நன்றிக்கடன்/கணபதி

என் வாழ்வில் 1982ஆம் வருடம் நான் டெல்லியில் பணிபுரியும்போது நிகழ்ந்த உண்மை நிகழ்ச்சி இது.

பைசா நஹி சாஹியே சாப்

ஒரு ஞாயிறன்று காலையில் (டெல்லி) மலைமந்திர் முருகனைத் தரிசித்து விட்டு Outer Ring ரோட்டில் வீடு செல்ல பஸ் ஏறக் காத்திருந்தேன். என்னைக் க்ராஸ் செய்துகொண்டு கையில் சூட்கேஸ்ஸுடன் நடந்து சென்ற ஒரு சர்தார்ஜி சிறிது தூரத்தில் கீழே விழுந்தார்.

எழுந்திருப்பார் என்று நினைத்து பஸ் ஸ்டாப்பில் நின்று பார்த்தேன். எழவில்லை. ஓடினேன் அவரிடம். மயக்கமாய்க் கிடந்தார். மூச்சு வந்து கொண்டிருந்தது.

ஒரு ஆட்டோக்காரரும் நான் ஓடி வரும்போது என்னுடன் மெதுவாக வந்தார். “க்யா ஹுவா சாப்? குச் கர்னா க்யா.”

“ஆஸ்பிதால் ஜானா ஹை. கஹான் ஹே அச்சாவாலா அஸ்பிதால்.” எனக்குத் தெரிந்த ஹிந்தியில் கேட்டேன்.

அவரும் நானும் சேர்ந்து நேரு ப்ளேஸ் சென்று அங்கு ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். “பைசா நஹி சாஹியே சாப்” என்று அவர் பணம் வாங்காமல் சென்றுவிட்டார்.

Are you his employee

லாலா லஜ்பத் ராய் ரோட்டில் இருந்த அந்த ஆஸ்பத்திரி பெயர் இப்போது நினைவில் இல்லை.

டாக்டர் ஒருவர் இவரைப் பார்த்து விட்டு இவர் கோட் , டை, ஷர்ட் கழற்றி, உள்ளே டெஸ்டுக்கு ட்ராலியில் வைத்து கூட்டிச் சென்றார். அரைமணி நேரம் ஆனது.

இன்னொரு டாக்டர் என்னிடம் வந்து “அவருக்கு ஹார்ட் அட்டாக். உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும். நீங்கள் யார், அவரிடம் வேலை செய்கிறீர்களா, உடனே ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அவர் வீட்டு மனிதர்கள் கையெழுத்துப் போடவேண்டும். அவர்களுக்குத் தகவல் சொல்லி வரச்சொல்லுங்கள்.”

“நான் சம்பந்தமில்லாதவன், விழுந்ததைப் பார்த்து கூட்டி வந்தவன்.”

“அப்படியா, நான் சீஃப்ஃபிடம் கேட்கிறேன்.”

……

“சீஃப் உங்களைக் கூப்பிடுகிறார்”.

நான் சர்தார்ஜியின் துணிகள், பெட்டி இவற்றைக் கொண்டு சென்றேன்.

இவர் ஒரு ஆந்திராக் காரர். என்னைப் பார்த்ததும் விவரம் கேட்டார்.

“இவர் ஐடெண்டிடியாவது வேண்டுமே. அவர் பெட்டியைத் திறந்து ஏதாவது பர்ஸ் இருந்தால் எடுங்கள்.”

காப்பாற்றுங்கள்

நல்லவேளை பெட்டிசாவி கோட் பாக்கெட்டில் இருந்தது. திறந்தால் அதில் ஒரு பர்ஸ் இருந்தது. அதில் பாஸ்போர்ட் இருந்தது. அவர் ஒரு ப்ரிட்டிஷ் பிரஜை. இன்னொரு சின்ன பையில் இரண்டு பர்ஸ் இருந்தன. ஒன்றில் ப்ரிட்டிஷ் கரன்சி. இன்னொன்றில் இந்தியப்பணம். சில க்ரெடிட் கார்டுகள் இருந்தன. அவற்றில் ஒன்று சிடிபாங்க். மற்றது நினைவில் இல்லை. அந்தக் கார்டின் பின்னே லண்டன் சர்விஸ் நம்பர் ஒன்று இருந்தது.

