வளவ துரையன்/இருள் போர்வை

இந்தக் காலம் எனக்கு மட்டும்
இருளைப் போர்வையாகக் கொண்டு
அச்சமூட்டிக் கொண்டிருக்கிறது.

ஆனால் இதனுள்ளே நான்
எப்படியும் நுழைந்தாக வேண்டும்.

வழிமறிக்கும் முள்வேலிகள்
உடலைக் கிழிக்க முயன்றாலும்
குருதி வழிதலைப் பொறுத்துக் கொண்டு
புத்தன் போலாக வேண்டும்.

புதர்களிலிருந்து வரும் புலிகளையும்
புற்றுகளிலிருந்து வரும் நாகங்களையும்
பார்த்துப் பழகிக் கொள்ள வேண்டும்.

காட்டாறுகளில் கவனத்தையே
படகாகக் கொண்டு கடந்து
கரையேற வேண்டும்.

தானாக மிதந்துவரும்
லேசான தக்கைகள்
மிகவும் ஆபத்தானவை

நாம் ஏறி அமர்ந்தவுடன்
அடிஆழத்தில் அமிழ்த்திவிட்டு
அவை அகமகிழ்ந்திருக்கும்.

இருட்டும் வெளிச்சமும்
இங்கொன்றுதான் என்னும்
சமரசம் செய்து கொள்ள வேண்டிய
கட்டாயத்தில் நான் இருக்கிறேன்.