செய்யூர் சாரநாயகி அம்மாளின் மர்மம் தீரவே தீராதோ! தீரா மர்மமாய்த் தொடர்கிறது, செய்யூர் சாரநாயகி அம்மாள் பற்றிய விவரங்கள், அவர் கதைகளைப் போலவே..
“செய்யூர் சாரநாயகி அம்மாள்” என்ற பெண் புனை பெயரில் எழுதியது ‘வடுவூர் துரைசாமி ஐயங்கார் தான்’ என்றும், வை.மு.கோதைநாயகியுடன் ஏற்பட்ட சச்சரவாலும், வை.மு.கோ.வின் நாவல்களுக்கும், ‘ஜகன்மோகினி’ இதழுக்கும் பெருகிய ஆதரவாலும், பொறாமையுற்று, அதற்குப் போட்டியாக வடுவூரார் உருவாக்கிய (கற்பனை) எழுத்தாளர் தான் ’சாரநாயகி’ என்றும், என் அப்பா சொன்னதாக, ‘பழம்பெரும் எழுத்தாளர்’ பற்றிய உரையில் சொல்லியிருந்தேன். (கோதைநாயகி vs சாரநாயகி; வடுவூர் = செய்யூர்)
அதே போன்ற கருத்தை எழுத்தாளர் திரு. எம்.என்.ராமசாமி அவர்கள் எழுதியிருந்ததையும் அந்த உரையில் குறிப்பிட்டிருந்தேன். பின்னர் எம்.என்.ஆர். எழுதியிருந்த அந்தக் கட்டுரையின் விவரங்களையும் இங்கே வெளியிட்டிருந்தேன். (முதல் கருத்துப் பெட்டியில் பார்க்கலாம்)
ஆனால், இவற்றை எல்லாம் ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தாத நிலைதான் உள்ளது. ‘இவர் தான் அவர்’ என்று காட்ட இன்னமும் சரியான தரவுகள் வேண்டும். முழுமையான ஆதாரங்கள் வேண்டும்.
அப்படியிருக்கையில் சமீபத்தில் ஒரு நூலில் படித்தேன் – ‘செய்யூர் சாரநாயகி அம்மாள்’ நாயுடு வகுப்பைச் சேர்ந்த எழுத்தாளர் என்று.
‘ஐயங்கார்’ ’நாயுடு’வானது எப்படி என்று குழம்பி, பின் இந்த மர்மத்தைப் பின் தொடர்ந்து, வேறு ஒரு நூல் மூலம், செய்யூர் சாரநாயகி அம்மாளின் கணவர் “தம்பு நாயுடு” என்ற குறிப்பைக் கண்டடைந்தேன்.
இந்தக் குறிப்பின்படிப் பார்த்தால், ‘செய்யூர் சாரநாயகி அம்மாள்’ என்பது வடுவூர் துரைசாமி ஐயங்காரின் புனை பெயர் அல்ல; அவர் வேறு ஒருவர் + பெண் எழுத்தாளர் தான் என்றாகிறது.
ஆனால் அவர் யார், எங்கு பிறந்தார், என்ன படித்தார், எப்போது எழுத்துலகிற்கு வந்தார், ஒரே ஒரு இதழில் மட்டுமே அவரது படைப்புகள் காணக்கிடைக்கின்றனவே அது ஏன், அதுவும் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் மட்டுமே அவரது எழுத்துக்கள் வெளியாகியுள்ளனவே அதற்கான காரணம் என்ன, அவர் எப்போது மறைந்தார் என்ற விவரங்கள் எல்லாம் காணக் கிடைக்கவில்லை.
‘தசாவதார நாவல் சீரிஸ்’ வெளியிட்டு, ‘சுதேசமித்திரன்’ விமர்சனத்தால் வெகுவாக ஊக்குவிப்பட்ட எழுத்தாளரின் வாழ்க்கை, அவரது எழுத்தைப் போலவே மர்மமாக இருக்கிறது.
சரி, இந்தத் ‘தம்பு நாயுடு’ என்பவர் யார் என்று தொடர்ந்து, பின் ‘தொடர்ந்ததில்’, விடாமல் ‘கண்காணித்ததில்’ ஒரு வழியாகக் கண்டறிந்தேன் அவர் யார் என்பதை!
ஆனால், அதுவும் ஊகமே!
உறுதிப்படுத்த மேலதிகத் தரவுகள் வேண்டும்.
அது கிடைக்கும் வரை, எனது குறிப்பிட்ட ‘ஓர் ஐயம்’ விலகாத வரை இந்த ‘மர்மம்’, மர்மமாகவே’ இருக்கும் போல!
மர்மம் என்றாவது விலகுமா?!
