
பப்பா ராம்தாஸ் பொழிந்த ராம ரஸம்
ரமண பகவானின் வலிமையான அந்தப் பார்வை ராம்சுரத்குன்வரின் அகத்தை நிறைத்தது. இனி இந்த உலகில் பெரிதாகச் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று வைராக்கியம் உதித்தது. எல்லோரையும்போல் இனி வாழமுடியாது என்று உறுதியானது. இந்த உலகம் வெறுமே எண்ணங்களால் நிறைந்து கிடப்பதை பார்த்தார். இதிலிருந்துகொண்டு வேறொன்றாக இதற்குள்ளேயே மாற முயற்சிக்கும் ஒட்டுமொத்த மானுட சமூகத்தையும் கண்டார்.
தன்னுடைய மனம் எதிலுமே பிடிப்பற்றிருப்பதை உணர்ந்தார். உலகைப் பார்க்கும்போதே ஏதோ சலிப்பும் அலுப்பும் மனதை ஆக்கிரமிப்பதை அறிந்தார். இங்கிருக்கும் எந்த ஒரு விஷயமும் இனி என்னை நிறைவு செய்யாது. எந்த சுகமும் என்னை தொட முடியாது. அந்த சுகங்கள் அனைத்தும் இதுவரை மானிடர்கள் அனைவரும் சுகித்து சுகித்து தூக்கிப் போட்டவையாக இருந்தன. இருந்தாலும் ஏன் இந்த மனிதர்கள் இந்த குப்பையைக் கிளறியபடி இருக்கிறார்கள் என்று தோன்றியது.
எல்லோருக்கும் அடியிலும் நான் எனும் அகந்தையை இறுக்க பிடித்துக்கொண்டே நடப்பதை கவனித்தார். தன்னுள் ஏதேனும் இருக்கிறதா என்று பார்க்கும்போது அப்படியொன்று நிழல்போல இருக்கிறதா இல்லாமல் போய்விட்டதா என்று தெரியாத அளவுக்கு ஆடிக் கொண்டிருந்தது. அல்லது ஏதோ ஒன்று விட்டு வைத்திருக்கிறதா என்று நிலையற்ற நிலையில் இருப்பதை உள்ளுக்குள் உணர்ந்தார்.
மீண்டும் புதுச்சேரிக்கு சென்றார். மீண்டும் அங்கு அரவிந்தரின் தரிசனம் கண்டார். வெறுமே அவர்களுக்குள் பார்வை மட்டுமே பரிமாறப்பட்டன. அதுவும் ஏதோ ஒரு மாற்றத்தைகொண்டு வந்தது.
புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வந்தார்.
நேரடியாக விருபாட்சி குகைக்குள் சென்று அமர்ந்தார். இன்னும் சில அபூர்வமான யாரும் அவ்வளவு எளிதில் அணுக முடியாத இடத்திற்குள் சென்று தவம் செய்யத் தொடங்கினார். அருணாசல மலை அப்படியே அவரை ஏந்திக்கொண்டது. ஓரிரு நாட்கள் நகர்ந்தன.
ஒரு சாது அருகே வந்தார்.
‘‘நீங்கள் பப்பா ராம்தாஸ் என்கிற ஞானியை குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா’’ என்று உடைந்த ஆங்கிலத்தில் கேட்டார்.
‘‘இல்லை.’’ என்றார். ராம்சுரத்குன்வர்.
‘‘உடனே போய் தரிசியுங்கள். அவ்வளவுதான் சொல்ல முடியும்’’ என்றார். சரசரவென்று அடிவாரம் நோக்கி நடந்து சென்று மறைந்தார்.
‘‘என்ன சொல்கிறீர்கள்…’’ என்று கேட்டு முடிப்பதற்குள் அவர் மாயமானார்.
வெளியிலிருந்து இனி எதுவுமே வேண்டாம் என்று தோன்றி விட்டதா எனக்கு…. இல்லை… இல்லை… உள்ளிருக்கும் ஒன்று எதையும் தொடாமல் இருந்தது. மனம் எந்த திசையையும் தேடவில்லை. எங்கும் நகர வேண்டாமென சும்மா இருந்தது. இன்னும் ஆழ்ந்து தன்னுள் பார்க்க, மனம் அதி கூர்மையாக ஏதோ ஒன்றை சொல்லக் கேட்க வேண்டுமென்று காத்திருந்ததை அறிந்தார்.
