(தொடர்ச்சி )

விசா – 1 – கபிலவிசாகன் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)
விசா – 2 – கபிலவிசாகன் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)
விசா – 3 – கபிலவிசாகன் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)
அடுத்த நாள் நந்துவின் அப்பா சுதாவிடம் “உன்னோட கொஞ்சம் பேசலாமா சுதா” என்று கேட்டார்.
என்ன மாமா இப்படிக் கேட்கிறேள், கல்யாணத்துப் பின் நீங்க என் அப்பாவுக்குச் சமானம். நமஸ்காரம் பண்றேன் மாமா. வாடா நந்து, நமஸ்காரம் பண்ணு என்றாள்.
நமஸ்கரித்தார்கள்.
“என்னை மன்னிச்சிடுங்க மாமா, நான் ரொம்ப கலாட்டா பண்ணிட்டேன்ல. எனக்குக் கொஞ்ச வருஷமாவே நம்ம பழக்க வழக்கங்கள் பிடிக்கிறதில்லை. நம்ம ரிலிஜன்லே ஒரே மேல் ஷாவினிஸம் எல்லா ரிச்சுவல்சிலும் இருக்கு. ஆணுக்கும் பொண்ணுக்கும் உடல் மட்டும்தானே வித்தியாசம். மனசும் மூளையும் ஒண்ணுதானே.
“உங்களுக்கும் மாமிக்கும் ரொம்ப தாங்க்ஸ் மாமா. என்னை எதற்குமே நீங்கள் கம்பெல் செய்யல்ல. மாமி கூட நேத்து நாங்க விளையாட்டாப் பேசிட்டிருந்தபோது நந்துவைத் தான் அடிச்சார். அந்தக் கோபத்துல கூட என்னை தேவதைன்னு மாமி சொன்னது ரொம்பப் பிடிச்சிருக்கு.
“க்ஷேமமா இருங்கோ. எப்பவும் ஒத்துமையா இருங்கோ.”

“ஒத்துமையா இருப்போம் மாமா. நான் நந்துகிட்டே திமிரா பேசறதெல்லாம் அவனுக்குள்ளே இந்த மேல் ஷாவினிஸம் இருந்தா அதைத் துடைத்து எறியத்தான். நந்து, நீயும் என்னை மன்னிச்சுடு. உன்னை நான் நமஸ்காரம் பண்ணவா.”
“வேண்டாம்மா தாயே, பிறகு அவனை உனக்கு நமஸ்காரம் செய்யச் சொன்னாலும் சொல்வே.”
“இல்லை மாமா, அப்படிச் சொல்லமாட்டேன். அவனாவே அப்படிச் செய்வான். இப்பகூட எங்கிட்ட நெளியறதப் பாருங்கோ. என்ன மாமா இவனைப் பெண் மாதிரி வளர்த்து இருக்கீங்க, என்ன வெட்கப் படறான் இவன்.”
“நான் வந்தது இந்த கிஃப்ட் சாமான் பற்றிக் கேட்க. நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து எல்லா கிஃப்டையும் திறந்து பார்த்துட்டு எதை என்ன செய்யறது, எதை ஓரிகனுக்கு எடுத்துட்டுப் போறதுன்னு முடிவு பண்ணியாச்சுன்னா பார்சல் செய்ய ஏற்பாடு செய்யலாம்.”
“DFL, UPSன்னு தனித் தனியா அலையவேண்டாம். கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்ல இருக்கிற ஃபாஸ்ட்வே வேர்ல்ட்வைட் எக்ஸ்பிரஸ்ல சர்வீஸ் ரொம்ப நல்லா இருக்கும். ஃப்ரீ பேக்கேஜிங், ஃப்ரீ ஹோம் பிக்கப், அமெரிக்காவில எந்த இடத்துக்கும் ஜஸ்ட் சிக்ஸ் டேஸ்ல டெலிவரி. நீங்க எல்லாத்தையும் பாத்துப் பிரிச்சுட்டா, அவனை வந்து பாக்கச் சொல்லலாம்.”
நந்து அப்பாவிடம் “சரிப்பா, பாக்கிறோம்” என்றான். “பாக்கிறோம் என்ன பாக்கிறோம். எனக்கு ஒண்ணும் வேண்டாம்பா. நீ வேணா போய் பார்” என்றாள்.
மறுபடியும் முருங்கை மரம் இல்லை இல்லை வேதாளம்… கதைதான்.
நந்து சென்று க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ் கொடுத்த சில கிஃப்ட்களை எடுத்து வந்து இவைகளை எடுத்துப் போகலாம் என்றான்.
“நந்து நீ உன் டிஜிட்டல் காமராவில் எல்லாத்தையும் ஃபோட்டோ எடுத்து உன் மெயில் பாக்ஸுக்கு அனுப்பிச்சிடு. அது போறும். அடிக்கடி பார்த்துக்கலாம்.
“சரி இந்த கார்டு உன் ஆஃபீஸ் ஃப்ரண்ட் கொடுத்தாளே இதையாவது…”
“சீ தூக்கிப் போடு.”
“உன் ஃப்ரண்ட் உனக்குத் தானே கொடுத்தாள். ரொம்ப அழகாயிருக்கு. இதை மட்டுமாவது கொண்டுபோகலாம்.”

