
விசா – 1 – கபிலவிசாகன் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)
( 28 ஆம் தேதி தொடர்ச்சி )
அருகில் இருந்த நந்துவிடம் “நீ நார்த் இண்டியனாடா, இப்படி ட்ரெஸ் பண்ணி இருக்கே. ஷெர்வானி உனக்கு சரியில்லைடா. கோட் சூட்ல வரக் கூடாதா. அப்பாதான் வாங்கிக் கொடுத்தாரில்ல”
“இல்ல டார்லிங். இது எனக்குப் பிடிச்சிருக்கும்மா.”
“எனக்குப் பிடிக்கல்லடா, இரு இரு என்னோடதான வரப்போறே நல்லா பாத்துக்கிறேன் உன்னை. சுத்தமா வெறுத்துப் போயிடுவடா.”
“நீ அடிச்சாலும் உதைத்தாலும் வாங்கிக்கிறேன் டார்லிங்.”
“உன்னை நான் அடிக்க மாட்டேன்பா, ஆனா அதற்கும் மேல.”
“என்ன சுதா, நந்துவை முன்னாடியே தெரியுமா. நிறைய பேசிக்கிறீங்க. சாரி என்னால ரிசப்ஷன் ஆரம்பிக்கும் வரைக்கும் இருக்க முடியாது. இந்தாங்க எங்க கிஃப்ட். சுதா நல்ல ஒர்க்கர் சார். ஒரு மாடலாப் போயிருக்க வேண்டியவ. எங்க கம்பெனியே இவங்க வந்தவுடனே அழகாயிடுச்சு. நீங்கதான் ஸ்டேட்ஸுக்குக் கூட்டிட்டுப் போயிடுவீங்கள்ள. சுதா, நந்துகிட்ட நான் கை கொடுக்கலாமா.”
“கொடுத்துக்க. கொடுத்துக்க. வேண்ணா இவனை அழைச்சிட்டுப் போயிடு.”
கை கொடுத்தாள் அப்பெண்.
“நந்து சார். யூ ஆர் வெரி ஹாண்ட்சம். உங்க கை ரொம்ப சாஃப்ட். ஆனால் சுதா ரொம்ப முரட்டுப் பொண்ணு. ரொம்ப அழகாயிருக்காளேன்னு மயங்கிடாதீங்க. பொல்லாத பொண்ணு.”
“தாங்க்யூ, யூ ஆர் ஆல்ஸோ ப்யூட்டிஃபுல். என்ன சுதா, உன் ஃப்ரெண்டை எனக்குப் பிடிச்சிருக்கு.”
“சும்மா இருங்க சார், ரிசப்ஷன் அன்னைக்கு இது மாதிரி பேசாதீங்க. நான் வரேன் சுதா. ஹாப்பி மேரீட் லைஃப்.”
ஒரு பெரியவர் வந்து அழைத்ததும் இருவரும் சென்று ரிசப்ஷன் சோஃபாவில் அமர்ந்தனர். சின்னச் சின்ன பெண்களும் பையன்களும் அழகாக ட்ரஸ் செய்து கையில் கர்ச்சீஃபுடன் முகத்தைத் துடைக்க வந்தார்கள். வேண்டாம்பா என்று இருவருமே மறுத்தார்கள்.
“இல்லை, இன்றைய தினத்தில் உங்களுக்கு எப்படியும் வேர்க்கும். கை குலுக்கியும், கிஃப்ட் வாங்கியும் கைக்கு நிறைய வேலை இருக்கும். நாங்கள் சைட்ல நின்றுகொண்டு துடைத்துவிடு்கிறோம். ஃபோட்டோ எடுக்கும்போது ஒதுங்கிக் கொள்கிறோம்.”
ரிசப்ஷனில் ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் வந்தார்கள்.
நிறைய கிஃப்டுகள் வந்திருந்தன இருவருக்கும்.
ரிசப்ஷன் முடிந்ததும் இரு சம்பந்திகளும் இருக்கும்போது சுதா, “அங்கிள் எல்லா கிஃப்ட்ஸையும் வித்துடுங்க. எங்களாலே எடுத்துப் போக முடியாது” என்றாள்.