ஏதோவொரு ஆணைக்காக… உள்ளிருக்கும் ஒன்று காத்திருந்தது. அதுவே ரமண பகவானைத் தரிசித்தது. அரவிந்தரை கண்ணோடு கண் நோக்கியது. இப்போது அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று வழிகாட்டப் போவதை அறிந்தார்.
திருவண்ணாமலையிலிருந்து கேரளாவில் உள்ள காஞ்சன்காடு பப்பா ராம்தாஸை நோக்கிப் பயணமானார்.
பப்பா ராம்தாஸ் எனும் பெயரே அவருக்குள் ஒரு குழந்தையை நினைவூட்டுவதுபோல் தோன்றியது. ஆசிரமத்தை நெருங்கினார். எல்லோரும் பப்பா… பப்பா… என்று தங்களுக்குள் பேசியபடி வளைய வந்து கொண்டிருந்தனர்.
சற்றே தொலைவில் சச்சிதானந்தா என்கிற துறவி இவரை வரவேற்றார்.
‘‘எங்கிருந்து வருகிறீர்கள்’’ என்று கேட்டார். வாருங்கள் மாதாஜி கிருஷ்ணாபாயை சந்திப்போம் என்று அழைத்துச் சென்றார்.
அந்த சூழலும் அந்த இதமான பேச்சும் ராம்சுரத்குன்வரை கொஞ்சம் ஆச்சரியப்படுத்தியது. திருவண்ணாமலையின் சூழலே வேறு மாதிரியாக இருந்தது. எங்கு திரும்பினாலும் வேதாந்த பரிபாஷைகள்… ஆத்ம விசாரம்… கைவல்யம்… என்று
திரும்பிய இடமெல்லாம் பேசக் கேட்கலாம். மௌனம்… இன்னும் மௌனம்… உள்ளே நகரு… உள்ளே நகரு… என்று மனதை ஒரு வழி செய்யும் இடமாக அருணாசலம் இருந்தது. ரமணர் என்கிற பெருஞ் சிங்கத்தை சுற்றி குட்டி குட்டி சிங்கங்கள் சுற்றி வந்து கொண்டேயிருந்தனர்.
ஆனால், காஞ்சன் காட்டிலுள்ள அனைவரும் ஏனோ நெகிழ்வாக இருந்தார்கள். எப்போதும் ராம ஸ்மரணையில் இருப்பதுபோல் பேசும்போதே… ராம்… ராம்… என்று சொல்லியே பேசத் தொடங்கினார்கள். குழைவும் நெகிழ்வும் கலந்த ஒரு சூழலுக்குள் தான் வந்திருப்பதை உணர்ந்தார்.
சச்சிதானந்தரும், மாதாஜி கிருஷ்ணாபாயும் அவரோடு பேசிய படியே பஜனைக் கூடத்திற்குள் நுழைந்தனர்.
ராம்சுரத்குன்வரின் முன்பு சற்றே வளர்ந்த குழந்தை ஒன்று அமர்ந்திருந்தது. வட்டமான முகம். நல்ல சிவப்பு. வட்ட கண்ணாடிக்குள் எப்போதும் சிரிக்கும் முகம். அவரின் முகத்தில் சிற்றலை போன்று ஏதோவொன்று பரவி பரவி அடங்கிக் கொண்டிருப்பதை கவனித்தார். கொழுகொழு என்கிற பால கிருஷ்ணன் சற்றே வளர்ந்து வயதானால் எப்படி இருப்பார் அதுபோல பளபளவென கன்னம். சிரிக்காமலேயே எப்போதும் சிரிப்பது போன்று அந்த முகம் மலர்ந்திருந்தது. தலையின் வழுக்கை காந்தியை அவருக்கு நினைவுபடுத்தியது. தும்பைப் பூ போன்ற வெண்மையான உடை.
ஓம் ராம ஜெய்ராம் ஜெயஜெய ராம் ஓம் ஸ்ரீராம்
ஜெய்ராம் ஜெயஜெய ராம்…
- என்று அழகான அலைவரிசையில் எல்லோரும் நாமத்தைச் சொல்லிக் கொண்டே இருந்தனர்.
