
வெடி பட்ட பன்றி போல் தெறித்து ஓடிக்கொண்டிருந்தார்கள். இரண்டு பிரதான சாலைகளின் இணைப்புச் சாலை அது. அந்தப் பகுதியில் பணிபுரிவோர் மதிய உணவுக்குப் பின் சிகரெட் பிடிக்க, கடலை மிட்டாய் சாப்பிட, பால் சர்பத் அருந்த, தொப்பையைக் குறைக்க எனப் பலரும் நடந்துவரும் சாலை. ஒப்பிடக் கொஞ்சம் மரங்கள் அடர்ந்திருக்கும். கார் ஜன்னலை மூடிக்கொண்டு தங்களுக்கான தனி உலகில் காதலித்துக் கொண்டிருந்தவர்கள் அரவம் கேட்டு எரிச்சலடைந்தனர். “பெரிய விபத்தா இருக்குமோ?” மண்டையப் பிளக்கும் வெயிலில் இளைஞர்கள் பேய் பிடித்தது போல் ஓடுவது அங்கிருந்தவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. சிலர் கால்களைப் பின்னோக்கி ஓடியபடி செல்ஃபி வீடியோ எடுத்தனர். காரணம், அவர்கள் முன்னே சென்ற ஜெர்மன் இறக்குமதி கார். அதன் பதிவு எண்.
கார் பிரதான சாலையை அடைந்து அங்கிருந்த நீச்சல் குள வளாகத்திற்குள் நுழைந்தது. காவலாளி பெரிய கம்பிக்கேட்டை இழுத்து மூடினார். ஓடிவந்த கூட்டம் உள்ளே நுழைய முடியாத கடுப்பில் மூச்சிரைத்தபடி நின்றுக்கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்துக்கொண்டிருந்தவர்கள் வண்டியை ஓரம் கட்டிவிட்டு வரிசையில் நிற்கத் தொடங்கினர். நீண்ட வரிசை. பால் சர்பத் கடை அண்ணன் தள்ளு வண்டியை நீச்சல் குளம் பக்கமாக நகர்த்திக் கடை போட்டுவிட்டார். சில யு-டியூப் சேனல்களும் பாயை விரித்தனர். கட் அவுட்டிற்கு பால் ஊற்றப்போய் கால் இடறி விழுந்து இறந்த பேச்சிமுத்துவின் மனைவி, ‘இது நம்ம இளநீர்க்கடை’ அக்காவும் QR code-ஐ நிமிர்த்தி வைத்து போணியைத் தொடங்கினார்.
காவலாளி குனிந்து மரியாதையுடன் கார் கதவைத் திறந்து சல்யூட் செய்தார். உள்ளே இருந்து வாயில் ரத்தக் கறையுடன் இறங்கிய குதிரை மரியாதையை ஏற்று தலையை ஆட்டியது. அதன் அளவிற்கு பெரிய குடையை விரித்து பவ்யமாக நடந்து குளத்திற்கு அழைத்துச்
சென்றார். கூடவே நான்கைந்து அடிமைகளும் இறங்கி பின்னால் நடந்தார்கள். அனைவரும் ஒரே சீருடை அணிந்திருந்தார்கள். நாட்டுக்குதிரை என்றாலும் ஹங்கேரிய குதிரை போன்று சடைவால், நடுமுதுகு வரை தலைமுடி, வெல்வெட் தோல், ப்ரௌன் நிறம், சாக்ஸ் அணிந்தது போல் பாதங்கள் மட்டும் வெள்ளை. வாயில் வடியும் ரத்தம் அங்கிருந்த பணியாட்களைப் பரவசத்தில் துள்ளிக் குதிக்க வைத்தது.
