது. மண்ணைத் பெரிய ஆபத்து எனத் தடுத்தது. அவர்கள் பேச்சைக் கேட்காமல் தோரியம், மோனோசைட் சுற்றி நின்றுக்கொண்டு வேண்டாம், மண்ணைத் தோண்டிய போது என் உடலில் கதிர்வீச்சு புகுந்தது
போல் இருந்தது. மூச்சுவிட முடியவில்லை,
சத்தம். தூரத்தில் சங்கிலியின் ஒலி. மீன் வாடை. எனது கொடுக்கு உளுத்த மையப்பெட்டிக்குள் இருந்து சிரிக்கும் பெண்ணின் சத்தம். தூரத்தில் சங்கிலியின் ஒலி. மீன் வாடை. என் கொடுக்கு
எரிந்துக் கருகுவது போலிருந்தது. அவ்வளவுதான் கதை முடிந்தது. என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. கனிமங்களின் பேச்சை உதாசீனப்படுத்தியதற்கு வசமாக சிக்கிவிட்டோம். உடலில் சூடு பரவியது. சிரித்துச் சிரித்து சோர்வான குரல், “தண்ணி தண்ணி” என்று சொல்லி மீண்டும் பலவீனமாகச் சிரித்தது. அடுத்த நொடி, மண்ணுக்கடியில் நீருற்றுப் பெருக்கெடுத்தது. வேகமாகக் கொப்பளித்து வந்த நீரின் வழியாக செத்துப்போன உறவினர்களுடன் தூக்கி வெளியே வீசப்பட்டேன்.
எரிந்த கொடுக்கில் பட்ட நீரும், வெளியே காணப்பட்ட இரவின் குளுமையும் ஆசுவாசமாக இருந்தது. என்ன நடக்கிறது? சற்று நேரத்தில் எனது முட்டைகளின் பாதுகாப்பைக் குறித்துக் கவலை கொள்ள விரும்பினேன். அதற்கான அவசியம் இல்லை. அவர்கள் போர் வீரர்கள். பத்திரமாக கவனித்துக்கொள்வார்கள்.
கல்லறைக்குப் பக்கத்தில் இருந்த பாறைப்பகுதிக்கு சென்றேன். வெட்டப்பட்ட பாறையின் விளிம்பு கத்தி மாதிரி இருந்தது. மண்ணுக்கடியில் பார்த்த ஐவரும் நோய்வாய்ப்பட்டு படுத்தப் படுக்கையாக இருப்பதுப் போல் காணப்பட்டார்கள். என்னைப் பார்த்து தலை அசைத்தார்கள். பார்க்க வேதனையாக இருந்தது. உறவினர்கள் அமெரிக்கா, அரபு, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு நாடுகடத்தப்பட்டார்கள் என கண்ணீர் மல்கினார்கள்.
தாங்கள் அநாதையாக்கப்பட்டு விட்டோம். கூடிய சீக்கிரம் எங்களையும் தனித்தனியாக பிரித்துக்கொண்டு செல்வார்கள். “எனக்கு கல்யாணமாகி புகுந்தவீடு நீர்மூழ்கி கப்பல்தான்” என்றது இல்மனைட். உடனே ரூடைல் வந்து, “எனக்கு வாழ்நாள் முழுவது போரை பார்க்கும் பாக்கியம் உள்ளது. அதில் கொத்துக்கொத்தாக மனிதர்கள் சாவதைப் பார்த்து மகிழ்ச்சியடைவேன். காரணம் என்னுடைய புகுந்தவீடு போர் விமானம்” என்றது.
மோனோசைட் உடனே சோகத்துடன், “நீங்கள் கொடுத்துவைத்தவர்கள் கடல்கடந்து பல தேசங்களுக்கு பயணம் செய்வீர்கள். உங்களைவிட பலசாலி நான், ஆனால் உள்ளூர் குடிகார மாப்பிள்ளையை கல்யாணம் செய்துவிட்டு இங்கேயே வாழவேண்டிய துர்பாக்கியம்.” தோரியம் திமிராக, “ஏய் மிசிறே.. என்ன திகைத்து பார்த்துக் கொண்டிருக்கிறாய்? எங்களிடம் உனக்கு என்ன வேலை? எங்கள் மதிப்பு உனக்கு தெரியுமா? நீ மண்ணுக்கடியில் பார்த்தது சொற்பம், உள்ளே போ, உனக்கு இன்னும் நிறைய ஆச்சரியங்கள் காத்துக் கிடக்கு” என்றது. “உங்களைப் பத்தி எங்க முன்னோர்கள் நிறையக் கதை சொல்வாங்க, நீங்கள் வானத்தில் இருந்து வந்தவர்கள் தானே !!” என்றேன்.
“அது உண்மையான கதை இல்லை. நாங்கள் உருவானபோது நீங்கள் யாரும் பிறக்கவில்லை. உருமாறும் பாறைகள் கேள்விப்பட்டதுண்டா? சூட்டில் உருமாறி நாங்கள் பிறந்தோம், கட்டுக்கதைகளை நம்பாதே.” கார்னைட் எச்சரித்தது. அசிங்கமாக இருந்தது. இதை சொல்லியிருக்க வேண்டாமோ என்று நினைத்தேன். புளிப்பான புன்னகையுடன் அங்கிருந்து நழுவினேன்.
