சி.சு செல்லப்பா பிள்ளையார் கோயில் தெருவில்/அழகிய சிங்கர்

தனது கடைசிக் காலத்தில் சி.சு செல்லப்பா பிள்ளையார் கோயில் தெருவில் திருவல்லிக்கேணியில் தனியாக மனைவியுடன் குடி வந்ததற்குக் காரணம் இல்லாமல் இல்லை. 80து வயதைத் தாண்டியும் அவருடைய எழுதுகிற தாகம், எழுதியதைப் புத்தகமாகக் கொண்டு வரும் தாகம் எல்லாம் அடங்கவே இல்லை. அவருடைய புதல்வருடன் பங்களூரில் இருந்தால், இதெல்லாம் சாத்தியமில்லை என்றுதான் அவர் தனியாக வந்துவிட்டார்.

ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு இலக்கியச் சந்திப்புக் கூட்டத்தில், பல பதிப்பாளர்களிடம் 1000 பக்கங்களுக்கு மேல் எழுதிய =சுதந்திர தாகம்+ என்ற நாவலைப் புத்தகமாகக் கொண்டு வர முடியுமா என்று கேட்டுக்கொண்டிருந்தார். யாரும் அப்புத்தகத்தைக் கொண்டு வர துணியவில்லை.

அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த சி சு செல்லப்பாவிற்கு பெரிய ஏமாற்றம். அப்புத்தகம் 1000 பக்கங்களுக்கு மேல் என்பதோடல்லாமல், அப்புத்தகம் விற்பனை ஆகுமா என்றெல்லாம் பதிப்பாளர்கள் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

சி சு செல்லப்பா எழுத்து பிரசுரமாக தானாகவே அப் புத்தகத்தைக் கொண்டு வரலாமென்று முடிவெடுத்தார். 84 வயதில் சி சு செல்லப்பாவின் துணிச்சலான முடிவு இது. இந்தக் கட்டத்தில் நானும் சி சு செல்லப்பாவிற்கு புத்தகம் கொண்டு வர உதவி செய்தேன். மணி ஆப்செட்காரர் சி சு செல்லப்பா வீட்டிற்கே வந்திருந்து உதவி செய்தார். தைரியமாக 1000 பிரதிகள் அச்சடித்து பாகம் 1, பாகம் 2, பாகம் 3 என கொண்டு வந்தார். அவருடைய உறவினர்கள், நண்பர்கள் அவருக்கு புத்தகம் கொண்டு வர உதவினார்கள்.

அவர் மீது உள்ள மரியாதைக் காரணமாக பல பத்திரிகைகள் அப் புத்தகத்தைப் பாராட்டி விமர்சனம் செய்தன. இந்தியா டுடே என்ற பத்திரிகை அப்புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்துப் பிரசுரம் செய்தது.

புத்தகம் கேட்டு கடிதம் எழுதுபவர்களிடம் தானாகவே கவரில் புத்தகக் கட்டை வைத்து தபாலில் அனுப்பி விடுவார். வீடு முழுவதும் பரண் மீது அப்புத்தகக் கட்டு நிரம்பி வழிந்தது. அவர் வீட்டில் அப் புத்தகக் கட்டைப் பார்க்கும் கதி கலங்கும்.

ஒரு இலக்கிய விமர்சகர் என்னிடம் =பாருங்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் அப்புத்தகம் திருவல்லிக்கேணி பிளாட்பாரத்தில் வந்து விடப் போகிறது,+ என்று குறிப்பிட்டது ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் அது பொய்த்து விட்டது. 3 பாகங்கள் கொண்ட அப்புத்தகம் விலை ரூ.450. அதை ரூ.100 கிடைக்கும்படி செய்தேன். எல்லாம் சி சு செல்லப்பாவின் மறைவுக்குப்பின். இன்று அப் புத்தகப் பிரதி இல்லை. க.நா.சுப்பிரமணியம் கூட அவர் காலத்தில் ஒரு நாவலை அடித்துவிட்டு பரணில் வைத்திருந்தார். அந் நாவல் விற்கவில்லை என்றவுடன், அவர் மாமனாரிடம் சொல்லி அப் புத்தகத்தை அப்படியே பேப்பர் கடையில் போடச் சொல்லிவிட்டாராம்.

