ஐராவதம் கவிதைகள்

  1. வயோதிக புரோகிதர்

தாங்கள் அந்த மேம்பாலத்தில்
சந்தித்தோம். அப்போது பகல்
இரண்டு மணி. இழுபறியான வெய்யில்.

உயரிய தாம்பூல வாசனை அவர்பேசும்போது
நான் முகர்ந்தேன்.
வேட்டியின் வயிற்று மடிப்பில்
வெகுவாய் சில்லறைகள் துருத்தி நின்றன.
ஒற்றைக் கையால் ஓட்டை சைக்கிளை
பிடித்துக்கொண்டு மறுகையால்
குடுமியை முடிந்தபடியே அவர். சொன்னார்.

நண்பரே, உங்கள் கவிதையில்
சூட்சுமம் எதுவும் புலப்படவில்லை:
ரொம்ப எளிமை, ரொம்ப எளிமை,
அதுவும் நல்லதே. அர்த்தங்கள் கூடினாலோ…

தெய்வ அம்சத்தை நிராகரிப்பது ஏன்?
அம்ருதம் சாப்பிட ஆசைப்படாதவர்
உண்டோ?
பெரியவர் கேட்டார். பதில்பேசாமல் நகர்ந்தேன்.

  1. பிரயாணம்

யாத்திரிகர்கள் மலை மீது ஏறுகிறார்கள்
முரட்டுக் கற்கள் மீது மரஞ்செடி கொடிகள் மீது
கடவுளைத்தேடி மேலே போகிறார்கள்
பாவங்களைப் பாதி வழியில் விட்டுச் செல்கிறார்கள்
மணிகள் ஜோராய் ஒலிக்கின்றன
பாவங்களை அவை எரிக்கின்றன.
நாம் இப்பொழுது தூயவர்கள் நாம் இப்பொழுது நல்லவர்கள்
பூக்கள், பரிசுகள், வழிபாடுகள் ஆண்டவனுக்கு
நிவேதனமாய்ப் படைப்போம்
மூடவர்கள், ரோகிகள், கிழவர்கள்
அனைவரும் பாடியபடி மேலே போகிறார்கள்.
வெளி பிரகாரங்களில் காப்பி கிளப்புகள்
மண் உருவங்கள், போலி சாமியார்கள், சிகரெட்டுகள்
கடவுளே கடவுளே, என் நோயைக் குணமாக்கு
என்னிடம் அன்பு செலுத்த ஆட்களே இல்லையே?
கடவுளே, கடவுளே எனக்குக் காசு கொடு
அளவற்றப் பணம் கொடு
லாட்டரியில் லட்சாதிபதியாக்கு
கலர் டிவி வாங்க காரில் போக
கள்ளக் காதலி வைத்துக்கொள்ள
அயல் நாடு போக சீட்டாட மது அருந்த
அளவற்ற பணம் கொடு
யாத்திரிகர்கள் யாசிக்கிறார்கள்
கண்களால் வாய்களால் கைகளால்
யாசிக்கிறார்கள்
கடவுள் ஆயாசத்துடன் நின்றபடியே
நெடுந்துயில் கொள்கிறார்
தன்னிடம் எதுவும் யாசிக்காத
இன்னொரு மனித பற்றிக் கனவு காண்கிறார்.

  1. பலனளிக்காத பிரார்த்தனைகள்

குருவே
உமக்கு முதல் நமஸ்காரம்
சுவர்களைக் கடந்து நான் வெளியேற
எனக்குச் சொல்லிக் கொடும்.
நான் சந்திக்கும் பெண்கள்
காலையில் எப்போதும் ரோஜாமலர்
சூடியிருக்கட்டும்
கடலுக்கு அப்பால்
பிறிதொரு தேசத்தில்
வெட்கமின்றி நடக்க எனக்கு
விமோசனம் தாரும்.
நீர்தான்
கழுத்திலிருந்து கர்சீஃப் எடுக்கிறீர்
காதின் பின் பக்கம் சிகரெட்
துண்டுகள் வரவழைக்கிறீர்
வாயிலிருந்து பந்துகள்
புறப்படச் செய்கிறீர்.
என்னைக் கவனிக்க உமக்கு ஏது நேரம்?