
விசா – 1 – கபிலவிசாகன் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)
விசா – 2 – கபிலவிசாகன் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)
பார்க்கில் இருட்டாகத் தான் இருந்தது. ஒரு பக்கம் மட்டும் வெளிச்சம் இருந்தது. சுதாவின் அப்பா தடுக்கித் தடுக்கி நடப்பதைப் பார்த்த நந்துவின் அப்பா, “வாரும் அங்கே ஒரு பெஞ்ச் இருக்கு. அங்கே போய் பேசலாம்” என்றார்.
“உம்.”
“என்ன ஆச்சு, உடம்பு சரியில்லையா, சாஸ்திரி நிறைய சம்பாவனை கேட்டுட்டாரா. அவர் ஃபோன் நம்பர் இருக்கா, வரச் சொல்லுங்கோ, நான் அவருக்கும் சேர்த்து பணம் தரேன். எங்க சாஸ்திரிக்கு எவ்வளவு தர்ரேனோ அதையே இவருக்கும் தரேன்.”
“உம்.”
கையைப் பிடித்து அழைத்துச் சென்று சிமெண்ட் பெஞ்சில் உட்கார வைத்தார். “இங்க ரொம்ப இருட்டா இருக்கே, பூச்சி பொட்டு கடிச்சிடப் போறது. வாரும் வெளிச்சத்துக்குப் போகலாம்.”
சுதாவின் அப்பா நந்துவின் அப்பா காலில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். பதறிப் போன அவர் “என்னதான் ஆச்சு, மூத்தவர் இளையவர் காலில் விழுவது மகாபாபம்” என்று தொட்டு எழுப்பினார்.
இவர் அவரைக் கட்டிக் கொண்டு குலுங்கினார்.
“அண்ணா, என்னை மன்னிச்சிடுங்கோ, எனக்கு ரொம்ப பயமாயிருக்கு. இந்த இருட்டு மாதிரியே நம்ம குழந்தைகளோட எதிர்காலமும் இருட்டா ஆயிடுமோன்னு பயமாயிருக்கு. எங்க குலதெய்வமான ஸ்வாமிமலை சுப்ரமண்ய ஸ்வாமிகிட்டே இந்தக் கல்யாணம் நன்னா நடத்திட்டியானா, கோவிலுக்கு வந்து காவடி எடுக்கிறேன்னுட்டு வேண்டிண்டேன். இருந்தாலும் பயமா யிருக்கு.”
“என்ன ஸ்வாமி, ஃபினான்சியல் ப்ராப்ளமா. நமக்குள்ள என்ன, ஏதாயிருந்தாலும் சமாளிச்சுக்கலாம். நந்துவும் அமெரிக்காவில வேலை செய்யறதுனால எங்களுக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை. நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணா அவனும் ஒண்ணும் சொல்ல மாட்டான். மனசை விட்டுச் சொல்லுங்கோ சம்பந்தி.”
“அது இல்லை ஸ்வாமி. வந்து… வந்து… எப்படிச் சொல்றதுன்னே தெரியல்லே.”
“ஹாலுக்குத் தரணுமோ. ரெண்டு லட்சம் தரட்டுமா.”
“ஸ்வாமி அதெல்லாம் வேண்டாம். பணத்துக்கு எங்கள்கிட்டயும் பிரச்சினை இல்லை. மாமியும் பெரிய வேலையில்தானே இருந்தா. பகவான் புண்ணியத்தாலே அந்த மாதிரி இல்லை எங்க நிலைமை.”
“நீங்க நிறுத்தாம அழறதை என்னால பாக்க முடியல்ல. நானோ நந்துவோ ஏதானும் தப்பு செஞ்சுட்டோமா. ஒண்ணும் புரியாம நான் திண்டாடுறேனே. நந்துவைக் கூப்பிடட்டுமா.”
“இல்லை இல்லை. உங்கள்ட்டேயோ நந்தகுமார்ட்டயோ எந்த புகாரும் இல்லை. ரிசப்ஷன் முடிஞ்சதும் என் பொண்ணு சொன்னாளே, அதைக் கேட்டதும் உங்க கண்லயும் தண்ணி, என் கண்லயும் தண்ணி. என் கஷ்டத்தை நீங்க புரிஞ்சுட்டேளே. நான் பாக்கியம் செய்தவன். இது அதைவிட மோசம்.”