பப்பா ராம்தாஸ் அவர்களின் அருகே நகர்ந்த மாதாஜி கிருஷ்ணாபாய்… இவரைச் சுட்டிக் காட்டி ஏதோ சொன்னார். அதற்கு அவர் வெடித்துச் சிரித்தார். அவர்களுக்குள் மலையாளத்தில் ஏதோ பேசிக் கொண்டனர்.
ராம்சுரத்குன்வர் ஆச்சரியமாக பார்த்தார்.
அங்கு எல்லோருடைய முகத்திலும் புன்னகை மட்டுமே இருந்தது. எல்லோரும் பப்பாவை கண்டு புன்னகைத்தபடியே கைகளை தட்டிக்கொண்டு நாமத்தை சொல்லிக்கொண்டிருந்தார்கள். மெல்ல எழுந்தார். அங்கிருக்கும் குழந்தைகள் அவரின் கரங்களை கோர்த்துக்கொண்டன. அவர் பின்னால் நாலைந்து பெண்களும் இல்லறச் சீடர்கள் நடக்கத் தொடங்கினார்கள்.
எல்லோரையும் சேர்த்துக்கொண்டு பெரிய மரத்தின் அடியில் நாற்காலி போடப்பட்டிருந்தது. அங்கு சென்று அமர்தார். அதற்குள் அங்கு ஜடை தரித்த சந்நியாசிகளும், வெறும் துண்டை மட்டுமே அணிந்து கொண்டிருக்கும் துறவிகளும் காத்திருந்தனர். அவர்கள் எல்லோரும் இவரை நமஸ்கரித்தனர். அந்த கண்ணாடி வழியே எல்லோரையும் உற்றுப் பார்த்தார். அதனூடாக சிரித்தபடியே இருந்தார்.
அந்த குரலில் எத்தனை குழைவு என்று சுற்றியுள்ளோர் வியந்தனர்.
‘‘இந்த ராம்தாஸ் உங்கள் எல்லோரையும் அமரும்படி கேட்டுக் கொள்கிறான்’’ என்று தன்னை மூன்றாம் மனிதராக சுட்டிப் பேசும் தன்மையைக் கண்டு ராம்சுரத்குன்வர் வாயடைத்துப் போனார்.
‘‘இந்த ராம்தாஸிடம் சொல்ல எதுவுமே இல்லை. நீங்கள் எப்போதும் ராம நாமத்தை மட்டுமே சொல்லுங்கள் என்று மட்டுமே கேட்கிறான். என்ன சொல்கிறாய்’’ என்று சட்டென்று திரும்பி ராம்சுரத்குன்வரை நோக்கி கேள்வி கேட்டார்.
‘‘நீங்கள் நாம சித்தாந்ததம் கூறும் மார்க்கத்தை எங்களுக்கு வலியுறுத்துகிறீர்களா’’ ராம்சுரத்குன்வர் கேட்டார்.
‘‘கிருஷ்ணாபாய்… இங்கு பாரேன்… இவர் என்ன சொல்கிறார் என்று. இந்த ராம்தாஸ் எதையும் வற்புறுத்தவில்லை. ஆனால், என் ராமனைத் தவிர இங்கு வேறென்ன உள்ளது. சொல்லுங்கள் பார்க்கலாம். ராம நாமமே அனைத்துமாக உள்ளதை நீ அறிகிறீர்களா.. இங்கு ராம நாமமே அனைத்துமாக இருக்கிறது… என்ன… உங்கள் பெயர் என்ன’’
‘‘ராம் சுரத் குன்வர்’’
‘‘அதற்கு என்ன பொருள் சொல்லுங்கள் இங்கு எல்லோரும் கேட்க ஆவலாக உள்ளோம்.’’
‘‘ராமர் மீது அன்பும் பாசமும் கொண்டவர்’’ என்று பொருள்.