நந்துவுக்கு சுர்ரென்று ஏறியது. “இவளை அமெரிக்கா போனதும் பார்த்துக் கொள்வோம்.”
சுதாவின் அப்பாவுக்கு என்னவோ போலாயிற்று.
சம்பந்தியின் கையைப் பிடித்துக் கொண்டு கண்களால் சாரி சொன்னார்.
சம்பந்தியின் கண்களும் ஈரமாகத்தான் இருந்தன.
“இந்தப் பெண் இன்னும் என்ன எல்லாம் கலாட்டா பண்ணப் போறாளோ, ஸ்வாமிநாத ஸ்வாமி. நல்லபடியா கல்யாணம் நடக்கணும்பா. நான் வந்து காவடி எடுக்கிறேன் ஸ்வாமி” என்று கண்ணீருடன் மனத்தில் வேண்டிக் கொண்டார்.
அன்று இரவு சுதாவின் அப்பா பலதடவை ஸ்வாமிமலை ஸ்வாமியை நினைக்க வேண்டி வந்தது.
“அப்பா இங்கே வா, அம்மா இங்கே வா, இப்படி உக்காருங்க. முக்கியமா பேசணும். அரை மணி நேரம்.”
படபடப்பாக அப்பாவும், சாதாரணமாக அம்மாவும் வந்து அமர்ந்தனர்.
அம்மா படபடப்பை எல்லாம் துடைத்துப்போட்டு பல வருஷங்கள் ஆகிவிட்டது. அடங்காத இந்தப் பெண்ணை ஒரு ஆணிடம் பிடித்துக் கொடுத்தால் போதும் என்ற நிலை ரொம்ப நாட்களுக்கு முன்னரே வந்துவிட்டது.
இன்னும் ஒரு வாரம் பொறுத்திருந்து விட்டு, இந்த வீட்டை விற்றுவிட்டுக் காசியில் அல்லது திருவண்ணாமலையில் ஒரு ஆஸ்ரமத்தில் இருந்து விடலாம். போற காலத்துக்கு புண்ணியமாவது கிடைக்கும்.
“சொல்லுடா செல்லம்” இருவரும் ஒரே நேரத்தில்.
“லக் இஸ் மைன்” என்றார் சுதாவின் அப்பா.
“நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் உங்கள் லக்கை. எனக்கு இல்_லக்கே போதும்.”
“அம்மா, அப்பா, உங்க சண்டையை ஸ்டாப் பண்ணுங்க. நான் சொல்றதைக் கேளுங்க.”
“இவ்வளவு முன்னேறி ஆச்சு. அப்பா ஃபாரின்ல இருந்தீங்க. அம்மா பாம்பேயில், டெல்லியில் பெரிய வேலை பார்த்தாச்சு. இருந்தாலும் ஏம்பா ரெண்டுபேரும் மாறவே மாட்டேங்கிறீங்க.
“வேத பாராயணம் வேண்டாம்னு சொன்னேன். கேட்கவில்லை. அவங்க வீட்ல ஏற்பாடு பண்ணதுன்னு சொன்னீங்க, பரவாயில்லைன்னு விட்டுட்டேன்.
“நாளைய செரிமனியிலே…”
“கழுதை, ஃபங்ஷன்லேன்னு சொல்லுடி.”
“சரிம்மா, ஃபங்ஷன்லதான். “இது என் கல்யாணம், சில சமாசாரங்களை நான் தான் முடிவுசெய்வேன்.
“முதல்ல வ்ரதம். என்னால விரதம்லாம் இருக்க முடியாது. ப்ரம்மச்சாரி ஆஸ்ரமத்திலேந்து கிரஹஸ்த ஆஸ்ரமத்துக்கு வர நந்து வேண்ணா விரதம் இருக்கட்டும். என்னால முடியாது. நான் அதுக்கு லாயக்கில்ல.”
“என்னடி சொல்றே?
“பேசாதேம்மா. என்னைச் சொல்லவிடுங்க.