“என்ன உங்க பொண்ணு தாலி கட்டிக்க முடியாது, நந்துதான் கட்டிக்கணும்னு சொல்லி இருப்பா. இந்தக் காலத்தில எல்லாப் பொண்ணுமே இப்படித்தான் பேசுவா. அவாளுக்கு கல்யாணம் ஆறவரைக்கும் நமக்கு குழந்தைகளை எப்படி வளத்திருக்கோம்னு புரியாது.
“என் பையன் மட்டும் என்னவாம். நேத்து ரிசப்ஷன்ல சுதாவோட ஃப்ரெண்டை ரொம்பப் பிடிச்சிருக்குன்னு சுதா கிட்ட சொல்லும்போது யாரோ எங்காத்து சொந்தம் கேட்டுட்டு வந்து “இவன் எப்படியெல்லாம் அமெரிக்காவுல வாழ்றானோ, எதுக்கு இவனுக்கெல்லாம் கல்யாணம் பண்றீங்கன்னு” மூஞ்சில காறித் துப்பாத குறையா பேசிட்டுப் போனா ஒரு மாமி.”
“இல்லை ஸ்வாமி, இவள் வ்ரதம் வேண்டாம்கிறா, காசி யாத்திரைக்கு போய்ட்டு நந்து திரும்பும்போது போய்க் கூப்பிட மாட்டாளாம். அம்மி மிதிக்க மாட்டாளாம். அருந்ததின்னா அது ஒரு ஒரு கோஸ்டாம். பாலிகை எல்லாம் யூஸ் பண்ணக் கூடாதாம். க்ரோ க்ரீன் க்ரூப்லேந்து ஆயிரம் மரக்கண்ணு வரதாம். அதை எல்லாருக்கும் இவளே தன் கையால விநியோகம் பண்றதுதான் புண்ணியமாம். இந்தக் காஞ்சிப் போன நாட்டுக்கும் மரம் வளர்ப்பது நல்லதுன்றா.”
“இதையெல்லாம் நான் அப்படியே எங்காத்து சாஸ்திரிகள்ட்ட சொன்னதும் அவர் கோவிச்சுண்டு “நீங்கதான் பெரியவா இருக்கேளே. அது போதும். அக்னி வளர்க்க வேண்டாம். உங்க பொண்ணை அந்தப் பையனுக்குத் தாலி கட்டச் சொல்லி நீங்க எல்லாரும் அட்சதை போடுங்கோ. எனக்கு ஒரு சம்பாவனையும் வேண்டாம். சாஸ்திரி கிட்ட எதைக் கேட்பதுன்னு தெரியாத நீர் என்ன மனிதர் காணும்” என்று திட்டிட்டு கோபமாகப் போய்விட்டார்.
“உங்க சாஸ்திரிகிட்டே சொன்னா அவரும் போயிடப் போறாரேன்னு ரொம்ப பயமா இருக்கு.”
“எங்க சாஸ்திரிகளும் எங்களுக்குத் தூரத்துச் சொந்தம். ஆனாலும் நம்மகிட்ட ஒண்ணும் சொல்லாம பிறகு ஊருக்கே சொல்லிட்டார்னா நமக்கு அவமானம்தான் மிஞ்சும். வெளியில தலைகாட்ட முடியாது.
“என்ன பண்றதுன்னு யோசிப்போம். எதை வேண்ணா நிறுத்துவோம், ஆனால் கல்யாணம் நிக்கக் கூடாது. யோசிப்போம் என்ன பண்ண முடியும்னு. நாம ரெண்டு பேருக்குமே குழந்தைகளை வளர்க்கத் தெரியல்லே.
“சின்ன வயசில செல்லம் கொடுத்து சரியா வளர்க்காம தோளுக்கு மேல வளர்ந்ததும் இப்படி அவங்க இருப்பதைப் பார்த்து எப்படி நம்மால அந்தக் குழந்தைகளை தப்பு சொல்ல முடியும். யோசிப்போம். எல்லாத் தப்பும் நம்மகிட்டன்னா இருக்கு.”
இரண்டு மணி நேரம் இருவரும் வேறு ஏதும் பேசவில்லை.