‘‘அடடா… நீங்களே இப்போது சொல்லி விட்டீர்களே. உங்கள் பெயரின் பொருளும் நீங்களும் வேறு வேறா… நீங்களாக இந்த பெயரை வைத்துக் கொள்ளவில்லை தானே… உங்கள் பெற்றோருக்கு இந்த பெயரை வைக்க வேண்டுமென்று தோன்றியது அந்த ராமனால்தானே… ரொம்பவும் இறுக வேண்டாம். ராமன் மென்மையானவன். எங்கும் நிறைந்தவன். ஆத்மா ராமம்… என்றுதானே அவனை சொல்கிறார்கள். இந்த ராம்தாஸ் எப்போதும் ராமன் உள்ளிருந்து சொல்வதையே பேசுகிறான். அவன் சொல்லியபடி செய்கிறான். அவனுக்கே ஆட்பட்டிருக்கிறான். இங்கு பாருங்கள்… அந்த குழந்தை தன் மதுரமான குரலில் ராம நாமத்தைச் சொல்கிறது. அதோ அங்கிருக்கும் அவர்கள் எல்லோரும் எப்போதும் ராம நாமத்தைச் சொல்லிச் சொல்லி அவர்கள் அணிந்திருக்கும் உடையில் கூட ராம நாமம் எனும் இழை குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த மரம் ராம நாமம் சொல்கிறது. அதோ பாருங்கள் அங்கிருக்கும் குட்டி மான் குட்டி கூட ராம நாமச் சாரலில் நனைந்து சிலிரிக்கின்றது. இதோ மேலே உள்ள பறவைகள் ராம நாமத்தைக் கேட்டு கேட்டு சொந்த குரலை மறந்து கிளைகளில் கண்மூடி கிறங்கி கிடக்கின்றன.
ராம்சுரத்குன்வர்… ராம்… ராம்… என்று உங்களுக்குள் ஒன்று சொல்லிக் கொண்டேயிருக்கின்றன. இந்த காதால் கேட்காதீர்கள். வேறொரு காது கொண்டு கேளுங்கள்’’ என்று சிரித்துச் சிரித்துப் பேசினார்.
‘‘பப்பா என்று நான் உங்களை அன்போடு அழைக்கலாமா…’’ ராம்சுரத்குன்வரின் குரலும் இப்போது மாறிப் போனது.
‘‘ஆஹா… தாராளமாக அழையுங்கள்’’ பப்பா தேன்குரலில் பதில் சொன்னார்.
‘‘என் வழி என்று ஒன்று உள்ளதாக எனக்கு தோன்றிக் கொண்டே இருக்கின்றது. அந்த பிரம்மம் என்பது நிர்குண நிராகார வடிவமல்லவா. அதை எப்படி நாம ஸ்மரணையில் அடைய முடியும்’’ என்று கேட்டார்.
‘‘அந்த நிராஹார… நிர்குண பிரம்மம் என்பதை நீங்கள் எதைக் கொண்டு அறிவீர்கள்’’
‘‘ஞானத்தால்…’’
‘‘சரியே… நீங்கள் கூறுவது சரியே… அந்த ஞானமே இங்கு நாமமாகி உள்ளது. அந்த பிரம்மமே இங்கு ஆதியில் நாமமாகி வந்தது. அந்த நாமத்தை பிடியுங்கள். அந்த நாமியை அறிவீர்கள்.’’
‘‘அறிவேனா… என்ன இது. எப்படி…’’
‘‘ஆமாம்… நாம ஸ்மரணை மட்டுமே வழி. நீங்கள் இந்த குழந்தையாக மாற முடியுமா. உங்களின் உதடுகள் ராம நாமத்தைச் சொல்லட்டும். கரங்கள் தாளமிடட்டும். நாக்கு ராம நாமம் சொல்லிச் சொல்லி நாத்தழும்பேறட்டும். உள்ளம் முழுவதும் ராம ரசத்தால் மூழ்கட்டும். நெஞ்சு ராமம் ராமம் என்று பொங்கட்டும். உங்கள் முகம் முழுவதும் ராம நாமம் சொல்லிச் சொல்லி பொலியட்டும்’’ என்று நாம வைபவங்களை ராம்சுரத்குன்வரை முன்னிட்டுக்கொண்டு எல்லோருக்குள்ளும் தேன் குடுவை கவிழ்த்தார்.
அந்த மரத்தின் குளிர் நிழலும். அருகே நிமிர்ந்து நிற்கும் மலைகளும். ஆங்காங்கு வழியும் நீர்த் திவலைகளின் மெல்லிய சப்தமும் சதா விசிறி மட்டையால் வீசி விடும் தென்றலும் என்று அந்தச் சூழலே ரம்யமாக இருந்தது. ராம்சுரத்குன்வரின் வேதாந்த ஞானம் இங்கு கைகட்டி அமர்ந்தது.