“இந்த பாலிகை எல்லாம் வேண்டாம். நான் க்ரோ க்ரீன் ஆர்கனைசேஷன் ஆளுங்களை கூப்பிட்டு இருக்கேன். ஆயிரம் ப்ளான்ட், வேற வேற ஸ்பீஷிஸ்ல. அதை நான் கொடுத்தா போதும். பாலிகை முளைக்க வைத்து அப்புறம் ஆத்திலோ குளத்திலோ கொட்றதை விட இது நல்லதுதான். ஸ்பிரிச்சுவல் ஹெல்த்தை விட என்விரான்மெண்டல் வெல்த்தான் இந்தக் காஞ்சிப் போன நாட்டுக்கு நல்லது.”
அப்பா முகம் ஏற்கனவே சிகப்பு. இன்னும் சிகப்பாகியது.
“அப்பறம் இந்தக் காசி யாத்திரை. எவன் கண்டு பிடிச்சான் இந்த பழக்கத்தை. அப்பா பொண்ணு கேட்டு வருவாராம். ஆனால் மாப்பிள்ளை காசிக்கு கிளம்பிடுவானாம். இஷ்டம் இல்லாத ஆம்பளையை எல்லாம் ஏன் இந்த ரிலிஜன்ல கட்டாயப் படுத்தி கல்யாணம் பண்ணனும். ஏன் இந்து ரிலிஜன்லே எல்லா ஆம்பளைகளும் சன்யாசியாகத்தான் ஆகணுமா? பொம்மனாட்டி எல்லாம் வீட்டு வேலை செஞ்சு குழந்தை பெத்துக் கொடுக்க மட்டும்தானா, சன்யாசியாப் போக ஆசைப் படுற பசங்களையெல்லாம் எந்தப் பொண்ணுதான் கல்யாணம் செஞ்சுப்பா.
“நந்து அவனுக்குப் பிடிச்சா, காசி யாத்திரை மாதிரி எந்த ட்ராமா வேண்ணாலும் பண்ணட்டும். அதுக்காக நான் ஒண்ணும் அவனைப் போய் பார்த்து “நாதா, கோபிக்க வேண்டாம், நான் உனக்காகவே வாழ்கிறேன். வாரும், நாம் இருவரும் சேர்ந்து புது உலகைப் படைக்கலாம்” அப்படின்னு தியாகராஜ பாகவதர், நாகேஸ்வர ராவ் படத்திலே வர்ர மாதிரி எல்லாம் பீலா விடமுடியாது. அவனாவே வந்தா வரான். வராட்டி இன் ஃபாக்ட் ஐ வில் பீ ஹாப்பி.”
கண்ணில் கண்ணீருடன் வாயைப் பொத்திக் கொண்டு பேசலாமா என்று கண்ணால் கேட்ட அம்மாவிடம், “பேசு,பேசு, ஏதாவது சொல்லிப் புலம்பு.”
“நந்துவைப் பிடிக்கல்லியாடீ. முன்னே சொல்லி இருந்தியானா இப்படி கல்யாண ஏற்பாடு செஞ்சிருக்க மாட்டோம்டி, உங்க காலேஜ்தானேடி அவனும். நீ தானே அம்மா எனக்கு நந்து வைக் கல்யாணம் பண்ணிக் கொடுன்னு கேட்டாய்.”
“ஆமா, நான் எனக்கு அவனைக் கல்யாணம் செய்து கொடுன்னுதான் சொன்னேன். ஆனால் இப்ப நீயும் அப்பாவும் என்னல்ல அவனுக்குக் கல்யாணம் பண்ணித் தர்ரீங்க.”
வாயைத் திறக்காத அப்பா: “ரெண்டும் ஒண்ணுதாண்டி சுதா. பாரு, பத்து வருஷம் மின்னாடி என்னை ஏன் ஆக்சிடெண்ட்லேந்து காப்பாத்தினே. நான் அப்பவே போய் இருந்தா நன்னா இருந்திருக்கும்.”
“வாயை மூடுங்கோ, அபிஷ்டு மாதிரிப் பேசாதீங்கோ. நீங்க ஏன் செத்திருக்கணும். தப்பு என்பேர்லதான். இப்படி ஒரு குழந்தையைப் பெத்திருக்க வேண்டாம். இல்லை இவ காலேஜ் செகண்ட் இயர்ல இவளை என் கையாலேயே கொன்னிருக்கணும். சர்வேசா, எப்படிப்பட்ட ஜீவனை என் வயித்திலே சுமக்க வச்சேடா.”