குளத்தில் இறங்கியவுடன், அங்கு நீராடிக் கொண்டிருந்த கருப்பு நரி நீந்திவந்து கட்டி அரவணைத்துக் கொண்டது. இந்தக் காலத்தில் இப்படியொரு நட்பா? குதிரை பிறர்மேல் காட்டும் அன்பிற்கு ஈடு இணையே இல்லை. நீச்சல் குளத்தைச் சுற்றி நின்ற பணியாளர்கள் நெகிழ்ந்து கண்கலங்கினர். காட்டில் உள்ள உறவினர்கள் குறித்து வழக்கமான நலம் விசாரிப்புக்குப் பின் பேசத் தொடங்கியது. “மது அருந்தலாமா? தண்ணீரில் தண்ணி அடிப்பது தனி சுகம்” என்றது நரி. “இந்த இடத்தில் சரி வராது. இங்கு என்மேல் அபிமானம் உள்ள முட்டாள்கள் இருக்கின்றனர். கொஞ்ச நேரத்தில் எப்படியாவது தாவிக்குதித்து வந்துவிடுவார்கள். Youtube கும்பல் வேறு உள்ளது.தேவையற்ற சர்ச்சையை உருவாக்கும். அதனை எதிர்கொள்ள நான் கதைகளை உருவாக்க வேண்டும். அதற்கு தனிக்குழு அமைக்க வேண்டும்.” என்றது குதிரை. நரி குளித்துவிட்டு ஓய்வெடுப்பதற்கு மனிதக் காதுகளை வெட்டி கோர்த்துச் செய்யப்பட்ட சாய்வு நாற்காலி ஒன்று கரையில் இருந்தது. அதில் யாரும் வந்து அமர்ந்துவிடக் கூடாது என நரியின் அடிமை ஒருவன் காவல் காத்துக்கொண்டிருந்தான். ஒவ்வொரு முறை பேசும்போதும் குதிரையின் கண்கள் சாய்வு நாற்காலி பக்கம் போய் வந்தன.
நீருக்குள் இருந்து தலையே வெளியே எடுத்த நரி, சிலுப்பிக்கொண்டே சாய்வு நாற்காலியில் அமர்ந்தது. அப்படியே நிர்வாணமாக நின்றுக்கொண்டிருந்த பெண்ணிற்கு கண்களால் சிக்னல் கொடுத்தது. அவள் பெரிய தட்டில் வெட்டப்பட்ட தலை நடுவில் ஓட்டையிட்டு, விலா எலும்பை ஸ்ட்ராவாக பொருத்திக் கொண்டுவந்தாள். வாயில் வடியும் ரத்தத்தைப் பார்த்து,”நீங்கள் சைவம் என்றல்லவா நினைத்தேன்” என்றது நரி.
“இப்போதெல்லாம் ரத்தம் இருந்தால்தான் பந்தயம் காணக் கூட்டம் வருகிறது. ரத்தத்தின் அளவுதான் பந்தயத்தில் ஜெயிப்பதற்கான அளவுகோல் என்று அமைப்பு உருவாக்கிவிட்டது. அவ்வளவு ஏன்.தூங்கும்போது கூட என் வாயில் ரத்தம் வடியும். இது ஜாக்கி ஐயாவோட உத்தரவு. என் போன்ற மற்ற குதிரைகளுக்கும் ரத்தத் தேவை அதிகம் இருப்பதால் புதிய தொழிற்சாலைகள் உருவாக இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியும். வளர்ச்சி பெருகும். விருப்பம் இருந்தால் நீங்கள் கூட முதலீடு செய்யலாம்”
“ம்ம்.. யோசிக்கிறேன்” பதில் சொல்ல விருப்பமில்லாமல் ஒரு வார்த்தையில் முடித்தது. குதிரையும் புரிந்துக்கொண்டு புன்னகைத்தது.
மண்டையில் இருந்த ரத்தத்தை உறிஞ்சுவதைக் கூட ஈரத் தலையை சிலுப்பி முகத்தில் வழிந்த நீரை உதறிவிட்டு எதிரொலிப்பில் மீண்டும் மீண்டும் ஒத்திகை செய்தது. இதைக் கவனித்த வெல்வெட் குதிரை, ‘காலம் காலமாக ஒத்திகையில் வாழ்க்கை நடத்தும் நமக்கு போட்டியாக இந்த நரிக்கும்பல் வந்துவிட்டதே’ என்று உள்ளுக்குள் புழுங்கியது.