‘‘நீங்கள் நேராக எங்கிருந்து வருகிறீர்கள்’’ என்று பப்பா கேட்டார்.
‘‘அருணாசலத்திலிருந்து’’ சுரத் சட்டென்று பதிலுரைத்தார்.
‘‘ஆஹா… ரமண மஹரிஷி… அது ராமாசலமாயிற்றே’’ மிக வித்தியாசமாக பப்பா சொல்ல ராம்சுரத்குன்வர் என்ன பேசுவதென்று தெரியாமல் திகைத்துப் போனார்.
‘‘நீங்கள் விருபாட்சி குகையில் அமர்ந்தீர்களோ’’ பப்பா உற்றுப் பார்த்துக் கேட்டார்.
‘‘ஆமாம்’’ சுரத்குன்வர் ஒரு வார்த்தைக்கு மேல் பேச முடியாமல் பேசினார்.
‘‘நான் பகவானை நோக்கி அமர்ந்திருந்தேன். எனக்கு அப்பேர்ப்பட்ட நிலையை அருளுங்கள் என்றேன். அவரும் என்னைக் கண்டு புன்னகைத்தார்’’ பப்பா தன் அனுபவம் போலவே பேசுவதைக் கண்டு வியப்பெய்தினார்.
‘‘பிறகு…’’
‘‘பிறகென்ன விருபாட்சியிலிருக்கும்போது அந்த மலையும் தாவரங்களும்… மனிதர்களும் என்று அனைத்துமே ராம மயமாகத் தெரிந்தன. எங்கும் ராம மயம்… எதிலும் ராம மயம்… என் உடலிலுள்ள ஒவ்வொரு மயிர்கால்களிலும் ராம ரசம் பொங்கித் ததும்பியது. என் இதயம் மலர்ந்து அதற்குள்ளிருந்து ராமம் பிரவாஹமாகி பெருகியது.
அப்போது அங்கிருந்த ஆடு மேய்க்கும் ஒருவன் என்னைப் பார்த்தான். சாட்சாத் அந்த ராமனே என் எதிரே நிற்பதுபோல துடித்துப் போனேன். அவனும் ராம மயமாகத் தெரிந்தான். ஆஹா… ராமா… ராமா… என்று ஓடிச் சென்று அவனை இறுக அணைத்துக் கொண்டேன். அவனை நான் ஏதோ செய்கிறேன் என்று திமிறி ஓடி விட்டான். ஆஹா… அப்போதிலிருந்து அந்த ராம பிரேம பித்து என்னை பிடித்தாட்டுகின்றது’’ என்று கண்களில் நீரோடு அமர்ந்தார், எல்லோரும் ராம்… ராம்… ராம்… ராம்… என்று சொன்னார்கள்.
ராம்சுரத்குன்வர் குழப்பமானார்.
ஞானம் எனும் நெருப்பா… நாமம் எனும் தண்ணீரா…. நாம ஸ்மரணையில் குழைந்து கிடப்பதா… நான் எங்கிருக்கிறேன். இவர் என்னை ஈர்க்கிறார்… ஆனாலும், என்னுள் ஏதோ ஒன்று தடுக்கின்றதே… ‘‘இன்னும் எத்தனை நாள் இங்கிருப்பீர்கள்’’ பப்பா மென்மையாக கேட்டார்.
‘‘இன்னும் மூன்று நாட்களுக்கு’’ சொல்லி வைத்தார், சுரத்குன்வர்.
‘‘இந்தாருங்கள்… என்னுடைய In Quest of God புத்தகத்தை படியுங்கள். இன்னும் சிலவற்றையும் அளிக்கிறேன்’‘ என்றார்.
அந்தப் புத்தகத்தை எடுத்துப் புரட்டும்போது தன்னுள் அரூபமாக ஏதோவொரு சக்தி அழுத்தி தன் பாதத்தைப் பதிப்பதுபோல உணர்ந்தார். உடல் முழுதும் மின்சார அதிர்ச்சிபோல ஏதோவொன்று ஓடியது.
பப்பா… அப்போதும் புன்னகைத்தபடியே பார்த்துக் கொண்டிருந்தார்.
இவர் என்னவர் எனும் எண்ணம் அந்தக் கணத்தில் ராம்சுரத்குன்வருக்குள் துளிர்த்தது. - விசிறி வீசும்