அவர்களிடமிருந்து விடைபெற்று மீண்டும் அந்த வழியாக உள்ளே நுழைந்தேன். மூன்றடிக்கு முன்னால் ஊற்றின் பாய்ச்சலில் பக்கவாட்டுப் பாதை ஒன்று உருவாகியிருந்தது. அந்த வழியாக சென்றபோது மிகவும் இற்றுப்போன ஒரு மையப்பெட்டி இருந்தது. அதன் நடுவே நீர் கொப்பளிப்பது போல் மணல் கொப்பளித்துக்கொண்டிருந்தது. உள்ளுக்குள் பயம் வேறு எவ்வளவோ இயற்கை பேரிடர்களைப் பார்த்துவிட்டோம். மனிதர்கள் எங்களுக்கு செய்த இன அழிப்பை இப்போதும் காண்கிறோம். பழிவாங்கல் உண்டு என்றாலும், இயற்கையைக் கண்டு அஞ்சியதில்லை. இல்லை, ஒருதடவை எங்கள் முன்னோர்கள் பயந்தார்கள்.
முன்பு எங்கள் வம்சம் மலையை ஒட்டிய கிராமங்களில் அதிகமாக வாழ்ந்தார்கள். அப்போது வாழை, மரச்சீனி விவசாயத்தை அழித்து ரப்பர் பயிரிடத் தொடங்கினார்கள். அதன் பால் வாடையைக் கண்டு அஞ்சி நெய்தல் நோக்கி வந்ததாகச் சொல்வார்கள். இப்போது சிறிது உடல்நலக் குறைவுகள் இருப்பினும் உண்டுக் களித்து வாழ்வில் குறையில்லை.
மணல் சிவப்பு நிறமாகி சாந்தமடைந்தது. பெட்டிக்குள் இருந்து சிறு முனகல். “இந்த மணலில் என் ரத்தம் கலக்கட்டும்”,
நாற்புரத்தில் இருந்தும் மனிதக்குரல்கள் திரும்பத் திரும்ப இதையே சொன்னது. கண்களை மூடி நிதானமாக எண்ணினேன். கிட்டத்தட்ட 500 இருக்கும். ஆம், எனக்காக ஐநூறு பாதைகள் காத்துக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு தன் தரப்பு நியாயத்தைச் சொல்ல ஆளில்லை. என்னை அமர்ந்து கேட்கச் சொல்கிறார்கள். தூரத்தில் கனிமங்கள் படுத்துக்கொண்டு புன்னகைப்பது தெரிகிறது. பெட்டியின் இடுக்கில் புகைப் படர்ந்து வெளியே வந்தது. இயந்திரம் ஓடுகிறது. ஐல்லி கொட்டுகிறது. லாரி கிளம்புகிறது. அனைத்தும் சத்தங்கள். பெட்டியை உடைத்துக்கொண்டு எழுந்த எலும்புக்கூடு திரும்பி என்னைப் பார்த்து சிரித்தது. கழுத்துப் பகுதி எலும்பு அரித்து வெடிப்பாகி காணப்பட்டது. நான் அங்கிருந்து வெளியேறினேன்.
கழிமுகம் இருக்கும் பகுதிக்கு சென்றேன். நீர்வழியாகத் கனிமங்கள், கதிர்கள் பாய்ந்துக்கொண்டிருந்தது. நாட்கணக்கில் பாசி உப்புநீரில் பட்டு தறுத்திருந்தது. அதில் நுண்பூச்சிகள் இருக்கிறதா என்று தேடினேன். புதிதாக வளரும் பாசிகள் செழிப்பில்லை. நோஞ்சானாக காணப்பட்டது. சிறியதும் பெரியதுமாக நண்டுகள் ஊர்ந்துக்கொண்டிருந்தது. ஒருபக்கம் அடுக்கடுக்காக சிப்பிகள். வானில் வெளிச்சம் வரத்தொடங்கியிருந்தது. சிறிய டெம்போவில் வந்த மனிதன், இரண்டு சாக்குகள் நிறைய இறைச்சி, மருத்துவக்கழிவுகளைக் கொண்டுவந்து பாறையில் ஏறத் தொடங்கினான். நான்கு அடிகளுக்கு ஒருமுறை ஜிப்பைத் திறந்து சிறுநீர் கழித்தான். பாறை முகப்பில் ஏறிநின்று கழிவுகளைத் தூக்கி வீசினான். கூட்டமாக நீந்திக்கொண்டிருந்த மீன்கள், அங்கு மீன்பிடிக்க வந்த ஒரு மீனவரின் படகின் அருகே ஒதுங்கியது. திரும்பும்போதும் சிறுநீர் கழித்தபடியே வெளியேறினான்.