அந்த நம்பருக்கு டாக்டர் போன் போட்டு என்னைப் பேசச் சொன்னார். நான் பேசியதில் அவர் ஒரு முக்கியமான கஸ்டமர் என்றும், அவருக்கு அதிகமான லிமிட் இருக்கிறது என்றும் சொன்னார்கள்.

நான் டாக்டரிடம் நீங்கள் விவரம் சொல்லுங்கள் என்றேன். அவர் பேசி நிலைமையைத் தெரிவித்தார். சிறிது நேரம் பேசினார். இவர் தனது விலாசம், தனது க்ரெடிட் கார்டு நம்பர் தெரிவித்தார். அவர்கள் “இவர் கார்டில் நீங்கள் இந்த லிமிட் உள்ளவரை வைத்தியம் செய்யுங்கள். செய்துவிட்டு எங்களுக்குச் சொல்லுங்கள். எங்கள் சிடிபாங்க் டெல்லி ஆஃபீசில் அந்த பில்லைக் கொடுத்தால் உங்களுக்குப் பணம் கிடைக்கும் உடனே. நீங்கள் உடனே ஆபரேஷன் செய்து அவரைக் காப்பாற்றுங்கள்.”

டாக்டர் அதற்குள் சர்தார்ஜிக்கு ஆபரேஷன் தொடங்கட்டும் என்று போன் பேசும்போதே சொல்லிவிட்டார். எனது பாங்க் விலாசம் வாங்கிக் கொண்டார்.

“நீங்கள் செல்லலாம். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். மறுபடி தேவைப் பட்டால் நாங்கள் அழைக்கிறோம். சிடிபாங்கில் பில் க்ளெய்ம் செய்யும்போது நீங்கள் தேவைப்பட்டால் வரவேண்டும்.”

என்னை டாக்டர் அழைக்கவில்லை. நல்லபடியாக ஆகியிருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். அந்தப் பெரியவரைப் பற்றி வேறு தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

படா பிசினஸ்மேன் ஹோகா

ஏழெட்டு மாதம் கழித்து ஒரு நாள் மாலை நான் HSBCயில் ஒரு LC பில்லுக்கு பேமெண்ட் வாங்கிக் கொண்டு, பெரிய அமௌன்டாக இருந்ததால், மெயின் ப்ராஞ்சில் HSBCயின் RBI செக்கைக் கொடுத்து அன்றே க்ரெடிட் வாங்குமாறு கூறிவிட்டு மதியம் ஆஃபீஸ் வந்தேன்.

யாரோ என்னைத் தேடிக்கொண்டு வந்து மேனேஜரிடம் விசாரித்தனர் என்று இந்தர் சிங் நேகி என்ற ஊழியர் தெரிவித்தார். “லக்தா ஹை குச் படா படா பிசினஸ்மேன் ஹோகா.”

வெளியே சென்றிருந்த மேனேஜர் வந்ததும் என்னைப் பார்த்து, அவர்கள் என்னைப் பார்த்தனரா என்று கேட்டார். நானும் அப்போதுதான் வந்தேன் என்றேன். தன் கேபினுக்குள் அழைத்துச் சென்றார்.

“கணபதி, யார் இவர்கள். எதற்கு உங்கள் பெயரைச் சொல்லிக் கேட்டார்கள். நாளைக்குக் காலையில் வருவார்கள். நீங்கள் அவர்களிடம் பேசிவிட்டு என்னிடம் சொல்லுங்கள். மிகப் பெரிய மனிதர்களாய்த் தோன்றுகிறது. எதாவது நமக்கு பிசினஸ் கிடைக்குமா என்று நாகரீகமாகத் தோன்றினால் கேட்டுப் பாருங்கள்.”

