ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 34 – அழகியசிங்கர்

3.12.2021 –  வெள்ளி 


ஆசிரியர் பக்கம்

மோகினி : வணக்கம்.

அழகியசிங்கர் : வணக்கம்.


ஜெகன் : வணக்கம்.

மோகினி :  இரண்டு முக்கியமான இலக்கிய நண்பர்களை நாம் இழந்து விட்டோம்.

அழகியசிங்கர் : ஆமாம்.  ஒருவர் பாரதி மணி இன்னொருவர் கவிதாசரண்.

மோகினி :  உங்களுக்கு இருவரையும் தெரியுமல்லவா?

அழகியசிங்கர் : ஆமாம்.  கவிதாசரணை முன்றில் கடையில் அடிக்கடி சந்திப்பேன்.  மா.அரங்கநாதன், கவிதா சரண், நான் மூவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். நாங்கள் மூவரும் எங்கள் பத்திரிகைகளை ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொள்வோம். கிட்டத்தட்ட முன்றிலும் விருட்சமும் ஒரே மாதிரி இருக்கும்.  ஆனால் கவிதாசரண் வித்தியாசமான பத்திரிகை. உண்மையில் தீவிரமான அரசியல் கட்டுரைகள் அந்தப் பத்திரிகையில் வரும்.  பெரியாரைப் பற்றி வரும் அம்பேத்கர் பற்றி தலித் பிரச்சினைகள் குறித்து அலசும். அதன்பின் ரொம்ப ஆண்டுகளாக அவரைச் சந்திக்கவில்லை.

ஜெகன் :  பாரதிமணியை எப்படித் தெரியும்.

மோகினி :  நீங்கள் பாரதிமணியைப் பேட்டி எடுத்துள்ளீர்கள்.

ஜெகன் :   பெங்களூரில் இரண்டு முறை அவரைப் போய்ப் பார்த்திருக்கிறீர்கள்.

அழகியசிங்கர் : இரண்டு முறை பார்த்திருக்கிறேன்.  பத்து கேள்வி பத்து பதில்கள் என்ற முறையில் அவரைப் பேட்டி எடுத்திருக்கிறேன்.  வெளிப்படையான மனிதர்.  எதையும் மறைத்து பேசத் தெரியாது.  அவருடைய கட்டுரைப் புத்தகம்தான் எனக்கு அளவு கடந்த ஆவலைத் தூண்டுகிற புத்தகம். 

மோகினி : பாரதிமணியைக் குறித்தும், கவிதாசரணைக் குறித்தும் யாரும் இரங்கல் கூட்டம் போடவில்லையே..

ஜெகன் :  ஏன்?

மோகினி : கவிதாசரண் குறித்து உங்களுக்கு அதிகமாகத் தெரியாது.  ஆனால் பாரதி மணியைத் தெரியுமே.

அழகியசிங்கர் : உண்மையில் இரங்கல் கூட்டம் போடுவதென்பது ஒரு துக்கக்கரமான விஷயம்.  அதனால் அதை உடனே நடத்த வேண்டும் என்று நினைக்கக் கூடாது.  பாரதி மணிக்கு அதுமாதிரி ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

மோகினி :  இந்த மழையால் உங்கள் வீட்டில் கொசு வந்து விட்டதா?

அழகியசிங்கர் :  ஆமாம்.  கொசு என்னமோ அதிகமாக வந்து விட்டது.  பேனைப் போட்டால் குளிர் எடுக்கிறது.  அணைத்தால் கொசு விடுவதில்லை..

மோகினி :  எனக்கு ஒன்று தெரிய வேண்டும். மூட்டைப் பூச்சி இப்போது இல்லையா?

அழகியசிங்கர் : ஆமாம்.  மூட்டைப் பூச்சி இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

மோகினி : நாம் நாளை சந்திப்போம். ஜெகன: சந்திப்போம்.

அழகியசிங்கர்.  இரவு வணக்கம்.