நந்துவின் அம்மா ஹாலில் இருந்து தேடி வந்தவர் இவர்களைப் பார்க்கில் பார்த்ததும் “மணி ராத்திரி பன்னிரண்டு ஆறது. தூங்க வேண்டாமோ. கார்த்தால நாலு மணிக்கு எழுந்தாத்தானே சரியா இருக்கும். வாங்கோ. மாமா நீங்களும் போய்ப் படுத்து உறங்குங்கோ, காலையில எல்லாம் பேசிக்கலாம்” என்று சொன்னவுடன், இருவரும் கிளம்பினர்.
ஹாலுக்கு வரும்வரை யாரும் மாமி எதிரில் ஏதும் பேசவில்லை. பிறகு நந்துவின் அப்பா தன் மனைவியிடம், “நீ உள்ளே போ, நான் நாதஸ்வரக் காரப் பார்ட்டியை காலையில் சீக்கிரம் ரெடியா இருக்கச் சொல்லிட்டு வர்ரேன்” என்றார். இவரிடம் “என்கிட்ட சொல்லியாச்சு இல்லையா. நான் பாத்துக்கிறேன். நீங்க போய் தூங்குங்க” என்று சொல்லி விட்டுச் சென்றார்.
ஆனால் நான்கு பேரும் இரவு முழுவதும் உறங்கவில்லை.
நந்துவின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நிறைய வேலை இருந்தது.
காலையில் கல்யாணம்.
விடிகாலையில் மங்களஸ்நானம் சரியாக நடந்தது. பெண்ணும் மாப்பிள்ளையும் சமர்த்தாக தலையில் எண்ணெய் பெரியவர்களைத் தேய்க்கவிட்டு “கங்கே ச யமுனேசைவ கோதாவரி ச சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி” ஜலத்தால் குளித்து முடித்தார்கள். சுதா தன் தலையில் ஷாம்பூ தேய்த்துக் குளித்தாள். “இதுலே ஒண்ணும் முட்டை கலப்பில்லையேடி” என்று கேட்ட தன் தாயைப் பார்த்து முறைத்தாள்.
கௌரி பூஜையும் நடந்தது. சாஸ்திரி சுதாவை கண்டு கொள்ளவே இல்லை.
காசியாத்திரைக்குக் கிளம்பினான் மாப்பிள்ளை. எல்லோரும் சென்றனர். “அவளை அப்புறமா அழச்சிட்டு வாங்கோ”, மாலையைத் தூக்கும் சாக்கில் ஆளைத் தூக்கும் நிகழ்ச்சியைப் பார்க்க ஆசையாக ரெண்டும் கெட்டான் வயது குட்டிகளும் குட்டன்களும் ரெடியாயினர்.
“ஆஃப் அன் அவர் ஆகுமா மாமா, நான் என்னோட மொபைல்ல வீடியோவா எடுக்கிறேன்” என்று சில பெண்கள் கேட்டார்கள்.
காசி யாத்திரை முடிந்ததும் சுதாவைக் கூப்பிட்டனர். வரமாட்டேன் என்று அடம் பிடித்தவள், கூப்பிட்டவர்களின் அடம் பெரிதாக இருக்கவே, மனதில்லாமல் நாணாமல் கோணாமல் கோபத்துடன் வந்தவள் நந்து அருகில் சென்றாள்.
அவனைப் பார்த்து “வாட் ஈஸ் யுவர் ப்ராப்ளம். யூ வான்ட் டு கோ டு வாரணாசி?, டிட் யூ புக் த டிக்கெட் ஆர் ஷால் ஐ புக். இஃப் யூ வான்ட் டு கோ யூ மே கோ, ஐ அம் நாட் ஸ்டாப்பிங் யூ” என்றதும் இளசுகள் சிரித்தார்கள்.
பெரியவர்கள் கையைத் தூக்கினர், ஆனால் தலையில் அடித்துக் கொள்ளவில்லை.
சுதா உள்ளே சென்றுவிட்டாள். மாப்பிள்ளைக்கு மாமனாரும் பெண்ணுக்கு மாமியாரும் மாலை போட்டார்கள். மாலை தூக்கி, ஆளைத் தூக்கும் விளையாட்டு நின்றதைப் பார்த்ததும் பலருக்கு சுரத்தே போய்விட்டது.
“சுதாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. கல்யாணத்துக்காக ப்ரிமாலூட்-என் மாத்திரை சாப்பிட்டு இருக்கா. அதனாலே டிப்ரஷன் வந்த மாதிரி பேசுறா” என்று சுதா அம்மா சொன்னதை பெரியவர் யாரும் நம்பவில்லை. மற்றவர்களுக்குப் புரியவில்லை. (நமக்குக் கூடத்தான் புரியாது!)
“இது மறுபடி லேட்டா நடக்குமா சார்” என்று சுவையான க்ளோஸ் அப்புகளுக்காகக் காத்திருந்த ஃபோட்டோக்ராஃபர்கள் சாஸ்திரிகளிடம் கேட்க அவர் விழித்தார். அவர்கள் “பெண் வீட்டு சாஸ்திரிக்குதான் இதெல்லாம் தெரியும். அவர் வயதானவர். அவர் வந்ததும் கேட்போம்” என்று சத்தமாகச் சொல்லிக் கொண்டே ஹாலுக்குள் சென்றனர்.
சாஸ்திரிக்குக் கோபம் பொங்கியது.
ஓரமாகப் போய் நந்துவின் அம்மாவிடம் “மாமி இந்தப் பேச்செல்லாம் நான் வாங்கணுமா, நான் எவ்வளவுதான் அட்ஜஸ்ட் செய்யமுடியும். எனக்கே ரொம்ப பயமாத்தான் இருக்கு. இதுக்கப்புறம் என்னை யாராவது கல்யாணம் செய்துவைக்கக் கூப்பிடுவாளான்னு தெரியல்லே. வந்த வேலையையும் விட்டுட்டேன். நேத்து ராத்திரி மாமாவும் நீங்களும் என்னைத் தூங்க விடல்ல. மூணு மணிக்கு அப்புறம் எப்படித் தூக்கம் வரும். அதைச் செய்யவேண்டாம், இதைச் செய்ய வேண்டாம்னு சொன்னதையே திருப்பித் திருப்பி சொன்னீங்க. பேசாம இவங்க ரெண்டு பேருக்கும் ரிஜிஸ்டர் மாரேஜ் செய்திருக்கலாம். இன்னைக்கு என் இமேஜுக்கு எதாவது டேமேஜ் வந்தால் நீங்கள்தான் என் கல்யாண சம்பாவனை மாதிரி 50 மடங்கு தரணும்” என்று மிரட்டினார்.
பாதபூஜை பெரியவர்களால் நடந்தது.
மாலை மாற்றல் நல்லவேளையாக மாப்பிள்ளையும் பெண்ணுமே மாற்றிக் கொண்டார்கள்.
“சப்தபதியைப் பற்றி பேசலாமா” என்று தொடங்கினார் சாஸ்திரி. அப்போது எல்லோருக்கும் முன்னர் சுதா பேசினாள்:
“சாஸ்த்ரிஜி, சப்தபதி இஸ் நாட் அன் எசென்ஷியல் ரிகொயர்மெண்ட் இன் டமில்னாடு, எக்சேஞ்ச் ஆஃப் ரிங் அண்ட் கார்லண்ட் இஸ் எனஃப்.”
சாஸ்திரி அவளிடம் “ஸ்டில் இன் எனி மேரேஜ், ப்ரொமிஸ் அண்ட் அஷ்யூரன்ஸ் ஆஃப் போத் தி ப்ரைட் அண்ட் தி ப்ரைட்க்ரூம் டு கேர் ஃபார் ஈச் அதர் அண்ட் வில்லிங்னெஸ் டு லிவ் டுகெதர் இஸ் அ மஸ்ட்” என்று சொன்னார்.
“ஐ கேன்ட் பர்ஃபாம் சம்திங் விச் இஸ் நாட் லீகல்லி ரிகொயர்ட்” என்று சொன்னாள் சுதா.
சாஸ்திரி பெரியவர்கள் நால்வரையும் பார்க்க நாலு தலையும் ஆடி ஆமோதித்தன.
சாஸ்திரி “செய்யணும்கிறேளா, விட்டுடணும்கிறேளா சரியாச் சொல்லுங்கோ” என்று கேட்டார்.