அடுத்த நாள் வந்தார்கள். கஸ்டமர் சோஃபாவில் அமர்ந்து பேசினோம். நான் அவர்களுக்கு மில்க் ஷேக் வரவழைத்துக் கொடுத்தேன். ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு உங்களுக்குத் தெரியுமா என்றார்கள்.

தெரியாது என்றேன்.

“ஆனால் அவர் உங்கள் பெயரைச் சொல்கிறாரே.”

“எங்கே இருக்கிறார் அவர் ?”

“அவர் கர்னாலில் இருக்கிறார்.”

“அங்கே எனக்கு யாரையும் தெரியாது. ஒருவேளை இந்த ப்ராஞ்ச் கஸ்டமரா. சிலருக்கு என் பெயர் தெரியும். அவர் இங்கு வந்திருக்கிறாரா உங்களுடன்?”

“நீங்கள் அவரைப் பார்த்து இருக்கிறீர்கள். நீங்கள் பார்த்த பிறகுதான் அவர் லண்டன் போனார்.”

லண்டன் என்றதும் எனக்கு நினைவு வந்துவிட்டது.

“அந்த டாக்டர் என் நம்பர் கொடுத்தாரா.”

“இல்லை. எங்கள் தந்தைதான் அவர். நீங்கள் நேருப்ளேஸ் ஆஸ்பத்திரியில் கொண்டு போய் அட்மிட் செய்தீர்கள். அவருக்கு நீங்கள் கடன் கொடுத்தீர்களா?”

“இல்லை. அவரது ஹாஸ்பிடல் பில் கூட சிடிபாங்க்தான் கொடுத்தார்கள்.”

“ஆம். எங்கள் தந்தையை நீங்கள் காப்பாற்றி இருக்கிறீர்கள். அவர் இப்போது கர்னாலில் ஓய்வுக்காக வந்துள்ளார். நாங்கள் உங்கள் மேனேஜரிடம் நேற்று இரவு பர்மிஷன் வாங்கிவிட்டோம். எங்கள் தந்தை உங்களைப் பார்த்து நன்றி தெரிவிக்க அழைக்கிறார்.”

போயிட்டு வாங்க சார்

மேனேஜர் உள்ளே வந்தவர் என்னைப் பார்த்து “நீங்க அவங்களோட போயிட்டு வாங்க..” என்றார்.

பெரிய வெளிநாட்டுக்கார் அது. 2 மணி நேரத்தில் கர்னால் சென்று விட்டோம்.

அந்தப் பெரியவர் முடியாமல் எழுந்தார். என் கையைப் பிடித்து சோஃபாவில் தன் பக்கத்தில் என்னை உட்காரவைத்து என்னை இறுகக் கட்டிக் கொண்டார்.

அவர் மனைவி எடுத்து வந்த ஸ்வீட்டை எனக்கு ஊட்டிவிட்டார். அவர் லண்டனில் பல கம்பெனிகளுக்கு ஓனராம். அமெரிக்காவிலும் ஆறு கம்பெனிகளில் டைரக்டராம். நான் செய்தது மிகப்பெரிய காரியம் என்றார்.

அவருடன் அவர் குடும்பத்தினர் 10 பேருடன் அவர் வீட்டு டைனிங் ஹாலில் சாப்பிட்டேன். அவருக்கும் அவர் மனைவிக்கும் நமஸ்காரம் செய்தேன். அவர் பிள்ளைகளுக்கும் நமஸ்காரம் செய்தேன். எல்லோரும் என்னை விட மூத்தவர்கள்.

அவர்கள் மாலை வரை இருக்கச் சொன்னார்கள். மாலையில் பெரியவர் கோட் போட்டுக் கொண்டு கிளம்பினார், என்னை அனுப்பத்தான் வெளியில் வருகிறாரோ என்று தோன்றியது.

ஸ்கூலுக்குப் போகலாம்

நானும் நின்றேன். என் கையைப் பிடித்து மெதுவாக நடந்து காரில் ஏறினார். நான் வெளியில் நின்றிருந்தேன்.

