
…… ்்்்்்்்்
அந்த அரசமரத்தடிப்பிள்ளையார்
ஒன்றும் சக்தி குறைந்தவரல்ல…
நிறையப்பேருக்கு…
திருமணபந்தத்தையும்…
நோய்..நொடிகளையும்….
தீர்த்துவைத்தவர்தான்.
அவரை நம்பினால் வினாக்கள்
எளிமையாகுமென்று …நம்பிவந்த
மாணவ…மாணவிகள் உண்டு.

இன்று பூக்கள்..படையலின்றி
எண்ணெய்விளக்குகள்…
காய்ந்து கருகிய நிலையில்
பறவைகளின் எச்சமழையில்….
பாவமாய்த்தான் இருக்கிறார்.
ஒருபெருச்சாளிகூட வந்து
எட்டிப்பார்ப்பதில்லை.
ஊருக்கு ஒதுக்குப்புறமாய்…
ஊரணிக்கரையில் வீற்றிருப்பது
அவர் குற்றமல்ல…
காதல்தோல்வியில் காத்தமுத்து
ஓர் இரவில் அவர் முன்னால்
தூக்கில் தொங்கியபோது…
அவர் பார்த்துக்கொண்டுதான்
இருந்தார்.
அதன்பிறகு அவரின் தனிமையை
மாற்றியமைக்க யாரும்…
முயற்சிக்கவில்லை.
♦