“விட்டுடலாம்” என்று நந்துவின் அப்பா கூறினார்.
இதைக் கேட்டதும் சுதாவின் அப்பா மயங்கிச் சாய்ந்தார்.
உடனே சுதா அம்மாவிடம் “ஏம்மா அப்பா இன்னிக்கு டாப்லெட் போட்டுக்கல்லியா” என்று மிக அக்கறையாகக் கேட்டதை யாரும் ரசிக்கவில்லை.
இப்படி அன்றைக்கு கல்யாணம் மிக விமரிசையாக குறைந்த ரிச்சுவல்ஸுடன் தாலி கட்டி மாலை மாற்றி நிறைவேறியது. பலர் தம் கையில் இருந்த அட்சதையைக் கூட மணமக்கள் மீது போடவில்லை. பலர் கூடிக் கூடி சத்தமாகப் பேசிக் கொண்டே இருந்தனர்.
மாலையில் வேறு எந்த ரிச்சுவலும் நடக்கவில்லை. வீணைக் கச்சேரிக்கு வந்திருந்த பார்ட்டி இந்த அமளியை எல்லாம் பார்த்துவிட்டு, நாதஸ்வரப் பார்ட்டிக்கு அருகில் சென்று சிறிது நேரம் பேசிவிட்டுத் தங்களால் கச்சேரி நடத்த முடியாது என்று சொல்லிச் சென்றுவிட்டனர்.
நந்து யாருக்கோ கால் செய்து அரை மணி நேரத்தில் ஒரு லாரியில் ஆர்க்கெஸ்ட்ரா வாத்தியங்களும் இரண்டு கார்களில் ஆர்க்கெஸ்ட்ரா க்ரூப்பும் வந்து சின்னஞ் சிறிசுகளும் பல பெரிசுகளும் சேர்ந்து நாட்டியம் ஆடியதும் மிச்சமுள்ள கொஞ்சபேர் மட்டும் சாப்பிடவும், இவ்வாறு திருமணம் ஒருமாதிரி நடந்து முடிந்தது.
“சாப்பாடு வேண்டாம்” என்று கோபத்துடன் சொன்ன சாஸ்திரி, “சம்பாவனையை இப்போது கொடுங்க, நான் வீட்டுக்குப் போய் சாப்பிடணும். நான் இனிமேல் எந்த கல்யாணத்துக்கும் செஞ்சுவைக்கப் போகமாட்டேன்” என்று கண்ணைத் துடைத்துக் கொண்டே சொன்னார்.
“மத்த எல்லாத்தையும் நாளைக்கே வச்சிடுங்க. நப்ஷல்ஸ் இப்போ வேண்டாம். நாளை மறுநாள் நாங்க ரெண்டுபேரும் தனியாத்தானே ஓரிகன் போறோம். அங்கேயே நாங்க நப்ஷல்ஸ் வச்சிக்கிறோம்” என்று வெட்கமில்லாமல் சுதா சொன்னதும் நந்துவுக்கு வெட்கப்பட்டு வெட்கப்பட்டு முகம் சிவந்துவிட்டது.
பக்கத்தில் நின்றிருந்த வம்பு பிடித்த பெண் “பாரேன் நந்துவை பொம்பளை மாதிரி வெக்கப்படறான். சுதாவே இவனுக்குத் தாலி கட்டி இருக்கலாம்” என்றாள்.
நானும் “அதுதான் சொல்ல நினைத்தேன்” என்றாள் சுதா.
ஒரு மஞ்சள் கயிறைக் கொடுத்தாள் பேசியவள்.
சுதா கையில் வாங்கவும், நந்து தலையைக் குனியவும் சரியாக இருந்தது.
அந்தச் சமயம் பார்த்து திடீர் என்று கோபத்துடன் முதுகில் அடித்த அம்மாவைப் பார்த்தான் நந்து. வாங்கிய அடி நந்துவின் கண்ணில் ஊற்றைத் திறந்தது.
உண்மையில் பயந்து விட்டாள் சுதா.
“பயப்படாதே தேவதையே உன்னை நான் அடிக்க மாட்டேன்” என்றார் மாமியார்.
———>> 4

Thank you for hosting my story in this page, contributed by many established authors.