நீங்களும் ஏறுங்கள் என்றார். ஏறினேன். இன்னும் இரண்டு கார்களில் அவர் குடும்பத்தினர் வந்தனர்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. “ஸார், நான் டெல்லி செல்லவேண்டும்” என்றேன்.

அவர் பையன் என்னிடம் “உங்களை டெல்லி அழைத்துச் செல்கிறேன் நான். இப்போது என் அப்பாவின் ஸ்கூல் செல்கிறோம் அவர் படித்த பள்ளி அது. ஒரு மணி நேரத்தில் டெல்லி கிளம்பலாம்” என்று கையைத் தொட்டு மெதுவாகச் சொன்னார்.

பள்ளியில் நடந்த சிறு கூட்டத்தில் பெரியவர் பேசினார். “நான் படித்த இப்பள்ளிக்கு இவ்வருடமும் நான் வருவதற்கு ஆண்டவன் அருள் புரிந்துள்ளான்.

ஆனாலும் நான் இந்த வருஷம் இங்கு வருவதற்குக் காரணம் கடவுள் இந்த நல்ல மனிதர் மூலம் என்னை டெல்லியில் காப்பாற்றியதுதான். நாங்கள் சம்பாதிப்பது வியாபாரத்திலும் தொழிற்சாலையிலும் தான். இந்த தடவையாவது நான் இப்பள்ளிக்கு வருடாவருடம் தரும் பணத்தை இந்த நல்ல மனிதர் கையால் தருவதற்குத் தான் இவரை இங்கே அழைத்து வந்துள்ளேன்.”

ஒரு கவரில் இருந்த செக்கை என்னிடம் கொடுத்து அந்த ஸ்கூல் ப்ரின்சிபாலிடம் கொடுக்கச் சொல்லிக் கொடுத்தார்.

“எல்லோருக்கும் வணக்கம். நான் ஒரு சாதாரண மனிதன். எனக்கு மாத வருவாய் ரூபாய் 1050. இத் தொகை என் இரண்டு வருடத் தொகை. இது போன்ற ஒரு தகுதியை ஆண்டவன் எனக்கு வழங்குவானா தெரியவில்லை. மிகுந்த மனமகிழ்ச்சியுடன் நான் இதை இப்பள்ளியில் படிக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் இப்பெரியவரின் குடும்பத்தின் ஆசியாகக் கொடுக்கிறேன்.”

வாங்கிக்கொண்ட ப்ரின்சிபால் நம்ப முடியாமல் செக்கையே பார்த்தார். அப்பெரியவர் “நான் இந்த ஆண்டு முதல் இப்பள்ளிக்கு ரூபாய் 25000 ஒவ்வொரு வருடமும் தருவேன். என்னால் வர முடியவில்லை என்றால் என் மருமகள் இதைத் தருவாள்” என்றார்.

ஓரு ஸ்வீட் பாக்ஸ் எடுத்து பிரின்சிபாலுக்குக் கொடுத்தார் பெரியவர், இன்னொரு பாக்ஸ் எடுத்து பிரின்சிபாலிடம் கொடுத்து என்னிடம் கொடுக்கச் சொன்னார். நான் எழுந்து வாங்கிக்கொண்டேன்.

பாக்ஸுடன் ஒரு கவரும் கீழே இருந்தது. அக்கவரில் என் பெயரில் ரூ.25000க்கான செக். எனக்கு கண் கலங்கி விட்டது.

அக்கவரை பெரியவரிடம் கொடுத்து நான் பணத்துக்காக செய்யாத ஒன்றுக்காக பணம் பெறுவது என்னால் முடியாது என்றேன்.

பெரியவர் யோசித்தார். பெரிய பையனுடன் ஆலோசனை செய்தார். நான் உஷார் ஆனேன்.

டெல்லிக்கு வந்து என் வீட்டில் கொடுக்கலாம் என்று யோசிக்கின்றனரோ என்று தோன்றியது.