அதற்குள் மின்சார, முள் வேலிகளைக் கடந்து அந்தக் கூட்டம் நீச்சல் குளம் அருகே நின்றுக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தது. தடுப்பு வேலிகளை அமைத்து உடனடியாக பிரதமரைப் பாதுக்காக்கும் பூனைப்படைகளை பீரங்கிகளுடன் வரவைத்து பாதுகாவலுக்கு நிற்க வைத்தனர். ஆரவாரத்தைக் கண்ட குதிரை லேசாகக் கனைத்தது. வெறி பிடித்து கத்திக்கொண்டிருந்தவர்கள் கனைப்புச் சத்தம் கேட்ட உடனே பேய் பிடித்து ஆடினர். பற்கள் உடைந்தது, சட்டைக் கிழிந்தது, நகங்கள் கடித்துத் துப்பப்பட்டது, துள்ளித்துள்ளி மண்டையால் வானத்தைப் பிளக்க வேண்டும் என்று வெறியானது. குதிரைக்கு இருக்கும் செல்வாக்கைக் கண்ட நரிக்கு எரிச்சல், பதற்றம். லேசாக ஊளையிட்டுப் பார்த்தது. நரிப்பக்கம் முகத்தை திருப்பிப் பார்த்தக் கூட்டம் நீ யாருடா கோமாளி என்று, குதிரையைக் கொண்டாடினர். கடுப்பில் வெறிகொண்டு ஊளையிட்டது. பத்து பைசாவிற்கு பிரயோஜனம் இல்லை.
ரத்தம் கொதித்து நரம்பிற்குள் பாய்ந்தது. உடலின் சூடு நீரில் பரவிக் கொதித்தது. உடனடியாக நரிகள் சங்கப் பிரதிநிதிக்கு போன் செய்து நான் குதிரைப் பந்தயத்தில் கலந்துக்கொள்ள வேண்டும், அதற்கான ஏற்பாடுகளை செய் என்று கட்டளையிட்டது. “எஜமானரே தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், குதிரைப் பந்தயத்தில் நரிகள் கலந்துக்கொள்வது சரிவராது. அதில் பல சட்டச் சிக்கல்கள் உள்ளது” என்று இழுத்தது. புரிந்துக்கொண்ட நரி “எதுக்கு நாம போய் குதிரைப் பந்தயத்தில் சேரணும். நாம் நரிப்பந்தயம் ஒன்றை உருவாக்குவோம்” என்றது. “நல்ல யோசனைதான் எஜமானரே, ஆனால் புதிதாக ஒரு பந்தயத்தை தொடங்கி அதை மார்க்கெட்டிங் செய்து இந்தக் கும்பலிடம் கொண்டு சேர்ப்பது எளிதில்லை. மேலும், குதிரைப் பந்தயத்திற்கு அவர்களை முழுசா பழக்கப்படுத்திட்டோம்” என்றது தயக்கத்துடன். அப்போ இதற்கு என்னதான் வழி?” சீறியது நரி.
“ஒரு வழி இருக்கு எஜமானரே”
“சீக்கிரம் சொல்” உற்சாகமடைந்தது நரி. நிர்வாணப் பெண்ணைக் கண்ணடித்து ‘இன்னொரு தலை’ என்றது. அடுத்த நிமிடம் தூரத்தில் ஒரு மனிதனின் அழுகுரல் கேட்டது.
“நரியைக் குதிரையாக மாற்றும் அறுவை சிகிச்சை முறை பிருஸ்டோனியா தேசத்தில் உள்ளது. கைதேர்ந்த மருத்துவர்கள் அங்குள்ளனர். நீங்கள் குதிரையாக மாறிப் போட்டியில் பங்கேற்கலாம். மீண்டும் பிளேடு போட்டு உங்களை நரியாக்கிவிடுவர்.”
