நாய்க்குட்டி/-சௌவி

மாநகரத்துக்குள்ளான
முக்கியச் சாலையில்
சிக்னலில் நிற்கும் வாகனங்களுக்கிடையே
புகுந்து புகுந்து
ஊசி விற்கும் சிறுமி
தன்னைப் பின்தொடர்ந்து வந்த
நாய்க்குட்டியைக் கண்டதும்
பதைபதைப்போடு அவசரமாய் எடுத்து
மார்போடு அணைத்துக்கொள்கிறாள்
சிக்னலில் பச்சை விழுந்து
வாகனங்கள் நகரத்தொடங்குகின்றன
ஹார்ன் சப்தங்களோடு.
ஹார்ன் சப்தங்கள் கேட்காத
மனநிலையில்
நாய்க்குட்டியை அணைத்திருக்கும்
சிறுமியின் உலகத்தில்
இந்தக் கணத்தில்
நாய்க்குட்டியைத் தவிர யாருமில்லை
ஏந்தப்பட்டிருக்கும் நாய்க்குட்டியின் உலகத்தில்
அச்சிறுமியைத்தவிர யாருமில்லை