பெரியவர் மீண்டும் செக்கை நீட்டி வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். “உங்களுக்காக வாங்கிக் கொள்கிறேன்” என்று சொல்லி செக்கை வெளியே எடுத்து அங்கிருந்த போர்டைப் பார்த்து ஸ்கூல் பெயரை செக்கின் பின்னே எழுதி எண்டார்ஸ் செய்து பெரியவரிடம் காட்டிவிட்டு அச்செக்கை பிரின்சிபாலிடம் கொடுத்து, இந்தப் பெரியவரின் பெயரில் ஒரு எண்டோமெண்ட் ஆரம்பித்து வருடாவருடம் வரும் வட்டியில் இருந்து மாணவர்களுக்குப் பரிசுகள் கொடுங்கள்” என்று கொடுத்தேன்.

பெரியவர் கண்ணில் இருந்து நீர் வந்து கொண்டே இருந்தது.

அவரது சின்ன பையனின் மனைவி என்னிடம் வந்து கைகுலுக்கிக் கொண்டே சொன்னார் “நான் பெரியவரிடம் இந்த ஆண்டு 50000 ரூபாய் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அவர் இதுவரை வருடத்துக்கு 10000 ரூபாய் மட்டுமே டொனேஷன் செய்வார். நீங்கள் இங்கே வந்ததனால் எப்படியோ எங்கள் கோரிக்கை நிறைவேறியது, நானும் இப்பள்ளியில் டீச்சராக இருக்கிறேன்” என்று கூறி அவர் தனியே ஒர் ஸ்வீட் எடுத்துக் கொடுத்தார்.

அன்று இரவு என்னை என் வீடுவரை அந்த ஃபாரின் காரில் கொண்டுவந்து விட்டார் அவரது மகன்.

“காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”
*

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
**

3 Comments on “நன்றிக்கடன்/கணபதி”

  1. சர்தார்ஜிகள் மிகவும் மனிதாபிமானம் கொண்டவர்கள் என்பதை 1989-92 இல் டில்லியில் பணியாற்றிய காலத்தில் நான் அனுபவித்திருக்கிறேன். உங்கள் அனுபவமும் அதை உறுதி செய்கிறது.

    இதுபோன்று உதவிடும் நல்லுள்ளம் உங்களுக்கு இருந்ததால்தான் அவரை நீங்கள் காப்பாற்ற முடிந்திருக்கிறது. அவர் சார்பாக மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நன்றி.

    மற்ற நண்பர்களுக்கும் இதுபோன்ற நல் அனுபவங்கள் நடந்திருக்கலாம். அதைத் தயக்கமின்றி எழுதவேண்டும். குறைந்தபட்சம் அவரவர் வீட்டுக் குழந்தைகளுக்காவது நிச்சயம் பயன்படும்.

    1. தங்களுக்கு நன்றிகள்.

      யாரோ ஒருவருக்கு யாரோ காலத்தில் உதவியதற்கு நீங்கள் நன்றி சொல்கிறீர்கள் என்றால் அது உங்களது உன்னத பண்பைத் தெரிவிக்கிறது.

      என் அனுபவத்தை தாங்கள் படித்ததற்கும் அதற்கு இத்தகைய ஒரு பின்னூட்டம் அளித்ததற்கும் நான் அல்லவா நன்றி கூற வேண்டும்.

      நெஞ்சத்தில் கொஞ்சம் ஈரத்தோடு எப்போதும் இருப்பதே அனைத்தறன், ஆகுல நீர பிற.

      இந்த ஈரத்தைக் காயாமல் பார்த்துக் கொண்டு இருப்பதே நான் செய்தது. நாம் செய்யும் அனைத்து நல்லதும் கெட்டதும் இறைவனுக்குச் செய்வதாகும். நாம் காணக் கூடிய இறைவன் மனித வடிவில்தான் தென்படுகிறான்.

      N Ganapathy Subramanian.

  2. ‘கங்கை இன்னும் வற்றவில்லை’…என்ற பழைய கதை பழைய கதை நிழலாடுகிறது. அது வேறு கதை. ஆனால் ‘கங்கை வற்றவே வற்றாது’ என்பதே உண்மை. ஏனெனில் இது நிஜம். அற்புதமான மாமனிதர்கள் இவர்கள் அனைவருமே.

Comments are closed.