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நான் சி சு செல்லப்பாவைப் போய்ப் பார்க்காமல் இருக்க மாட்டேன். என் அலுவலகம் கடற்கரை சாலையில் இருந்ததால் அவரைப் போய்ப் பார்ப்பது சுலபமாகவும் இருந்தது.

அவரை அழைத்துக் கொண்டு போய் நூல் நிலையத்தில் புத்தகம் வாங்குவதற்கான படிவத்தைக் கொடுத்து பதிவு செய்தோம். ஆனால் அதற்கு நூல் வாங்குவதற்கான உத்தரவு கிடைக்கவில்லை. சி சு செல்லப்பாவிற்கு பெரிய ஏமாற்றம். வருத்தம். இருந்தாலும் அவருக்குப் புத்தகம் போடும் ஆர்வம் சற்றும் குறையவில்லை. ஒவ்வொரு முறை அவர் வீட்டுக்குச் செல்லும்போது, எழுத்தைப் பற்றி விமர்சனம் செய்த வெங்கட் சாமிநாதனுக்கு, பிரமிளுக்கும் நான் பதில் எழுதியிருக்கிறேன் என்று அவர் எழுதிய பக்கங்களையெல்லாம் காட்டுவார். இன்னொன்றும் சொல்வார். இதெல்லாம் புத்தகமாகக் கொண்டு வர வேண்டுமென்று. எனக்கு கேட்கவே பக்கென்று இருக்கும்.

அவரும் அவர் மனைவியும் அந்தத் தள்ளாத வயதில் தனியாக இருந்ததை நினைத்துக்கூட என்னால் பார்க்க முடியவில்லை. சி சு செல்லப்பாவிற்கு பேன் போடக்கூடாது. ஆனால் அவர் மனைவிக்கு பேன் வேண்டும்.

சி சு செல்லப்பா அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருப்பார்.

ஒருமுறை இலக்கியக் கூட்டத்திற்கு அவரைப் பேச அழைத்தார்கள். ஏற்பாடு செய்தவர்கள் சில இலக்கிய அபிமானிகள். அவரை திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள்தான் ஆட்டோவில் அழைத்துக் கொண்டு வந்தார். நானும் டூ வீலரில் பின்னால் வந்து கொண்டிருந்தேன்.

கூட்டம் நடக்குமிடத்திற்கு யாரும் வரவில்லை.

சி சு செல்லப்பா, கூட்டம் ஏற்பாடு செய்த இருவர், திருப்பூர் கிருஷ்ணன், நான் பின் வண்டி ஓட்டுநர் என்று ஐந்து பேர்கள்தான் இருந்தோம். கூட்டத்திற்கு வந்திருந்த சி சு செல்லப்பாவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது. எதிரில் அமர்ந்திருந்த என்னைத் திட்ட ஆரம்பித்து விட்டார். நான் விருட்சம் என்ற பெயரில் பத்திரிகை நடத்தி வருகிறேன். அந்த விருட்சம் பட்டுப்போய் நாசமாய்ப் போகட்டும் என்று திட்ட ஆரம்பித்து விட்டார். கேட்பதற்கு எனக்க என்னவோபோல் ஆகிவிட்டது. அடுத்தநாள் எனக்கு அவரிடமிருந்து போன். ‘நான் ஏதோ வேகத்தில் சொல்லிவிட்டேன். தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்,’ என்று. இதுதான் செல்லப்பா.

லண்டனிலிருந்து வந்துகொண்டிருந்த ஒரு பத்திரிகையை விமர்சனத்திற்கு மாதிரியாக எடுத்துக்கொண்டுதான் அவர் எழுத்து பத்திரிகையைக் கொண்டு வந்ததாக சி சு செல்லப்பா குறிப்பிட்டுருக்கிறார்.

மௌனி, க.நா.சு படைப்புகள் எல்லாம் சி சு செல்லப்பாவிற்குப் பிடிக்காது. மௌனி கதைகள் குறித்து விமர்சனம் எழுதியிருக்கிறார். மௌனி கதைப்புத்தகத்தில் ஒரே ஒரு கதைதான் நன்றாக இருக்குமென்று கூறுவார். பி எஸ் ராமையா அவருடைய குரு. எந்தப் பத்திரிகையில் எந்தக் கதை வந்திருக்கிறது என்று குறிப்புகள் எழுதி ராமையாவைப் பற்றி ஒரு புத்தகம் கொண்டு வந்து விட்டார். சுதந்திர தாகம் என்ற புத்தகத்திற்குப் பிறகு. அப் புத்தகம் பேர் ராமையாவின் சிறுகதைப் பாணி. ராமையாவின் கதைகளே இல்லாதபோது ராமையாவின் சிறுகதைப் பாணி என்ற விமர்சனம் புத்தகம் யார் படிப்பார்கள்.