மகிழ்ச்சியில் ஊளையிட்டது. இப்போது ஒத்திகை பார்ப்பதை ஒதுக்கிவிட்டு ரத்த மதுவை அருந்தியது. “சரி, இதற்கு எவ்வளவு செலவாகும்?”
“ஆயிரம் பேரின் வெட்டப்பட்ட வலது கை வேண்டும், இவ்வளவு குறைவான கட்டணத்திற்கு இந்த அறுவைச் சிகிச்சை வேறு எங்கும் கிடைக்காது”
“ம்ம்… உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்.
காட்டுக் கூச்சல் போட்டுக்கொண்டிருந்தவனின் நரம்பு வெடித்து ரத்தம் வெளியேறியது. நரம்பைப் பிய்த்து தூக்கிப்போட்டு ஆரவாரத்தைத் தொடர்ந்தான்.
இதற்குமேல் இங்கிருப்பது நம் உயிருக்கு ஆபத்து என்றுணர்ந்த நரி, குதிரையை அன்புடன் கட்டித்தழுவிப் பிரிந்தது. அந்தக் கும்பல்முன் குதிரையைக் கடவுள் போல் பாவிப்பதாக பாவனை செய்தது. இப்போது அந்தக் கும்பலுக்கு நரி மேல் குறைந்தபட்ச அன்பு உருவானது. முகத்தில் சிரிப்புடனும் அகத்தில் எரிச்சலுடனும் வெளியேறியது. சாய்வு நாற்காலியை மடக்கி முதுகில் சுமந்த அடிமை குதிரையை ஒருமுறை முறைத்துப் பார்த்தபின் அங்கிருந்து நகர்ந்தான்.
உடைந்துக் கிடந்த அபிமானியின் நரம்பை எடுத்த குதிரை, ரத்தத்தை ஊதி வெளியேற்றி, புகையிலையை நிரப்பி பற்றவைத்து கவர்ச்சியாகப் புகையை இழுத்து விட்டது. அந்தப் புகையைப் பிடிப்பதற்காக ஒட்டுமொத்தக் கூட்டமும் பாய்ந்தது. பூனை ஒருவன் பீரங்கியை அவர்கள்மேல் திருப்பினான். “நகரக்கூடாது” என எச்சரித்தான்.
குளத்தில் இருந்த மீன்கள் குதிரையைக் கண்டுக்கொள்ளவில்லை. மீன்கள் தன்னைக் கவனிக்கிறதா என்று பார்த்தபடியே புகையை விட்டது. குதிரை நீந்தும் இடத்திலிருந்து தள்ளி நின்று விளையாடின. சத்தம் கேட்கும்போது மேலே வந்து நீர் அருந்தின. அருந்தும் அலம்பல் சத்தம் கேட்டும் குதிரையின் தலை திரும்பியது. மீன்கள் நீருக்கடியில் போயின. குதிரையின் கண்கள் மீன்களிடமிருந்து அகலவில்லை. சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குதிரையின் கண்களில் இருந்து மீன்கள் மறையத் தொடங்கின. இப்போது மீன்களே தெரியவில்லை. குதிரையின் கண்களுக்கு என்ன ஆனது? மீன்கள் அங்குதான் நீந்திக்கொண்டிருந்தன.
குதிரைக்கு ஆச்சரியம். எப்படி இந்த மீன்கள் மறைந்தன? கடைசிப் புகையை இழுத்துவிட்டு நீச்சல்குள காவலாளியை அழைத்தது. கூனிக்குறுகி வந்து நின்றான். குளத்தின் வலது மூலையைக் காட்டி “உன் கண்களுக்கு மீன்கள் தெரிகிறதா? என்றது. “ஆம், நன்றாகத் தெரிகிறதே” என்றான். அதிர்ச்சியடைந்த குதிரை, சிறிதுநேரம் நிதானித்து வழியும் ரத்தத்தோடு வாயில் நீரை வேகமாகக் கொப்பளித்தது. பயங்கர ஆரவாரச் சத்தம். “இப்போது தெரிகிறதா பார்” என்றது. “என்ன அதிசயம், ஒரு மீனும் தெரியவில்லை” காவலாளி நடுங்கிக்கொண்டே வெளியேறினான்.