“அழுகையை நிறுத்து. பழசைப் பத்தி நினைக்காதே. இப்ப நடக்கிறதைப் பாரு. நானும் எவ்வளவு தியாகம் பண்ணியிருக்கேன் மறந்துட்டியா.”
“அம்மா, மறக்கல்லேடி, அந்த கதையைப் பத்தி எப்பவுமே பேச வேண்டாம். தாயே நீங்க சொல்றபடி செய்யறேன். ஆனா எப்படி சாஸ்திரிகளை சமாளிக்கிறது.”
“இன்னொண்ணு சொல்றேன். அதையும் கேட்டுக்க. அப்புறம் சாஸ்திரிகள் கிட்டே கேள். அம்மி மிதித்து அருந்ததி பாக்கறதெல்லாம் வேண்டாம். அருந்ததின்ற பேரைக் கேட்டாலே தமிழர்களுக்கு வயித்தைக் கலக்குது. ராகவா லாரன்ஸ் அப்பிடிப் பண்ணிட்டான். நான் அமெரிக்காவில போய் ஆல்பம் காமிச்சா, என் ஃப்ரெண்ட்ஸ் “ஒய் டு யு புட் யுவர் ஃபீட் ஆன் எ ஸ்டோன், ஒய் தட் மேன் இஸ் ஹோல்டிங் யுவர் டோஸ்” னு கேட்டா என்னால இந்தக் கதையெல்லாம் சொல்ல முடியாது. ஏற்கனவே அமெரிக்காக் காரனுங்க இந்தியனுக்கும் ரெட் இந்தியனுக்கும் ஒண்ணும் வித்தியாசம் இல்லைன்னு சொல்ற வர்க்கம். என்னால முடியாதுப்பா.
“அப்பா இதையும் சேர்த்து சாஸ்திரியிடம் போய் கேட்டு முடிவு பண்ணிட்டு வா.”
சத்தமில்லாமல் குலுங்கிக் கொண்டிருந்த அப்பா துண்டால் வாயைப் பொத்தியபடி வெளியே சென்றார்.
ஹாலில் ஓரமாகப் படுத்திருந்த சாஸ்திரியைப் பார்த்து எல்லாவற்றையும் சொன்னார்.
“ஸ்வாமி, எல்லா கல்யாணத்துலயும் சாஸ்திரி தேவையில்லை. நீங்கதான் பெரியவா இருக்கேளே, உங்க முன்னிலையில உங்க பொண்ணு மாப்பிள்ளைக்குத் தாலி கட்டட்டும். அக்னி எல்லாம் வளக்க வேண்டாம். என்னாலே முடியாது. எனக்கு சம்பாவனை ஒண்ணும் வேண்டாம். நான் போறேன். போங்கோ, போங்கோ, எதை வந்து சாஸ்திரிகிட்ட கேட்பது என்றுகூட உமக்குத் தெரியல்ல.”
பிறகு சுதாவின் அப்பா தூங்கிக் கொண்டிருந்த நந்துவின் அப்பாவை அழைத்துக் கொண்டு கல்யாணமண்டபத்துக்கு அருகில் இருக்கும் பார்க்குக்குக் கிளம்பினார்.
இவர்கள் வாசலுக்கு வரும்போது இவரது சாஸ்திரி தனது புல்லட்டை ஸ்டார்ட் செய்து கிளம்பிவிட்டார். இரண்டு பேரும் அருகில் இருந்தும் அவர்கள் பக்கம் திரும்பாமலேயே அவர் சென்றுவிட்டார்.
“வந்திடுவாரோன்னோ, விடிகாலை முகூர்த்தம்” என்று கேட்டார் நந்துவின் அப்பா.
இல்லையென்று கண்ணீருடன் தலையை ஆட்டினார் சுதாவைப் பெற்றவர்.

One Comment on “விசா – 2 – கபிலவிசாகன்”
Comments are closed.