
மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்திற்கு எதிரில் பாபா கோவில் போகவேண்டிய திருப்பத்தில் உள்ள கார்னர் கடைதான் தங்கவேல் நாடார் பாத்திரக் கடை. தெப்பத்திற்கும் , தேருக்கும் , அறுபத்து மூவருக்கும் அந்தந்த திருவிழாவின் போதுதான் கூட்டம் வரும். ஆனால் தங்கவேல் நாடார் கடையில் 365 நாளும் கூட்டம் தான். கடை ஜேஜே என்றிருக்கும்.. ” ஏன் சாமி உங்க கடைல விசை ஏதாவது வச்சிருக்கீங்களா…? வசிய மந்திரம் சொல்றீங்களா.. ? குளத்தை சுத்தி அத்தனைப் பாத்திரக் கடைகள் இருக்கு. ஆனால் உங்க கடைல மட்டும்தான் இப்படி ஒரு கூட்டம்.. காலை பத்து மணிக்குப் போனாலும் ஜேஜே. மதியம் சாப்பாட்டு நேரமாச்சே.. கூட்டம் இருக்காது என்று போனால் அப்போதும் கூட்டம். சரி ராத்திரி ஏழு மணிக்குப் போவோம் என்று போனால் நுழையக் கூட இடமிருக்காது. பத்து மணிக்குக் கடை மூடுகிற நேரத்திலும் பத்துப் பேராவது பாத்திரம் வாங்கிக் கொண்டிருப்பார்கள். இத்தனைக்கும் காரணம் கடையின் முதலாளி ஜான் என்று அனைவராலும் செல்லமாகக் கூப்பிடப் படுகிற ஜானகிராமன்.
காலை கடை திறந்ததும் கல்லாவில் உட்காருகிறவர் எப்போது சாப்பிடப் போவாரோ, தெரியாது . ரெஸ்ட் ரூம் போவாரா.. தெரியாது..டீ காபி அவருக்குப் பழக்கமில்லை. அதனால் கடைக்கு வருகிறவர்களுக்கு டீ காபி உபசரிப்பெல்லாம் அவர் சகோதரர் சிங்க நாடார் உபயம் தான்.
நாடார் கடைக்குப் போனால் பாதி நாளாகி விடும். நிச்சயம் அதற்கு முன்னால் திரும்ப முடியாது. கடையில் வேலையாட்களுக்குக் குறைவா என்றால் அதுவும் இல்லை. குறைந்த பட்சம் பதினைந்து பேராவது இருப்பார்கள். அத்தனைப் பேரும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனாலும கூட்டம் நெரிசல் படும்
புடவைக் கடையில் தான் பெண்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். ஒரு பாத்திரக் கடைக்கு இத்தனைக் கூட்டமா என்று நான் ஆச்சரியப்படுவேன்.
அத்தனைக்கும் காரணம் ஜான் என்கிற அந்த ஜானகி ராமன் தான். அவர் முகத்தில் சிரிப்பு மாறி நான் பார்த்ததே இல்லை. ஒரு பொருள் இல்லை என்று அவர் வாய் சொன்னதே இல்லை. வரவழைச்சுத் தரம்மா என்று கூறும் தோரணையில் அப்பொருளை வரவழைத்தே அவர் தந்து விட்ட மாதிரி இருக்கும். அத்தனைப் பணிவு.
அத்தனை நயம். நாநயம் மட்டுமல்ல.நாணயமும் கூட உண்டு. இவருக்குத் தெரியாத பெரிய மனிதர்கள் கிடையாது. இவர் கடையில் நான் பார்க்காத பிரபலங்கள் கிடயாது. ஆனால் இவருக்குத் தோட்டியும் ஒன்று தொண்டைமானும் ஒன்றுதான். அவரது தராசு மனிதர்களில் ஏற்ற இறக்கம் பார்த்ததே இல்லை. அன்பு என்றால் அத்தனை அன்பு. அடக்கம் என்றால் அத்தனை அடக்கம். கடை ஊழியர்கள் அவரை அப்படி கொண்டாடுவார்கள். அதே சமயம் பயப்படவும் செய்வார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இது ஒரு சர்க்கஸ் ரிங் மாஸ்டரின் திறமை.
கடை ஊழியர்களை மட்டுமல்ல. தன் சகோதரர்களை உறவினர்களை , கடையின் கஸ்டமர்களை அரவணைத்துச் செல்லும் இவரது பாங்கு எனக்கு தி. ஜானகிராமனை நினைவூட்டும்.செம்பருத்தி சட்டநாதன் நினைவுக்கு வருவான்.ஆனந்தம் திரைப்படத்தில் மம்மூட்டி யின் குணாதிசயங்களை இவரிடம் காணலாம்.
நீங்கள் யார் மைலாப்பூர் பக்கம் வந்தாலும் ஒரு நடை இவரது கடையை எட்டிப் பாருங்கள். யார் அந்த ஜானகி ராமன் என்று கேட்டு பேசிவிட்டு வாருங்கள். பிறகுதான் ஒரு வியாபாரி எப்படி இருக்க வேண்டும், எவ்வாறு தன் வாடிக்கையாளர்களிடம் பழக வேண்டும் , உதவியாளர்களை எவ்விதம் அனுசரிக்க வேண்டும் என்பதெல்லாம் பிடிபடும்.
இதனால் எல்லாம் தான் தாங்கள் காமராஜர் வாரிசுகள் என்பதை அவர்கள் நிரூபித்து நமக்கும் புரிய வைக்கிறார்கள்.
HAT’S OFF MR.JANAKIRAMAN.
நான் சொன்னது இந்த ஜான் என்கிற ஜானகிராமனை மட்டுமல்ல. செம்பருத்தி சட்டநாதனைப் படைத்த ஜானகி ராமனையும் சேர்த்துத்தான்..