வலுவான அடிமைகள் நான்கு பேர் ஓர் ராட்சஸ மிதவை இருக்கையைக் குளத்தின் நடுவே வைத்துவிட்டு குதிரையின் நான்கு கால்களிலும் ஒவ்வொருவர் வீதம் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுச் சென்றனர். கம்பீரமாக இருக்கையில் அமர்ந்த குதிரை கனைத்துக்கொண்டே பேசத் தொடங்கியது.
“அற்புதப் பிறவிகளே ! நீங்கள் கடவுளைவிட மேலானவர்கள். உங்களுக்குத் தெரியாத விஷயம் என்று ஒன்றில்லை. உங்களைவிட அறிவுஜீவிகள் எந்தக் கண்டத்திலும் கிடையாது. உங்களிடம் இதேப்போன்று நான் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். உங்களுக்காக சேவை செய்வதே என் வாழ்நாள் லட்சியம். உங்கள் நரம்புகள் பற்றி எரிவதன் மூலம் சிந்தனை மேம்படும். உங்கள் வம்சம் செழிக்க வேண்டும். அதற்காக உங்களுக்கு ஒரு சிகிச்சை தேவைப்படுகிறது. நமது அடிமைகள் ஒரு தாளைத் தருவார்கள். அதைப் படித்து அப்படியே பின்பற்றுங்கள்.”
தாளை படித்தவுடன் அனைவரும் குளத்தைச் சுற்றி வரிசையாக நின்றனர். அனைவர் முன்பாகவும் ஒரு கத்தியுடன் கூடிய சில்வர் தட்டு வைக்கப்பட்டது. கத்தியால் தன் மண்டையைப் பிளந்து மூளையைத் தட்டில் வைத்தனர். குதிரை வாயைப் பிளந்தபோது மண்புழுக்களாகக் கொட்டின. அதனைப் பிடித்து எல்லா மூளைகள் மீதும் மண்புழுவை அடிமைகள் ஊர்ந்துப்போக விட்டனர். மண்புழுவின் அடித்தோலில் திகைப்பூண்டு மூலிகைத் திரவம் பூசப்பட்டிருந்தது. ஏற்கனவே இந்த அடிமைகள் ஒன்றுக்குப் பலமுறை செய்த சிகிச்சை இது. மனிதனின் ஒட்டுமொத்தக் கற்பனையாற்றலையும் பிம்பங்கள் கட்டமைப்பதற்காகப் பயன்படும் திரவம். சிறு துவாரங்களில் கூட நாக்கை நுழைக்க முடியுமா என்று கண்ணை உருட்டிக்கொண்டிருப்பர். எதிர்வினைகள், நோய்மைகள், அழிவுகள் என அத்தனையும் பாவனைகள் வழியாக பிம்பத்தில் நேர்மறையாக அடுக்க முடியும். அதன்வழி அதிகாரம் என்பது முட்டுச்சந்து.
மூளை தலையில் பொருத்தப்பட்டது. சற்றும் தாமதமில்லை. மண்ணைப் பிசைந்துப் பதமாக்கி செங்கல் செய்யத் துவங்கினர். கோவில் கட்டும் பணி தொடங்கியது.
அடிமைகளில் ஒருவன் குதிரையின் காதருகே வந்து, “திருவள்ளுவர் வசிக்கும் வீட்டைக் கண்டுபிடித்துவிட்டார்கள். கன்னியாகுமரி கடல் பாறையில்தான் குடித்தனம். ஒரு சின்னச் சிக்கல், அவர் வீட்டுக்கு போய்வர கண்ணாடிப் பாலம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஓரிரு மாதங்களில் முடிந்துவிடும். நீங்கள் கடலில் நீந்தி பழக்கம் இல்லாததால் இப்போது போகமுடியாது” முடிக்கும்போது அடிமையின் சத்தம் கொஞ்சம் அதிகமானது.
“சத்தமாக பேசாதே அடிமையே..!” சீறியது குதிரை. பம்மினான் அடிமை.