எழுத்து பத்திரிகையில் முக்கியமான விமர்சகர் பிரமிள். அவர் படுத்தப் படுக்கையாக மருத்துவமனையில் கிடந்தபோது விளக்கு பரிசைக் கொடுக்க மருத்துவமனைக்கு சி சு செல்லப்பா வந்திருக்கிறார். அந்தக் காலத்தில் எழுத்துவில் புதிய படைப்பாளிகள் பலரை அறிமுகப் படுத்தியிருக்கிறார். ஆனால் ஏன் ஞானக்கூத்தன் கவிதைகளை எழுத்தில் பிரசுரம் செய்யவில்லை என்ற கேள்வி எனக்கு எப்போதும் இருந்து கொண்டிருக்கும். கனகசபாபதி, ந. முத்துசாமி, சச்சிதானந்தம், எஸ் வைதீஸ்வரன் போன்ற பல படைப்பாளிகள் எழுத்து மூலமாகத்தான் உருவானவர்கள்.

சி சு செல்லப்பாவை ஒவ்வொரு முறை பார்க்கும்போது எதாவது சுவாரசியமாகப் பேசுவார். ஒரு முறை க.நா.சுவைப் பற்றி ஒன்றை குறிப்பிட்டார். சி சு செல்லப்பாவின் சிபாரிசில் க.நா.சு தங்குவதற்கு ஒரு இடம் வாடகைக்குப் பிடித்துக் கொடுத்தாராம். அந்த வீட்டின் சொந்தக்காரர் சி சு செல்லப்பாவிற்காக அந்த இடத்தைக் கொடுத்தார். ஒரு முறை வீடை வந்து பார்க்கும்போது, வீடு திறந்து இருந்ததாம். வீட்டில் ஒன்றுமில்லையாம். வீட்டில் குடியிருந்த க.நா.சு வும் அவர் குடும்பத்தையும் காணவில்லையாம். சில மாதங்களாக வாடகைக் கொடுக்காமல் க.நா.சு வீடை காலி செய்துகொண்டு சொல்லாமல் போய்விட்டாராம். இதை சி சு செல்லப்பா க.நா.சுவை திட்டியபடி கோபமாக சொல்வார். இதைக் கேட்டு எனக்கு க.நா.சு மீதுதான் இரக்க உணர்ச்சி ஏற்படும். எந்த நிலையில் ஒருவர் அப்படி ஒரு முடிவை எடுத்துப் போயிருக்க முடியும் என்று.

சி சு செல்லப்பா மரணம் அடையும் தருவாயில்தான் கேரளாவில் தகழி சிவசங்கரம் பிள்ளை என்ற படைப்பாளியும் மரணம் அடையும் நிலையில் இருந்தார். ஆனால் அங்குள்ள மக்கள் அவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு தகழியைப் போய்ப் பார்த்துவிட்டுப் போவார்களாம். ஏன் கேரளாவின் முதலமைச்சரே அவரைப் போய்ப் பார்த்து நலம் விஜாரிப்பாராம்.

தகழி என்ற படைப்பாளிக்கு சமமான சி சு செல்லப்பாவிற்கு எதுவும் நடக்கவில்லை. சி சு செல்லப்பா தகழி என்ற படைப்பாளியைவிட மேலானவர். பல படைப்பாளிகளை எழுத்து மூலம் உருவாக்கியவர். கவிதைக்கும், விமர்சனத்திற்கும் தமிழில் புதிய பாதையை வகுத்தவர். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் எழுத்திற்காக அர்பணித்தவர். அதோடு மட்டுமல்லாமல் அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். சிறைக்கெல்லாம் சென்றிருக்கிறார். அவருக்கு உரிய மரியாதையைக் நாம் கொடுக்க தவறி விட்டோம் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

நன்றி: word press.com