மலையில் இருந்து ஆறு வழியாக வந்த கனிமங்கள் ஓடினது போதும் என்று களைத்துப்போய் மணலில் கலந்து ஓய்வெடுத்தன. மோனோசைட் மட்டும் பாறையில் ஏறி சிப்பி மீனைக் கட்டித் தழுவியது. அப்படி என்ன பாசம்? நண்டை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. நண்டைக் கவனித்துக் கொண்டிருந்ததில் அருகில் வந்த மீனை கவனிக்கவில்லை. மூச்சை சீராக விடமுடியாமல் பேசியது. “என்னன்னு தெரியல, எங்க குடும்பத்தில் அனைவருக்கும் சுவாசக்கோளாறு வருகிறது, என் உயிர்த்தோழி இறந்துவிட்டாள். அவளின் ஆரஞ்சு நிற வால் என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. உனக்கு தெரியுமா? எங்கள் ஆட்கள் பிளாஸ்டிக்கில் சிக்கி சாகிறார்கள்”. தொண்டைவிக்கி சுவாசம் தடைபட்டது. பேச்சு வரவில்லை.
என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. கடலை உற்றுக்கவனித்த மீன், “ஏதோ ரசாயனக் கழிவை கலக்கிறார்கள் போல் உள்ளது. இன்னும் கொஞ்சம் நேரத்தில் கடல் சிவப்பாகிவிடும். நீயும் இங்கிருந்து கிளம்பிவிடு, நான் உடனடியாக ஆழ்கடலுக்கு சென்றாக வேண்டும்.” அவசரமாக விடைபெற்றது,
இன்னொரு பள்ளத்தில் வந்த சிலர் சிப்பிகளை கூடையில் அள்ளிப்போடத் தொடங்கினான். பல நிறங்களினால் ஆன சட்டை அணிந்திருந்தான். முதலில் ஆடை வடிவமைப்பு என்று எண்ணினேன். நிறங்கள் உருகி வடிந்தபோதுதான் சுண்ணாம்பு நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளி என்பது தெரிந்தது. நிறங்களின் உள்ளே நிறுவனத்தின் எம்பளம். கால்சட்டையிலும் சுண்ணாம்புக் கறை. வானம் வெளுத்திருந்தது. சிறுசுகள் செம்மண் சுவரின் சுண்ணாம்பை நகத்தினால் சுரண்டும்போது தெரியும் வடிவங்கள் போன்று மேகங்கள் ஊர்ந்துக்கொண்டிருந்தது.
கரைப்பகுதியில் ஒரு மனிதன் பள்ளத்தை தன்வீட்டுக் கூரையின் மீது ஏற்றினான். கடற்தண்ணி ஐந்து நொடிகளுக்கு ஒருமுறை வீட்டிற்குள் புகுந்து வெளியேறியது. உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தை, உப்புநீர் தன்மீது தழுவி செல்வது வழக்கமான ஒன்று வெயில் அடிக்க ஆரம்பித்தது. பள்ளத்தை கூரையில் ஏற்றி கயிறால் இழுத்துக் கட்டிவிட்டு வீட்டின் முற்றத்திற்கு வந்தான். அலை அவனைத் தழுவிச் சென்றது. வலையை அவன் உடலில் சுற்றி கையை பக்கவாட்டில் நீட்டி கர்த்தர் போல் நின்றுக்கொண்டு வலையின் ஈரம் உலர்த்த நின்றான்.
இயந்திரத்தின் சத்தம் வந்துக்கொண்டிருந்த திசையை நோக்கி ஊர்ந்துச் சென்றேன். ஆலையை அடைந்தபோது ஒரு லாரி வேகமாக வெளியேறியது. அதிலிருந்து வெளியேறிய துகள்கள் சாலையோர ரோஜா செடிகள் மேல் படிந்தன. பட்ட சில நொடிகளில்
ஒவ்வொரு இதழ்களாக உதிர்ந்து மொட்டையானது. அங்கே ஒரு மனிதன் இடுப்பை, முதுகை சொறிந்துக்கொண்டு வேலை பார்த்துக்கொண்டிருந்தான். முதலாளி மாஸ்க் அணிந்துக்கொண்டு வேலை நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தான். அவன் காலருகே சென்றேன்.போன் வந்தது. எடுத்துப் பேசியவன் கண்கலங்கினான். கதறி அழுதான். தேற்றவந்த தொழிலாளர்களைத் விலக்கி குமுறினான். பல வருடங்களாகக் குழந்தைப் பேறில்லையாம். நோன்பிருந்து கோயில், குளமேறி வைத்தியம் பார்த்து கர்ப்பமான மனைவியின் கரு சிதைந்து விட்டதாம். அடுத்த புழுதியைக் கிளப்பி லாரி புறப்பட்டது. காலில் கடித்தேன். வலியைத் தாங்கிக்கொண்டான். அய்யோ அந்த ரோஜாப்பூ…?
ஐசக் பேசில் எமரால்ட்/மிகக் குறைந்த ஒளியில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் – விருட்சம் நாளிதழ்

One Comment on “ஐசக் பேசில் எமரால்ட்/மிசிறு”
Comments are closed.