“கோவில் கட்டும் வேலை எப்படி நடக்கிறது என்றுப் போய் பார், சிகிச்சைக்குப் பிறகு எப்படி சிந்திக்கிறார்கள் என்பதை குறித்து வை. அதற்காக தனிக்குழுவை உருவாக்கு. அவர்களின் கிளுகிளுப்புக்கு வருடிக் கொடுப்பது போல் நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும். அப்புறம், இவர்களிடம் நான் திருக்குறள் படிக்கப்போகும் விஷயம் பரம ரகசியம். கசிந்தால் உனக்கு சம்பளம் கிடையாது.”
மண்ணில் பால் சர்பத்தையும், இளநீரையும் குழைத்து கலவை செய்துக் கொண்டிருந்தார்கள். திருசமாகப் பணித் தொடங்கியது. பாறைகள்முன் முளைத்திருந்த புற்களின் நுனியில் அங்கு நடப்பதைக் கவனித்தபடி இரு பட்டாம்பூச்சிகள் புணர்ந்துக்கொண்டிருந்தது. இரண்டிற்கும் ஒரே ஆடை. ஆரஞ்சு வண்ணத்தின் நடுவே வெள்ளைப் பாசி முத்துகள் ஆறினைக் கோர்த்து வளைத்து வைக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில் ஒருசிலர் சர்பத்தைக் குடித்துவிட்டு கிளம்பிவிட்டதாகத் தகவல் வந்தது. தூரத்தில் சென்றுக்கொண்டிருப்பது பார்வைக்குத் தெரிந்தது. காரணம் விசாரித்தபோது மிதவை இருக்கையின் அளவுதான் காரணமாம். “இருக்கையில் கவனம் இருக்கட்டும். மண்புழு வேலை செய்யாத மூளைகள் இருக்கக்கூடும்.” குதிரையின் கண்களுக்கு அவர்கள் மீன்களைப் போல் மறைந்துப்போனார்கள்.
மீனில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்த தவளை ஒன்று குளக்கரையோரம் நடப்பதைக்கண்டு சிரித்துக்கொண்டிருந்தது. வயிறு ஒட்டி, கண்கள் சிறுத்துக் காணப்பட்டது. தன் வாலில் இருந்த தங்க முடியை உருவி ஆட்டியது. குதிரையின் காலில் தவளையின் நாக்கு. தவளைத் தன் வாயால் கெட்டது.
மழை ஓய்ந்தபின் ஓய்வெடுக்க குதிரைக்குத் தனி அறை ஒதுக்கப்பட்டது. நிரம்பிய கருப்பில் வெள்ளைப் பாளங்களாக, கருப்பு நிறத்தை தீயில் உருக்கி, வழமையான கனவு தோன்றியது. தனது தாத்தா குதிரை முதலில் சுல்தான்களிடம் இருந்தது.துரைகள் சண்டையிட்டு வாங்கி முன்னூர் எனும் குளிர்தேசத்திற்கு கொண்டு வந்தார்கள். பல தேசங்களில் இருந்தும் நண்பர்கள் இறக்குமதி ஆனார்கள். போலோ விளையாட்டிற்காக பெர்சியாவில் இருந்து வந்தவர்களுக்கே நிறைய புற்கள் தின்னக் கிடைத்தது. தேயிலைத் தோட்ட முதலாளிகள், துரைகளோடு போலோ ஆடிய விளையாட்டு கனவாக தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கிறது. அதில் இருந்த நேர்மை தூக்கத்தைக் கலைத்துப் போட்டது. தாத்தா வாயில் விஷக்குப்பியோடு மூச்சை இழுத்தபடி நின்றுக்கொண்டிருந்தார். அப்படித்தான் இன்றும் நடந்தது.
