
துயரமே உன் பெயர் தான் காதலா ?
இதயங்களை கழுவிலேற்றும் கூர்மையான கத்திகளுக்கு
யார் பூ என்று பெயர் வைத்தது?
அடர் இருளில் பாயும் சிறு ஒளிக்கீற்றில்
அலைபாயும் துகள் இந்த மனது
இருளுக்கு மீண்டும் விமோசனம் எப்போது ?
பொற்றாமரை போல் பூத்த தரிசனத்தில் என்னை அடையாளம் கண்டேன்
மீண்டும் என்னை அடையாளம் காண எத்தனை யுகம் ?
உடையாத பனிப்பாறைகள்
ஊழிக்காலம் வரை
நிரம்பியிருக்கிறது உன் பாதைகளெங்கும்
இவைகள் உருகும் நாளில் தானா
நான் உன்னை அடைவது?
நீயோ வெட்கத்தை தாவணியாக அணிந்தவள்
நான் வார்த்தை பட்டாம் பூச்சிகளை விரட்டித் திரிபவன்
எப்போது என் திசை நோக்கி அனுப்புவாய் அந்த சிறகடிக்கும் உயிரினத்தை ?
வானில் ஒரு வெற்றிடம் உருவாகப் போகிறது
பறக்க நினைத்த பறவை அவள் உள்ளங்கை சூட்டில்
சிறு புழுவாகி துடித்துக் கொண்டிருக்கிறது
சிறகுகள் தந்தவளே அதை முறிக்கிறாள்
உனக்கு வலிப்பதை விடவா
எனக்கு அதிகம் வலிக்கப் போகிறது?