“நீ ஏற்கனவே அவளே அழகாயிருக்கா, பிடிச்சிருக்குன்னு சொன்னியே, அவளைக் கூப்பிடட்டுமா, அவளோட போறியா. என்னை விட்டுடு.”
அதற்கப்புறம் யாரும் பேசவில்லை. சின்ன சூட்கேஸ் இரண்டும், ஹாண்ட் லக்கேஜாக இரண்டு பைகளும் எடுத்து வைத்தனர்.
இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் தம்பதிகள் இருவரும் எமிரேட்ஸ் இரவு மூன்றரை மணி ஃப்ளைட்டில் போர்ட்லாண்டுக்குக் கிளம்பினார்கள். ஆறு கார்களில் வந்திருந்த உறவினரும் நண்பரும் வீட்டுக்குச் செல்ல ஒரு மணிநேரம் ஆகியது.
ஃபளைட்டில் 20 மணி நேரம் பறந்த பிறகு சுதாவுக்கு “Hi” என்று ஒரு மெசேஜ் வந்தது. “எப்படி உன் புது சிம் நம்பர் அமெரிக்காவில் உள்ளவங்களுக்குத் தெரியும், 4G காலா, நெட் காலா” என்று கேட்டான் நந்து. “எப்படியோ தெரியும், ஏர்போர்ட்ல சொல்றேன்” என்றாள் சுதா. துபாய் ஏர்போர்ட்டில் இவர்கள் ஃப்ளைட் நான்கு மணி நேரம் தங்கவேண்டி வந்தது. அதனால் இவர்கள் போர்ட்லாண்ட் ஏர்போர்ட்டில் இறங்கியபோது காலை மணி ஏழாகி விட்டது.
“தாங்க் யூ மிஸ்டர் நந்தகுமார். உன்னை மாதிரி யாருமே எனக்கு இப்படி ஒரு ஹெல்ப் செய்யமுடியாது. நான் மூன்று வருஷமாக எப்படி அமெரிக்காவுக்கு வருவது என்று பல வழிகளை முயற்சித்தும், பாவம், நீதான் மாட்டினாய். நீ ரொம்ப நல்ல பையன். ஆனால் நான் பெரிய மோசக்காரி. இங்கே சியாட்டிலில் எனக்கு ஒரு ஃப்ரண்ட் இருக்கிறான். ஜெர்மன் காரன். என்னோடு ஒருவருடம் அவன் இருந்தான். திரும்ப அவனிடம் வரத்தான் இந்தக் கல்யாணமே நான் செய்தேன்.
“நீ ஒன்றும் உத்தம புத்திரன் இல்லை. வெட்டிங் ரிசப்ஷனிலேயே என் ஃப்ரண்டிடம் ஈஷினாய். உனக்கு ஒன்றும் குறையிருக்காது. ஓரிகனில் இல்லாத வசதியா. அடிக்கடி லாஸ் வேகாஸுக்குப் போனா உன்னுடைய எல்லா தேவையும் பூர்த்தி ஆகும். நான் உனக்குத் தேவையில்லை. வா, கடைசியாக உன்னை ஹக் பண்றேன். அங்கே பார் ப்ளாக் சூட்ல ஃப்ரெஞ்ச் தாடி வச்சிண்டு மேகசின் படிக்கிறமாதிரி என்னையே பார்க்கிறான் பார். அவன்தான் எனக்கு உண்மையான ஹஸ்பண்டு. நீ என்னை சுமந்து வந்த கூரியர்தான்” என்றாள்.
நந்துவுக்குத் தலை சுற்றியது. அப்படியே அங்கு இருந்த சேரில் சரிந்துவிட்டான். அந்த ஜெர்மன்காரர் நந்து அருகில் வந்து அவனுக்கு ஏதோ மசாஜ் செய்து, ஒரு கூல்ட்ரிங்க் கொடுத்தார். எழுந்து உட்கார்ந்த நந்து ஒன்றுமே பேசவில்லை. அவன் கண்கள் அசையாமல் இருந்தன.
“நந்து, நந்து, வாட் ஹேப்பண்ட் டு யூ என்று பலமுறை சுதா அவன் தோளைத் தொட்டு உலுக்கியதும் கொஞ்சமாகக் கண்ணைத் திறந்து “மிஸ் சுதா, ப்ளீஸ் கோ வித் திஸ் ஃப்ரண்ட். ஆல் தெ பெஸ்ட். மை டியர் ஃப்ரண்ட், யூ ஆர் கெட்டிங் த பெஸ்ட் மடீரியல் இன் திஸ் வேர்ல்ட். குட்பை” என்று அந்தக் கூரியர் பாய் சொன்னான்.
நந்துவின் அருகில் அவனது சூட்கேஸ், பை இரண்டையும் வைத்துவிட்டு ஏர்போர்ட் லவுஞ்சில் ஹெல்ப்டெஸ்கில் சொல்லிவிட்டு சுதா கடைசி முறையாக நந்துவுக்கு கை கொடுத்துவிட்டு நடந்தாள்.
அந்த நீண்ட ஏர்போர்ட்டின் எக்ஸிட் கேட் வரை நடந்து சென்ற சுதா பார்வையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தவள் நந்துவின் வாழ்வில் இருந்து முழுதாக மறைந்துவிட்டாள்.