சிலநிமிடக் குற்றவுணர்ச்சி தோன்றும்போது, தன்மீது பணம் கட்டிய வியாபாரிகள் சிரித்துக்கொண்டு சுற்றி நின்று பணமழை பொழிவர். பற்கள், நகங்கள், பணத்தாள்கள் என எங்கிலும் இரத்தக்கறை. அவர்களின் கால்களில் விழுந்து மீண்டும் ஒருமுறை சத்தியப் பிரமாணம் செய்யும். “என் வாயில் இருந்து பொய்யைத் தவிர வேறு எதுவும் வராது, பிடிக்கவில்லை, மோசம் என்ற வார்த்தைகளை அகராதியில் இருந்து அழித்துவிடுகிறேன், உலகம் பொழுதுபோக்கு என்ற பொறிக்குள் சிக்கிவிட்டது என்பதை தினமும் மந்திரம் போல் சொல்லிக்கொள்வேன். உதிரிகள் மீனைப்போல் மறைவதைக் கூட இனி காணமாட்டேன். மண்டையில் இருந்து ரத்தமது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன்.” சொல்லிவிட்டு கடைசி வரியின் முரணை நினைத்து உள்ளுக்குள் புன்னகைத்தது.
கரடுமுரடாக இருந்த கல் ஒன்று கூழங்கல்லாக மாறுவது போல் காலம் பொறுமையாக அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தது. இருள், வெளிச்சத்தை சலிக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது. செடிகள் மரங்கள் ஆகின. புயலில் சாய்ந்தன. சருகாகின. செடி ஒன்றின் இலைகளைக் கடித்துக்கொண்டிருந்த வெட்டுக்கிளி ஒன்று பறந்து சென்று மறைந்தது. மாற்றம் இல்லை என நாக்கில் நரம்பில்லாமல் சொல்லக் கூடாது. ஆம், கூட்டம் குறைவாக இருந்தது. நரம்புகள் கிழிக்கப்படவில்லை. தீ பட்டதற்கான அடையாளம் இல்லை. அங்குக் கட்டப்பட்டிருந்த கோயிலில் வழிபாடு நடந்துக்கொண்டிருந்தது. பாறைகள்முன் முளைத்திருந்த நீண்ட புற்கள் தற்போது இல்லை. மூன்று மனிதத் தலைகள் சேர்ந்து இருப்பதுப் போன்ற காட்சிப்பிழை. மூன்றும் வட்டவடிவ இலைகள். அதன் நடுவில் பாசி முத்துகளை அணிந்த பட்டாம்பூச்சிகளின் புணர்தல் இன்னும் தீரவில்லை. தவளையின் வயிற்றில் இரை இருந்தது. சிலை மழையில் கரைந்துக்கரைந்து சிறியதாகிக்கொண்டு வந்தது. அடையாளம் மங்கத் தொடங்கியது.
நரிகள் மனிதர்களோடு சமமாகத் திரியும் காலம் ஒன்று வந்தது. நரியைத் தனக்கு இணையாக அல்லது தனக்கு ஒருபடி கீழாக எண்ணத் தொடங்கினான். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு விதைத்த விதை முளைவிடத் தொடங்கியது. ஒரு பெருவெள்ளத்தில் கோவிலும் சிலையும் அடித்துச் செல்லப்பட்டது. இரத்தக் கறைகள் மறைந்தது. குளத்தில் மீன்களுக்கு கால்கள் முளைத்து, கரையேறி நடை பயிற்சிக்காக சாலைக்கு வந்தன. சாலையின் வலது பக்கத்தில் இருந்த சுவரில் கஞ்சா புகைத்தபடி ஓர் ஓவியன் கிறுக்கிக்கொண்டிருந்தான். அவன் வரைந்ததில் எலும்பும் தோலுமான வெளிறிப்போன குதிரை புல் மேய்ந்துக்கொண்டிருந்தது. கால் தரையில் பட்டால் பறவையின் சப்தம் கேட்கும் காலனி அணிந்த சிறுவன் அவசரத்தை அடக்க முடியாமல் குதிரையின் மீது சிறுநீர் கழித்தான். கஞ்சா அணைந்ததா என்று தெரியவில்லை. திரும்பி நின்றுகொண்டிருந்தான்.
